Pages - Menu

Thursday 28 January 2016

வெள்ளமும், உள்ளமும்

வெள்ளமும், உள்ளமும் 

 வரலாறு காணாத மழை, சொல்ல முடியாத சோகங்கள் ஆகியவை சென்னை, கடலூர் பகுதிகள் சந்தித்த துயரின் கருமேகங்கள். அடை மழை, ஆறுகள் நிறைந்து வீடுகளை குளமாக்கின. பலநாள்கள் உணவில்லா பட்டினி, அடுத்தவருடன் தொடர்பு கொள்ள முடியாது, கைகள் போன்ற அலைபேசிகள் ஊமைகளாயின. மின்சாரம் இல்லாது வீடுகளும், வீதிகளும் இருளாயின. பாதைகள் சகதியின் வாகனமாயின. ஆனால் துன்பங்களும், துயரங்களும் தெய்வீகத்தைத் திறக்கும் சாவிகள் என்பதை, இந்த கொடூர காலம் நிரூபித்துவிட்டது. ‘உன் கண்ணில் நீர் வடிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ என்ற பாடல் வார்த்தைகள் இந்த சோக காலத்தில் உயிர்பெற்றன. அரசு இயந்திரங்கள் வழக்கம் போல உதவாக்கரைகளாக நிற்க, மனிதரில் புதைந்து நின்ற நேசமும், பாசமும், இரக்கமும், உருக்கமும் மடை திறந்து ஓடின. திருந்தந்தை அறிவித்த இரக்கத்தின் ஆண்டு, இங்கு நடைமுறையானது எனலாம். 

மழை சேதத்தை கேட்டதும், தங்கள் தலையில் இடி விழுந்ததது போல ஒவ்வொரு கிராமமும், ஒட்டு மொத்த தமிழகமும் உதவிகளை தாங்கி ஓடோடி சென்றன. பெங்களுரில் பள்ளி பிள்ளைகள் வீதியில் உண்டியல் எடுத்து உதவி அனுப்பியுள்ளார்கள். ஒரு பங்கில், அது எளிய கிராமம், பங்குத் தந்தை ஒலிபெருக்கியில் உதவிக்காக அறிவித்தவுடன், ஒருமணி நேரத்தில் ஒரு லாரி நிறைய உதவி பொருள்கள் சேர்ந்துவிட்டன. ஆனால் திருமண வீட்டில், வேண்டுமென்றே வம்பிழுப்பதை போல உதவி கொண்டு சென்றவர்களை கொச்சைப்படுத்தி ஸ்டிக்கர் எல்லாம் ஒட்டி, காய்ச்சிய பாலில் உப்பை கொட்டியிருக்கிறார்கள். நல்லதற்கும் தடைகள் உண்டு. ஆனால், உடைத்து சென்ற வெள்ளத்தை போல, மக்களின் மனித நேயம் அரசியல் தடைகளையயல்லாம் உடைத்து சென்றுவிட்டது. 

இந்நேரத்தில் நமது மனித நேயம் நம் நாட்டையும் தாண்டி செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆப்ரிக்காவில், சோமாலி நாட்டில் பட்டினியால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதை, உள்ளத்தை உருக்கும் படங்கள் காண்பிக்கின்றன. திரு அவையும் வெள்ள உதவிக்கரங்களில் தீவிரவாதமாகவே செயல்பட்டிருக்கிறது. தொண்டு நிறுவனங்கள், துறவற சபைகள், மறைமாவட்ட பங்குத்தளங்கள் கிறிஸ்துவ பிறரன்பை வாழ்ந்து காட்டியுள்ளது. குடந்தை மறைமாவட்டத்தில் அவ்வளவு தீவிரமாக மக்கள் உதவிகளை கொடுத்துள்ளார்கள். பல பங்குகளிலிருந்து உதவிகளை ஏற்றிக் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்தார்கள். குடந்தை மறைமாவட்ட பங்குகளிலிருந்து 17 1/2 லட்சம் ரூபாய்கள் உதவியாக வந்து சேர்ந்திருக்கிறது. இதே ஆர்வத்தை, ஊழல் ஒழிப்பில் மக்கள் காட்டினால் நம் நாடு புனித நாடாக மாறும்.

No comments:

Post a Comment

Ads Inside Post