Pages - Menu

Tuesday 4 July 2017

திருப்பலி விளக்கம் 17. நற்கருணை வழிபாடு ( V)

திருப்பலி விளக்கம்

17. நற்கருணை வழிபாடு  ( V)   
 
3. 8.  நினைவு ஆர்ப்பரிப்பு 

இது நற்கருணையை ஏற்படுத்தியதை விவரிக்கும் பகுதிக்கும் அதற்குப் பின்வரும் பகுதிக்குமிடையே ஒரு தொடர்பை உருவாக்கு வதற்காக அமைந்துள்ளது. “நம்பிக்கையின் மறைபொருள்” என்று  ஆர்ப்பரிப்பது ஆண்டவர் மீது மக்கள் கொண்டுள்ள விசுவாசத்தை  உறுதிப்படுத்தவும், அவரை நம்பிக்கையோடு எதிர்கொள்ளவும்  தூண்டுவதாய் அமைகிறது. விசுவாசத்தின் மறைபொருளை விளக்குவதாகவும் அமைகிறது. இதைத்தான்  “ஆண்டவரே நீர் வருமளவும் உமது மரணத்தை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பையும் எடுத்துரைக்கின்றோம்” என்ற நினைவு ஆர்ப்பரிப்பு வெளிப்படுத்துகிறது. இது போன்ற மேலும் 3 பாடங்கள் திருப்பலி நூலில் தரப்பட்டுள்ளன. அவற்றையும் நாம் அவ்வப்போது பயன்படுத்த வேண்டும். “எனக்காக பிறந்து, எனக்காக மரித்து .... உமக்கே ஆராதனை”  என்று சொல்வது தவறாகும். தவிர்க்கப்பட வேண்டும். இயேசு கிறிஸ்துவின் பாஸ்கா மறைபொருள் பறைசாற்றக் கூடியே நேரம் இது.  இயேசு கிறிஸ்துவை ஆராதிக்கும் நேரம் அன்று. 

 3.9.  நினைவாக்கம் (Sacrificial Memorial)

நற்கருணை வழிபாட்டின் இரண்டாவது பகுதி இந்த செபத்தோடு தொடங்குகிறது. முதல் பகுதி  கிறிஸ்துவின் உடலை அருள் அடையாள  உடலாக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது.  இரண்டாவது பகுதி மீட்பு வரலாற்றின் முக்கியமான நிகழ்வுகளாகிய பாஸ்கா மறைபொருளை நினைவு கூறுவதோடு, இயேசு, கிறிஸ்துவையே இறைவனுக்கு பலியாக  ஒப்புக் கொடுக்கும் நேரமாக அமைகிறது. மேலும் கூடியிருக்கும் இறைமக்கள் மீது தூய ஆவியார் இறங்கி வந்து (Second Epiclesis)  அவர்களை ஒன்றிணைக்க வேண்டப்படுகிறது. இந்த இரண்டாவது பகுதி கிறிஸ்துவின் மறையுடலை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. “மேலும் கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் பங்கு கொள்ளும் எங்களைத் தூய ஆவியார் ஒன்று சேர்க்க வேண்டும் என தாழ்மையுடன் உம்மை மன்றாடு கிறோம்” என்று சொல்லப்படுகிறது.  (இரண்டாவது நற்கருணை மன்றாட்டு காண் ந.ம. III, IV). 
தூய ஆவியார் உயிர்த்த கிறிஸ்துவின் கொடை. விண்ணகம் சென்ற கிறிஸ்து இதற்காகத் தந்தையிடம் பரிந்து மன்றாடிக் கொண்டுள்ளார். தூய ஆவியார் மக்கள் மீது  இறங்கி வர மன்றாடுவது இரு நோக்கங்கள் கொண்டது: ஒன்று தூய ஆவியார் அனைவரையும் ஒன்றுசேர்த்து செபிக்கக் கற்றுத்தர வேண்டும் என்பது (காண்  உரோ 8:26-27). மற்றொன்று நம்பிக்கையாளர்கள்  கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் உட்கொள்வதால் அதன் பயனாகிய ஒன்றிப்பை அடைய வேண்டும் என்பது (காண் 1 கொரி 10:17).

