Pages - Menu

Tuesday 3 October 2017

பொதுக் காலம் 29ஆம் ஞாயிறு A

அன்பே கடவுளுக்குரியது
பொதுக் காலம் 29ஆம் ஞாயிறு A
29 - 10 - 2017.  
எசா 45 : 1,4-6; 1 தெச 1: 1 -5; மத் 22: 15 - 21 
- அருட்பணி. மரிய அந்தோணி ஜேம்ஸ்  

இன்றைய திருவழிபாடு நமக்கு கூறுகின்ற செய்தி, இறைவனுக்குரியதை இறைவனுக்கும், மனிதருக்குரியவற்றை மனிதருக்கும் கொடுப்போம் என்பதாகும்.

முதல் வாசகத்தில் யாவே இறைவன் தான் தேர்ந்து கொண்ட மக்களை வழிநடத்த, பிற இனத்தவரையும் பயன்படுத்துகிறார் என்பதைப் பார்க்கிறோம். இறைவன் அவர்களை அன்பு செய்வதன் வெளிபாடாக பிற இனத்தவரான சைரஸ் என்ற அசீரிய மன்னன் வழியாக பாபிலோனிய அடிமைத் தனத்திலிருந்து இஸ்ரயேல் மக்களை விடுவித்தார். அதே அன்பு, இரண்டாம் வாசகத்தில் விளக்கப்படுகிறது. கிறிஸ்துவ வாழ்வு  கிறிஸ்துக்குள் வாழ்கின்ற வாழ்வாக, அன்பினை மையமாக வைத்து வாழப்படுகின்ற வாழ்வாக அமைய வேண்டுமென்று, தெசலோனிய மக்களுக்கு பவுல் அடிகளார் எடுத்து கூறுகிறார். ஆக, இந்த மண்ணக அரசு அன்பினை மையமாய் வைத்து யசு இம்மண்ணிலே நிலை நாட்டப்படுகிறது. ஆனால் அன்பினை செயல்படுத்த தாமதித்த, சதுசேயர்கள் மற்றும் பரிசேயர்களை, இயேசு பல்வேறு இடங்களில் வெளிவேடக்காரர்கள் என்றெல்லாம் கண்டிக்கிறார். இதில் ஆத்திரமடைந்த, வெறுப்புற்ற பரிசேயர்கள், எல்லா மக்களாலும் போற்றப்பட்டும், தன்னை இறைவனின் மகன் என்று உறுதிப்படுத்திய இயேசுவை, எவற்றிலாவது சிக்க வைத்து சரியான தண்டனை வாங்கி தர வேண்டுமென்று திட்டமிடுகிறார்கள். ஆனால் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவராக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இயேசுவின் போதனைகள் அமைந்ததால் அவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை.

ஆனாலும் எல்லாவற்றிலும் நீதியோடும், நேர்மையோடும் செயல்படுகின்ற இயேசுவிடம் சிக்கலான கேள்விகளை கேட்கின்றபொழுது, எந்த வகையிலாவது அவர் சிக்கி விடுவார் என்று எதிர்ப்பார்த்தனர். பின்வரும் மூன்று முக்கிய பிரச்சனைகளை தேர்ந்தெடுத்து முன் வைத்தனர். (மத் 22: 15 - 22) யாருக்கு வரி செலுத்துவது, (மத் 22: 23‡33) மறுமணம் செய்தவர் விண்ணகத்தில் யாருடைய மனைவியாவார், (மத் 22:34-40) எது சிறந்த கட்டளை ஆகியவையாகும். செசாருக்கு வரி செலுத்த வேண்டுமா? என்பது ஆபத்தான கேள்வி. பாலஸ்தீன் நாடு உரோமை அரசின் எல்லைக்கு உட்பட்டதாக இருந்தது. அந்த பகுதியை சார்ந்த மக்கள் மூன்று விதமான வரிகளை செலுத்த வேண்டியிருந்தது. நிலவரி, வருமான வரி மற்றும் குடிமக்கள் வரி ஆகியவை. இவ்வகை வரிகளில் இன்றைய நற்செய்தி வாசகத்தில் குறிப்பிடப்படுவது குடிமக்கள் வரி. உரோமை ஆட்சியுரிமைக்கு உட்பட்ட மக்கள் என்பதால் உரோமை மன்னரின் முகம் பதித்த நாணயத்தை அவர்கள் வரி செலுத்துப் பயன்படுத்த வேண்டும். ஆகவே பரிசேயர்களும் ஏரோதியர்களும், இக்கேள்வியை கேட்கின்றனர். இயேசுவும், அவர்கள் குறை காணமுடியாத வகையில் சீசருக்குரியதை சீசருக்கும், கடவுளுக்குரியதை கடவுளுக்கும் என்று கூறுகிறார்.

கல்லூரி நூலகங்களில் உள்ள புத்தகங்களை அதனதன் கருத்தியல்களுக்கேற்ப அதற்கென்ற உள்ள பிரிவுகளில் வைக்குமாறு ஆசிரியர் கூறுவர். இயேசுவும் சீசரின் உருவம் பதித்த நாணயத்தை சீசருக்கு கொடுங்கள் என்கிறார். பொன், பொருள் எதுவாக இருந்தாலும் இந்த மண்ணுலக அரசிடம் வரியாகவோ அல்லது வேறுவகையிலோ  செலுத்தலாம். காரணம் அரசாட்சிக்குட்பட்ட மக்கள்மீது அரசுக்கு அதிகாரம் உண்டு. கடவுளுக்குரியது என்பதை பலவாறு விளக்குவர். எல்லாமே கடவுளின் ஆட்சிக்கு உட்பட்டது என்றும் அனைத்தும் இறைவனை முன் வைத்து செயல்பட வேண்டும் என்பது ஒரு விளக்கம். அடுத்து இறைவனின் சாயலை கொண்ட மனிதரை அன்பு செய்து வாழ்வதும் இறைவனுக்குரியதாகும். 

  அதனைத்தான் பத்துக்கட்டளைகளிலும் கூறப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்த உலகில் நாம் கடவுளுக்குரியதை கொடுக்க வேண்டுமென்றால் பணமோ? வேறு பொருளோ? அல்ல. மாறாக அன்பு நிறைந்த உள்ளங்களே, கடவுள் விரும்புவதாகும். கிறிஸ்துவ மதிப்பீடுகளான இரக்கம், தாழ்ச்சி, பணிவு, பொறுமை போன்ற பண்புகளை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பிறர்நலனுக்காக, இறைசாயலில் உள்ள நம்மை போன்ற மனிதர்களிடத்தில் காண்பிக்கின்ற பொழுது, இறைவனை எல்லாவற்றிற்கும் மேலாக முதன்மைப்படுத்துவோம். கடவுளுக்குரியதை கடவுளுக்கு கொடுக்கின்றோம். ஆகவே அன்பே உருவான இறைவனைப் போன்று நாமும் ஒருவரையயாருவர் அன்பு செய்து நாமனைவரும் இறைவனின் சாயல்கள் என்பதை எடுத்துரைப்போம்.

No comments:

Post a Comment

Ads Inside Post