Pages - Menu

Monday 4 December 2017

திருப்பலி விளக்கம், 22. சில சிறப்பு நற்கருணை மன்றாட்டுகள்

திருப்பலி விளக்கம்

-அருள்பணி. எஸ். அருள்சாமி, 
பெத்தானியா இல்லம், கும்பகோணம்

22.  சில சிறப்பு நற்கருணை மன்றாட்டுகள்

முந்திய சிந்தனையில் பொது நற்கருணை மன்றாட்டுகள் நான்கும் தோன்றிய விதம், அவற்றின் அமைப்பு கூறுகள் அவற்றிக்குரித்தான சிறப்பு அம்சங்கள், காணும் சில குறைபாடுகள் பற்றி விளக்கம் கண்டோம்.  இப்பொழுது மற்றும் சில  சிறப்பு,  அதாவது குறிப்பிட்ட காலத்திற்கும், குறிப்பிட்ட நபர்களுக்கும், தேவைகளுக்கும் பயன்படுத்த உருவாக்கப்பட்டுள்ள நற்கருணை மன்றாட்டுகள் பற்றிய விளக்கம் காண்போம்.

பின்புலம்:

மூன்று புதிய நற்கருணை மன்றாட்டுகளை உருவாக்கி கொடுத்தபின் வேறு நற்கருணை மன்றாட்டுகளை வேறு யாரும் உருவாக்கக் கூடாது என்று திருவழிபாட்டு பேராயம் 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி ஒரு சுற்று மடலை அகில உலக ஆயர்களுக்கு அனுப்பியது.  ஆனால் பல ஆயர்களின் பேரவையும், தனிப்பட்ட ஆயர்களும் கேட்டுக் கொண்டதின் பெரில் ஒப்புரவுக்கான நற்கருணை மன்றாட்டுகள் இரண்டும், சிறுவர்களுக்கான திருப்பலியில் பயன்படுத்த நற்கருணை மன்றாட்டுகள் மூன்றும் அமைக்கப்பட்டு திருத்தந்தை ஆறாம் பாலினுடைய ஒப்புதல் பெற்று மூன்று ஆண்டுகளுக்குச் சோதனைக்காக  1974 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 26 ஆம் நாள் வெளியிடப்பட்டன. இவை 1977 ஆம் ஆண்டோடு முடிவடைந்திருக்க வேண்டும். இருந்தாலும் ஆயர்களின் பேரவைகள் பல கேட்டுக்கொண்டதின் பேரில் இவற்றை தொடர்ந்துப் பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டது. இவற்றை குறிப்பிட்ட காலத்திற்கும்,  நபர்களுக்குமன்றி மற்றநேரங்களிலும் பொது நற்கருணை மன்றாட்டுகள் போல் விரும்பும் போதெல்லாம் பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டது. ஆனால் பிறகு இவற்றைப் பயன்படுத்த கொடுக்கப்பட்ட அனுமதி திரும்ப பெறப்பட்டது. என்றாலும் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த உரோமை திருப்பலி நூலின் மூன்றாவது மாதிரி படிவத்திலும், 2008 ஆம் ஆண்டு வெளி வந்த திருத்தப்பட்ட மறுபதிப்பிலும்  இந்த ஐந்து நற்கருணை மன்றாட்டுகளும் திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு தேவைகளுக்கென்று புதிதாக  நான்கு  நற்கருணை மன்றாட்டுகள் உருவாக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன. ஆக இன்று சிறப்பு நற்கருணை மன்றாட்டுகளாக ஒன்பதை  நாம் பெற்றுள்ளோம்.

அ.ஒப்புரவுக்கான நற்கருணை மன்றாட்டுகள்

ஒப்புரவுக்கான நற்கருணை மன்றாட்டுக்களை ஒப்புரவின் மறைபொருளை நம்பிக்கையாளர்களுக்குச் சிறப்பான விதத்தில் எடுத்துரைக்கப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக மானிடரிடையே நல்லிணக்கத்தை உருவாக்க, ஒப்புரவுக்காக, அமைதியையும் நீதியையும் நிலைநாட்ட, போர் கலகம் போன்ற காலங்களில் மன்னிப்புக்காக, அன்பின் வளர்ச்சிக்காக, திருச் சிலுவையின் மறைபொருள், தூய்மைமிகு நற்கருணை,  நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் விலை மதிப்பில்லாத திரு இரத்தம் ஆகிய திருப்பலிகளிலும், தவக்காலத் திருப்பலிகளிலும் பயன்படுத்தலாம். இந்த இரு நற்கருணை மன்றாட்டுகளின் அமைப்பும் பண்பு கூறுகளும் பொது நற்கருணை மன்றாட்டுகள் 2,3,4 இல் காணப்படுவது போலவே இருக்கின்றன.

