Pages - Menu

Monday 2 April 2018

நீருயரக் குடியுயரும்..

நீருயரக் குடியுயரும்...

(காவிரி,  தமிழ்நாட்டில் தவழவிடாமல் தடுக்கும் சதித்திட்டங்கள் நடைபோடும் இந்நாளில்,  நீரின் அருமையை  விளக்குகிறார் கட்டுரை ஆசிரியர்)
-அருள்பணி. அ. பிரான்சிஸ், பாபநாசம்

நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுயரும்
குடியுயரக் கோலுயரும்
கோலுயரக் கோணுயர்வான்’

பெண்கவி ஒளவையார் மிக்க மதிநுட்பத் தோடு கூறிய வார்த்தைகள் இவை. வரப்பு உயர்வதை ஆதாரமாகக் கொண்டே அரசின் பெருமை உயரும். ஆனால் இப்போதுள்ள விவசாயிகளின் நிலைமையும், அரசாங்கத்தின் கொள்கையும் நேர்மாறாக உள்ளது. உலகில் முதல் உயிரே தண்ணீர். அதன் தொடர்ச்சியாகவே தாயின் கருவில் வளரும்  குழந்தை நீர் நிறைந்த தாயின் பனிக்குடத்தில் சுவாசிக்கின்றது.

விவிலியம் கூறும் தண்ணீர் பற்றிய சிந்தனை: 

உலகப் படைப்புக்கு முன்னரே நீர்த்திரள் நிறைந்திருக்கின்றது. (தொநூ 1:20). உயிரினங்களின் தோற்றம் நீர் (தொநூ 1:20). வாழ்வின் அடிப்படைத் தேவை தண்ணீர், உணவு, உடை, மானம் காக்க  வீடு (சீஞா 29: 21). ‘மண்முகத்தே மழையைப் பொழிபவரும், வயல் முகத்தே நீரைத் தருபவரும் ஆண்டவரே’ (யோபு 5:10) நிலம் அதன் மீது அடிக்கடி பெய்யும் மழை நீரை உறிஞ்சி வேளாண்மை செய்வோருக்குப் பயன் தரும்  வகையில் பயிரை விளைவிக்குமாயின் அது கடவுளின் ஆசி பெற்றதாகும் ( எபி 6:7) தண்ணீர்த் தொட்டிக்கும் அதன் ஆதாரத்திற்கும் திருப்பொழிவு செய்து அர்ப்பணிப்பாய் (விப 40.11).

தமிழ் இலக்கியத்தில் நீர்:

விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உண்ணின்று உடற்றும் பசி.    குறள் எண் 113

மழை பெய்யாமல்  பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று 
உயிர்களை வருத்தும்.

இடியுடைப் பெருமழை எய்தா ஏகப் 
பிழையா விளையுள் பெருவளம் சுரப்ப
மழை  பிணித் (து) ஆண்ட மன்னவன்                           -சிலப்பதிகாரம்  (வரி 26-28)

  முறையாகப் பெய்யும் மழை நீரைச் சேமித்து வைப்பதற்கு ஏற்ற நீர் நிலைதனை அமைப்பது ஒரு மன்னனின் கடமை. 
அறையும் பொறையும் மனந்த தலைய
எண்நாள் திங்கள் அணைய கொடுங்கதைத்
தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ.                              - புறநானூறு 118.

ஏரிக்கரை நீளம் குறைவாகவும் ஆனால் அதிக நீர் கொள்ளளவு கொண்டதுமான அமைப்பு எட்டாம் பிறை வடிவில் ஏரி இருக்கும்போது ஏற்படும். இது ஒளி வடிவமைப்பில் சிக்கனமான   வடிவமைப்பாகும்
யாருள் அடங்குங் குளமுள வீறுசால்                       -நான்மணிக்கடிகை.

