Pages - Menu

Tuesday 4 July 2017

ஜுன் மாதப் புனிதர்கள்

 ஜுன்- 5 புனித போனிப்பாஸ் - ஆயர், மறைசாட்சி

இவர் இங்கிலாந்தில் ஏறத்தாழ கி.பி.673இல் பிறந்தார். எக்ஸ்ட்டர் என்னுமிடத்தில் உள்ள மடத்தில்  துறவற வாழ்வு மேற்கொண்டார். 719இல் நற்செய்தியைப் போதிக்க ஜெர்மனி சென்றார். அங்கு சிறப்பாக பணியாற்றியதால் மயின்ஸ் மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டார். தம்முடைய தோழர்களின் துணைகொண்டு பவேரியா, துரிஞ்சியா, பிராங்கோனியா போன்ற பல இடங்களிலும் திருச்சபையைப் புதிதாக நிறுவினார். ஆட்சிமுறைப் பேரவைகளை நடத்தி, சட்டதிட்டங்களைப் பலரும் அறியச் செய்தார். ஹாலந்தில்  பிரிசியர் நடுவில் உழைக்கும் போது, பிற மறையினரால் 754இல் கொல்லப்பட்டார்.

ஜுன் - 9 புனித எபிரேம் ‡ திருத்தொண்டர்,  மறைவல்லுநர்

இவர் மெசபெத்தோமியாவில் உள்ள நிசிபிஸ் என்னும் இடத்தில் ஏறத்தாழ கி.பி 306இல் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார். திருத்தொண்டர் பட்டம் பெற்று, தம் சொந்த நாட்டிலும், எடெஸ்ஸாவிலும் பணியாற்றினார். இறையியல் கற்றுத் தேர்ந்தார். பிறகு தவ வாழ்வை தேர்ந்து வாழ்ந்தார். அந்நேரத்தில் தவறான போதனைகளை எதிர்த்து தன் எழுத்தாலும் போதனையாலும் போராடினார். 540இல் எழுதப்பட்ட எடெஸ்ஸா வரலாற்று குறிப்பேட்டின்படி, புனிதர் எடெஸ்ஸாவில் 373இல் இறந்தார்.

 ஜுன் - 11  புனித பர்னபா - திருத்தூதர்

இவர் சைப்பிரஸ் தீவில் பிறந்தார். எருசலேமின் முதல் கிறிஸ்தவர்களில் இவரும் ஒருவர். இவர் அந்தியோக்கியாவில் நற்செய்தியைப் போதித்தார். திருத்தூதரான புனித பவுலைப் பின்பற்றி, பவுலின் முதல் மறைபரப்புப் பயணத்தில் அவருக்குத் துணைபுரிந்தார். எருசலேமில் நடந்த திருச்சங்கத்தில் இவர் பங்குப் பெற்றார். பிறகு தம் சொந்த நாட்டிற்குத் திரும்பி அங்கு நற்செய்திப் பணி செய்து அங்கேயே இறந்தார்.

ஜுன்-13 புனித அந்தோணியார்-மறைப் பணியாளர், மறைவல்லுநர்.
             
இவர் போர்த்துக்கல் நாட்டில் லிஸ்பன் நகரில் கி.பி. 12ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்தார். முதலில் புனித அகுஸ்தினார் துறவறச் சபையில் சேர்ந்தார். மறைப்பணியாளராகிய சிறிது காலத்தில் ஆப்பிரிக்க மக்களுக்கு பணியாற்ற விரும்பி கப்புச்சின் துறவியர் சபைக்கு மாறினார். ஆனால் பிரான்ஸ், இத்தாலி நாடுகளில் மறைபோதகப் பணியாற்றப் பணிக்கப்பட்டார். அங்கு சிறந்த முறையில் பணியாற்றினார். திருச்சபைக்கு எதிராக பேசிய பலரை மனந்திருப்பினார். சபையின் முதல் இறையியல் வல்லுநராகி மற்ற சகோதரர்களுக்கும் இறையியல் கற்றுக்கொடுத்தார். கருத்து நிறைந்த நயமான மறையுரைகளும் எழுதி வெளியிட்டார். 1231இல் இத்தாலியில் பதுவா நகரில் இறந்தார். அடுத்த வருடமே இவர் புனிதர் என்று அறிவிக்கப்பட்டார்.

 ஜுன்- 21  புனித அலோசியஸ் கொன்சாகா - துறவி.

