Pages - Menu

Saturday 30 January 2016

திருப்பலி பற்றிய சரியான புரிதல்

திருப்பலி பற்றிய சரியான புரிதல்
முனைவர் தந்தை எஸ். அருள்சாமி

(தந்தை எஸ். அருள்சாமி அவர்கள் கிறிஸ்துவ வழிபாட்டினை ஆழ்ந்து தெரிந்தவர். பாரீசில் உயர்கல்வி படித்தவர். குரு மடங்களில் போதித்து வருபவர். திருப்பலியைப் பற்றிய அவரின் தெளிவான விளக்கத்தை இங்குக் காணலாம்.)
திருப்பலியின் அவசியத்தையும், முதன்மைத்துவத்தையும் பற்றிக் குறிப்பிடும்போது, இது கிறிஸ்தவ வாழ்வனைத்திற்கும் ஊற்றும் உச்சியுமானது என்று “திருஅவை கோட்பாட்டு விளக்கம்” குறிப்பிடுகிறது (எண் 11). ஊற்றும் உச்சியுமாகியத் திருப்பலியின் உண்மைப் பொருளை சரியாகப் புரிந்து கொள்ளாததால் இத்திருப்பலி கொண்டாடப்படும்போது பல தவறுகள் இடம் பெறுகின்றன. எனவே திருப்பலியை சரியாகப் புரிதல் அவசியமாக இருக்கிறது.

இயேசுகிறிஸ்துவின் பலிவாழ்வு :

திருப்பலியின் உண்மைப் பொருளையும், அதன் தேவையையும் உணரவேண்டுமானால், முதலில் இயேசு கிறிஸ்துவின் வாழ்வு, பணி போன்றவற்றைச் சரியாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் திருப்பலி இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பலியின் அருள் அடையாள கொண்டாட்டமாக அமைந்துள்ளது. எபிரேயருக்கு வரையப்பட்ட மடலில் நாம் இவ்வாறு வாசிக்கின்றோம் :
திருச்சட்டப்படி செலுத்தப்பட்ட போதிலும்
“நீர் பலிகளையும், காணிக்கைகளையும்
எரிபலிகளையும், பாவம் போக்கும்
பலிகளையும் விரும்பவில்லை;
இவை உமக்கு உகந்தவையல்ல ......
உமது திருவுளத்தை நிறைவேற்ற
இதோ வருகிறேன்” என்றார்.
இந்தத் திருவுளத்தால்தான் இயேசு கிறிஸ்து
ஒரே ஒருமுறை தம் உடலைப் பலியாகச்
செலுத்தியதன் மூலம் நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம்  (எபி 10 : 8 ‡ 12)
இத்தகைய மனப்பாங்கோடு மனிதரான இயேசு இவ்வுலகில் தம் வாழ்நாள்கள் முழுவதும் தந்தையின் திருவுளத்திற்கு உகந்தவராக விளங்கினார். தம்மை முழுவதும் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற அர்ப்பணித்தார். இத்தகைய மனப்பாங்கும், அர்ப்பணமும் அவர் சிலுவையில் தொங்கியபோது உச்சரித்த “தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்” (லூக் 23 : 46) என்ற வார்த்தைகளிலும், “எல்லாம் நிறைவேறிற்று” (யோவா 19 : 30) என்ற வார்த்தைகளிலும் நிறைவெய்தின. அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மை சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை உரத்தக் குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி மன்றாடியதிலும், அவர் கொண்டிருந்த இறைப்பற்றுக் கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவிசாய்த்ததிலும், அவர் இறைமகனாக இருந்தும், துன்பங்கள் வழியே கீழ்படிதலைக் கற்றுக் கொண்டதிலும் (எபி 5 : 7 - 9 காண்க) அவரது பலிவாழ்வு தெளிவு பெற்றது.

இறுதியில் சிலுவையில் அறையப்படுவதை உளமார ஏற்றுக் கொண்டார். தம்மை பாஸ்கா பலியாக ஒப்புக் கொடுத்தார். பழைய ஏற்பாட்டில் பலியாக்கப்பட்ட செம்மறியாட்டுக் குட்டியின் இடத்தை எடுத்துக் கொண்டு தம்மையே பலிபொருளாக்கினார். இவ்வாறு அவரே பலி செலுத்துபவராகவும் (priest), பலிப்பொருளாகவும் (victim) செயல்பட்டார்.
சிலுவையில் அவர் ஒப்புக் கொடுத்த பலி சிலுவையோடு முடிந்துவிடவில்லை. அது முடிந்திருந்தால் இன்று நாம் பலிபீடத்தில் மீண்டும் அதைச் செயலாக்க முடியாது. மாறாக, அவர் ஒப்புக்கொடுத்த பலி, ஒப்புப் கொடுக்கப்பட்ட நிலையிலேயே நித்தியமாக்கப்பட்டு, நிரந்தரமாக இன்று விண்ணகத்தில் நிகழ்ந்து கொண்டுள்ளது. எனவே இன்றும் என்றும் அவர் விண்ணகத்தில் பலி செலுத்தி இறைவனை மாந்தர் பெயரால் வழிபடுகிறவராக விளங்குகின்றார். “அந்த நான்கு உயிர்களும், மூப்பர்களும் புடைசூழ அரியணை நடுவில் ஆட்டுக்குட்டி ஒன்று நிற்கக்கண்டேன். கொல்லப்பட்டதுபோல் அது காணப்பட்டது” (தி. வெ.5 : 6) என்று யோவான் காட்சியில் கண்டது இதை உறுதி செய்கிறது.

