Pages - Menu

Friday 13 April 2018

பாஸ்கா காலம் 5 - ஆம் ஞாயிறு

கிறிஸ்துவுக்குள் இணைந்த வாழ்வு 

பாஸ்கா காலம் 5 - ஆம் ஞாயிறு

அருள்பணி . மரிய அந்தோணி ஜேம்ஸ் , குடந்தை

தி.ப 9: 26 - 31; 1 யோவா 3: 18-24;  யோவா 15:1-8;

மனித வாழ்வில் உறவுகள் அவசியம் அடிப்படையாகும். இயேசுவும் தனக்குதான் தேர்ந்துகொண்ட திருத்தூதர்களுக் குமிடையே இருக்க வேண்டிய உறவுகளைப்பற்றி இன்றைய அருள்வாக்குகள் பாஸ்கா விளக்குகின்றன. 

சில உறவுகள் நாம் தேர்ந்தெடுக்காமலே, அடிப்படையிலே நம்மோடு தொடரும் உறவுகளாக அமையும். உதாரணமாக நமது பிறப்பால் ஏற்படுகின்ற உறவுகள். சில உறவுகள் நம்மால் சுதந்திரமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன. உறவுகளாக அமைந்திடும். பழைய ஏற்பாட்டில் யாவே இறைவன் இஸ்ராயேல் மக்களை தனது அன்பிற்கு உரிய சுவிகார மக்களாக தேர்ந்தெடுகிறார். புதிய ஏற்பாட்டிலும் இயேசு தனது மீட்புப் பணியை தனக்குப் பின் தொடர்ந்தாற்றிட திருத்தூதர்களை அழைத்தார். (யோவா 15: 16) இல் “நீங்கள் என்னை தேர்ந்து கொள்ளவில்லை, நான்தான் உங்களை தேர்ந்து கொண்டேன்” என்று தன் உறவை இயேசு உறுதிப்படுத்துகிறார். 

அந்த ஆழ்ந்த உறவையே, “நானே திராட்சைச் செடி நீங்கள் அதன் கொடி”  என்றும், அச்செடியோடு கொடியாகிய அவர்கள் இணைந்திருக்க வேண்டும் என்றும் தெளிவுப்படுத்துகிறார். மாற் 3:14 இல் தான், திருத்தூதர்களை அழைத்ததன் நோக்கத்தை தெரிவிக்கிறார். இயேசுவோடு இருப்பதற்காகவே, அதாவது இயேசுவோடு வாழ, இயேசுவாக வாழ, இயேசுவுக்காகவே வாழ. ஒரு சீடனுக்கு தனது சீடனுக்கு தனது குருவோடு உள்ள முதல் கடமை குரு சொல்வதைக் கேட்டு, அவர் வாழ்க்கையிலிருந்து கற்றதை செயல்படுத்துவதுதான். அவரது போதனைக்களைச் சிந்தித்து, அவரோடு உறவாட மகிழ வேண்டுமென்பதே அவரோடு இணைந்து கனி கொடுத்தல் என்பதன் பொருளாகும்.

இரண்டாவதாக: அவரோடு இணைந்திருத்தல் என்பது பிறரோடு இருந்து இயேசுவின் அன்பை பகிர்தலாகும். அதனைத்தான் புனித அன்னை தெரசாவும், மற்ற புனிதர்களும் செய்தனர்.  எந்த அளவிற்கு நாம் இயேசுவோடு இணைந்துள்ளோமோ அந்த அளவிற்கு நாம் மக்களில் இயேசுவை காணமுடியும். 

இன்றைய முதல் வாசகமும், கிறிஸ்துவுக்குள் வாழ்கின்ற வாழ்வினைப் பற்றியே பேசுகிறது. இதுவரை கிறிஸ்து என்ற பெயரைக் கேட்டாலோ, அல்லது அவரைப் பின்பற்றுகின்ற மக்களை கண்டாலோ வெறுக்கின்ற சவுல், மனந்திருந்தியப்பின் இயேசுவின் மற்ற சீடர்களோடு இணைந்து நின்றார். ஆகவே தான் பிலி 1:21 இல் புனித பவுல் வாழ்வென்பது கிறிஸ்துவே, இறந்தால் அது ஆதாயமே, என்று சொல்கிறார். மேலும் கலா 3: 27 இல் புனித பவுலடிகளார், கிறிஸ்துவுக்குள் திருமுழுக்கு பெற்ற நீங்கள் கிறிஸ்துவை அணிந்து கொண்டீர்கள் என்கிறார். நாமும் கிறிஸ்துவில் திருமுழுக்கு பெற்றோம் என்பதை உணர்ந்தால், இயேசுவின் உறவில் வளர, இயேசு கொண்டிருந்த அந்த மனநிலையை கொண்டு வாழ்வோம். அன்பு, இரக்கம், நீதி, பொறுமை, கனிவு, தாழ்ச்சி, பரிவு போன்ற நல்மதிப்பீடுகளை நாமும் நமது அன்றாட வாழ்க்கை அனுபவங்களில் செயல்படுகின்ற போது அது கிறிஸ்துவுடன் கொண்ட உறவு வெளிச்சமாகிறது.

No comments:

Post a Comment

Ads Inside Post