 3.10.  திரு அவையின் தேவைகளுக்காக மன்றாட்டு

அதன்பின் திருஅவையின் தேவை-களுக்காகவும்  மக்களுடைய தேவைகளுக்காகவும் மன்றாட்டுகள் தொடர்கின்றன. இவை தூய ஆவியாரின் வருகைக்குரிய மன்றாட்டின் இயல்பான தொடர்ச்சியாகும். முதலில் திருஅவைக்காகவும், திருத்தந்தைக்காகவும், அடுத்து திருப்பணியாளர்கள், மற்றும் மக்கள் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். (காண் ந.ம. ணூணூ, ணூணூணூ). நான்காவது மன்றாட்டில் “நேர்மையான உள்ளத்தோடு உம்மை தேடிவரும் யாவரையும் நினைவுகூர்ந்தருளும்”  என்பது கவனிக்கத்தக்கது.

 3.11 . புனிதர்களின் நினைவு

இறைவனின் அன்பில் சிறந்து வாழ்ந்து, இன்று விண்ணக பேரின்பத்தில் பங்கு பெற்றிருக்கும் நம் மூத்த சகோதரர்களாகிய புனிதர்களையும் சுருக்கமாக நினைவு கூர்ந்து நமக்காக பரிந்துரைக்க மன்றாடுகிறோம். முதல் நற்கருணை மன்றாட்டில் நற்கருணை ஏற்படுத்துதலை விவரிக்கும் பகுதிக்கு முன்னும் பின்னும் புனிதர்களை நினைவுகூர்வதைக் காணலாம்.  மற்ற நற்கருணை மன்றாட்டுகளில் கன்னிமரியும், அவரது கணவர் புனித சூசையப்பரைத் தவிர மற்றவர்கள் திருத்தூதர், மறைசாட்சியர் என்று பொதுவாக நினைவு கூறப்படுகிறார்கள்.

 3.12.  இறந்தோருக்காக வேண்டல்

இவ்வுலகில் வாழ்வோருக்காக செபித்த அருள்பணியாளர் இப்போது இவ்வுலகில் வாழ்ந்து மரித்தவர்களுக்காக மன்றாடுகிறார். இறைவன் அவர்கள் மீது கருணைக்காட்டிட மன்றாடுகிறார்.
குறிப்பு: மேலே குறிப்பிட்ட மூன்று வேண்டுதல்களும் புனிதர்களின் சமூக உறவு என்ற கோட்பாட்டின் அடிப்படையில்  இடம் பெறுகின்றன. பரிந்துரைகளின் கருத்துகளைக் குறிப்பிடுவதிலும், புனிதர்களை நினைவுகூர்தலிலும் ஒரே வகையான வரிசைகிரமத்தை நற்கருணை மன்றாட்டுகளில் காண்பதில்லை. மூன்றாவது நற்கருணை மன்றாட்டில் புனிதர்களை நினைவுகூர்தல் முதலிலும், மற்ற இரண்டிலும் (ணூணூ &ணூV) இறுதியிலும் அமைந்துள்ளது. வாழ்வோர்க்கான பரிந்துரைத்தலுக்குப் பின் இறந்தோர்க்காக மன்றாடுவது 3ஆம், 4ஆம் நற்கருணை மன்றாட்டுகளில் வரிசைக் கிரமமாயிருக்கிறது. ஆனால் 2 ஆம் நற்கருணை மன்றாட்டில் இறந்தோரை நினைவுகூர்ந்த பின்னரே நமக்காக வேண்டுதல் புரிகிறோம்.   
  
3.13.  இறுதி புகழுரை (Doxology)

