Pages - Menu

Tuesday 4 July 2017

தூய ஆவியார் திருவிழா

தூய ஆவியார் திருவிழா
 04-06-2017  
அருள்பணி. ச.இ. அருள்சாமி
திப 2 : 1 -11 ;  1 கொரி 12 : 3 -7; யோவா 20: 19 - 23  
         
‘உணர்வுகள் வெளியிலிருந்து மனிதரில் நுழைகின்றன. ஆனால்  உள்  ஊக்கம், தூய ஆவியார் மனிதரின் மனதோடு ஒன்றிக்கும் போது தோன்றுகின்றது’ என்கிறார் வாட்ச்மேன் ரே என்பவர்.

‘மனிதரின் மனம் தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்படும்போதுதான், கிறிஸ்துவின் பண்புகள் அவரில் ஊற்றெடுக்கின்றன’ என்கிறார் ஸ்டேன்லி ஜோன்ஸ்.  ‘ஊன் உடலான மனிதர் தூய ஆவியாரைத் தங்களில் தாங்க முடியுமா? முடியும் என்பதை காட்டத்தான் இயேசுவை இவ்வுலகிற்கு கடவுள் அனுப்பினார்’  என்கிறார் பென்னி ஹின் என்பவர். தூய ஆவியார் நம்மில் செயல்படுகின்றவர். அவரோடு இணைந்து நின்றால் நம்மில் செயல்படுகிறார்.

              நம் திருத்தந்தை பிரான்சிஸ் யோவா 16:13 ஐ சுட்டிக்காட்டி தூய ஆவியாரின்  முக்கிய செயல்பாடாக  அவர் ‘முழு உண்மையை நோக்கி வழி நடத்துவார்’ என்பதை குறிப்பிடுகிறார். 1 கொரி 12:3 இல், பவுல் அடிகளார், ‘தூய ஆவியால் ஆட்கொள்ளப் ‡பட்டவரன்றி எவரும்  ‘இயேசுவே ஆண்டவர்’  என சொல்ல முடியாது’ என்கிறார். பிலாத்து இயேசுவைப் பார்த்து ‘உண்மையா? அது என்ன?’ என்று கேட்கிறான்.  உண்மையின் உருவமான இயேசு அவன்முன் நிற்க  ‘ உண்மையா?  அது என்ன? என்று உண்மையிடமே கேட்கிறான்’ ( யோவா 19:38) என்று சுட்டிக் காட்டுகிறார் திருத்தந்தை.
        
திருத்தூதர் பணிகளில் பேதுரு (திப 4:31) சமாரியர் (திப 8:15),  சீடர்கள் (திப 13:52),  எபேசு மக்கள் (திப 19:2) ஆகியோர் ‘தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்டவர்கள்’ என்று கூறப்பட்டுள்ளது. ஆள்கொள்ளப்படுதல் என்பதற்கு இரண்டு கிரேக்க வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 
ஒன்று ‘நிரப்புதல்’ என்ற பொருள்படும் ‘ப்ளேரோவோ’ என்ற கிரேக்க வார்த்தை (காண். திப 2:4;  4:31;  11:24; 13: 9,52), மற்றொன்று ‘எடுத்துக்கொள்ளுதல்’ என்று பொருள்படும்‘லம்பானோ’ என்ற வார்த்தை (திப 8:15-17;  19:2).

இயேசு விண்ணகம் சென்ற பிறகு, இறைவனின் பிரசன்னத்தை தனது தூய ஆவியின் வழியாக நமக்குத் தந்துக் கொண்டிருக்கிறார். இதைதான் இன்றைய நற்செய்தியில் பார்க்கிறோம். யோவான் நற்செய்தியில், இயேசு மகதலா மரியாவுக்குத் தோன்றியப் பின், அதே நாளில் தன் சீடர்களுக்குத் தோன்றுகிறார். 12 சீடர்கள் மட்டுமல்ல மற்ற சீடர்களும் அங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு தூய ஆவியாரை இயேசு அளிக்கிறார். அவர்களுக்கு மன்னிப்பு அளிக்கும் பொறுப்பையும் தருகிறார்.                                       
ஆக, தூய ஆவியார் நமக்குக் கொடுக்கப்பட்ட தெய்வீகக் கொடை. பரிசு பொருட்களையயல்லாம் காட்சிப் பொருள்களாக கண்ணாடிப் பேழையில் வைப்பார்கள். ஆனால் தூய ஆவியார் என்ற கொடையைப் பயன்படுத்தி வாழத்தான் இயேசு நமக்குத் தந்திருக்கிறார்.
 
