Pages - Menu

Saturday 7 April 2018

பணிவு என்னும் இனிய பாதை

பணிவு என்னும் இனிய பாதை

 21. நல்லத் தலைவரின் அடையாளங்கள்

 அருள்பணி. மகுழன், 
பூண்டி மாதா தியான மையம்

ஒரு பணக்கார நாட்டிற்கு பெருமளவில் வேறோரு நாட்டிலிருந்து அகதிகள் வருகிறார்கள் என வைத்துக் கொள்வோம். பொதுவாக என்ன நடக்கும்? ஒரு சில பேர் அவர்களுக்கு புகலிடம் கொடுப்பார்கள். ஒரு சில பேர் அவர்கள் குடியேறுவதற்கு எதிராக குரல் கொடுப்பார்கள். அதனால் அந்த நாட்டின் தலைவர் அகதிகளைக் கண்டும் காணாமல் விட்டு வருவார். ஆனால் அண்மையில் ஒரு நாட்டின் தலைவர் விமானநிலையத்திற்கே சென்று அகதிகளை வரவேற்று அவர்களுக்கு குளிர் போக்கும் ஆடைகளை வழங்கி வரவேற்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆமாங்க சிரியா நாட்டு அகதிகளை வரவேற்ற கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூமோதான் அவர்.

ஜஸ்டின் ட்டூடோ ஒரு நல்ல தலைவர். ஒரு நல்ல தலைவரின் அடையாளங்கள் பல அவரிடம் உள்ளன. அவற்றில்  சிலவற்றை சொல்ல வேண்டுமென்றால் 

 - அவர் எளிமையானவர். எளிமையாக எல்லோராலும் அணுகக்கூடியவர். அவரைப் பற்றி அவரது குடும்பம் பற்றி பேசத் தயங்காதவர். அவர் சிறிய வயதில் ஏழ்மையில் வாழ்ந்ததை பகிர்ந்து கொள்பவர். அவர் போதைப் பொருள்களை எடுத்துக் கொண்டதை மறைக்காதவர்.

- ஏழைகள் மீதும் ஒடுக்கப்பட்டோர் மீதும் கரிசனை கொண்டவர். சிரியா அகதிகளை இருகரம் விரித்து வரவேற்பவர். தம் அமைச்சரவையில் 50 சதவீதம் பெண்களுக்கு இடம் அளித்தவர்.

- பிற இன மக்களுக்கும், பிற சமய மக்களுக்கும் மதிப்பு அளிப்பவர். இஸ்லாமிய சகோதர, சகோதரிகளை வரவேற்பவர். தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக் கூறியவர்.

- ஒரு நல்ல தலைவரின் அடையாளங்கள் எவை என்று கேட்டால், நீங்கள் பல பயனுள்ள கருத்துக்களை பகிர்ந்துக் கொள்வீர்கள். என் மனதில் பட்ட தாழ்ச்சியின் அடிப்படையில் மூன்று அடையாளங்களை உங்கள் முன் வைக்க ஆசைப்படுகிறேன். 

1. ஒரு நல்லத் தலைவர் எளிதாக அணுகக் கூடியவராக இருக்க வேண்டும். இந்த உலகின் சிறந்த தலைவர் இயேசு. அவர் எப்போதும் எல்லோராலும் எளிதில் அணுகக்கூடியவராக இருந்தார். இயேசுவும் திறந்த உள்ளத்தோடு எல்லாரையும்  சந்தித்தார்.

தொழு நோயாளர் அவரை சந்தித்தனர்
குருடர்கள் அவரைத் தேடி வந்தனர்
ஏழைகள் அவரை நாடி வந்தனர்.
பணக்காரர்கள் அவரிடம் பேசினார்கள்
படித்தவர்கள் அவரை சூழ்ந்த வண்ணம் இருந்தனர்
பாமரர் அவரைப்  பின்பற்றிச்  சென்றனர்
குழந்தைகள் அவரை தொடுவதற்கு முயற்சி செய்தனர்
பாவிகள் அவரிடம் அடைக்கலம் புகுந்தனர்.

யாருக்கும் எந்த விதமான அச்ச உணர்வும் இல்லை. எல்லோரையும் இயேசு சமமாக மதித்தார். உடல் நோயால் வருந்துவோருக்கு உடல் நலம் அளித்தார். பாவிகளை அரவணைத்தார். மத்தேயுவை சந்தித்தார். அனைவருக்கும் அன்பையும், சமாதானத்தையும் வழங்கினார். 

