Pages - Menu

Monday 2 April 2018

தியாகம் பிறப்பிக்கும் உயிர்ப்பு

தியாகம் பிறப்பிக்கும் உயிர்ப்பு

அருட்பணி. ச.இ. அருள்சாமி

உயிர்ப்பு இல்லையயன்றால் நம் நம்பிக்கை வீண் என்கிறார் பவுல் (1 கொரி 15:14). கிறித்துவத்தின் அடிப்படையாக அமைவது இயேசுவின் உயிர்ப்பு. ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்கமுடியாத திருப்புமுனை உண்டு. ஒருவர் தன் தாய் இறந்த பிறகு, அவரின் வாழ்வு மாற்றம் பெற்றது என்கிறார். அவர் வாழ்வின் குறுகிய நிலையை உணர்ந்துக் கொண்டார். தன் குறைகளை திருத்திக் கொண்டார். இயேசுவின் சீடர்களுக்கு இயேசுவின் உயிர்ப்பு அடிப்படை அனுபவமாகியது. காலியான கல்லறையைத்தான் கண்டார்கள். ஆனால் உயிர்த்த இயேசுவின் காட்சிகள் அவரின் உயிர்ப்பை உறுதிப்படுத்தின. எனவே தான் பவுல் தனது கொரிந்தியருக்கு எழுதிய முதல் கடிதத்தில் 15  ஆம் இயலில் உயிர்ப்பைப்  பற்றி மிக அழுத்தமாக பேசுகிறார். யூதர்களில் பரிசேயர் உயிர்ப்பினை நம்பினார்கள். சதுசேயர் உயிர்ப்பினை நம்பவில்லை. 

திமத்திராட் கிளிப் கூறுகிறார், ‘இயேசுவின் உயிர்ப்புதான், இறைவன் மனித உறவில் பெரிய மறுமலர்ச்சியை அடையச் செய்தது’ என்கிறார்.

சார்லஸ் எச் ஸபர் கூறுகிறார். ‘இயேசுவின் உயிர்ப்பு தந்த பெரிய கொடை நம்பிக்கை.  இறைவன் தரும் அசைக்க முடியாத வெற்றியையும் அன்பையும் நன்மைகளையும் இந்த நம்பிக்கை உறுதி செய்கிறது’ என்கிறார். 

இயேசுவின் உயிர்ப்பு கற்றுத் தரும் பாடம், தீமைக்கு வீழ்ச்சி உண்டு. தியாகத்திற்கு வாழ்வு உண்டு என்பதுதான். மனிதர் விரைவான பலன்களை எதிர்பார்க்கின்றனர். தியாகத்தையோ, கடின உழைப்பையோ அவர்கள் நம்புவதில்லை. பணம், பதவி, வசதி, நம்மில் குவிய வேண்டும் என்றுதான் விரும்புகின்றனர். 

தற்போது ‘உண்ண உணவு’ என்பது மாறி ‘உடுக்க உடையும், இருக்க இடமும்’ நம் மக்கள் மத்தியில் முதலிடம் பெறுகின்றன. ஒரு பொருளாதார நிபுணர் கூறியதாக நினைவு. வீடு கட்டுவது, ஒருவரின் கடைசி பொருளாதார முயற்சியாக இருக்க வேண்டும். பிற்கால வாழ்விற்கு வேண்டியதை சேமித்த பிறகு, சேர்த்து வைத்திருக்கும் பணத்தில் வீடு கட்ட வேண்டும் என்று கூறியதாக நினைவு. இப்போது வங்கிகளிலோ, மற்ற இடங்களிலோ கடன் வாங்கி வீடு கட்டுவதை வாழ்வின் இலட்சியமாக மக்கள் கருதுகிறார்கள். வீட்டை கட்டி விட்டு அதற்குரிய வட்டியால் முடங்கி வாழ்கிறார்கள். நகரங்களில்,  தெருக்களுக்காக இடப்பட்ட இடத்தையும் ஆக்கிரமித்து வீடு கட்டுகிறார்கள். அவர்களின் வீடுகளுக்குச் சென்று வர, வசதியான தெருக்கள் இல்லை. எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளான ஊழலால் அனுமதியில்லாத வயல் நிலங்களிலும், தண்ணீர் தேங்க வைத்திருந்த குளங்களிலும் வீடுகள் எழுகின்றன.

