Pages - Menu

Tuesday 5 December 2017

பொதுக்காலம் 4ஆம் வாரம் B

பொதுக்காலம் 4ஆம் வாரம்
 அருள்பணி. மரிய அந்தோணி ஜேம்ஸ், குடந்தை.
 28-01-2018
இச 18: 15-20;1கொரி 7: 32-35; மாற்கு 1: 21 - 28
பணிவின் அர்த்தமே அதிகாரம்

அமெரிக்காவில், கருப்பின மக்கள், வெள்ளையின மக்கள் என இருபிரிவுகள் இருக்கின்றன. ஒரு நாள், வெள்ளையினத்தை சார்ந்த மனிதன் ஒரு உணவு விடுதிக்கு சென்றான். அங்கே, ஒரு கருப்பினத்தை சேர்ந்தவனும் அமர்ந்திருந்தான். ஆகவே, இந்த கருப்பினத்தை சார்ந்தவனை வெறுப்பூட்ட வேண்டும் என்பதற்காக, மற்றவன் அங்கிருந்த உணவு பரிமாறுபவரிடம் இன்று எனது பிறந்தநாள். உயர்தர உணவு வகைகளை, இந்த கருப்பின மனிதனைத் தவிர மற்றனைவருக்கும் கொடுங்கள் என்று பலமுறை கூறி வெறுப்பேற்றி கொண்டிருந்தான். ஆனால் அவன் எவற்றிற்கும் கலங்காமல் இருப்பதைக் கண்டு, உணவு பரிமாறுபவரிடம் அவன் யார் என்று கேட்ட பொழுது, அவர்தான் இந்த உணவு விடுதிக்கு சொந்தக்காரர், முதலாளி என்று கூறியதைக் கேட்டதும் வெள்ளையின் மனிதன் மிகவும் மனம் நொந்துப் போனான்.

பணிவில்தான் பெருமையும், அதிகாரமும் அடங்கியிருக்கிறது என்பதை மையமாக வைத்து சிந்திக்க பொதுக்காலத்தின் 4வது வாரமாகிய இன்றைய ஞாயிறு வழிபாடு நம்மை அழைக்கிறது. சிறப்பாக கடவுளாட்சியில் அதிகாரம் என்ற சொல்லிற்கு அர்த்தம் பணிவு என்பதே என்று இன்றைய வாசகங்கள் தெளிவுப்படுத்துகின்றன.

நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஒவ்வொரு விதமான அனுபவங்கள் வந்து செல்கின்றன. யாரையேனும் யார் இந்த இயேசு என்று வினவினால், நமது பதில்கள் அவருடனான அனுபவங்களைப் பொறுத்தே அமையும். விவிலியத்திலும் கூட பவ்வேறு இடங்களில், மக்கள் தாங்கள் கண்ட புதுமைகளையும், பெற்ற நன்மைகளையும் அனுபவங்களின் வாயிலாக மற்றவர்களுக்கு எடுத்துரைக்கிறார்கள். உதாரணமாக, யோவான் 1:45இல் பிலிப்பு தான் கண்டு அனுபவித்த ஆண்டவரை நத்தனியேலுக்கு தெரிவித்து, நீரும் வந்து பாரும், பார்த்து அனுபவித்து மகிழும் என்றும் கூறுகிறார். அதுபோலவே, மத் 16: 13‡20, என்னை யாரென்று மக்கள் சொல்லுகிறார்கள்? என்று இயேசு கேட்டபோது, தன்னுடைய அனுபவத்தின் வாயிலாக இயேசுவை மக்கள் அறிந்து கொண்டர்.

இன்றைய நற்செய்தி வாசகத்திலும் மக்கள் வியந்து பார்ப்பது, இதுவரை நோயாளர்களை குணப்படுத்தியவர், ஏழைகளை அரவணைத்தவர் இன்று, பேய்களை அதிகாரத்தோடு விரட்டுகிறாரே என்பதுதான். எங்கிருந்து வந்தது இந்த  அதிகாரம். இயேசுவை பொறுத்த வரையில் அதிகாரம் என்பது பணிவோடு தொடர்புடையது.  இறைவிருப்பத்தை  ஏற்று நடக்க திருவுளமானதால், அந்த பணிவே அதிகாரம் என்ற தொணியில் பார்க்கிறார். இறையாட்சியில் அதிகாரமோ, பணிசெய்தலும், சுதந்திர உணர்வோடு  செயல்படுவதுமாகும். பணிசெய்தலே அதிகாரத்தின் உட்பொருளாக அமைகின்றது. ஆகவேதான் மத் 20: 16இல் முதலானனோர் கடைசியாவார், கடைசியாவோர் முதலாவார்  என்றும் உங்களுள் முதல்வராய் இருக்க விரும்புகிறவர் முதலில் தொண்டராய் இருக்கட்டும் என்கிறார். ஆக இந்த  அதிகாரத்தோடு இயேசு பேயினை ஓட்டியது மக்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது. இதன் மூலம் அவர் மீது இருந்த இறைநம்பிக்கையும், இறைப்பற்றும் மக்களின் மனிதல் ஆழமாக பதிகிறது. மேலுமாக பேய்களும் கூட இயேசுவை யாரென்று அறிந்திருப்பதாக நற்செய்தி வாசகத்தின் மூலம் அறிகின்றோம். மாற் 1: 24இல் நாசரேத்தூர் இயேசுவே உமக்கு இங்கு என்ன வேலை? நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்  என்று தீய ஆவிகளும் அறிக்கையிட்டன. இதனால் மக்கள் வியப்புற்று இதென்ன புதிய போதனையாக இருக்கின்றது என்கின்றனர். அப்படிப்பட்ட  இயேசுவுடனான நமது அனுபவங்கள் என்ன? புனித ஜெரோம் அவர்கள், திருவிவிலியத்தை அறியாதவர்கள் இறைவனை அறியாதவர்கள் என்று கூறுகிறார். அதுபோல இறைவனை அறியாதவர்கள் தன்னையே முழுமையாக அறியாதவர்கள். இறைவனை அறிய வேண்டுமெனில், அவர் பாதம் அமர்ந்து அவரது விருப்பத்தின்படி, படிப்பினைகளின் படி வாழ முயற்சிக்க வேண்டும். அவ்வாறு நடக்கின்றபோது, நாமும் கூட இயேசுவின் பெயரால் பணிவு நிறைந்த அதிகாரத்தோடு எந்த வல்ல செயல்களையும் செய்ய முடியும். அதனை தான் யோவா 14: 12, என்னில் நம்பிக்கை கொள்வோர் நான் செய்யும் செயலை விட பெரியனவற்றையும் செய்வார் என்று இயேசு கூறுகிறார்.

ஆகவே, இயேசுவை பற்றிய நமது அனுபவங்கள் என்ன? அவரை அறிந்திருக்கிறோ மென்றால், பணிவில்தான் அதிகாரம் அமைந்தி ருக்கின்றது என்பதை ஆழமாக உணர்வோம்.
  

No comments:

Post a Comment

Ads Inside Post