 1. ஒப்புரவு ஒன்று

ஒப்புரவுக்கான முதல்  நற்கருணை மன்றாட்டு கடவுளோடு ஒப்புரவு ஆவதற்கு அழுத்தம் கொடுக்கிறது. நாம் மனந்திரும்பி அவரிடம் வர அழைக்கப்பட்டாலும், அதற்குரிய முயற்சியை எடுப்பவர் கடவுளே. இதற்காக அவர் புனித ஆண்டையும், வருகை, தவக் காலங்களையும் வாய்ப்பாக அமைத்து அளிக்கிறார். இம்மன்றாட்டின் சிறப்பு அம்சமாக பின்வருவதைக் கூறலாம். உடன்படிக்கையின் வழியாக புதியதொரு உறவால் மக்களைத்  தம்மோடு கடவுள் இறுக்கமாக பிணைத்துக் கொள்கிறார். அருள்மிகு காலத்தை வகுத்துக் கொடுத்து மக்கள் தம்மிடம் மனந்திரும்பி வரச் செய்கிறார். இத்தகைய சிறப்புரிமையை நமக்கு மட்டும்  அருளாமல் மாந்தர் அனைவருக்கும் நம் வழியாக அருளுகின்றார்.

நான்காவது நற்கருணை மன்றாட்டில் இருப்பது போல், ஆண்டவர் இயேசு கிறிஸ்து நற்கருணையை நிறுவியதை விவரிக்கும் பகுதிக்கு முன் இந்த நற்கருணை மன்றாட்டும், ஆண்டவர் தம்மை கடவுளுக்குக் கையளித்ததின் வழியாக இறைதந்தையின் அன்பு விளக்கமாகத் தெரியும்படி அமைந்துள்ளது. மேலும் இரசக்கிண்ணம் வசீகரத்துக்கு முன், “அவ்வண்ணமே, சிலுவையில் சிந்தப்படவிருந்த தமது இரத்தத்தால் அனைத்தும் தம்மில் ஒப்புரவாக்கப்படும் என்பதை அறிந்த அவர்” என்ற வார்த்தைகள்  புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அதே போல் வசீகரங்களுக்கு அடுத்து வரும் நினைவாக்கத்தில் “எங்கள் பாஸ்காவும் உண்மையான அமைதியுமாகிய உம் திருமகன் இயேசுகிறிஸ்துவை நாங்கள் நினைவுகூர்ந்து” என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

 2. ஒப்புரவு இரண்டு

இந்த நற்கருணை மன்றாட்டு மனிதன் தம்மோடு ஒப்புரவாக கடவுள் எடுக்கும் முதல் முயற்சிக்கும் பாவ மன்னிப்புக்கும் இடம் கொடுப்பதோடு மனிதர் ஒருவர் ஒருவரோடு ஒப்புரவு ஆவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.  

“பகைவர்கள் மீண்டும் ஒன்று கூடி வந்து உரையாடவும், எதிரிகள் கைகோர்த்து ஒன்று சேரவும், மக்களினங்கள் ஒருவர் மற்றவரைச் சந்திக்க தேடவும்... தூண்டுகின்றீர்” என தொடக்கவுரையில் வருவது இதை உறுதிப்படுத்துகிறது. இது மத்தேயு நற்செய்தி 6: 14 - 15 இன் அறிவுரையின் அடிப்படையில் அமைந்துள்ளது. 

மனிதர் ஒருவர் மற் றொருவருடன் ஒப்புரவாவது  தூய ஆவியாரின் செயலாகத் தொடக்கவுரையில் காட்டப்பட்டுள்ளது. கடவுள் மக்களைத்  தம்மோடு ஒப்புரவாக்கும் செயல்கள் எல்லாம் இயேசு கிறிஸ்துவின் செயல்களால் நிறைவேறுவதாக வர்ணிக்கப்பட்டுள்ளது. 

வசீகரங்களுக்குப் பின்வரும் நினைவாக்கம், தூய ஆவியாரால் வரும் ஒருமைப்பாடு, பரிந்துரை மன்றாட்டுக்கள் அனைத்திலும் ஒப்புரவு பன்முகத்தில் அழுத்தம் பெறுகிறது. தூய ஆவியார் ஒருவர் மற்றவரிடமிருந்து அந்நியப்படுத்துவதை அகற்றுவதின் வழியாக ஒப்புரவையும், ஒருமைபாட்டையும் செயலாக்கம் செய்கிறார்.

