Pages - Menu

Friday 29 January 2016

இறை இரக்கம் தவக்கால சிந்தனை

இறை இரக்கம் தவக்கால சிந்தனை

- அருள்பணி.அ. பிரான்சிஸ், பாபநாசம்

சாம்பல் வெறுமையின் சின்னம். ஒன்றும் இல்லாமையின் அடையாளம். மண்ணிலிருந்து வந்து மண்ணுக்கே திரும்பும் மனிதன் தனது நிலையாமையினை வீடு பேறு நோக்கிப் பயணிக்க அழைத்திடும் காலமே தவக்காலம். ஈராறு ஆண்டுக்கொரு முறை மகா மகக் குளியல் மூலம் மக்களைப் புனிதமடையச் செய்யும் மகா மக விழா குடந்தை நகருக்குப் பெருமை சூட்டுவது பிப்ரவரி மாதம். இம்மாதம் 10ஆம் நாள் தவக்காலத்தின் முதல் நாள். அடுத்த நாள் உலக நோயாளர் தினமாகிய லூர்தன்னை பெருவிழா. இரக்கமிகு விண்ணகத் தந்தையின் காணுகின்ற முகமாகிய இயேசுவை ஈன்றெடுத்த மரியா 1858 பிப்ரவரி 11 முதல் அதே ஆண்டு ஜீலை வரை பிரான்ஸ் நாட்டின் பிரன்னிஸ் மலைத் தொடரில் உள்ள மசபியேல் என்னும் குகையில் பெர்னதெத் என்ற 12 வயது சிறுமிக்கு காட்சி தந்தார். லூர்து என்னும் சிற்றூர் இன்று அனைவரின் சிந்தை கவரும் நகராகத் திகழ்ந்து வருகின்றது. 
 இறை - மனித உறவு, இறைவனின் இரக்கத்தின் வெளிப்பாடாகும். கடவுளோடு தான் செய்து கொண்ட உடன்படிக்கையினை மனிதன் மீறி பிரமாணிக்கம் இன்றி வாழ்ந்த வேளைகளில் இறைவனின் இரக்கமே மனித குலத்தினை மீட்டது. பாவிகளை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்.... நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன் (மத். 9 : 13) என்ற சொற்றொடர் மூலம் தனது இரக்கமிகு பண்பினை வெளிப்படுத்துகின்றார் இறைவன். 

இறை - மனித உடன்பாடு இறை இரக்கத்தின் அடிப்படைக் கூறு. தனது பிரமாணிக்கம் இழந்து இஸ்ரயேல் மக்கள் தனது மனம் போன போக்கில் வாழ்ந்துவந்த போதெல்லாம் உண்மையும், நீதியும் உள்ள கடவுளாக அல்ல. ஊதாரியின் தந்தையாகத் தனது இரக்கத்தினை வெளிப்படுத்துகின்றார். விடுதலைப் பயண நூல் 32 - 34 வரை உள்ள பிரிவுகளை வாசித்தால் இறைவனின் இரக்கம் தெளிவாகப் புலப்படும். எகிப்தின் அடிமைத் தளையறுத்து பாதம் நனையாமல் செங்கடலைக் கடந்து வரச் செய்தார் யாவே இறைவன். 40 ஆண்டுகள் பாலை நிலத்தில் மன்னா, காடைகள், பாறையின் தெளிந்த நீர் ஊற்றால் உணவளித்துக் காப்பாற்றினார் இறைவன். சீனாய் மலை மீதேறி இறைவன் தந்த 10 கற்பனைகளை மோசே சுமந்து வருகின்றார். பிரமாணிக்கத்தினை மீறி பொன் கன்று வழிபாட்டின் விழாக்கோலம் மோசேயின் கோபக் கனலைத் தூண்டுகிறது. இரக்கமிகு இறைவன் இன்னொரு முறை தனது கட்டளைகளை வழங்குகின்றார். இரண்டாம் பிரதி திருச்சட்டக் கற்பலகைகளைக் கொண்டு வந்த மோசே அக்களிப்போடு பின்வரும் வார்த்தைகளில் இறைப்புகழ் பாடுகின்றார். ஆண்டவர்! ஆண்டவர்! இரக்கமிக்க பரிவும் உள்ள இறைவன் சினம் கொள்ளத் தயங்குபவர். பேரன்பு செய்பவர்; கொடுமையையும், குற்றத்தையும், பாவத்தையும் மன்னிப்பவர் (வி. ப. 34 : 6 - 7) விண்ணகத் தந்தையின் இந்தக் காதல் ஓவியம் இறைமகனின் மனுவுருவாதலில் நிறைவு பெறுகின்றது. இறை இரக்கமே மனுவாகி நம்மில் இரண்டறக் கலக்கின்றது. இந்த இரக்கமே பாவி தன்னை உற்று நோக்கி, மனம் மாறி நம்பிக்கை கொண்டு வாழ அழைக்கின்றது என்று திருந்தந்தை பிரான்சிஸ் தனது இரக்கத்தின் முகம் என்ற மடலில் எண் : 8 மற்றும் 21இல் குறிப்பிடுகின்றார். 

