Pages - Menu

Friday 4 May 2018

தூய ஆவியார் பெருவிழா

தூய ஆவியார் பெருவிழா

திப 2:1‡11, கலா 5: 16-25, யோவா 15:26-27, 16:12-15
20-05-2018
அருட்பணி. எல். ரெக்ஸ் அலெக்ஸ் சில்வஸ்டர்

  உயிர்ப்பு பெருவிழாவை கொண்டாடி முடித்த பிறகு ஐம்பதாவது நாளை பெந்தகோஸ்தே பெருவிழாவாகக் கொண்டாடுகின்றோம். அதாவது தூய ஆவியாரின் விழாவைக் கொண்டாடுகின்றோம். மூவொரு இறைவனில், மூன்றாம் ஆளாகிய தூய ஆவியாரின் விழா. 

திருவிவிலியம் நான்கு முக்கியமான பிறப்புக்களைக் கொண்டது. அவை:
 1. உலகின் பிறப்பு (படைப்பு) (தொநூ 1,2)
 2. தேர்ந்தெடுக்கப்பட்ட இனத்தின் பிறப்பு  (விப 19)
 3. இயேசுவின் பிறப்பு ( மத் 1: 18-25)
 4. திருச்சபையின் பிறப்பு (திப 2:1-11)

இந்த நான்கு பிறப்புகளும் நம்முடைய கிறிஸ்தவ நம்பிக்கைக்கு அடித்தளமாக அமைகின்றன. இந்த நான்கு பிறப்புகளுக்கும், ஓர் ஒற்றுமை உண்டு. பிறப்புக்கெல்லாம் மூல காரணமாய் இருந்தவர் தூய ஆவியார் என்பதே அந்த ஒற்றுமை.

 1. தூய ஆவியானவர் தண்ணீரின் மீது அசைவாடிக் கொண்டிருந்த வேளையில்தான், வெறுமையிலிருந்து ஒவ்வொன்றாக படைத்தார் இறைவன் என்கிறது திருவிவிலியம்.

2. யாக்கோபு முதலே - இறைவனுக்கும், இஸ்ராயேல் மக்களுக்கும் தொடர்பு இருந்தாலும், இவர்களுக்கிடையில் ஒப்பந்தம், உடன்படிக்கை நிகழ்ந்தது சீனாய் மலையில்தான். அங்கே ஆவியாரின் பிரசன்னம் இருந்ததை பேரிடி முழங்கியது (விப 19:6). ஆண்டவர் நெருப்பாக இறங்கி வந்தார் (விப 19:18) என்ற சொற்றொடர்கள் என்பிக்கின்றன.

 3. இயேசுவின் பிறப்பில், அன்னை மரியாள் கருவுற்றிருப்பது தூய ஆவியாரின் வல்லமையால் என்பதை நன்கறிவோம் (லூக் 1:35).

இறுதியாக திருச்சபையின் பிறப்பு, அதாவது இன்றைய நாளில் நாம் நினைவு கூறும் தூய ஆவியாரின் வருகை சிதறுண்டவர்களை, ஒரே திருஅவையாக இணைத்தது. தூய ஆவியானவர் நெருப்புப் பிளவு வழியாக இறங்கினார் என்று திப2:1-11 இல் வாசிக்கின்றோம்.

இந்த நான்கு பிறப்புகளும் நமக்கு வலியுறுத்துவது ஒன்றுதான். தூய ஆவியார் எங்கு இருக்கின்றாரோ, அங்கே புதுப்பிறப்பு உண்டு என்பதுதான் அந்த உண்மை.

அதோடு தூய ஆவியார் உடலளவிலும், உள்ளத்தளவிலும், செயலளவிலும், கொள்கையளவிலும் நம்மை ஒன்றிணைக்கும் பணிகளையும் செய்கின்றார். இதுவே அன்று திருத்தூதர்கள் வாழ்விலும் நடந்தது.

அது வரையிலும் யார் பெரியவர் என்று தங்களுக்குள், போட்டியிட்டவர்களும், இயேசுவின் அரியணையின் இடப் புறமும், வலப்புறமும் அமர வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களும், உயிருக்குப் பயந்து அவரை மறுதலித்தவரையும், அஞ்சி நடுங்கி கதவை தாழிட்டு கொண்டவர்களையும் இன்று தூய ஆவியார் ஒருங்கிணைக்கின்றார்.

இதுவரையில் சுபாவம், பதவிஆசை, உயிர்மேல் பயம் போன்ற கதவுகளால் பூட்டப்பட்டிருந்தவர்கள், தூய ஆவியாரை பெற்றுக் கொண்டபின் கதவுகளை உடைத்தெறிந்து விட்டு வெளியே வந்தார்கள். அந்த இயேசுவிற்கு சான்று பகர்ந்தார்கள். உயிர்ப்புக்கு சாட்சிகளானார்கள். இதுதான் பெந்தகோஸ்தே அனுபவம்.

இதே அனுபவத்தைப் பெறத்தான் நாமும் அழைக்கப்படுகின்றோம். நமக்குள் இருக்கின்ற அல்லது நம்மை பூட்டியிருக்கின்ற சாதி, இன, நிற, மொழி, பொருளாதார, பண்பாட்டு வேறுபாடுகளை, உடைத்தெறிந்துவிட்டு, உயிர்த்த இயேசுவின் சாட்சிகளாய் வாழ, அழைக்கப்படுகின்றோம். இதற்கு உந்துசக்தியாக, ஊக்குவிக்கும் சக்தியாக இருப்பது, திருமுழுக்கு மற்றும் உறுதிபூசுதலில் நாம் பெற்றுக் கொண்ட தூய ஆவியார்தான். அவரை நாம் நம்மில் செயலாற்ற அனுமதிப்போமா?
‘திரு அவையில் துVய ஆவியாரின் பிரசன்னத்தின் முக்கிய வெளிப்பாடு துணிவு’. - ஏ.பி. சிம்சன்

‘பணிவுதான் துVயஆவியார் நம்மை வழிநடத்த உதவுகிறது.’ - ஜான் ஹகி 

‘துVய ஆவியார் உன்னில் உறைவதை  உணரும் போது என்னால் முடியாது என்று உன்னால் சொல்ல முடியாது.’ - ஓஸ்வால்டு சாமபர்ஸ்

No comments:

Post a Comment

Ads Inside Post