இது நற்கருணை மன்றாட்டின் முடிவுரையாகும்.  என்றாலும் இதுவே நற்கருணை மன்றாட்டின் சிகரமாக அமைந்துள்ளது.  எல்லா நற்கருணை மன்றாட்டுகளிலும் இந்த இறைபுகழ் ஒரே வகையாக அமைந்திருக்கிறது. திருப்பலியின் இறையியல்பையும் நோக்கத்தையும் மிகச் சுருக்கமாக, ஆனால் தெளிவாக எடுத்துரைக்கிறது. தூய ஆவியாரால் ஒன்றிணைக்கப்பட்ட திருஅவை இயேசுகிறிஸ்து வழியாக தந்தையாகிய கடவுளுக்கு உரிய வாழ்த்தும்  வணக்கமும் ஆராதனையும் அளிக்கிறது.
நற்கருணை மன்றாட்டின் இந்த இறுதிப் பகுதியைத் திருப்பலிக்குத் தலைமையேற்று  நிகழ்த்தும்  அருள்பணியாளர் பாட அல்லது பறைசாற்ற, மக்கள் அனைவரும்  “ஆமென்”  என்று சொல்லி இப்புகழுரையை உறுதிப்படுத்துகினறனர், தங்களுடையதாக்கிக் கொள்கின்றனர். இதைப் பெரிய ‘ஆமென்’  என்று சொல்வதுண்டு.
இந்த இறுதி புகழுரையை திருப்பணியாளர் மட்டுமே பறைசாற்ற வேண்டும். ஏனெனில் இது நற்கருணை மன்றாட்டின் ஒரு பகுதியாகும். எவ்வாறு நற்கருணை  மன்றாட்டில் எந்த ஒரு செபத்தையும் சொல்ல மக்களுக்கு அனுமதி இல்லையோ, அதேபோல்தான் இங்கும்.
இந்த இறுதிபுகழுரையில் வரும்  ‘இவர்’ இயேசு கிறிஸ்துவைக் குறிக்கின்றது. மேலும், அருள்பணியாளர் திருதட்டையும், கிண்ணத்தையும் தூக்கிப் பிடித்து நிற்பதால், அப்ப இரச குணங்களுள் பிரசன்னமாயிருக்கும் இயேசுவையே, ‘இவர்’ குறிக்கிறது. கூட்டுத்திருப்பலியில் திருதட்டுடன் அப்பத்தை ஒருவரும், இரசக் கிண்ணத்தை மற்றொருவரும் தூக்கிப் பிடிப்பர். ஏனைய கூட்டுப் பலியாளர் வேறு அப்பப் பாத்திரங்களை தூக்கிப் பிடிப்பது முறையானது எனக் கூறமுடியாது;  அவசியமும்  இல்லை.

 4. நற்கருணை மன்றாட்டுகளின் சிறப்பு பண்புகள்
நற்கருணை மன்றாட்டின் அமைப்பு கூறுகளை விளக்கியபின் அவற்றில் இழையோடும் சில பண்புகளைப் பற்றிய விளக்கம் இங்கு இடம் பெறுகிறது.

4.1.  நினைவாக்கம்  (Anemnesis)

“இதை என் நினைவாகச் செய்யுங்கள்”  என்று நம் ஆண்டவர் சீடர்களுக்குக்  கட்டளையிட்டார். இன்று நாம் அப்பத்தைப் பிட்டும், கிண்ணத்தைப் பகிர்ந்தும் கொள்வதின் வழியாக கிறிஸ்து தம்மையே பகிர்ந்தளித்ததை நினைவு கூர்கிறோம்.
விவிலியத்தில் ‘நினைவுகூர்தல்’  என்பது செயலாக்கம் உடைய இரு பண்புகளைக் கொண்டது. ஒன்று கடவுள்  மீட்புக்கடுத்த வாக்குறுதிகளில் பிரமாணிக்கம் தவறமாட்டார் என்பதை மக்களுக்கு நினைவூட்டுதலாகும். இது மக்கள் உள்ளத்தில் நன்றியுணர்வை உண்டாக்கும். மற்றொன்று அதே மீட்புக்கடுத்த வாக்குறுதிகனைக் கடவுளுக்கும் நினைவுப்படுத்துதலாகும். அதாவது, மக்கள் கடவுளின் திருமுன் தங்கள் காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவற்றைக் காட்டி அவரது மீட்பின் வாக்குறுதிகளை மீண்டும் செயலாக்க மன்றாடுவது. எனவே நினைவாக்கம் வெறும் குறித்துக் காட்டுதல் மட்டுமல்ல,  செயலூக்கமும், படைக்கும் ஆற்றலு முடைய ஒரு செயல்.
இதன் அடிப்படையில் யூதர்கள் பாஸ்கா வைக் கொண்டாடும் போது கடவுளுடைய அரும் பெரும் செயல்களை நினைவுக்குக் கொண்டுவந்து பறைசாற்றினர். தங்கள் முன்னோர்களுக்குக்  கடவுள் செய்த அதே  மீட்புச்செயல்களை இப்பொழுதும் தங்களுக்குச்  செய்ததாகவும் அதனால் அதன் பயனை தாங்கள்  தூய்ப்பதாகவும் உணர்ந்தனர். எனவே இறைவனை உளமாற புகழ்ந்து நன்றி செலுத்தினர்.