ஆ. சிறுவர் திருப்பலிகளுக்கான நற்கருணை மன்றாட்டுகள்

திருஅவை அன்புள்ள ஓர் அன்னையாகச் செயலாற்றுவதைச் சிறுவர்களுக்கான திருப்பலியில் சிறப்பாக நாம் காணலாம். புகுமுக அருள் அடையாளங்களால் கிறிஸ்தவ வாழ்வில் புகுத்தப்பட்ட சிறுவர் முதிர்ச்சியடைந்த கிறிஸ்தவராக மாறுவதற்கு மறைக்கல்வியுடன் வழிபாடு துணைபுரிய வேண்டும். பல்வேறு குழுவினரின் மனநிலைக்கு ஏற்றாற்போல் முறையான  வேறுபாடுகளைப் புகுத்தவும் தழுவி யமைக்கவும் கவனம் செலுத்த வேண்டுமென இரண்டாவது வத்திக்கான் சங்கம் தனது விதிமுறையில் குறிப்பிட்டுள்ளது (காண் தி.வ. 38,50)
.     
இதைத் தொடர் ந்து சிறுவர்களுக்கான திருப்பலி வழிகாட்டி என்ற ஆவணத்தைத் திருவழிபாட்டு பேராயத்தால் 1973 ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி வெளியிடப்பட்டது. அடுத்து பல ஆயர்கள் பேரவையின் விண்ணப்பத்திற்கேற்ப சிறுவர்களுக்கான திருப்பலியில்  பயன்படுத்த மூன்று நற்கருணை மன்றாட்டுகள் உருவாக்கப்பட்டு 1975 இல் வெளியிடப்பட்டன.

1. இம்மன்றாட்டுகளின் நோக்கம்

இம்மன்றாட்டுகள் மிக எளிய நடையில் அமைக்கப்பட்டிருப்பதால், அதில் ஆக்கபூர்வமாக பங்குபெற்று  பயனடையப் பழகிக் கொண்டவர்கள், பிற்காலத்தில் பெரியோர்க்காக கொண்டாடப்படும் திருப்பலியில் பயனுள்ள முறையில் சுலபமாக பங்கு பெறும் தகுதியைப் பெற்றிருப்பார்கள் என்ற எதிர்நோக்கே இவற்றின் நோக்கமாகும்.

 2. இம்மன்றாட்டுகளின் சிறப்பியல்புகள்

சிறுவர்கள் வளர்ச்சியடைந்தபோது பங்கு பெறப்  போகும் திருப்பலியின் அமைப்பு அவர்களுக்கு வினோதமாகத் தோன்றக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு சிறுவர்களுக்கான திருப்பலியின் நற்கருணை மன்றாட்டுக்களில் பெரும் மாற்றம் செய்யப்படவில்லை. ஏனெனில் இந்த நற்கருணை மன்றாட்டுகள் இவர்களைப் பொறுத்த மட்டில் தற்காலிகமானவை. எனவே பொது நற்கருணை மன்றாட்டுகளின் அடிப்படை அமைப்பு இவற்றிலும் பாதுக்காப்பட்டுள்ளது. வசீகரத்தில் அப்பத்தின் மீதும், இரசத்தின் மீதும் என்ன சொல்லப்பட்டிருக்கின்றது என்பதையும், கொண்டா ட்டத்தின் தொடர்ச்சியைத் தெளிவாகச் சிறுவர்களுக்கு எடுத்துரைக்கவும் “இதை என் நினைவாகச் செய்யுங்கள் ” என்ற வார்த்தைகளுக்கு முன், “பின் இயேசு அவர்களிடம் கூறியதாவது” என்ற வாக்கியம் சேர்க்கப்பட்டுள்ளது. 

நற்கருணை மன்றாட் டுகளின் மொழி எளிய நடையில் உள்ளது. அதனால் சிறுவர்கள் என்ன நடக்கிறது என்பதைச் சுலபமாகப் புரிந்து  கொள்வார்கள். இருந்தாலும் திருப்பலியின் மாண்பு சிதைந்திடா வண்ணம் சிறுப்பிள்ளைத்தனமான மொழியும் வார்த்தைகளும் (Childish Language) தவிர்க்கப்பட்டுள்ளன. 

