Pages - Menu

Monday 17 July 2017

பொதுக்காலம் 15 ஆம் வாரம் 16-07-2017

பொதுக்காலம் 15 ஆம் வாரம்
 16-07-2017
எசா 55:10-11;   உரோ 8:18-23;  மத் 13:1-9

பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம். 
பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்.

என்ற பாடலை பாட கேட்டிருக்கிறோம். மனிதரும் பலவிதம், ஒவ்வொருவரும் ஒருவிதம் என்று சொல்லலாம். இன்றைய நற்செய்தியில் இருவித பொருள் கொள்ளலாம். விதை தெளிக்கப்படுகின்றது. விதை பலவிதமான நிலங்களில் விழுகிறது. வழியோரம், பாறை, முள்புதர், நல்லநிலம் ஆகியவை. நல்ல நிலத்தில் விழுந்தது மட்டும் நிறைந்த பலன் தருகிறது. மற்ற நிலத்தில் விதை முளைத்து பலன் தர முடியாமல் போகிறது. 

விதை வளர்வது, நிலத்தைப் பொறுத்தது எனலாம். இப்போதெல்லாம், மண்ணின் தன்மையைப் பார்த்து அதற்கேற்ற பயிர் செய்ய விவசாய அறிஞர்கள் ஆலோசனைக் கூறுகின்றனர். இறைவனுடைய வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளும் மனநிலையோடு அணுக வேண்டும். அதுதான் நல்ல நிலம். திருமணத்திற்குமுன்  ‘சம்திங், சம்திங்’, திருமணத்திற்குப் பின் ‘நத்திங், நத்திங்’ என்பது போல, தடுமாற்ற மனநிலையும் (வழியோரம்),  குரங்குபிடி உடும்பு பிடியான, பிடிவாதமான நிலையும், (பாறை). சேராத இடந்தனில் சேர்ந்து வாழும் மனநிலையும் (முள்புதர்) இறைவார்த்தை வளர்வதற்கு ஏற்றவையல்ல.

நல்லநிலம் என்பவர்கள் இறை வார்த்தையைக் கேட்டு புரிந்து கொள்பவர்கள். இதற்கு சிறந்த முன்மாதிரியாக விளங்குபவர் மரியன்னை! ‘இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி செயல்படுகிறவராகத் திகழ்ந்து இயேசுவின் தாய் ஆனார் (லூக் 8:21). மார்த்தாவின் சகோதரி மரியாவும், இயேசுவின் காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தார் (லூக் 10:39).

முதல் வாசகத்தில், மழையும் பனியும் மண்ணில் வீழ்ந்த பிறகு அது பயனளிக்காது திரும்பாது என்று எசாயா நூலில் வாசிக்கிறோம். திப 19:20இல் இவ்வாறு ‘ஆண்டவரின் வார்த்தை ஆற்றல் பொருந்தியதாய் பரவி வல்லமையுடன் செயல்பட்டது’ என்று கூறப்பட்டுள்ளது. ‘ஆண்டவரின் வார்த்தைப் பரவியது’ என்ற குறிப்பையும் (திப 6:7; 12:24;13:49) திருதூதர்பணிகளில் பார்க்கிறோம். ஆக இறைவார்த்தை தன்னிலேயே வல்லமையுள்ளது. இரண்டாம் வாசகத்தில் வருங்காலத்தில் வெளிப்படப்போகும் மாட்சி எதற்கும் ஒப்பிட முடியாத பெருமையுடைத்து என்று விளக்குகிறார் பவுல்அடிகளார்.
பொதுத்தேர்வு நடந்துக் கொண்டிருந்தது. ஒரு மாணவன் காப்பியடித்துக் கொண்டிருந்தான். மேற்பார்வை செய்த ஆசிரியர் ஒரு கத்தோலிக்கர் (லூக் 16:10) இல் வருகிற வசனத்தை சொல்லி விட்டுசென்று விட்டார். மிகச் சிறியவற்றில் நம்பத்தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத்தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார்.
அந்த ஆசிரியர் பணிமுடிந்து ஓய்வு பெற்று விட்டார். தனக்கு வங்கியில் கடன்வாங்க வங்கிக்குச் சென்று, வங்கி மேலாளரிடம் சென்றார். அந்த ஆசிரியரைப் பார்த்ததும் வங்கி மேலாளர் ஓடிவந்து ஆசிரியரின் காலைத் தொட்டு வணங்கினார். ஆசிரியருக்கு ஒன்றும் புரியவில்லை. வங்கி மேலாளர் கூறினார், ‘ஐயா, நான்தான் தேர்வில் காப்பியடித்தவன். அதனைப் பார்த்ததும், பைபிள் வார்த்தைகளை சொன்னீர்கள்’ ‘சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பர்’ என்றீர்கள். அந்த வார்த்தைகள் என் மனதை மாற்றி விட்டன. அது முதல் நேர்மையாக நடந்து இப்போது இந்த பெரிய பதவியைப் பெற்றிருக்கிறேன். இதோ பாருங்கள், நீங்கள் சொன்ன வார்த்தைகளை அச்சடித்து அங்கு மாட்டியிருக்கிறேன் என்றார்.

இறைவார்த்தை வல்லமையுள்ளது. 
வாழ்வை மாற்ற வல்லது.

No comments:

Post a Comment

Ads Inside Post