Pages - Menu

Monday 4 December 2017

புதியதோர் உலகம் செய்வோம்

புதியதோர்  உலகம்  செய்வோம்

நல்லை இ. ஆனந்தன், வேதியர்

சென்ற மாதம் அன்பியக் கூட்டம் நடத்த ஒரு வீட்டிற்குச் சென்றேன். ஏற்கனவே அன்பிய ஆட்கள் வந்து அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். வீட்டின் தலைவரும் தலைவியும் வருகிறவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தனர். திடீரென்று அவர்களின் ஒரே மகன் எழுந்து வெளியே கிளம்பினான். ‘தம்பி, அன்பியக் கூட்டம் துவங்கலாம். உட்காருங்கள்’ என்றேன். அதற்கு அவன் சொன்னது, ‘ஐ டோன்ட் லைக் அன்பியம்’.

அவனது அம்மா அவனுக்கு அன்பியம்னா பிடிக்காது என்று அதை தமிழில் மொழி பெயர்த்தார்கள். ஞாயிறு திருப்பலிக்கு, மறைக்கல்விக்கோ அவன் வருவதில்லை. எட்டாவது படிக்கிறான். வற்புறுத்த தயக்கமாயிருக்கிறது. கண்டிக்கவும் பயமாயிருக்கு. எங்களையே சில சமயம் மிரட்டுகிறான். ஏதாவது செய்து விடுவானோ என்று பயப்படுகிறோம். சில மாதங்களுக்கு முன் ஒர் ஆசிரியருடைய மகன் செல்போன் வாங்கித் தரலைன்னு தூக்குப் போட்டுக் கொண்டது உங்களுக்குத் தெரியுமல்லவா. எங்களுக்கு என்ன செய்யறதுன்னே தெரியல. அவனை எப்படி கோவிலுக்குக் கூட்டி வருவது என்பதும் புரியவில்லை.

இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகள், திருச்சபை எண்:41 / 5 இல் கீழ்க்கண்டவாறு சொல்கிறது.   ‘கிறிஸ்தவத் தம்பதிகளும், பெற்றோர்களும், தங்களுக்குரிய பாதையில் வழி நடந்து, உண்மையான அன்பினால், தங்கள் வாழ்நாள் முழுவதும், ஒருவரையயாருவர் அருளிலே ஆதரிக்க வேண்டும். இறைவனிடமிருந்து அன்புடன் பெற்றுக் கொண்ட தங்கள் குழந்தைகளுக்குக் கிறிஸ்துவ படிப்பினைகளையும், நற்செய்தியின் நற்பண்புகளையும்  ஊட்ட வேண்டும். ஏனெனில்  இவ்வாறு செய்வதால் அவர்கள் மனிதர் அனைவருக்கும் தளர்வற்ற,  தாராள அன்பின் மாதிரிகளாகத் திகழ்கின்றனர். சகோதர அன்பை வளர்ச்சியுறச் செய்கின்றனர். திருச்சபைத் தாயின் வளமைக்குச் சாட்சிகளாகவும், அவர்களோடு ஒத்துழைப்பவர்களாகவும் அமைகின்றனர்.’

பங்குத் தந்தை ஒருவர் வருத்தத்தோடு கூறியது,  ‘எனது பங்கில் நாலாயிரம் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஞாயிறு திருப்பலிக்கு வருவது 200 பேர் மட்டுமே. நாள்தோறும் திருப்பலிக்கு வருவது ஐம்பதுபேர் கூட இருக்காது. தேர்த்திருவிழாவில் மட்டுமே ஆலயம் நிரம்பும். மற்ற நாட்களில் ஆலயத்தில் பாதி இடம் காலியாகத் தான் இருக்கும்.’

அருட்சகோதரி ஒருவர் ஆதங்கத்துடன் பகிர்ந்து கொண்டது,  ‘ஞாயிறு மறைக்கல்விக்கு பிள்ளைகள் வருவதேயில்லை. திருப்பலிக்கு முன் ஞாயிறு  மறைக்கல்வி வகுப்பு நடத்தியபோது தாமதமாகக் கடைசி நேரத்தில் வந்தார்கள். திருப்பலிக்குப் பின் வகுப்பை மாற்றியபோது பலர் நன்மை வாங்கியதுமே ஓடிப்போவார்கள். என்ன செய்வது என்றே தெரியவில்லை.’ஏன் இந்த மாற்றம்? எப்படி பக்தியில் இந்த தளர்ச்சி ஏற்பட்டது? யாரால் இப்படி மாறியது? மறுமலர்ச்சிக்கு என்ன செய்வது? எங்கிருந்து தொடங்குவது? இப்படியே நடக்கட்டும் என்று விட்டுவிடக் கூடுமா? அல்லது ஏதாவது செய்ய வேண்டும் என முயற்சிக்க வேண்டாமா?

நாட்டையும், வீட்டையும் நாசப்படுத்திக் கொண்டிருக்கிற, விபரீத விளைவுகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தப் போகிற சில காரியங்களைப் பற்றி கடந்த மாதங்களில் சிந்தித்தோம். ஆனால், ஆன்மீக தளர்ச்சி, பக்தியில் வறட்சி என்ற நிலை உலகளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத்தான் போகிறது. 