சிறுவர்கள் செயல்முறையிலும் பொருளுள்ள விதத்திலும் பங்கு பெறும் விதமாக ‘ஆர்ப்பரிப்புகள்’ இந்த நற்கருணை மன்றாட்டுகளில்  அதிகமாக்க ப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நற்கருணை மன்றாட்டும் அதற்குரிய தனிப்பட்ட அமைப்பும் இயல்பும் உடையதாய் இருப்பதாலும், தொடக்கவுரையைக் கொண்டிருப்பதாலும் மற்றொரு தொடக்கவுரையோடு மாற்றிக் கொள்ள முடியாது. 
முதல் நற்கருணை மன்றாட்டில் வசீகரத்தின் இறுதியில் உள்ள நம்பிக்கையாளரின் ஆர்ப்பரிப்பு வழக்கத்தைவிடச் சில வரிகளுக்குப் பிறகு இடம் பெற்றுள்ளது. பயிற்றுவிக்கும் காரணங் களுக்காக  இது இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு “இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்ற  ஆண்டவரின் வார்த்தைகளுக்கும், அருள் பணியாளரால் சொல்லப் படும் நினைவுகூர்தல், அதன் பின்வரும் நினைவு ஆர்ப்பரிப்பு அல்லது மகிழ்ச்சி ஆர்ப்பரிப்பு ஆகியவற்றிக்கும் இடையே உள்ளத்தொடர்பை சிறுவர் தெளிவாகப் புரிந்து கொள்வர். 

இந்த மன்றாட்டுகளில் நினைவு ஆர்ப் பரிப்பின் இடம் மாற்றப்பட்டுள்ளது. அதாவது இது நினைவுகூர்தல் மன்றாட்டுக்குப் பின் (புதுழிதுஐeவிஷ்வி) வருகிறது. “இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்ற ஆண்டவரின் கட்டளைக்கும் அருள்பணியாளர் அதற்கு அடிபணிந்து சொல்லும் நினைவுகூர்தல் மன்றாட்டுக்குமிடையே உள்ள நெருக்கமானத் தொடர்பை சிறுவர் புரிந்துக்கொள்ள இம்மாற்றம் உதவுகிறது. சிறுவர்களுக்கான மூன்று நற்கருணை மன்றாட்டு களுக்குள் ஒவ்வொன்றுக்கும்  ஒரு சில சிறப்பியல்பு உண்டு. அவையாவன:

  முதல் நற்கருணை மன்றாட்டு எளிமையான நடையுடையது. ‘தூயவர்’ பகுதியில் சிறுவரைப் பழக்கப்படுத்தும் பொருட்டு இம்மன்றாட்டு சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உன்னதங்களில் ஓசான்னா ஒரு பாடகரால் அல்லது சிறுவரை வழிநடத்தும் ஒருவரால் பாடப்படலாம். அல்லது சொல்லப்படலாம்.

இரண்டாவது நற்கருணை மன்றாட்டு சிறுவர்களின் ஈடுபாட்டிற்கு அதிக வாய்ப்பளித்துள்ளது. இதில் ‘தூயவர்’ பகுதியும் நினைவு ஆர்ப்பரிப்புகளும் தங்கள் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன. அப்பத்தின் மீதும் இரசத்தின் மீதும் சொல்லப்படும் ஆண்டவரின் வார்த்தைக்குப் பிறகு சேர்க்கப்பட்டுள்ள ஆர்ப்பரிப்புகள் நற்கருணை மறைபொருள் எனும் அடிப்படையில் பாடப்படலாம்.

மூன்றாவது நற்கருணை மன்றாட்டு   பாஸ்கா காலத்திற்குப் புறம்பே பயன்படுத்தத் தனியாகவும், பாஸ்கா காலத்தில் பயன்படுத்தத் தனியாகவும் அமைக்கப்பட்டுள்ளன. வசீகரத்திற்குப் பிறகு அதே ஆர்ப்பரிப்பு மூன்று முறையும் நடைபெறுகின்றது. இதனால் முழுமையான மன்றாட்டின் புகழ், நன்றி இவற்றின் இயல்பு சிறுவருக்கு வெளிப்படுத்தப்படும்.

 இ. பல்வேறு தேவைகளுக்கான நற்கருணை மன்றாட்டுகள்

2002 ஆம் ஆண்டு வெளி வந்த உரோமை திருப்பலி நூலில் மூன்றாம் மாதிரி படிவத்தில் பல்வேறு தேவைகளுக்கான நற்கருணை மன்றாட்டுகள் நான்கு வெளியிடப்பட்டன. அவை 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த திருத்தியமைக்கப்பட்ட உரோமை திருப்பலி நூலிலும் இடம் பெற்றுள்ளன. இவை  தமிழ்த்  திருப்பலி நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றையும் நாம் இப்பொழுது பயன்படுத்தலாம்.