“தம்மைத் தாமே பலியாகச் செலுத்தி இதை ஒரே ஒரு முறைக்குள் செய்து முடித்தார்” (எபி 7 : 27) என்ற வார்த்தைகள் இயேசு கிறிஸ்து சிலுவையில் ஒரே ஒரு முறையாக ஒப்புக்கொடுத்தப் பலியைக் குறிக்கின்றது. இது இன்று விண்ணகத்தில் இடைவிடாது (ceaselessly) தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுள்ளது.

பலிபீடத்தில் தொடரும் அவரது பலி :

தமது மீட்புச் செயலில் தம் சீடர்கள் ஈடுபட வேண்டும் என விரும்பிய இயேசு, தமது சிலுவைப் பலியை அவர்களும் ஒப்புக் கொடுக்க வேண்டுமென முடிவு செய்தார். எனவே தாம் பாடுபடுவதற்கு முந்தின நாள் இரவு யூதர்களின் பாஸ்காவைக் கொண்டாடிய பின்புலத்தில், அப்பம் இரசம் ஆகியவற்றின் வழியாகத் தமது சிலுவைப் பலியை முன்கூட்டியே அடையாள முறையில் கொண்டாடி ஒப்புக்கொடுத்தார். “இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்று சொன்னதின் வழியாக, இன்று பீடத்தில் நாம் கிறிஸ்துவின் சிலுவைப் பலியை அப்ப இரச அடையாளங்கள் வழியாகக் கொண்டாடுகிறோம். ஆகவே, இன்று திருஅவையின், அதாவது நம்பிக்கையாளர்கள், அருள்பணியாளர் ஆகியவர்களின் செயல்கள் மிக முக்கியமானதொன்றாக இருக்கின்றன. இவர்கள் இன்று அப்பத்தையும், இரசத்தையும் பலிபீடத்திற்குக் காணிக்கையாகக் கொண்டு வராவிட்டால், இயேசு கிறிஸ்து இடைவிடாது விண்ணகத்தில் தம்மை கடவுளுக்குப் பலியாக ஒப்புக்கொடுப்பதை, இம்மண்ணகத்தில் ஒப்புக்கொடுக்க முடியாது. சுருங்கச் சொல்லின், இன்று பலிபீடத்தில் இயேசு கிறிஸ்து தம்மைப் பலியாகக் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்க நம்மைச் சார்ந்துள்ளார் (depends on us). எனவே நாம் அப்பத்தையும், இரசத்தையும் காணிக்கையாகக் கொண்டு வருவது அவருக்குத் தேவைப்படுகிறது.

திருப்பலி பற்றிய சில தெளிவான உண்மைகள் :

