Pages - Menu

Tuesday 3 October 2017

பணிவு என்னும் இனிய பாதை

பணிவு என்னும் இனிய பாதை

16. நிறைய கேளுங்க... கொஞ்சமா பேசுங்க...

அருள்பணி. மகுழன், 
பூண்டி மாதா தியான மையம்

ஆற்றுப்படுத்துதல் (Counsellin) நம் அன்றாட வாழ்வில் அண்மைக் காலமாக அதிgகரித்து விட்டது என்று சொல்லலாம்.  ஆற்றுப்படுத்துதலில் முக்கியமான படி (Step) என்னவென்றுத் தெரியுமா? அதை சற்று விபரமாகக் காணலாம். குடும்பப்பிரச்சனை உள்ள ஒருவர் (Client) உங்களிடம் வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் உங்களிடம் வந்து இவ்வாறு சொல்கிறார், ‘என் கணவர் குடிகாரர். தன் சம்பளம் முழுவதையும் குடித்தே தீர்த்து விடுகிறார். தினமும் வீட்டில் சண்டைதான். நாங்கள் சண்டை போடுவதால் என் இரண்டு பிள்ளைகளும் என் பேச்சை கேட்பதில்லை. பிள்ளைகள் சரியாக படிப்பதில்லை. குடும்பத்தில் நிம்மதி இல்லை. எனவே எனக்கு வாழவே பிடிக்கவில்லை’ என்று  சொல்லி அழுகிறார். உங்களுடைய பதில் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? ‘சரிம்மா, உங்கள் பிரச்சனை எனக்குப் புரிகிறது. உங்கள் கணவர் குடிகாரர். அதனால் உங்களுக்கு பணப்பிரச்சினை மனஉளைச்சல். அதுமட்டுமல்ல வீட்டில் சமாதானம் இல்லாததால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மதிப்பு கொடுப்பதில்லை. படிப்பிலும் கவனம் இல்லை. எந்த அளவிற்கு நீங்கள் மனஉளைச்சளில் இருக்கிறீர்கள் என்றால் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட நினைக்கிறீர்கள். என்னம்மா நான் சொல்வது சரிதானே?’ இவ்வாறு அவர் சொன்னதையே திரும்பச் சொல்லி நீங்கள் அவரது பிரச்சனையை உற்று கவனித்தீர்கள். அவர்கள் மேல் அன்பு, மிகுந்த இரக்கம் (Empathy) கொண்டுள்ளீர்கள். அவர்கள் பிரச்சனையை மதிக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் அவர்கள் பிரச்சனையை நன்கு கவனித்து கேட்டு அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டீர்கள் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

ஆற்றுப்படுத்துதலுக்கு மட்டுமல்ல நம் வாழ்விற்கு நம் வாழ்வின் வெற்றிக்கு, நம் வாழ்வின் மகிழ்ச்சிக்கு சிறந்த காரணி பிறருக்கு செவிமடுப்பதாகும். இந்த உலகில் மிகவும் எளிதான காரியம், இயல்பானக் காரியம் எதுத் தெரியுமா? பிறருக்கு அறிவுரைக் கூறுவதுதான். இந்த உலகில் மிகவும் கடினமானக் காரியம் எது தெரியுமா? பிறர் கூறும் அறிவுரைகளுக்கு செவிமடுப்பதுதான். நாம் அறிவுரைக் கூறும் ஒவ்வொரு முறையும், பிறர் நமக்கு அறிவுரை கூறும்போது நமக்கு எவ்வளவு கடினமாக இருக்கிறது என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும். நாம் பிறருக்கு அறிவுரை  கூறுவதற்கு முன்னால் அவர்களுடைய சூழ்நிலை, அவர்களுடைய இயல்புகள், அவர்களுடைய இயலாமைகள் அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு பங்கில் நான் பங்குத்தந்தையாக இருந்த போது அந்தப்பங்கில் கிறிஸ்மஸ் ஜோடனையை இளைஞர்கள் செய்துக்  கொண்டிருந்தார்கள். அந்த ஊரில் உள்ள பெரியவர்கள் ஜோடனை முடிந்தவுடன் அப்படி செய்யலாம், இப்படி செய்யலாம் என்று ஆலோசனை சொல்வது வழக்கம். அதனால் அந்த ஆண்டு ஜோடனை செய்யும்போது ஒரு காரியத்தை இளைஞர்கள் செய்தார்கள். ஜோடனைக்கு முன்பு ஒரு போர்டு வைத்து அதில், ‘தயவு செய்து கருத்து வேண்டாம்’ என்று எழுதி வைத்தார்கள். அறிவுரைகளை வாரி வழங்குவதற்கு ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது தெரியுமா? அதாவது பிறருக்கு என்ன தெரியும்? இளைஞர்களுக்கு என்ன  தெரியும்? வயதானவர்களுக்கு என்ன தெரியும்? என்ற ஆணவ எண்ணம்தான். ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. நம்மிடம் உள்ள சிறப்புகள் மற்றவரிடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மற்றவரிடம் உள்ள சிறப்புகள் நம்மிடம் இல்லை என்பதையும் மனதில் வைப்போம். பொதுவாக வலது என்பதை விட இடது என்று சொல்லும்போது கொஞ்சம் தாழ்வாக நினைக்கிறோம். ஆனால் இடது பக்கத்திற்கும் ஒரு சில சிறப்புகள் இருப்பதைக் கவனித்தீர்களா? ஆம், நாம் போன்னை  எடுப்பது பொதுவாக நம் இடக்கையினால். நாம் போன்னை வைப்பது பொதுவாக நம் இடக்காதில். நம் இதயம் இருப்பது நம் இடதுப்பக்கம்தான். நாம் பயணம் செய்வதும் இடதுபுறம்தான். 