வசதி, சொகுசுகளில் மக்கள் மிதந்துக் கொண்டிருக்கிறார்கள். சொகுசு வாழ்வு, சோம்பலுக்கு அழைத்துச் செல்லும் அகன்ற வழி. பாடுகள், இறப்பின்றி உயிர்ப்பிற்குத்  தாண்டி செல்ல மக்கள் விரும்புகிறார்கள். சிலுவையில்லாமல் உண்டாக்க நினைக்கும் உயிர்ப்பு வெறும் கானல் நீர். 

இயேசுவின் உயிர்ப்பு தந்தது புதிய சமத்துவ சமுதாயம். வசதிகள் பெருக பெருக, இதயம் குறுகி விடுகிறது. வசதி படைத்தவர்கள் மனம் திறப்பதில்லை. இரகசிய கூட்டினை கட்டிக் கொள்கிறார்கள். அவர்களின் சுதந்திர மூச்சு குறைகிறது. மனநோயும் உடல்நோயும் ஒட்டிக் கொள்கின்றன.

இயேசுவின் உயிர்ப்பு, தியாகத்தில் புதைந்திரு க்கும் உயர்வை,  உயிர்ப்பை எடுத்து முன் வைக்கிறது. சந்திக்கின்ற சவால்களில் நாம் கீழே சாய்ந்துவிடாமல், நம்பிக்கையோடு தியாக வாழ்வில் நின்றால் உயிர்ப்பின் வெற்றியும் மகிழ்வும் நமக்குக் கிடைக்கும்.

இந்த உயிர்ப்பின் தத்துவத்தை நம் நடுவில் வாழ்பவர்கள் எத்தனைப் பேர் என்று கண்களை உருட்டிப் பார்த்தேன். ஒரு சில பேரைத்தான் அடையாளம் காண முடிந்தது.  ஒருவர் என் கண்முன் நிற்கிறார். கலப்பு திருமணத்தால் வீட்டை விட்டு விரட்டப்பட்டவர். நம் சொந்த ஊரை விட்டு தொலையில் இருந்த கிராமத்தில் வாழ்ந்து, தனக்கு தெரிந்த வியாபாரத் தொழிலை செய்து வாழ்ந்தார். ஐந்து பிள்ளைகள். ஐந்தும் அறிவில் சிறந்து அதனால் படிப்பில் உயர்ந்து, மருத்துவர், பொறியாளர் என்று  வளர்ந்து நிற்கிறார்கள். வந்த சிலுவையைத் தாங்கி உயிர்ப்பில் பங்குப் பெற்றவர்கள் என்றே அவர்களை கருதுகிறேன்.

தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர் குழுமத்தின் தலைவர் பேராயர் மேதகு அந்தோணி பாப்புசாமி, அவர்கள் மத்திய பா.ஜ.க அரசின் நிழலில் பல மதவாத வன்முறைகள் நடந்து வருவதை சுட்டிக் காட்டியிருக்கிறார். இராமர் கோவிலை அயோத்தியில் கட்டுவதற்கு, உணர்வைத் தூண்டும் வகையில் ரத யாத்திரையை மேற்கொள்கின்றனர். வன்முறையாளர்கள், வீழ்வதும் அழிவதும் நியதியாக நடப்பதைப் பார்க்கிறோம். இன்றைய சூழல் நாம் அதிகம் அதிகமாக அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்களாக, ஒற்றுமையைக் காப்பவர்களாக தியாகச் சிந்தனையாளர்களாக வாழ அழைக்கிறது. 

No comments:

Post a Comment

Ads Inside Post