1. திருப்பலியை ஒப்புக் கொடுப்பவர் இயேசு கிறிஸ்து ஆவார். அவர் அந்த பலியை ஒப்புக் கொடுக்க உறுதுணையாக இருப்பவர் அருள்பணியாளர்.
2. சிலுவையில் தம்மை நேரடியாகப் பலியாக்கிய கிறிஸ்து, பீடப்பலியில் அப்ப‡இரச வடிவில் தம்மைக் கடவுளுக்குக் காணிக்கையாக்கி பலியை ஒப்புக் கொடுக்கிறார், இறைவனை வழிபடுகிறார். எனவே திருப்பலிக்கு நாம் கொண்டுவருகின்ற அப்பமும், இரசமும் கடவுளுக்குத்தான் காணிக்கையாக்கப்படுகின்றதே அன்றி கிறிஸ்துவுக்கல்ல.
“ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, உம்மைப் போற்றுகின்றோம். ஏனெனில், உமது அருட்பெருக்கிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுக் கொண்டோம். நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கின்றோம். இது எங்களுக்கு வாழ்வளிக்கும் அப்பமாக மாறும்” என்று செபிப்பது இந்த உண்மையைத் தெளிவாக்குகின்றது. எனவே இச்சமயத்தில் மக்கள் பாடும் காணிக்கை பாடல்கள் இந்த உண்மையோடு ஒத்துப் போவதாகவும், இதைப் பிரதிபலிப்பதாகவும் அமைய வேண்டும்.
சின்ன குழந்தை இயேசுவுக்கு
என்ன கொடுப்பது - நாம்
என்ன கொடுப்பது (ஆனந்த ராகம், பாடல் எண் 714) என்று பாடுவது மேலே நாம் குறிப்பிட்ட உண்மைக்குப் புறம்பானது. திருப்பலியில் குழந்தை இயேசுவுக்கு நாம் பலி ஒப்புக்கொடுக்கவில்லை. 
3. திருப்பலியில் கிறிஸ்துவை நாம் வழிபடுவதில்லை. கிறிஸ்து வழியாக நாம் எல்லாம் வல்ல இறைவனை வழிபடுகிறோம். திருப்பலியின் இறுதி புகழுரை இதைத் தெளிவுப்படுத்துகிறது:
“இவர்வழியாக, இவரோடு, இவரில்
எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே
தூய ஆவியின் ஒன்றிப்பில்
எல்லாப் புகழும் மாட்சியும்
என்றென்றும் உமக்கு உரியதே”, என்று நாம் சொல்வது அல்லது பாடுவது நாம் மேலே குறிப்பிட்டதை உறுதி செய்கிறது.
அ) இப்புகழுரையில் வரும் ‘இவர் வழியாக, இவரோடு, இவரில்’ என்ற சொற்றொடர்கள் வசிகரம் செய்யப்பட்ட அப்பம் - இரசத்தில் பிரசன்னமாக இருக்கும் இயேசுகிறிஸ்துவைக் குறிக்கும். அவரைக் கையிலேந்தி நாம் தந்தைக்குப் புகழ் கூறுகின்றோம். ஏனெனில் அவரே தந்தைக்குகந்த காணிக்கை.

ஆ) ‘தந்தையே’ என்று விளிப்பதும், ‘உமக்கு உரியதே’ என்று அழுத்தம் கொடுப்பதும் தந்தையாகிய கடவுளைத்தான் குறிக்கும்.

இ) ஆகவே இச்சமயம் நாம் எடுக்கும் தீப, தூப, மலர் ஆரத்தியின்போது இயேசுவே உம்மை ஆராதிக்கிறோம் என்று பாடுவதும், தூய ஆவியே, உம்மை ஆராதிக்கிறோம் என்று பாடுவதும் சரியான பக்தி முயற்சியன்று.

ஈ) அப்ப - இரச வசிகரத்திற்குப் பின் அருள் பணியாளர் விசுவாசத்தின் மறைபொருள் என்று பறைசாற்றும் போது, மக்கள், இயேசுகிறிஸ்துவின் மரணம் உயிர்ப்பை எடுத்துரைத்து ஆர்ப்பரிக்கிறார்கள், ஆராதிப்பதில்லை. ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு, கிண்ணத்திலிருந்து பருகும்போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும் வரை அறிவிக்கிறீர்கள் (1 கொரி 11 : 26) என்ற பவுலடியாரின் வார்த்தைகளின் அடிப்படையில் எழுப்பப்படும் ஆர்ப்பரிப்புக்கும், இது முதல் ஒன்பது நூற்றாண்டுகள் வரை வசீகர வார்த்தைகளுக்குப் பின் அப்பமோ, இரச கிண்ணமோ உயரே தூக்கி காட்டப்படவில்லை. அவற்றை நோக்கி அருள்பணியாளர் திருப்பலியை ஒப்புக் கொடுத்தாலும், தாங்கள் புரிந்துக் கொள்ள முடியாத இலத்தீன் மொழியில் வழிபாடு நிகழ்ந்ததாலும், எப்பொழுதுதான் இயேசு கிறிஸ்து அப்ப-இரச அடையாளங்களில் தம்மை பிரசன்னமாக்குகிறார் என்று அறிய மக்கள் விழைந்ததால் உண்டான தவிர்க்க முடியாத பழக்கமே எழுந்தேற்றம். தூக்கிக் காட்டுவதால், மக்கள் வணங்க ஆரம்பித்தார்கள். பின் அப்பமோ, திருக்கிண்ணமோ தூக்கிக் காட்டப்படுவதில்லை.