மிகுதியாக வரும் ஆற்று வெள்ள நீரைத் தம்முள் அடக்கிக் கொள்ளக் கூடிய பெரிய ஏரிகள் இருப்பது ஒரு நாட்டுக்குச் சிறப்புத் தரும். பெருகி வரும் படையலை ஒரு வீரன் தடுத்து நிறுத்திப் போராடுவதுபோல் ஆற்று வெள்ளத்தைக் கற்சிறை தடுத்து நிறுத்துகிறது. (தொல்காப்பியம் வரி 725, 726). மேற்கூறப்பட்டவை அனைத்தும் கற்பனையான ஒன்றல்ல, அறிவியல் சார்ந்தவை.
 சோலை மலைக் காடுகள்:

சோலை மலைக் காடுகள் கடல் மட்டத்திலிருந்து 1800 மீட்டர் உயரம் கொண்டவை. புல்வெளிகளும் பசுமை மாறாக் காடுகளும் ஒருங்கிணைந்து காணப்படுபவையே சோலை மலைக் காடுகள். இந்தியாவின் இமய மலைத் தொடர்கள், கிழக்கு மலைத் தொடர்கள், வட மேற்கு மலைத் தொடர்கள், ஆரவல்லி மலைத் தொடர்கள், விந்திய-சாத்பூரா மலைத் தொடர்கள் ஆகியவை வளத்தின் ஆதாரங்களாகத் திகழ்கின்றன. மேலும் தமிழகத்தில் நீலகிரி, ஆனைமலை, கொடைக்கானல், அகத்தியமலை, மற்றும் மேகமலை ஆகியப் பகுதிகளில் சோலை மலைக் காடுகள் நிறைந்துள்ளன. 

மழைக் காலங்களில் ஏற்படும் அதிகப்படியான மழைப் பொழிவால் பெறப்படும்  நீர்வளம் சோலைக் காடுகளின் புல்வெளிக்கு அடியில் உள்ள பஞ்சு போன்ற அடிப்பரப்பில் சேமிக்கப்படுகிறது. இது தவிர இலைகளால் அமைக்கப் பெற்ற  அடுக்கு. இந்த அடுக்கில் சேமிக்கப் பெற்றத் தண்ணீர் சிறிது சிறிதாக வெளியேற்றப்பட்டு மிகப் பெரிய அருவிகளாக, ஆறுகளாக உருமாறுகின்றன. இந்தக் காடுகளில் அதிகப் படியான தாவர இனங்களும், ரோடோடெண்ரான், ரோடோமிர்டாஸ், இம்பேசியன்ஸ் எக்சாகம் உள்ளிட்ட சில தாவரங்களும் காணப்படுகின்றன. விலங்குகளில் மரத்தவளைகள், வரையாடு, யானை, பாம்புகள், கருமந்தி, காட்டுக்கோழிகள் போன்றவை மிகுந்த அளவு காணப்படுகின்றன. இதன் பரப்பளவு குறைந்து கொண்டே வருவதனால் மழை குறைவுக்குக் காரணமாகின்றது. 

மரங்கள் வளத்தின் ஆதாரம். நாம் சுவாசிக்கும் பிராண வாயு ஆக்ஸிஜன் மரங்களிலிருந்தே கிடைக்கிறது. இயற்கை அன்னையின் மடியில் தவழ்ந்த முதல் குழந்தை தாவரம் தானே! அவற்றை இல்லாது செய்வது மனிதன் தனக்கே அழிவைத் தேடிக் கொள்ளும் செயலாகும்.

மறைநீர்:

மறைநீர் என்பது ஒரு பொருளாதாரத் தத்துவம். இதனை இங்கிலாந்து நாட்டின் நிதியியல் வல்லுநர். ஜான் ஆண்டனி ஆலன் கண்டுபிடித்தார். இது ஒரு பொருளுக்குள் மறைந்துள்ள பொருளாதாரத் தத்துவமாகும். இதன்படி ஒரு டன் கோதுமை விளைவிக்க 1600 கியூபிக் மீட்டர் தண்ணீர் செலவாகிறது. முட்டை உற்பத்தியில் மகாராஷ்டிரம் மாநிலம் முதலிடம். தமிழகத்தில் நாமக்கல் இரண்டாமிடம். நாமக்கல்லில் ஒரு நாளைக்கு ஒரு கோடி முட்டை உற்பத்தியாகிறது. இதில் 70 லட்சம் முட்டைகள் தினசரி வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும்  ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 4.80 கோடி டாலர் இந்திய செலாவணி கிடைக்கிறது. 60கிராம் முட்டை உற்பத்தி செய்ய 196 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. மூன்று ரூபாய் முட்டை 19 லிட்டர் தண்ணீருக்குச் சமம்.

