Pages - Menu

Saturday 30 January 2016

வெற்றி உங்கள் கையில்...

வெற்றி உங்கள் கையில்...
அருட்திரு. எஸ்.ஜான் கென்னடி,
M.A., M.Ed, M.Sc, M.Phil, PGDCA, Ph.D., 

பூண்டி புதுமைமாதா கல்வியியல் கல்லூரி,  சமயபுரம், திருச்சி.

1983 இல் அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழக கல்வியியல் துறை பேராசிரியர் யஹாவர்டு கார்டனர் (Howard Gardner) தான் வெளியிட்ட பிரபல நூலான “மனத்திட்பங்கள் : பன்முக நுண்ணறிவுக் கோட்பாடு”   என்பதில் 
( Frames of mind : The theory of Multile Intelligence) எட்டு வகையான  நுண்ணறிவினை விவரிக்கின்றார். அவைகளில் ஒன்றான சமூக உறவுகள் தொடர்பான நுண்ணறிவு என்பதைப்பற்றி சற்று ஆழமாக சிந்திப்போம்.

சமூக உறவுகள் தொடர்பான நுண்ணறிவு கொண்டவர்கள் மற்றவர்களோடு நல்ல நட்புறவு கொள்வார்கள். பிறர் உணர்வுகளை நன்கு புரிந்துகொள்வார்கள். பிறர் நம்பிக்கையைச் சம்பாதிப்பார்கள். ஒரு வி­யத்தை முன்னின்று நடத்த துணிந்து முன்வருவார்கள். இது ஒரு பிரத்தியேக நுண்ணறிவு என உளவியல் நிபுணர் கார்டனர் கூறுகிறார். அதே நேரத்தில் அன்றாட வாழ்வில் அனைவரும் பயன்படுத்தும் திறனாகவும் இந்த சமூக உறவுகள் தொடர்பான நுண்ணறிவு விளங்குகிறது.

தனி ஒரு மனிதராக இருந்தாலும், பல மனிதர்கள் இணைந்த குழுவானாலும் தொடர்பு கொள்ள அடிப்படை தேவை சமூக உறவுகள் தொடர்பான நுண்ணறிவு. இந்த நுண்ணறிவை மேலும் மேலும் வளர்த்தெடுக்க முயற்சிப்பவர்களே புற உலகிலும், அக வாழ்விலும் வெற்றி பெறுகிறார்கள் என்கிறார் கார்டனர்.
இயல்பிலேயே சிலரிடம் இந்த நுண்ணறிவு மேலோங்கிக் காணப்படும். சிலரிடம் அது உள்ளே புதைந்திருக்கும். உங்களிடம் இந்த நுண்ணறிவு உள்ளதா என்பதை நீங்கள் சோதித்துப் பார்க்கும் களம் இது. கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு “ஆம்”, “சில நேரங்களில் ஆம்” - , “சில நேரங்களில் இல்லை” அல்லது “இல்லை” ஆகிய ஏதோ ஒரு விடையளிக்கவும். இப்படியிருந்தால் நன்றாக இருக்கும் என யூகித்துக் குறிக்கக்கூடாது.

நீங்கள் தற்போது என்னவாக உள்ளீர்களோ உள்ளதை உள்ளபடி குறிப்பிடுங்கள். அதை பொறுத்து உங்கள் சமூக உறவுகள் தொடர்பான நுண்ணறிவு எந்த நிலையில் உள்ளது என்பதை கண்டுணர்ந்து வாழ்வில் வெற்றியடையுங்கள்.

1. எல்லாச் சூழலுக்கும் ஏற்ற மாதிரி உங்களைத் தகவமைத்துக் கொள்வீர்களா?2. குழுவாகச் செயல்படுவது உங்களுக்குச் சவுகரியமற்றதாக இருக்கிறதா?
3. சிலருடன் மட்டுமே உங்களால் சகஜமாகப் பழகமுடிகிறதா?
4. பிறர் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைத் துல்லியமாகக் கணித்ததுண்டா?
5. ஒரு சிக்கலை விட்டு வெளியேறப் பொய் சொன்னதுண்டா?
6. திடீரென யாரோ உங்களை மேடையேற்ற அனிச்சையாக நல்ல சொற்பொழிவு ஆற்றியதுண்டா?
7. அன்னியர்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு செய்வதறியாது திகைத்ததுண்டா?
8. குழு கலந்துரையாடலில் பங்கேற்க முதல் ஆளாக இருப்பவரா?
9. அருகில் இருப்பவர் திடீரென்று உணர்ச்சிவசப்படாமல் சூழலைக் கட்டுக்குள் கொண்டுவரத் திணறியதுண்டா?
10. உங்களோடு இருப்பவர்கள் உங்களை நம்பி இரகசியங்களைப் பகிர்ந்ததுண்டா?
11. மேடை பேச்சு என்றால் பயமா?
12. பிறர் சுவாரசியமாக உணரும்படி உரையாற்றியதுண்டா?
13. தனிமை விரும்பியா?
14. மற்றவர்களுடைய தேவை உங்களுக்கு தெரியுமா?
15. உங்களை புரிந்து கொள்வது கடினமா?
16. உங்களை முன்நிறுத்திக் கொள்ளத் தயங்குவீர்களா?
17. உணர்வுகளுக்கு முதலிடம் தருபவரா?
18. புதிதாய்ப் பழகியவரிடமும் சகஜமாகப் பழகியதுண்டா?
19. உங்கள் பிரச்சனையைப் பூதாகரமாக நினைத்துக் கவலைக் கொள்வதுண்டா?
20. மற்றவர்கள் மீது அக்கறை இருக்கிறதா?
21. உங்கள் முடிவுகளில் தீர்க்கமாக இருப்பீர்களா?
22. குழுவாக எடுக்கும் தீர்மானத்தை ஏற்றுக்கொள்வீர்களா?
23. நீங்கள் சோகமாக இருக்கும்போது மகிழ்ச்சியாக இருப்பவர்களிடம் இருந்து விலகிச் செல்வீர்களா?
24. நான் சொல்வதற்கு அதிகம் இல்லை என எண்ணியதுண்டா?

1, 4, 6, 8, 10, 12, 14, 17, 18, 20, 21, 22 ஆகிய கேள்விகளுக்கு உங்கள் பதில் ஆம் என்றால் நீங்கள் உறுதியாக சமூக உறவுகள் நுண்ணறிவு படைத்தவர்தான். அரசியல்வாதி கல்வியாளர், உளவியல் நிபுணர், மருத்துவர், மனிதவள மேலாளர், மனநல ஆலோசகர் விற்பனையாளராகும் கூறுகள் உங்களிடம் பிரகாசமாக உள்ளன.
ஆம் என்றும் சொல்வதற்கில்லை, இல்லை என்றும் சொல்லிவிட முடியாது போன்ற குழப்பமான பதில் இருந்தால் நீங்கள் முதலில் உங்களை உற்று கவனிக்க வேண்டும். மேலே குறிப்பிட்ட எண்களில் உள்ள கேள்விகளுக்கு இல்லை என்ற பதில்தான் பெருவாரியாக சொல்லியிருந்தால் உங்கள் பலம் வேறுத் திறனாக இருக்கும் என்பது பொருள். அதை கண்டுணர்ந்து வளர்த்துக் கொள்ளுங்கள். வெற்றியும் காணுங்கள்.
“வாழ்க்கை என்பது வழுக்குமரம் போன்றது.
விடாமுயற்சியும், கடின உழைப்பும் இல்லாமல் வெற்றி இல்லை.”

No comments:

Post a Comment

Ads Inside Post