Pages - Menu

Saturday 7 October 2017

ஜெப ஆற்றல், அமெரிக்கக் கடிதம்

அமெரிக்கக் கடிதம்

ஜெப ஆற்றல்

- சவரி, கேரி

அன்பு உள்ளங்களே, இந்த வாரம் உங்களுடன் செபத்தின் மகிமையை பற்றி பேச விரும்புகிறேன். அமெரிக்கா ஒரு வளர்ந்த நாடாக இருந்தாலும், பல அறிவியல் கண்டுபிடிப்புகளின் உறைவிடமாக இருந்தாலும், இங்குள்ள மக்கள் இறை நம்பிக்கையிலும், செபத்திலும் நம்பிக்கை வைத்து வருகிறார்கள். சென்ற மாதம் நிகழ்ந்த சூரிய கிரகண (Solar Eclipse) நிகழ்ச்சியை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பூமி தன்னை தானே சுற்றி கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறதென்றும், சந்திரன் பூமியை சுற்றி வருகிறதென்றும் படித்து இருக்கிறோம். சென்ற மாதம் ஆகஸ்ட் 21, 2017 அன்று, சந்திரன் சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் நேர்கோட்டில் வந்தது. இது 99 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் அதிசயம். நாங்கள் இருந்த இடத்தில் மூன்று கிரகங்களும் ஒரே நேர் கோட்டில் வந்த நேரம் மதியம் 2:45 மணி. சந்திரன் கொஞ்சம், கொஞ்சமாக சூரியனை மறைத்தது. அப்போது தட்ப வெப்ப நிலை குறைந்தது, பூமியை முற்றிலுமாக இருள் கவ்வியது, மிருகங்கள் குழம்பி போய் சத்தமிட்டு, உறங்குவதற்கு தயார் ஆகின. அப்போது பலர் இறைவனின் படைப்பின் அதிசயத்தை வியந்து மண்டியிட்டு, அழுது செபித்ததை பார்த்தேன்.

இந்த பிரபஞ்சத்தில் (Universe), கோடிக்கணக்கான கிரகங்கள் சுற்றி கொண்டி ருக்கின்றன. ஒவ்வொன்றும் பல ஆயிரம் மைல்கள் வேகத்தில் சுற்றுகின்றன. உதாரணமாக, பூமி சூரியனை 1037 மைல் வேகத்தில் சுற்றுகிறது. விமானம் சராசரியாக 500 மைல் வேகத்தில் செல்லும். விமானத்தை போன்று இரண்டு பங்கு வேகத்தில் பூமி சுற்றி கொண்டுள்ளது. இவ்வளவு வேகத்தில் சுற்றி கொண்டுள்ள கிரகங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கொண்டால் நிலைமை என்னாகும்? இதை எல்லாம் இயக்குவது யார்? கண்காணிப்பது யார்? இருக்கும் பல கோடி கிரகங்களில் பூமியில் மட்டும்தான் மனிதர் வாழ்கிறார். எனவே நாம் அனைவரும் இறைவனால் ஆசிர்வதிக்கபட்டவர்கள், முன்குறிக்கபட்டவர்கள்.

அமெரிக்காவில் Prayer Network என்ற அமைப்பு சிறப்பாக செயல்படுகிறது. உங்கள் தேவைகளை இந்த  Prayer Network யிடம் நீங்கள் உங்கள் தேவைகளை வலைத்தளம் மூலம் சமர்ப்பிக்கலாம், உங்களுக்காக உலகம் முழுவதும் உள்ள மக்கள் செபிக்கிறார்கள். ஒவ்வொரு தலைவரும் பதவி ஏற்றவுடன், விவிலியத்தை வைத்து செபித்து, செபத்துடன்தான் தங்கள் வேலையை தொடங்குகிறார்கள். இங்குள்ள எல்லா அமெரிக்க நாணயங்களிலும் “கடவுள் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்” (In God We Trust) என்ற வாக்கியம் பொறிக்கபட்டுள்ளது.

  இப்போதுள்ள இளைய தலை முறையினர்கள், சமூக ஊடகத்தில் மூழ்கி மயங்கி, கடவுளையும், செபத்தையும் மறந்து வருவதை பார்த்து வருகிறேன். தலை நிமிர்ந்து வாழ வேண்டிய இளைஞர்கள், தலை குனிந்து கைபேசியில் மூழ்கி இருக்கிறார்கள். சமூக ஊடகங்கள், தொலைகாட்சிகள் நம் குடும்பத்துடன் பேசும் நேரத்தையும் சேர்த்து உணவு அருந்தும் நேரத்தை குறைத்து வருகின்றன, அழித்து வருகின்றன என்றால் அது மிகையாகாது. அமெரிக்காவில் செபிக்கும் போதும், படிக்கும் போதும், முக்கியமான வேலைகள் செய்யும் போதும், வாகனங்களை ஓட்டும் போதும், கைபேசிகளையும், தொலைக்காட்சிகளையும் நிறுத்தி விட்டு வேலை செய்கிறார்கள். தங்கள் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுக்கிறார்கள். தொலைகாட்சிகளே இல்லாத பல வீடுகளை நான் பார்த்திருக்கிறேன்.  குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க கற்று கொடுக்கிறார்கள். இதை நாமும் பின்பற்றினால் நமக்கும் நன்மை. முதலில் நாம் சமூக ஊடகத்தையும், தொலைக்காட்சியையும் முறையாக பயன்படுத்தி நம் இளைய தலைமுறையினருக்கு வழி காட்டுவோம்.
  இறைவனின் அருளை பெற, அவர் வரும் நாளில் காத்திருக்கும் நல்ல பணியாளனாய் இருக்க, இறைவனை நோக்கி தினமும் செபிப்போம். நம்மை இறைவன் அன்பிலிருந்து பிரிக்கும் தடைகளை தகர்ப்போம்.
‘கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில், கேட்கிற எவனும் பெறுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்’ (மத் 7:7-8).

No comments:

Post a Comment

Ads Inside Post