முதல் வாசகத்தில் சீடர்கள் மீது தூய ஆவியார் எழுந்து வந்த நிகழ்வைப் பார்க்கிறோம். அவர்கள் தூய ஆவியாரால் ‘ஆட்கொள்ளப்பட்டார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது. அங்கு பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தைக்கு நேரடிப் பொருள்‘நிரப்பப்பட்டார்கள்’ என்பதுதான். ஆக, தூய  ஆவியார் இறைவனால் கொடுக்கப்பட்ட  கொடை என்பது தெளிவாகிறது.
இரண்டாம் வாசகத்தில் பவுல் அடிகளார், தூய ஆவியார் நம்மில் எப்படி செயல்படுகிறார் என்று விளக்குகிறார். தூய ஆவியார், அடிப்படையான நம்பிக்கை என்ற  கொடையைத் தருகிறார். ‘இயேசு, ஆண்டவர்’ என்று உணரும் உள்ளொளியைத் தருகிறார். இந்த நம்பிக்கை இல்லையயன்றால் இறை உறவு நம்மில் இயங்க முடியாது.

இரண்டாவதாக, தூய ஆவியாரின் கொடைகளை பொறாமைக்கு இடமின்றி ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டும் என்கிறார். அருள்கொடைகளும் திருத்தொண்டும் பலவகைப் பட்டவை. பொது நன்மைக்காகவே இவ்வரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே தற்பெருமைக் கொள்ளவோ, பொறாமைப்படவோ இடம் கொடுக்காமல் வரங்களை செயல்படுத்த வேண்டும். ஞானம், அறிவு, நம்பிக்கை, பிணி தீர்த்தல், வல்லசெயல் செய்தல், இறை வாக்குரைத்தல், பகுத்தறியும் ஆற்றல், பரவசப் பேச்சு,பரவசப் பேச்சை விளக்குதல் ஆகிய  அற்புத வரங்கள்.
   
         பல ஆண்டுகளுக்கு முன்பாக ஓர் அருட்பணியாளர் தியானம் நடத்தினார். அப்போது தன் ஆன்மீக அனுபவத்தைப் பகிர்ந்தார். ஒரு முறை அவர் கூட்டுத் திருப்பலியில் பங்குக் கொண்டார். அத்திருப்பலி முழுவதும் அவர் கண்களில் கண்ணீர் வந்துக் கொண்டிருந்தது. அதனை தூய ஆவியின் செயல்பாடு என்று உணர்ந்ததாகக் கூறினார். 

ஒருவர் கூறினார், ஒருவர் நன்றாகப் பாடி பரிசு பெற்றால் தனக்கு அந்தத் திறமை இல்லையே என்று நொந்துக் கொள்வாராம். அதேபோல ஒருவர் சிறப்பாக பேசினால், சிறப்பாக வாதிட்டால், அழகான உருவத்தைப் பெற்றிருந்தால், தனக்கும் அந்த வரங்கள் இல்லையே என்று வருந்துவாராம். மறைந்த சோ அவர்கள், திருமுருக கிருபானந்த வாரியார் சிறப்பாக சொற்பொழிவாற்றியது அவரின் தனிப்பட்ட வரம் என்று குறித்துப் பேசினார். எனவே நம் ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு திறமை வரம் உண்டு. எல்லா வரமும் நம்மிடையே இல்லை என்று வருந்தத் தேவையில்லை.
    
   அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார்
    பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்                 (குறள். 170) 

பொறாமைப்பட்டு வளர்ந்தவரும் இல்லை
பொறாமையில்லாமையினால் குறைந்தவரும் இல்லை என்கிறார் வள்ளுவர்.
   

No comments:

Post a Comment

Ads Inside Post