சரிங்க, நீங்கள் எளிதாக அணுகக் கூடிய தலைவரா?  என்பதை அறிய ஒரு எளிய சோதனை இருக்கிறது. நீங்கள் ஒரு கூட்டத்திற்குச்  செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது நீங்கள் அதிகம் உரையாடுவது, உறவாடுவது அதிகம்  படித்த, பதவிகள் உடைய பெரிய ஆட்களிடமா?  (High Profile People)   அல்லது முக்கியம் இல்லாத பாரமரரிடமா? பாமரருக்கு முன்னுரிமை அளித்து எல்லாரிடமும் நன்கு பழகினால் நல்லத் தலைவரின் வரிசையில் நீங்கள் உள்ளீர்கள் என்று உறுதியாகச் சொல்லலாம்.

2. ஒரு நல்லத் தலைவர் அனைவரின் கருத்துகளையும் வரவேற்று ஏற்புடையவற்றை செயல்படுத்தத் தயங்காதவர். உழவர் சந்தை என்ற ஒன்று நம் ஊரில் இருக்கிறது அல்லவா? ஒரு தலைவர் அதை கொண்டு வந்தார். இன்னொருத் தலைவர் அதை மூடி வைத்தார். மாறாக ஒரு நல்லத் தலைவர் மற்றவர்கள் கொண்டு வந்த நல்லக் காரியங்களைத்  தொடருவார். பொதுவாக அடுத்தவர்கள் நமக்கு அறிவுரை வழங்கும் போது நாம் செய்கின்ற முதல் காரியம் நம்மை நியாயப்படுத்துவது தான். நாம் கேட்கின்ற முதல் கேள்வி, “எனக்கு அறிவுரை சொல்ல நீ யார்?” நாம் சொல்கின்ற முதல் பதில் “அறிவுரை சொல்வது எளிது. என் இடத்தில் இருந்து பார்த்தால் புரியும்”. 

அன்புமிக்கவர்களே, நேர் மறையான விமர்சனங்களை மட்டுமல்ல, எதிர் மறையான விமர்சனங்களையும் ஏற்றுக் கொண்டால்தான் விமர்சனங்கள் தொடரும். இல்லையேல் நமக்கு ஏன் வம்பு? என்று விமர்சனங்கள் செய்வதை நிறுத்தி விடுவார்கள். நமக்கு மேலே உள்ளவர்களின் கருத்துகளை மட்டுமல்ல நமக்குக்  கீழே உள்ளவர்களின் கருத்துக்களையும் உள்ளன்போடு ஏற்று செயல்படுத்துவோம்.

3. ஒரு நல்லத் தலைவர் தம்மை
 முழுமையாக வெளிப்படுத்துவார். தலைவர் என்று சொல்லும்போது குறை இல்லாதவர் இல்லை. குறைகளைக்  கடந்து செயல்படுவதற்கு முன்வருபவர். எனவே நம் குறைகளைப்  பிறர் அறிவதை நாம் தடை செய்யக் கூடாது. அதே வேளையில், நம் குறைகளை எப்போதும் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றில்லை. மாறாக நம் உண்மைத் தன்மையை  (Personality) மக்களுக்கு உணர்த்த வேண்டும். மக்களிடத்தில் பொருளாதாரம் உள்ளிட்ட வி­யங்களின் உண்மை  நிலையை பகிர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் மக்களிடத்தில் நம் மதிப்பு கூடும். நம் குறைகளை மறைத்தால் மக்கள் நம்மை சந்தேகிப்பார்கள். நம் இயலாமைகளை மக்கள் அறிய செய்தால்  மக்கள் நம் பணிவைப் போற்றுவார்கள்.

சரிங்க, நல்லத் தலைவர்களைப் பற்றி பார்த்தோம்.  இந்த உலகில் மிக மோசமானத் தலைவர்கள் யார் தெரியுமா? அடிப்படை ஞானம் இல்லாத, வெறியை ஊட்டுகின்ற, தன்னலம் மிகுந்த, ஆணவம் நிறைந்த , ஊழல் செய்து வாழ்கின்ற  நம்ப ஊர் அரசியல் வாதிகள் தான்.  (தொடரும்...)

No comments:

Post a Comment

Ads Inside Post