ஒரு         Taxi Driverஐ விட நாம் சிறப்பாக காரை ஓட்டுவது கடினம். ஏனென்றால் அதில் அவர் அதிக பயிற்சிப் பெற்றிருக்கிறார். ஒரு நல்ல விவசாயியைவிட நாம் நன்கு பயிரிடுவது கடினம். ஏனென்றால் அவர் வானிலை, காலமாற்றம், மண்வளம் போன்றவற்றில் நம்மைவிட அதிகம் ஞானமிக்கவர். சாதாரண வேலை செய்யும் துணி துவைப்பவர்கள், தட்டச்சு செய்வோர், கார் மெக்கானிக் இவர்களைவிட நாம் அதிகமாக பணம் வைத்திருக்கலாம். கெளரவமான வேலையில் இருக்கலாம். ஆனால் அவர்கள் வேலையில் அவர்கள்தான் திறமைசாலிகள்.  அவர்கள் பணிகளில் 50% சதவீதத்தை கூட நாம் அறிந்து கொள்வது கடினம். அப்படி இருக்கின்றபோது நாம் அறிவுரைகளை எல்லாருக்கும் வாரி வழங்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது என்பதை சற்று நினைவில் கொள்ள வேண்டும்.  
நான் பணிபுரிந்த ஒரு பங்கில் மணி என்ற பெயருடைய ஒருவர் இருந்தார். அவர் பெயரே  Idea மணி. ஏனென்றால் அவர் எல்லாருக்கும் Idea க்களை வாரி வழங்குவார். ஒரு முறை எனக்குத் தெரிந்த ஓவியர் (Artist) ஒருவரை அந்தப் பங்கிற்கு வரவழைத்து பீடத்திற்கு மேல் சிலுவையைச் சுற்றி கல்வாரி நிகழ்வை வரையுமாறு கேட்டுக் கொண்டேன். அவர் திறமையான ஓவியர். மாதா, யோவான் மற்றும் கள்வர்கள் அனைத்தையும் சிறப்பாக வரைந்திருந்தார். அதற்கு பின்னணியாக மரங்களையும், பறவைகளையும் வரைந்திருந்தார். அவர் முடித்த பிறகு Idea மணி  வந்தார். என்னிடம் சொன்னார்.  Father  எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனால் இதில் ஒரு சிறிய குறை இருக்கிறது. சிலுவையின் இடதுபுறம் மூன்றுப் பறவைகள், வலதுபுறம் இரண்டு பறவைகள் என்று இருந்தால் சிறப்பாக இருக்கும் என்றார். மனிதரை திருத்தவே முடியாது என்று நினைத்துக் கொண்டேன்.
  இன்னொருப் பங்கிலே ஈஸ்டரின் போது ஆலயத்தில் தண்டமாலைகளை இளைஞர்கள் கட்டிக்கொண்டு இருந்தார்கள். நான் அந்தப்பக்கமாக போனேன். அப்போது உயரம் சரியாக இருக்கிறதா என்று பார்க்கச் சொன்னார்கள். வலதுபக்கம் உள்ள மாலையை 2 இன்ச் தூக்குங்கள் என்றேன். தூக்கிக்கட்டி விட்டு இப்போது சரியாக இருக்கிறதா? என்றுக் கேட்டார்கள். இல்லை, இல்லை 2 இன்ச் இறக்குங்கள் என்றேன்.  Father  முன்பே அங்குதானே கட்டி இருந்தோம் என்றார்கள். ‘அதுசரி என்னிடம் ஆலோசனை கேட்டபிறகு நான் எதுவும் சொல்லாமல் இருந்தால் நன்றாக இருக்காது. அதற்காகத்தான் சொன்னேன்’ என்றேன். என் நகைச்சுவை உணர்வை எண்ணி சிரித்தார்கள்.
அறிவுரையும், ஆலோசனையும் கேட்டால் கொடுங்கள் அல்லது கொடுப்பதற்கு முன்பு இது தேவையா என்று பலமுறை யோசியுங்கள். ஆனால் மற்றவர்கள் தரும் ஆலோசனைகளை கூர்ந்து கவனியுங்கள். சாதாரண மனிதர்கள் மூலமாகக் கூட ஆண்டவர் நமக்கு ஆலோசனைகளைத் தருவார்.
                                                                                                                                                 (தொடரும்...) 
   


No comments:

Post a Comment

Ads Inside Post