எனவே அருள்பணியாளர் விசுவாசத்தின் மறைபொருள் என்று பறைசாற்றும்போது “எனக்காகப் பிறந்து, எனக்காக மரித்து, எனக்காக உயிர்த்த உமக்கே ஆராதனை” என்று பாடுவது சரியல்ல. மாறாக கிறிஸ்து இறந்தார், கிறிஸ்து உயிர்த்தார், கிறிஸ்து மீண்டும் வருவார் என்று ஆர்ப்பரிப்பதே சரியானது. இணையான மற்ற மூன்று பாடங்களும் உண்டு. உரோமை திருப்பலி நூலில் காண்க.
4. திருப்பலியில் கிறிஸ்து, தான் பலி செலுத்தி இறைவனை வழிபடுகிறார் என்றால், அருள் பணியாளரும் நம்பிக்கையாளர்களும் பலிசெலுத்துகிறார்களா? இல்லையா? என்ற கேள்வி எழுவது முறையானதுதான். இதற்குப் பதில் எழுந்தேற்றத்திற்குப் பின் சொல்லப்படும் செபங்களில் உள்ளதைக் காணலாம். நற்கருணை மன்றாட்டு ஒன்றில் பின்வரும் செபத்தை சொல்லி செபிக்கிறார் :

“ஆகவே, இறைவா, உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய கிறிஸ்து பாடுபட்டதையும், இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்ததையும், மாட்சியுடன் விண்ணகம் சென்றதையும், உம் ஊழியராகிய நாங்களும், உம்முடைய புனித மக்களும் நினைவு கூர்கின்றோம். நீர் எங்களுக்கு அளித்துள்ள கொடைகளிலிருந்து முடிவில்லா வாழ்வுதரும் புனித அப்பத்தையும், நிலையான மீட்பளிக்கும் கிண்ணத்தையும் தூய, புனித மாசற்றப் பலியாக மாட்சிமைமிக்க உமக்கு நாங்கள் ஒப்புக்கொடுக்கின்றோம்.”

இச்செபத்தில் வரும் ஊழியர் திருப்பலி ஒப்புக் கொடுக்கும் அருள்பணியாளரையும், புனித மக்கள் என்பது திருப்பலியில் பங்குபெற்றுக் கொண்டிருக்கின்ற நம்பிக்கையாளர்களையும் குறிக்கின்றன. மேலும் புனித அப்பமும், மீட்பளிக்கும் கிண்ணமும் இயேசு கிறிஸ்துவுடைய திருவுடலையும், திரு இரத்தத்தையும் குறிக்கின்றன. இவை புனிதமானதும், தூயதும், மாசற்றதுமான பலிப்பொருள். கடவுளுக்கு மிக உகந்தவை. எனவே நாம் இயேசு கிறிஸ்துவையே இறைவனுக்கு ஒப்புக் கொடுக்கும் நேரம் இது. இறுதி புகழுரை இதை முடிவுக்குக் கொண்டு வருகிறது.

இதே போன்று மூன்றாவது நற்கருணை மன்றாட்டிலும், அவர் மீண்டும் வருவாரென எதிர்ப்பார்த்திருக்கும் நாங்கள் இப்புனிதமான உயிருள்ள பலியை நன்றியறிதலுடன் உமக்கு ஒப்புக் கொடுக்கின்றோம் என்று சொல்லப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம்.

ஆகவே பீடத்தில் நிகழும் திருப்பலியில் தம் உடலாகவும், இரத்தமாகவும் மாற்றப்படும் அடையாளங்களின் வழியாகக் கிறிஸ்து தம்மைப் பலியாக ஒப்புக் கொடுக்கின்றார். நாமே, நமது வாழ்க்கை பலிகளின் அடையாளங்களான அப்பத்தையும், இரசத்தையும் கொண்டு வந்து காணிக்கையாக்கி, அவை கிறிஸ்துவின் உடலாகவும், இரத்தமாகவும் மாறியபின் கிறிஸ்துவையே கடவுளுக்குப் பலியாக ஒப்புக் கொடுக்கின்றோம்.
முடிவுரை : இவ்வாறாகத் திருப்பலியின் உண்மைப் பொருளைச் சரியாப் புரிந்துக் கொண்டு நாம் பலியை ஒப்புக்கொடுப்போமானால், அது உண்மையாகவே நமது வாழ்வுக்கு ஊற்றும், உச்சியுமாக அமையும். பின்வரும் பாடல் இதை அழகாகச் சித்தரிக்கின்றது.

முடிந்தது கல்வாரி சிலுவைப்பலி - தினம்
தொடர்ந்தது பீடத்தில் நினைவுப்பலி
முடிந்தது அந்த பூசை (பீடப்பலி) - இனி
தொடங்குவது நம் வாழ்க்கைப்பலி.

1 comment:

  1. Swamy
    Really worth information about HOLY MASS (EUCHARIST)
    Thank you so much
    Assure youo my humble Prayers

    ReplyDelete

Ads Inside Post