  ‘ஒளியான  அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை. அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை’ (யோவா 1: 11) என்ற நற்செய்தி வசனம் இப்போதும் தொடர்ந்து நிறைவேறிக் கொண்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை.

அயல்நாட்டில், யாருமே வராத ஓர் ஆலயத்தின் பொருட்களை, விற்பதாக ஆன்லைனில் விளம்பரம் செய்த சிலமணி நேரங்களில் அனைத்துப் பொருட்களும் விற்றுப் போய்விட்டன. இதைக் கூறிய குருவானவர் ஒருவர், அவர்கள் பொருட்களை மட்டுமல்ல ஆண்டவரையே ஆலயத்தை விட்டு வெளியேற்றி விட்டனர். சிக்கியிருந்தால் அவரையும் விற்றிருப்பார்கள் என்று வருந்தினார்.

இது கத்தோலிக்க மதத்தில் மட்டுமல்ல, உலகத்தில் உள்ள அனைத்து மதங்களிலுமே இந்த ஆன்மீக வறட்சியும், பக்தியில் ஒரு தளர்ச்சியும் ஏற்பட்டுள்ளதாக உணர்கிறார்கள்.

‘தெய்வ பயமே ஞானத்தின் தொடக்கம். வைகறையில் அதைத் தேடுவோர் தளர்ச்சியடை மாட்டார்கள். ஞானத்தின் பொருட்டு விழிப்பாய் இருப்போர் கவலையிலிருந்து விரைவில் விலகுவர் என்கிறது விவிலியம் (சாஞா 6: 12-16)

‘கடவுள் மேல் எனக்கு வெறுப்பு இல்லை. ஆனால் கடவுள் எனக்கு இப்போது தேவை இல்லை என்ற சித்தாந்தம் எல்லார் மனதிலும் அரும்பிக் கொண்டிருக்கிறதாகத் தெரிகிறது.

‘சீசருக்குரியதை சீசருக்கும் கடவுளுக் குரியதை கடவுளுக்கும் கொடுங்கள்’ என்றார் இயேசு. அரசுக்குரியதைக் கவனமாகக் கொடுத்துவிட்டு, ஆண்டவருக்குரியதை ஆண்டவருக்கு கொடுக்க தயங்கும், மறுக்கும் ஒவ்வொரு கிறிஸ்தவரும், வாழ்வில் அதற்கான கணக்கை கடவுளுக்கு கொடுக்க வேண்டி வரும் என எச்சரிக்கிறேன்.

ஆன்மீகத் தளர்ச்சிக்கு, பக்தியின் வறட்சி நிலைக்கு காரணங்களைப் பட்டியலிட ஆசைதான். ஆனால் கட்டுரை நீண்டு விடும் என்று கவலையாய் இருக்கிறது. ‘குறைகளைச் சொல்வதால் உறவு சிதைகிறது. நிறைகளைச் சொல்வதால் அன்பும் உறவும் வளர்கிறது’ என்ற முதுமொழிக்கு ஏற்ப இக்கட்டுரையில் அதை தவிர்த்து விடுகிறேன்.

எனவே உலக அளவில் பேராபத்தை ஏற்படுத்தப் போகிற இந்த ஆன்மீக வறட்சியைப் போக்கி, பக்தி வளம் பெருக நான் என்ன செய்ய  முடியும் என்று ஒவ்வொருவரும் சிந்தித்துச் செயல்பட வேண்டிய அவசரமான காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்வோம்.

குருக்களும், துறவியரும் ஆண்டவரால் அழைக்கப்பட்டவர்கள். அவரால் அபிசேகம் செய்யப்பட்டவர்கள். நற்செய்தி அறிவிப்பதே அவர்களின் முதன்மையான பணியாகும். சில விதிவிலக்குகளை விட்டுத் தள்ளிவிட்டுப் பார்த்தால் அவர்களின் உழைப்பு உன்னதமானது. அழைப்பு அற்புதமானது. திருச்சபையில் ஆன்மீக மறுமலர்ச்சி ஏற்பட அவர்கள் கடினமாக உழைக்க வேண்டிய காலமாக இது திகழ்கிறது.

பொது நிலையினரும் திருஆட்சி நிலையின ரோடு ஒத்துழைப்பு கொடுத்து, அவர்களின் கடமை களையும் உரிமைகளையும் செயல்படுத்த முன் வருமாறு தாய் திருச்சபை அழைக்கிறது. 

புலருகின்ற புத்தாண்டில், புதியதோர் உலகம் மலர்வதற்கு, உழைக்க முற்படுவோம் என்று கைகூப்பி வேண்டிக்கொண்டு இக்கட்டுரைத் தொடரை நிறைவு செய்கிறேன்.

அனைவருக்கும், அனைத்திற்கும், பெரிய எழுத்துக்களில் நன்றி. கிறிஸ்மஸ், புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

Ads Inside Post