 இறைவனின் இரக்கப் பெருக்கினுக்குத் தன்னை முற்றுமாக அர்ப்பணித்த இறையன்பை மரியா தனது காட்சிகள் வழியாக அவ்வப்போது மனுக்குலம் தழைத்திடும் வழிகாட்டுதலை வழங்கி வருகின்றார். குறிப்பாக இம்மாதம் 11 அன்று நினைவு கூரும் லூர்து நகர் காட்சிகள் வழியாக கீழ்க்காணும் 4 கருத்துக்களை இத்தவக்காலத்தில் செயல்படுத்திட மரியா நம்மைப் பணிக்கின்றார். 

அ) ஏழ்மை : மாடடைக் குடிலில் விண்ணகத் தந்தையின் காணுகின்ற முகமாகிய இயேசு உதயமானார். அதே பான்று மாதா காட்சி தந்த மசபியேல் குகை பன்றிகள் அடையும் இடமாகும். இறைவனின் நன்மைத்தனம், தூய்மைத்தனம் ஆகியவை மனிதனின் ஏழ்மைத் தனத்தில் சங்கமிக்கின்றன. ஏழ்மையே மாட்சிமை என்பது இந்நிகழ்ச்சி மூலம் தெளிவாகின்றது. 

 ஆ) தவம் : ‘துர்நாற்றம் மிக்க, அழுக்குப் படிந்த பன்றிகளின் எச்சம் கலந்த மண்ணைத் தோண்டிப்பார்’ என்று விமலனின் தாய் கூறுகின்றார். பெர்னதெத்தும் அவ்வாறே செய்கின்றார். முகம் சுளிக்க வைக்கும் பன்றிகளின் எச்சம் கலந்த மண்ணிலிருந்தே புனிதம் உலக மக்களைத் தேடிவந்தது. இந்நிகழ்ச்சி பற்றிப் பிறரிடம் கூறிய வேளையில் மக்களின் இச்சகமான பேச்சு, எகத்தாளம் மிக்க அனுமானச் சொல் இவளைக் கூனிக் குறுகச் செய்தது. இவ்வாறு இயேசுவின் பாடுகளில் பங்கேற்றுத் தவ வாழ்வு வாழ்ந்தாள் பெர்னதெத். நாமும் இவள் போன்று தவ வாழ்வு வாழ்வோம். 

 இ) செபம் : மாதா தனது ஒன்பதாவது காட்சியில் பன்றியின் எச்சம் மிக்க மண்ணைத் தோண்டுகின்ற வேளையில் முதலில் சேறும், சகதியும் கலந்த நீர் பீறிட்டு வருகிறது. இந்நீரை இச்சிறுமி அள்ளிப் பருகுகின்றார். அதன்பின் சுவை மிகுந்த, உடல் மன நோய் தீர்க்கும் அருமருந்தாக நீராக இது மாறுகின்றது. பாவத்தில் உழன்று கொண்டிருக்கும் பாவி தன்னிலை நீங்கிட கண்ணீர் சிந்திக் கசிந்துருகி மன்றாடுகின்ற போது பாவ அழுக்கு நீங்கி ஆன்ம, உடல், மன ஆரோக்கியம் பெறுகின்றார். முடக்குவாதமுற்ற மனிதனை இயேசு குணப்படுத்தும் போது, ‘உன்பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ (மாற்கு 2 : 1 : 12) என்று கூறி முழுச் சுகத்தினை அளிக்கின்றார்.

 ஈ) திருச்சபை : நீ கண்ட காட்சி பற்றி திருச்சபையின் தலைவர்களிடம் அறிவி என்று தனது பதிமூன்றாவது காட்சியில் பெர்னதெத்திடம் அன்னை மரியா கூறுகின்றார். இதன் நோக்கம் என்ன? மக்கள் குழுவாக தங்களின் மொழி, இனம், மதம், நாடு என்ற பிரிவினை மறந்து திருப்பயணம் மேற்கொள்ள வேண்டும். அவ்வேளையில் ஒரே வானம், ஒரே உலகம் என்ற நிலை உருவாகும். தீவிரவாதம், பிரிவினை வாதம் பெருகி வரும் .க்காலத்தில் இறை இரக்கத்தின் மக்களாக வாழுகின்ற சமூகத்தின் அடையாளச் சின்னமாக திருச்சபை திகழ வேண்டும். இதுவே இரக்கத்தின் அரசியாகிய அன்னை மரியா நமக்குத் தருகின்ற செய்தியாகும். இந்த இறை இரக்கத் தவக்காலத்தில் கீழ்க்காணும் வரிகள் நமது வாழ்வில் அருள் பெறும் வழிகாட்டிகளாகட்டும்.

No comments:

Post a Comment

Ads Inside Post