Pages - Menu

Tuesday 4 July 2017

பொதுக்காலம் 14 ஆம் ஞாயிறு

பொதுக்காலம் 14 ஆம் ஞாயிறு
 09-07-2017,              
அருட்பணி. ச.இ. அருள்சாமி
 செக் 9:9-10;  உரோ 8:9,11-13;  மத் 11:25-30

நம் வாழ்வில் எவ்வளவோ போராட்டங்கள், சுமைகள் நம்மை சந்திக்கின்றன. இவைகளிலிருந்து விடுபடுவது  எப்படி என்று தெரியாமல் பல நேரங்களில் தடுமாறி போய்விடுகிறோம். உதாரணமாக பிள்ளைகளை வாழ்க்கையில் அமர வைக்க பெற்றோர்கள் பெரிய போராட்டத்தைச் சந்திக்கிறார்கள். 
கடன் சுமைத் தாங்காமல் குடும்பமே தற்கொலை செய்துக் கொள்ளும் செய்திகளை நிறையவே பார்க்கிறோம். இந்த போராட்டங்களெல்லாம் அடிப்படையாக மன அழுத்தத்தில்  போய் சங்கமமாகின்றன. இந்த  மன அழுத்தம், உடல் நோய்களிலும்  விடிவு காண்கின்றன. ஒருவருக்கு உடல் முழுவதும் சரியான அரிப்பு பல மருத்துவர்களைப் பார்த்து பல  மருத்துவ சோதனைகளைச் செய்தார்கள். எல்லாம் சரியாயிருக்கிறது. கடைசியாக  அந்நோயின் காரணம், அவளின் மகள், தன் கணவனுடன் வாழாமல் தன்னிடம் வந்திருக்கிறாள். அதனால் வந்த மன அழுத்தம், உடல் அரிப்பில் விடிவுக் கண்டது. 
இன்றைய நற்செய்திப் பகுதியில், இயேசு கூறுகின்ற நம்பிக்கை தரும் வார்த்தைகளைப் பார்க்கிறோம்.      ‘பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன்’ என்கிறார். இயேசுவின் காலத்தில்  ‘அம்ஆரஸ்’ என்று அழைக்கப்பட்ட சாமாணிய மக்கள் இருந்தார்கள். அவர்கள் படிப்பறிவில்லாதவர்கள், ஏழைகள், சமுதாயத்தின் பெருங்குடி மக்களால் ஒதுக்கி  வைக்கப்பட்டவர்கள். அவர்களைப் பார்த்துத்தான், பெரும்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே என்கிறார் இயேசு. இளைப்பாறுதல் தருவேன் என்பது ஓய்வு நாளிலிருந்து வரும் இளைப்பாறுதல், ‘என் நுகத்தை ஏற்றுக்கொண்டு’  என்ற சொற்றொடரில் வரும் ‘நுகம்’ என்பது பரிசேயர் மற்ற தலைவர்கள் முன் வைக்கும் பாரமான சட்டங்கள்.  ஆனால் இயேசு தரும் நுகம், எளிதானது. அன்பென்ற நுகம்.

முதல்வாசகத்தில், ‘உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்; வெற்றி வேந்தர்; எளிமையுள்ளவர்’ என்றும் ‘குதிரைப் படையை அறவே ஒழித்து விடுவார். போர்க் கருவியான வில்லும் ஒடிந்துபோகும்’ என்றும் குறிப்புக்களைப் பார்க்கிறோம். இறைவன் வன்முறைக்கு எதிரானவர் என்ற கருத்தினை இங்குக் காணமுடியும்.
இரண்டாம் வாசகத்தில், பவுல் அடிகளார், ‘நீங்கள் ஊனியல்புக்கு ஏற்ப வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள். ஆனால், தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடித்தால் நீங்கள் வாழ்வீர்கள்’ என்று கூறுகிறார். பல நேரங்களில் வீணான சுமைகளை, நமக்கு நாமே உண்டாக்கிக் கொள்கிறோம். 

சிகரெட் குடிப்பதை விட, இப்போது பான்பராக் போடும் கலாச்சாரம் பரவி வருகிறது. பான்பராக்  அரசால் தடை செய்யப்பட்டிருந்தாலும், இரகசியமாக வாங்கி அதனைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு நாள் இரயிலில் பயணம் செய்யும் போது, இளைஞர் ஒருவர் பான்பராக் போட்டுக் கொண்டு, நிமிடத்திற்கு ஒருமுறை எச்சிலை வெளியே துப்பிக் கொண்டிருந்தார். இதனால் இரயிலின் வெளிதகரங்கள் எச்சிக்கரையாகியது. அதற்குமேல், அவரின் உடல்நலம், புற்றுநோய்க்காக தயாராகியது எனலாம். 

இயேசுவின் வழியில் சென்றால் உடல் உள்ள சுமைகளுக்கு விடிவுக் காணலாம்.                 

No comments:

Post a Comment

Ads Inside Post