Pages - Menu

Tuesday 5 December 2017

கிறிஸ்து பிறப்பு பெருவிழா,

கிறிஸ்து பிறப்பு பெருவிழா
அருட்பணி. எல். ரெக்ஸ் அலெக்ஸ் சில்வெஸ்டர் 
 வலுவின்மையே  வல்லமை

அப்பாடா! ஒரு வழியா எப்படா வரும்னு நாம் எதிர் பார்த்த கிறிஸ்துமஸ் வந்தாச்சு. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் விருந்து, வேடிக்கைகளுக்கு பஞ்சமிருக்காது. ஆனால் , இந்த விழா நமக்கு சொல்லும் செய்தி என்ன என்பதை மட்டும், எல்லோருமே மறந்து விடுகிறோம்.
    இந்த உலகம்  Promotion  உலகம்.  அதாவது பதவி உயர்வை மட்டுமே விரும்புகின்ற உலகம்.
சிறு விவசாயி - பண்ணைக்கு உரிமையாளராகவும்
கவுன்சிலர்      - MLA வாகவும்
MLA வுக்கு            -அமைச்சராகவும்
தொண்டனுக்கு - தலைவனாகவும்
மக்களுக்கு         - குருவாகவும் 
குருவுக்கு                 - ஆயராகவும்  ஆசை / விருப்பம்   

 இப்படி எல்லோரும் கீழிருந்து மேலே  மேலே செல்ல ஆசைப்பட, ஆண்டவருக்கு ஒரு விநோதமான விசித்திரமான ஆசை. மேலிருந்து கீழே வரனும்னு ஆசை. ஆம் கடவுளுக்கு மனிதனாக ஆசை. ஆம் கடவுள் தன்னையே தாழ்த்திக் கொண்ட தாழ்ச்சியின் விழாதான் கிறிஸ்துமஸ். இதைத்தான் திருத்தூதர் பவுல் பிலி 2:6‡9இல் சொல்லுகிறார். கடவுள் தன்மையில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாய் இருக்கும் நிலையை வலிந்து பற்றிக் கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். அவ்வளவுதான் கிறிஸ்துமஸ். அடிமையின் வடிவை ஏற்ற நாள்தான் கிறிஸ்துமஸ்.

இயேசுவின் பிறப்பு கதையோ,கற்பனையோ இல்லை. மாறாக வரலாற்று நிகழ்ச்சி என்பதை வலியுறுத்தவே, இயேசு யாருடைய ஆட்சியில், எங்கு, எப்படி  பிறந்தார் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இயேசுவின் பிறப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு செய்தியும் இயேசுவின் எளிமையையும், அவரது தாழ்ச்சியையும் நமக்கு எடுத்துக்கூறுகின்றன.

முதலாவதாக, இயேசு பிறந்ததாகச் சொல்லப்படும் ஊர் பெத்லகேம் யூதாவின் ஊர்களில் சிறிய ஊராக இருந்தாலும், இவ்வுலகை படைத்த மாபரன் உதிக்க திருவுளம் கொண்ட ஊர். யாரும் எதிர்பார்க்காதவைகளை தமது விருப்பமாகக் கருதுபவர் இறைவன். மேலும் அப்பத்தின் வீடு என்னும் பொருளுடைய பெத்லகேமில் பிறப்பதால், இவ்வுலகிற்கு தன் உடலை உணவாக கொடுக்க உள்ளத்தை முன்னறிவிக்கிறார்.

இரண்டாவதாக, உலகத்தை உருவாக்கிய வருக்கு இவ்வுலகம் ஒதுக்கிய இடம் மாட்டுத் தொழுவம். இறைவனின் எளிமைக்கு இதை விடவா சான்று தேவை. பிறந்தவுடன் துணிகளில் சுற்றப்பட்டு தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டார். இதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. தீவனத்தொட்டி என்பது மாடுகளுக்கு உணவிடும் இடம். இயேசுவும் இவ்வுலகிற்கு உணவாகப் போகிறார் என்பதற்கு முன் அடையாளமே இத்தீவனத் தொட்டி.

