Pages - Menu

Thursday 1 March 2018

பணிவு என்னும் இனிய பாதை

பணிவு என்னும் இனிய பாதை

 19. தம்மை நீதிமான்களாக எண்ணுவோர்......

அருள்பணி. மகுழன், 
பூண்டி மாதா தியான மையம்

அவர் அடிப்படையில் நல்லவர். ஆனால் அவர் வாழ்வில் மகிழ்ச்சி இல்லை. அவருடைய மனைவி அவரை புரிந்து கொள்ளவில்லை. அவருடைய பிள்ளைகள் அவரை மதிப்பதில்லை. அவருடைய பேச்சை யாரும் கேட்பதில்லை. அவருக்கு உலக வாழ்வே வெறுத்துவிட்டது. அந்த  ஊரில் மிகவும் புகழ் வாய்ந்த  முனிவர் ஒருவர் இருந்தார். நல்லவர் அந்த முனிவரிடம் சென்று, “முனிவரே, எனக்கு இந்த உலகம் வெறுத்துவிட்டது. நான் மோட்சத்திற்கு செல்ல வேண்டும். இப்போதே நான் மோட்சத்திற்கு செல்லும் வழியைக் காட்டுங்கள்” என்றார். முனிவரும், “கவலைப்படாதீர்கள் நண்பரே, இந்த வழியாக எங்கும் நிற்காமல் 100 நாட்கள் செல்லுங்கள். ஓர் ஓலைக்குடிசை இருக்கும். அங்கே இரவு தங்கி விட்டு மீண்டும் 100 நாட்கள் செல்லுங்கள். மோட்சத்தை அடைந்து விடுவீர்கள்”  என்றார். மகிழ்ச்சியோடு அந்த நல்லவரும் புறப்பட்டார். முனிவர் சொன்னதைப் போலவே 100 நாட்கள் நடந்தார். 

ஓலைக்குடிசையும் வந்தது. அதில் உறங்குவதற்கு முன்பு தாம் செல்லும் வழியை மாற்றிவிடக் கூடாது என்பதற்காக தன் காலணிகளை செல்லும் வழிநோக்கி வைத்தார். முனிவரின் சீடர் ஒருவர் அந்த ஊரில் இருந்தார். அவர் அந்த நல்லவர் நன்கு உறங்கிக் கொண்டிருந்த போது காலணிகளின் திசையை மாற்றி எதிர்திசையில் வைத்துவிட்டார். காலையில் எழுந்த நல்லவர் மீண்டும் உத்வேகத்துடன் நடக்கத் தொடங்கினார். 100 வது நாளில் ஓர் ஊரை அடைந்தார். அதுதான் மோட்சம் என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்தார். அந்த ஊர் தம் சொந்த ஊரைப் போலவே இருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார். அவர் ஒரு வீட்டிற்குச் சென்றார். அந்த வீடும் அவர் சொந்த வீட்டைப் போலவே இருந்தது. அந்த வீட்டில் ஒரு பெண்மணியும், சில பிள்ளைகளும் இருந்தனர். அவர்கள் மோட்சத்தில் இருப்பதால் நல்லவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அவர்களிடம் அன்பாக பேசினார். அவர்களும் தன் கணவர் திரும்பி விட்டார். தம் தந்தை திரும்பி வந்துவிட்டார் என்று மகிழ்வோடு உறவாடினார். அந்த இடமே மோட்சமாக அவர்களுக்கு மாறியது. மகிழ்ச்சியை நாம் கைகொள்வதற்கு ஒரு சிறந்த வழி நாம் பார்வைகளை
 (Attitudes)  பரிசீலிப்பதாகும். நாம் உண்மையான பார்வைகளைப் பெறுவதற்கு ஒரு பெரும் தடையாக இருப்பது நான் நீதிமான் என்ற எண்ணம்.  (Self righteous attitude). ஆண்டவர்  இயேசு கிறிஸ்து தம்மை நீதிமான்களாக நினைத்துக் கொண்டு சாதாரண மக்களை குறைசொல்லி வாழ்ந்து வந்த பரிசேயர், மறைநூல் அறிஞர்களை கடுமையாகச் சாடுகிறார். இயேசுவின் காலத்திலும், ஏன் இப்பொழுதும் இறைநம்பிக்கை கொண்டோர் எளிதாக இந்த “நான் மட்டுமே நீதிமான்” என்ற எண்ணத்தில் வாழ்ந்துவிடுவதைப் பார்க்கிறோம். இறைநம்பிக்கை உடையவர்கள் மத்தியில் மட்டுமல்ல இறைநம்பிக்கை இல்லாத உலகைச் சார்ந்த மக்கள் கூட நான் இறைநம்பிக்கை உடையவர்களைப் போல வெளிவேடக்காரன் இல்லை” என்று நினைக்கலாம். 