புத்திசாலி நாடுகள்:

நீரின் தேவையையும், பொருளின் தேவை யையும் துல்லியமாக ஆய்வு செய்து அதற்கேற்ப ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டும். சீனா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகள் இப்படித்தான் செய்கின்றன. சீனாவின் பிரதான உணவு பற்றி இறைச்சி, ஒரு கிலோ பன்றி இறைச்சிக்கான மறைநீர் தேவை 560 லிட்டர். அதனால் பன்றி உற்பத்திக்குக் கெடுபிடி அதிகம். ஆனால் தாராளமாக இறக்குமதி செய்து கொள்ளலாம். ஒரு கிலோ ஆரஞ்சுக்கான மறைநீர் தேவை 560 லிட்டர். சொட்டுநீர் பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரயேல் ஆரஞ்சு உற்பத்திக்கும், ஏற்றுமதிக்கும் கெடுபிடி செய்கிறது. இந்த இரு நாடுகளும் மறைநீர் தேவையைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி ஏற்றுமதி, இறக்குமதிக் கொள்கைகளை வகுக்கின்றன.

பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகள்:

சென்னையில் ஆயிரக்கணக்கான கார்களைத் தயாரித்து நம் நாட்டுக்கும், வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்கின்றன. அவர்களின் நாடுகளில் உற்பத்தி செய்ய முடியாதா? இடம் தான் இல்லையா? எல்லாம் உண்டு. இங்கு மனித சக்திக்குக் குறைந்த செலவு என்றால் நீர்வளத்துக்குக் குறைவே இல்லை. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்குக்கான மறைநீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள். ஒரு பொருளின் விலை என்பது எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே? அப்படி எனில் பெரும் நிறுவனங்கள் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக் கணக்கில் சேர்ப்பது இல்லை. ஏனெனில் நம்மிடமிருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன. இது ஆட்சியாளர்களுக்குத் தெரியாதா? எல்லாம் தெரியும். தங்களின் பண பலத்தைப் பெருக்கிக் கொள்ள,  நாட்டையும், நாட்டு மக்களையும் அடமானம் வைக்கின்றனர். மறைநீருக்கு மதிப்பு கொடுப்போம். இந்திய விவசாயிகளும்  உலகின் பணக்காரப் பட்டியலில் இடம்பிடிக்க மறைநீர் தத்துவத்தை  உணர்வோம்.

திரவத் தங்கம் நீர் நாள்:

1992 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் சுற்றுச் சூழல் மற்றும் வளர்ச்சி பற்றிய ஐ.நா. பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக 1993 ஜனவரி 18 ஆம் நாள் நிகழ்வுற்ற ஐ.நா பேரவையில் ஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் நாளை உலக நீர்வள நாளாகக் கொண்டாட  முடிவெடுக்கப்பட்டது. அதன்பின் 2003 ல் நடைபெற்ற 58 வது ஐ.நா பேரவைக் கூட்டத்தில் 2005லிருந்து 2015 வரையுள்ள பத்தாண்டுகள் ‘உயிர் வாழ்வதற்கு நீர்’ என்னும் அனைத்துலக செயல்திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனை

நீரின்ற யமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு      - திருக்குறள் 20

என்னும் கூற்றினை உலகோர் உணர்ந்ததை உணர்த்துகிறது.