மூன்றாவதாக அவர் தாழ்ச்சிக்கு இன்னுமொரு உதாரணம், அவரின் பிறப்புச் செய்தி அறிவிக்கப்பட்ட இடையர்கள். இறைமகன் இயேசு தன்னை ஆயனென்று ‡ நல்லாயன் என்று அழைத்தவர். இன்று ஆயர்களின் தலைமகன் குடிலில் குழந்தையாகப் பிறந்துள்ளார். எருசலேமில், படித்தவர்கள், அரசர்கள், அறிஞர்கள், குருக்கள் என பல மேட்டுக்குடிகள் இருந்தும் படிப்பறிவற்ற, ஏழை, எளிய இடையர்களுக்கு  இயேசுவின் பிறப்பு முதன் முறையாக அறிவிக்கப்படுகிறது. இறை செய்தியை கேட்டதும், அவர்கள் கேள்விகள் கேட்கவில்லை. சென்றார்கள், கண்டார்கள் இறைவனை மகிமைப்படுத்தினர்.  

சுருக்கமாகச் சொன்னால், கிறிஸ்துமஸ் விழாவின் மையச் செய்தியே இதுதான். மனிதன் பலமற்றதாக கருதுவதை கடவுள் தன் பலமாகக் கொண்டார். மனித பிறப்பு பலவீனமானது, பாவ இயல்புடையது. ஆனால் கடவுள் அந்த பலவீனத்தை பலமாக மாற்றுகிறார்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன? வல்லமையான கடவுள் தேடிச் சென்றது. வலிமையானதை அல்ல. மாறாக, சிறியது என எல்லோரும் நினைத்த பெத்லகேமும், ஆடு, மாடுகளின் தஞ்சமிடமான மாட்டுக் குடிலும், கந்தைத் துணியும், கிடத்தப்பட தீவனத் தொட்டியும், கண்டு மகிழ ஏழை இடையர்களும்தான். இறைவன் பலமற்றதை, ஞான சூனியங்களை தம் நற்பணி தூதுவர்களாக மாற்றினார் என்பதற்கு அவரின் பிறப்பு ஒரு சான்று. ஆக நம்முடைய கடவுள் கடந்து நிற்பவர் (Transscendent) அல்ல. நம்மில் ஒன்றோடு ஒன்றாக கலந்து நிற்பவர் (Immanent). அதாவது இம்மானுவேல்  இந்த கடவுள் சிறியவற்றை, தரித்திரம் என ஒதுக்கியவற்றை, ஏழை, எளிய  மக்களை, பாவிகளை தேர்ந்து கொண்டு, அவர்களோடு ஒன்றாக கலந்து நிற்பவர்.

எனவே, இந்த கிறிஸ்துமஸ் விழா நம்மில் மாற்றத்தைக் கொண்டு வரட்டும். எல்லாம் இழந்து நிற்கும் மனிதர்களில், சாதியால், மொழியால், சமூக பாகுப்பாட்டால் வெறுக்கப்பட்ட மனிதர்களைத் தேடிச் சென்று, அவர்களோடு நாம் உரையாடி, உறவாடும் போது அங்கே கிறிஸ்து பிறக்கின்றார், இருக்கின்றார்.

ஆம் கிறிஸ்து நம்மோடு இல்லாத கிறிஸ்துமஸ், கிறிஸ்துமஸ் ஆக இருக்க முடியாது. அந்த இயேசுவை நம்மோடு வாழ வைப்போம். நம் இல்லத்தில், நண்பர்கள், அயலாரின், அநாதைகளின், அந்நியர்களின் உள்ளங்களில் வாழ வைப்போம். அப்பொழுதுதான் ‘கடவுள் நம்மோடு’ என்பதற்கு பொருள் கிடைக்கும்.

வலுவற்றைவைகளில் வல்லமையுள்ள  தேவனைத் தேடுவோம். ஏனெனில் கிறிஸ்துவின் பார்வையில் பலகீனமே பலம்.

No comments:

Post a Comment

Ads Inside Post