              இவர் இத்தாலியில் லொம்பார்டி மாவட்டத்தில் மாந்துவா நகருக்கருகில் கி.பி 1568இல் காஸ்டிலியோனோ என்னும் அரசக் குடும்பத்தில் பிறந்தார். தம் தாயிடமிருந்து பக்தி நிறைந்த கல்வி பெற்று, சமய வாழ்க்கையில் மிகுந்த ஈடுபாடு உடையவராய்த் திகழ்ந்தார். அரச குடும்ப பிறப்புரிமையைத் தம் சகோதரனிடம்ஒப்படைத்து விட்டு, உரோமையில் இயேசு சபையில் சேர்ந்தார். மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தொண்டு செய்த போது, இவரும் நோய்வாய்ப்பட்டு, 1591இல் இறந்தார்.

 ஜுன் - 24  புனித திருமுழுக்கு யோவானின்  பிறப்பு

                இவர் இயேசுவின் முன்னோடி. அவருக்கு ஆறு மாதங்களுக்கு முன் பிறந்தார். இவரின் தந்தை சக்கரியாஸ் ‡ தாய் எலிசபெத்தம்மாள். இவர் புனித கன்னிமரியாவின் நெருங்கிய உறவினள். யோவான் தாயின் உதரத்திலேயே அர்ச்சிக்கப்பட்டார். பெண்களிடம் பிறந்தவர்களில் இவரைவிட உயர்ந்தவர் யாரும் இல்லை என்று இயேசுவால் புகழப்பட்ட இவர், பாலை வெளியில் வாழ்ந்தார். மனம் மாறுங்கள்; ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது (மத்23:2) மக்களை எச்சரித்தார். யோர்தானில் இவர் இயேசுவுக்கு திருமுழுக்குக் கொடுத்தார். இயேசுவின் முன்னோடியாகத் துணிவுடன் பணியாற்றி, தன் தலையையே அர்ப்பணித்து தியாகியாக இறந்தார். 

 ஜுன் - 27   புனித சிரில் ‡ ஆயர், மறைவல்லுநர்.

               இவர் கி.பி370 ஆம் ஆண்டில் பிறந்தார். முதலில் துறவு வாழ்வு மேற்கொண்டார். பிறகு குருவாகி, பின்பு அலெக்ஸ்சாந்திரியாவின் ஆயராக 412இல் நியமனமானார். கிறிஸ்துவைப் பற்றி தவறாகப் போதித்து வந்த நெஸ்தோரியுசைத் திறமையுடன் எதிர்த்து உண்மையைப் போதித்தார். 431இல் எபேசில் நடந்த பொதுசங்கத்தில் முதன்மையான பொறுப்புகளை ஏற்று நடத்தினார். கத்தோலிக்க நம்பிக்கைக்கு விளக்கமாகவும், அதனைப் பாதுகாக்கவும் பல நூல்கள் எழுதினார். 444இல் இறந்தார்.

ஜுன்-29  புனிதர்கள் பேதுரு, பவுல்- திருத்தூதர்கள்

பேதுரு கலிலேயாவிலுள்ள பெத்சாயிதா ஊரில் வாழ்ந்த மீனவர். இயேசுவால் தம் சகோதரன் பிலவேந்திரருடன் அழைக்கப்பட்டார். திருச்சபையின் தலைவராகவும், முதலில் அந்தியோக்கியாவிலும், பிறகு உரோமையிலும் திருச்சபையை தலைமையேற்று நடத்தினார். நீரோ மன்னன் ஆட்சியில் 67இல் இவர் கொல்லப்பட்Vர். பவுல் சிறிய ஆசியாவில் உள்ள தார்சுஸ் நகரில் பிறந்தார். இவரின் தந்தை உரோமை குடிமகன். தமஸ்கு செல்லும் வழியில்  புதுமையாக இவர் மனம் திரும்பி கிறிஸ்துவை புறவினத்தார்க்கு அறிவிக்கும் பணிக்கு இயேசுவால் தெரிந்து கொள்ளப்பட்டார். பல ஆண்டுகள் நீண்ட மூன்று  பயணங்கள் செய்து, பல துன்பங்களுக்கு உட்பட்டு இறுதியில் உரோமையை அடைந்தார். அங்கு பேதுருவுடன் சேர்ந்து திருச்சபையை நிறுவினார். இவர் உரோமை குடிமகன் என்பதால், சிலுவையில் அறையாமல் தலையை வெட்டிக் கொன்றார்கள். 

No comments:

Post a Comment

Ads Inside Post