Pages - Menu

Tuesday 4 July 2017

பொதுக்காலம் 13 ஆம் ஞாயிறு

பொதுக்காலம் 13 ஆம் ஞாயிறு
 02-07-2017,             
அருட்பணி. ச.இ. அருள்சாமி
 2அரச 4:8-11,14-16;   உரோ 6:3-4,8-11;  மத் 10:37-42        

மக்கள் திருப்பலியை அர்ப்பணிக்கிறார்கள். அதற்காக தற்போது ரூ100/- நன்கொடையாகத் தருகிறார்கள். மக்கள் நிறைய திருப்பலிகளை அர்ப்பணித்தால், அந்த பங்கிற்கு நல்ல வருமானம் என்பார்கள். அதுவல்ல உண்மை. திருப்பலிக்கு கொடுக்கப்படும் நன்கொடை, குருக்களின் பராமரிப்பிற்காக அளிக்கப்படுகிறது. குருவானவர் ஒரு நாளைக்கு ஒரு திருப்பலியின் நன்கொடையை பெற்றுக் கொள்வார். திருத்தலங்களில் மக்களால் கொடுக்கப்படும் திருப்பலிகள் குருக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். குருக்கள் தாங்கள் திருப்பலி நன்கொடைப் பற்றி ஒரு நோட்டில் பதிவு செய்ய வேண்டும். ஆண்டிற்கொரு ‡முறை ஆயர் அதனை  பார்வை யிடுவார். திருச்சபை சட்டம்  946, திருப்பலிக்கு அளிக்கப்படும் நன்கொடை திருச்சபையின் நலனுக்காக அளிக்கப் படுகிறது. இதில் அருள்பணியாளர் களின் பராமரிப்பு அடங்கும் என கூறியுள்ளது. இவ்வாறு திருப்பலிக்கு மக்கள் அளிக்கும் நன்கொடை, அவர்களின் தியாகத்தையும் குறித்துக் காட்டும். 
இன்றைய நற்செய்திப் பகுதியில் இறையடியார்களை ஏற்றுக் கொள்பவர்கள் இயேசுவையே ஏற்றுக் கொள்கிறார்கள் என்றும், இறையடியார்களுக்கு உதவுபவர்கள் அதற்கேற்ற கைமாறு பெறுவர் என்றும் இயேசு கூறுவதை கேட்கிறோம். திருஅவை, திருஅவையின் மக்களாலேயே பராமரிக்கப்படுகிறது. இயேசுவிற்கு பெண்கள் பலர் தங்களின் உடைமைகளைக் கொண்டு அவருக்கு பணிவிடை செய்தார்கள் என்ற குறிப்பைப் பார்க்கிறோம் (லூக் 8:1‡3).  பவுல் அடிகளார், திருப்பணியாளர்கள், தங்கள் பணிக்கேற்ற ஊதியத்தைப் பெற தகுதியானவர்கள் என்கிறார். நற்செய்தியை அறிவிக்கிறவர்கள் அந்நற்செய்தியின் மூலமாகவே பிழைப்புக்குரியவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று நம் ஆண்டவர் பணித்திருக்கிறார் (1 கொரி 9:14). அதே நேரத்தில் பவுல், என்னுடைய தேவைகளுக்காகவும், என்னோ ‡டிருந்தவர்களின் தேவைகளுக்காகவும் இந்த என் கைகளே உழைத்தன (திப 21:34) என்று கூறுகிறார்.
தற்போது வெளிநாட்டு உதவிகள் வெகுவாகக் குறைந்து விட்டன. நமது திரு அவையில், பங்குகளின் தேவைகளை நாமே நிறைவு செய்ய வேண்டும். அதுதான் மனநிறைவையும், கடவுளின் அருளையும் பெற்றுத் தரும்.  தற்போது, பங்குப் பேரவைகள் அமைந்து, மக்கள் மிக்க ஈடுபாட்டுடன் செயல்படுவதைப் பார்க்கிறோம். சிலர் தாராள சிந்தனைக் கொண்டு உதவி செய்கிறார்கள். ஒரு பங்கில் புதிதாக ஆலயம் கட்டினார்கள். மக்களின் உதவியை பங்குத்தந்தை நாடினார். ஏழை விதவை ஒருவர், என்னால் முடிந்தது என்று ஒரு லட்ச ரூபாயை நன்கொடையாக தந்திருக்கிறார். அதே பங்கில் வசதி படைத்தவர்கள் ஆயிரம், இரண்டாயிரம் என்று மட்டும் உதவி தந்துள்ளார்கள்.  திருஅவைக்கு உதவி அளிக்கும் போது பலர் பயன்பெறுகிறார்கள். அதனால் கடவுளின் ஆசீர் அவர்களுக்கு நிறைய கிடைக்கிறது. முதல் வாசகத்தில், எலிசா இறைவாக்கினருக்கு உதவி செய்து வந்த பெண்ணிற்கு, குழந்தை வரம் கிடைக்க ஆசீர்வதித்தார்.
குருமட மாணவர்களைப் பயிற்றுவிக்கவும் நிறைய பொருள் செலவு ஆகின்றது. குருமாணவர்களை தத்தெடுத்து அவர்களின் பயிற்சிக்கான செலவை பலர் ஏற்று கொள்கின்றனர். இஸ்பெல் ஆட்லர் கூறுகிறார், ‘பிறருக்கு உதவி செய்து யாரும் ஏழையானதில்லை’ என்கிறார். ‘உலகம் உனக்கு செய்வதை விட உலகிற்கு நீ அதிகமாக செய்யும்போதுமதான் வாழ்வில் வெற்றி பெறுகிறாய்’ என்கிறார் யஹன்றிபோர்ட்.
இரண்டாம் வாசகத்தில் ‘கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின் அவரோடு வாழ்வோம்’ என்கிறார் பவுல் அடிகளார்.                                                     
திருஅவைக்காக நாம் செய்யும் தியாகங்கள், இயேசுவின் சிலுவை தியாகத்தில் பங்குக் கொள்ளுதலாகும். இறையடியார்களை மதிப்போம். அவர்களுக்கு ஆதரவு தருவோம். அதனால் இறைவனின் ஆதரவை நிறைவாகப் பெறுவோம். திருப்பணியாளர்களுடன் உறவுக் கொண்டால் ஞானம் (தெளிவு) பிறக்கும் என்கிறார் திருமூலர்.
தெளிவு குருவின் திருமேனி கண்டால் 
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தைக் கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே (திருமந்திரம் 183)

No comments:

Post a Comment

Ads Inside Post