நீருக்கான போர்கள்:

உலகின் தொடக்கத்திலேயே நீருக்கான போர் ஆரம்பமானதை தொநூ 26:12 லிருந்து 22 வரையுள்ள பகுதிகள் பதிவு செய்கின்றன. வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவேரி என்று சிலப்பதிகாரத்தில் பாடப்பட்ட காவிரியாறு இன்று நீரின்றி வறண்டுக் கிடக்கின்றது. காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு,  போன்ற பிரச்சனைகள் தமிழகத்தைப்  பாலைவனமாக்கிக் கொண்டிருக்கின்றன. உலகெங்கும் நீருக்கான போர்கள் நடைபெற காரணம் என்ன? இங்கிலாந்தில் ஏற்பட்ட  தொழிற்புரட்சி புளோரோ கார்பன் அதிக உற்பத்தி  செய்யப்படக் காரணமாய் அமைந்தது. அறுபதுகளில் திணிக்கப்பட்ட பசுமைப்புரட்சி, முதலாளிகளின் ஒப்பந்த விவசாயம், 1990ல் அறிமுகம் செய்யப்பட்ட  உலகமயமாதல், தனியார் மயமாதல் போன்ற கொள்கைகளால் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து புவி வெப்பமடைந்து  கொண்டிருக்கின்றது. 

 உலகின் முதல் நீரில்லா நகர்:

தென் ஆப்பிரிக்காவின் 2-வது பெரிய நகரான கேப்ட­ன். இங்கு 30 லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த மூன்றாண்டுகளாகத் தொடர்ந்து  சுத்தமாக மழையில்லை. எனவே அனைத்து நீர் நிலைகளும்  வற்றி விட்டன. இதனால் நீர் இருப்புக்கு ஏற்றபடி, மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 80 லிட்டர். பிப்ரவரியிலிருந்து 50 லிட்டர் எனக் குறைந்து வருகிறது. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. விவசாயம் அறவே நடைபெறவில்லை. ஏப்ரல் 22 நீரில்லா நாள்  ரீerலி ம்ழிதீ  என அறிவிக்கப்படப் போகிறது.  இப்படியே போனால் மனிதகுலம்  செத்தழிய வேண்டியது தான்.

எச்சரிக்கை: 

இது எங்கோ நடைபெறும் நிகழ்ச்சி தானே. எனக்கு எதுவும் நடக்காது. நம் நாட்டுக்கு இந்த நிலை வராது என்று எவரும் மெத்தனப் போக்கோடு செயல்பட வேண்டாம். இந்த நாள் நம்மை நோக்கி விரைந்து வருகின்ற என்பதனை  நினைவில் கொண்டு தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோம். மரங்கள் வளர்ப்போம். கிடைக்கும் மழைநீரைச் சேமிக்கும் நீராதாரங்களாகிய ஏரிகள். குளங்கள், குட்டைகள், கண்மாய்கள், ஊருணிகள் இவற்றினைத் தூர்வாரி எதிர்வரும் துன்ப நாளிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வோம்.

 இதோ இன்றைய நிலையைப் படம் பிடித்துக் காட்டும் ஒரு சமூக விழிப்புணர்வு பாடல்:

தாய்ப்பாலும் தண்ணீரும் ஒன்னாத்தான் இருந்துச்சு. விலையில்லாம கிடைச்சிச்சு. ஆனா இப்ப எல்லாமே தலைகீழா  போயிடிச்சு. தடம் மாறி போயிடுச்சி. 
நிலாவில் தண்ணி இருக்கான்னு தேடுறோம்
ராக்கெட்ட ஏவுறோம் குடிநீரை பூமியிலே
வியாபாரம் பண்ணுறோம்.
பறவ நட்ட காடுகள பாவிசனம் அழிக்குதே
நன்றி மறந்து திரிகுதே ஆறறிவை வச்சிக்கிட்டு
ஆணவத்தில் வாழுதே.
மண்ணப் போல  தண்ணீருக்கும் 
எல்லக் கோட்டப் போடுற, 
வறுமைக் கோட்ட வளக்குற, 
இயற்கையைத்தான் பூட்டி வச்சு 
பொம்மையாக்கிப் பாக்குற அடிமையாக்க நினைக்கிற 
இப்படியே போனாக்க பூச்சி இங்கே வாழுண்டா 
புழுவும் இங்கே வாழுண்டா
மனு­ப்பய இடமட்டும் மண்ணாகிப் போகுண்டா.  

No comments:

Post a Comment

Ads Inside Post