சமய நல்லிணக்கத்தின் தொடக்கம் நாம் இந்த “நான் நீதிமான் பார்வையை” அகற்றுவதாகும். நம் மதத்தின் பெருமையை நாம் உரைப்பதில் தவறில்லை. மற்ற மதத்தினர் மனத்தைப் புண்படுத்தும்படியாக பேசுவது சமய உரையாடலுக்கு இட்டுச் செல்லாது. சில தேசியவாதிகள், பிரிவினை வாதிகள் நம் அழகிய இந்திய தேசியத்தின் அமைதியை குலைக்கின்றனர் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. ஆனால் மற்ற மதத்தினரின் உணர்வுப்பூர்வமான நம்பிக்கைகளை நாம் குறைசொல்வதால் சமய நல்லிணக்கம் குலைவதற்கு நாமும் துணை போகிறோமோ என்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்
.
நீங்கள் செய்தித்தாளை படிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். தற்போது உள்ள பத்திரிக்கைகளில் சமூகத்தில் உள்ள அவலங்கள் தான் பிரதானமாக பிரசுரிக்கப்படுகின்றன. அவற்றைப் பார்க்கும்போது உங்கள் கருத்து என்ன? அந்த இடத்தில், அந்த சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் எப்படி நல்விதத்தில் நடந்து இருப்பீர்கள் என்றுதானே நினைக்கிறீர்கள். உங்களுக்கு ஓர் இரகசியம் சொல்கிறேன். உங்கள் இடத்தில், உங்கள் சூழ்நிலையில் உங்களைவிட சிறப்பாக செயல்படமுடியும் என்று எத்தனை பேர் நினைக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? அப்படி நினைக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

இயேசு தாம் நீதிமான்கள் என எண்ணியோரை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறார். இறைவேண்டல் புரியச் சென்ற இருவருள் இறை ஆசீர் பெற்று வீடு திரும்பியவர் தாழ்ச்சி மிகுந்த ஆயக்காரரே அன்றி “ தான் நீதிமான்”  என நினைத்த பரிசேயர் அல்ல என்று நிரூபித்தார். மத்தேயு நற்செய்தி 23 ஆம் இயலில் பரிசேயர், மறைநூல் அறிஞரின் “நீதிமான்கள் மனப்பான்மையை”  சாடுகின்றார். அவர் வாழ்வு முழுவதும் பரிசேயர், மறைநூல் அறிஞரின்“நான் நீதிமான்”  எண்ணத்தை எதிர்த்து போர் புரிகிறார் என்பதை நாம் காணமுடியும்.

நம் அன்றாட வாழ்வில் நன்மைக்கும், தீமைக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தை நாம் உணரலாம். நம் தனிப்பட்ட வாழ்வில் கூட நன்மைக்கும், தீமைக்கும் போராட்டம் நடைபெறுவதையும் அதில் எதற்கு நாம் முக்கியத்துவம் தருகிறோமோ அவ்வாறே நம் வாழ்வும் அமையும் என்பதையும் நாம் அறிவோம். அது சரிங்க, அதே வேளையில் நம் மனதில் ஒரு கேள்வி எழலாம். அதாவது பிறர் தவறு செய்யும்போது நாம் அதை தவறு என்று எடுத்துச் சொல்வது நம் கடமைதானே. அந்த சமயத்தில் நாம் குற்றப்படுத் தலாமா? என்று எண்ணலாம்.  பிறர் தவறு செய்யும்போது அந்த குறையை அந்தக் குற்றத்தின் கடுமைக்கேற்ப நாம் சுட்டிக்காட்ட வேண்டும். அந்தக் குற்றத்தை சுட்டிக்காட்ட வேண்டும். அந்த குற்றத்தை சுட்டிக்காட்டும்போது நாம் என்னவோ தவறே செய்ய இயலாத புனிதர் போலவும் அவர் மட்டும் தான் குற்றம் செய்கிறார் என்பதை போலவும் நினைக்கக் கூடாது. மாறாக அவருடைய உண்மையான முன்னேற்றத்தை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும்.

சரிங்க, உங்களுக்கு “நான் நீதிமான்”  என்ற எண்ணம் இருக்கிறதா என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். எப்படி என்று கேட்கிறீர்களா? நீங்கள் எந்த அளவிற்கு பிறரைப் பற்றி பிறருக்கு பின்னால் பேசுகிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுக்கு “நான் நீதிமான்”  என்ற எண்ணம் இருக்கிறது. இந்த எண்ணத்தை புதிய ஆண்டில் தவிர்க்க புறணி பேசுவதை தவிர்ப்போம்.
இயேசு நம்மைப் பார்த்து கூறுகிறார்:

“தம்மை நீதிமான்களாக எண்ணுவோருக்கு ஐயோ கேடு. அவர்கள் அழிவை விரைவில்  காண்பார்கள். ஏனெனில் அழிவுக்கு முந்தியது அகந்தை”

No comments:

Post a Comment

Ads Inside Post