இன்றும் திருப்பலி கொண்டாட்டத்தில் இது நடைபெறுகிறது. நற்கருணை மன்றாட்டு முழுவதும் இயேசு கிறிஸ்துவின் பாஸ்கா நிகழ்வுகள், அதாவது மீட்கும் ஆற்றலுடைய அவரது பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவை முனைப்பான (எஸஷ்ஸஷ்d) முறையில் நினைவு கூறப்படுகின்றன. திருப்பலியில் பங்கு பெறுவோர் இங்கே இப்பொழுது மீட்கப்படுவதாக உணரமுடிகிறது. இயல்பாகவே அவர்கள் இறைவனை புகழ்ந்து நன்றிகூற உந்தப்படுகின்றனர்.

4.2.  புகழுரையும் நன்றிகூறலும்

நற்கருணை வழிபாட்டிற்குச் சிறப்பளிப்பது புகழ்ச்சியும் நன்றியுமாகும். இவை இரண்டும் ஒரே பொருளுடையவை என மேலே குறிப்பிடப்பட்டது. இப்புகழுரை கடவுள் தம் திருமகனின் பலி வழியாக நமக்கு மீட்பளித்துள்ளார் என்பதை  உயிராற்றல்  உள்ளமுறையில் உணர்வதால், இயல்பாகவே நமது எதிர்விளைவும், பதிலுரையும் புகழ்ச்சியாகவும் நன்றியாகவும் உருவெடுக்கிறது.

 4.3.  இறைஞ்சி மன்றாடுதல் (Supplication)

புகழ்ச்சியும் நன்றியும் நிறைந்த ஆர்ப்பரிப்பு,  கடவுள் தம் மீட்கும் செயலை,  இப்பொழுது இங்கு தம் மக்கள் சார்பாக தொடர்ந்து செய்யவும் புதுப்பிக்கவும் வேண்டும் என்று மன்றாட திருகுழுமத்தைத் தூண்டுகிறது. இது நினைவாக்கத்தின் விளைவுமாகும். நினை-வாக்கத்தோடு இறைஞ்சி மன்றாடுவதும் இணைந்து செல்ல வேண்டும் என்பது கடவுளுடன் மனிதன் கொண்டிருக்கும் உறவின் தன்மைக்குத் தேவைப்படுகிறது. நற்கருணை வழிபாட்டில் தம் திருமகனின் சாவு ‡ உயிர்ப்பின் பேறு பலன்களால் நம்மை மீட்கும்படி தந்தையாகிய இறைவனிடம் மன்றாடப்படுகிறது. இறைவனின் மீட்புத்திட்டம் இயேசுகிறிஸ்துவின் இரண்டாவது வருகையில் முற்றுப்பெறும் வரை, அவரை அனுப்ப வேண்டுமென்று இறைஞ்சுகிறோம். இக்கண்ணோக்கில், நினைவாக்கம் கிறிஸ்துவின் மீட்புச்செயலின் ஓர் அருள்அடையாள வடிவமாகும். இதன் வழியாக, இன்னும் முற்றுபெறாத மீட்பின் வாக்குறுதியை நிறைவு செய்யும்படி தந்தையிடம் மன்றாடுகிறோம்.

4.4.  காணிக்கை (பலி)

நாம் செய்த மன்றாட்டுகள் ஏற்கப்பட்டு நமக்குப் பயன் அளிக்கும் வகையில் நாம் நமது காணிக்கைகளை இறைவனுக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இக்காணிக்கை கிறிஸ்துவின் உடலாகவும், இரத்தமாகவும் மாற்றப்படுவதால் நாம் இயேசுகிறிஸ்துவையே கடவுளுக்குக் காணிக்கை யாக்குகிறோம். இதில்தான் நாம் ஒப்புக்கொடுக்கும் பலி அமைந்துள்ளது.  இயேசுகிறிஸ்து கடவுளின் உகந்த மகனாகையால் அவர் ஏற்றுக்கொள்ளபடுவார். அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டால் நாம் இறைஞ்சி மன்றாடினதும் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற உறுதிபாடு நமக்கு உண்டு.                   தொடரும்...

No comments:

Post a Comment

Ads Inside Post