1. முதல் நற்கருணை மன்றாட்டு

“இது ஒற்றுமையை நோக்கி பயணிக்கும் திருஅவை” என்ற கருத்து கோள் கொண்டுள்ளது. இந்த நற்கருணை மன்றாட்டைத் திருஅவைக்காக, திருத்தந்தைக்காக, ஆயருக்காக, திருத்தந்தை ஆயர் தேர்வுக்காக, திருச்சங்கம், ஆயர் மாமன்றம் ஆகியவற்றிக்காக, அருள்பணியாளர்களுக்காக, அருள்பணியாளர் தமக்காக, திருஅவையின் பணியாளர் களுக்காக, ஆன்மீக அருள்பணிக் கூடுகை போன்ற வற்றிற்காக ஒப்புக் கொடுக்கப்படும் பலியில் பயன் படுத்தலாம்.

2. இரண்டாவது நற்கருணை மன்றாட்டு

இது “மீட்பின் வழியில் கடவுள் தமது திரு அவையை வழிநடத்துகின்றார்” என்ற கருத்துக்கோளைக் கொண்டுள்ளது. இதை திருஅவைக்காக, திருப்பட்டங்களுக்கான இறை அழைத்தலுக்காக, பொது நிலையினருக்காக, குடும்பங்களுக்காக, துறவுநிலை இறையழைத்தலுக்காக, அன்பின் வளர்ச்சிக்காக, உறவினர், நண்பர்களுக்காக, கடவுளுக்கு நன்றி செலுத்த ஒப்புக் கொடுக்கப்படும் திருப்பலியில் பயன்படுத்தலாம்.

3. மூன்றாவது நற்கருணை மன்றாட்டு

இது “தந்தையை அடையும் வழி இயேசு” என்ற கருத்துக்கோள் கொண்டுள்ளது. இதை நற்செய்தி அறிவிக்க, நம்பிக்கையை முன்னிட்டு துன்புறும் கிறிஸ்தவர்களுக்காக, நாடுக்களுக்காக, நாட்டை ஆள்வோருக்காக, புத்தாண்டு நாளில், மக்களின் முன்னேற்றத்துக்காக ஒப்புக்கொடுக்கும் திருப்பலியில் பயன்படுத்தலாம்.

4. நான்காவது நற்கருணை மன்றாட்டு

இது “நன்மை செய்யும் இயேசு” என்ற கருத்துக்கோள் கொண்டுள்ளது. இதை அகதிகள் மற்றும் நாடு கடத்தப்பட்டோருக்காக, பஞ்சம் பசியால் வாடுவோருக்காக, நம்மை துன்புறுத்துவோர், கைது செய்யப்பட்டோர், சிறையில் இருப்போர், நோயுற்றோர், இறக்கும் நிலையில் இருப்போர் ஆகியோருக்காகவும், நல்மரண அருளுக்காகவும், பிற தேவைகளுக்காகவும் ஒப்புக் கொடுக்கப்படும் திருப்பலியில் பயன்படுத்தலாம்.

இந்த நான்கு நற்கருணை மன்றாட்டுகளுக்கும் தனித்தனி சிறப்பு தொடக்கவுரை கொடுக்கப்பட்டுள்ளது. அர்ச்சிப்புக்குப் பின் வாழ்வோருக்காக சொல்லப்படும் மன்றாட்டு அந்தந்த கருத்துக்கோளுக்கு ஏற்றவாறு வெவ்வேறாக உள்ளது. இவைத்தவிர மற்ற எல்லா மன்றாட்டுகளும் ஒரே மாதிரியானவை.
( முற்றும்)

திருப்பலியைப் பற்றிய ஆழ்ந்த விளக்கங்களை வாசகர்களுக்கு அழகாகத் தந்த அருட்பணி. முனைவர் றீ.அருள்சாமி அவர்களுக்கு அன்னையின் அருட்சுடர் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறது. தொடர்ந்து மற்ற திருவருட் சாதனங்களின்  விளக்கங்களைப்  பற்றியும் எழத இசைந்துள்ளார்.

1 comment:

  1. பலவகை நற்கருணை மன்றாட்டுகளின் இயல்பும் சிறப்பும் (1) is not avilable. Pls. send to " stanislausfrancis@yahoo.com"

    ReplyDelete

Ads Inside Post