Pages - Menu

Thursday 1 March 2018

தவக்காலம் மூன்றாம் வாரம்

தவக்காலம் மூன்றாம் வாரம்
 4- 03 - 2018
வி.ப 20: 1-7;  1 கொரி 1: 22-25;  யோவா 2: 13-25;

கெடாத பால் நமக்கு நலம் தரும். திரிந்த பால் கெடுதல் தரும். வழிபாடுகளை முறையுடன் செய்வது, கடவுளுடன் நாம் கொள்ளும் உண்மை, உறவின் வெளிப்பாடு. வழிபாடுகளை வணிக முறையில் செய்தால் இறைவனின் அன்பிற்கு எதிரான நிலையாகும். ஒருவர் பெந்தகோஸ்தே சபையினரை, பரிசுத்த ஆவியாரின் வியாபாரிகள் என்று குறிப்பிட்டார்.

இத்தவக்காலத்தில் நம் நம்பிக்கையைத் தூய்மை செய்ய வேண்டும். நம்பிக்கையில் அழுக்கு பிடிப்பது உண்டு. அந்த அழுக்குகளை அகற்ற வேண்டும். இன்றைய நற்செய்திப் பகுதியில், இயேசு எருசலேம் ஆலயத்தில் வியாபாரிகளை விரட்டியடிக்கும் நிகழ்ச்சியைப் பார்க்கிறோம்.

ஒத்தமைப்பு நற்செய்திகளில் இயேசு எருசலேமில் வெற்றி வீரராக நுழைந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, இயேசு எருசலேம் ஆலயத்திலிருந்து வியாபாரிகளை விரட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆனால் யோவான் நற்செய்தியில், இயேசுவின் பணி துவக்கத்திலேயே அது நடைபெறுகிறது. காணாவூர் திருமண நிகழ்ச்சிக்குப் பிறகு இடம் பெறுகிறது. இயேசு ஆடுமாடுகளையயல்லாம் விரட்டினார் என்று யோவான் நற்செய்தியில் மட்டும்தான் தரப்பட்டுள்ளது.

கோவிலை பராமரிக்க நிதி தேவைப்பட்டது. அதற்காக கோவில் வரிகூட வசூலித்தார்கள். ஆனால் மக்களின் பக்தியை பயன்படுத்திக் கொண்டு, பொருள்கள் விற்பனை செய்து வியாபாரச் சூழலை சில இடங்களில் ஏற்படுத்தி விடுகிறார்கள். நம் திருத்தலங்களிலும், மற்ற சமய திருத்தலங்களிலும் இந்த வியாபாரச் சூழலை இப்போதும் காண முடிகிறது.

முதல் வாசகத்தில் விடுதலைப் பயணத்தின்போது மக்களுக்கு, மோசே அளித்த பத்து கட்டளைகளைப் பற்றி பார்க்கிறோம். ‘என்மீது அன்பு கூர்ந்து என் விதிமுறைகளை கடைபிடிப்போர்க்கு ஆயிரம் தலைமுறைக்கு அன்பு காட்டுவேன்’ என்று இறைவன் கூறுகிறார். அதே நேரத்தில், ‘என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்’ என்றும் கூறப்பட்டுள்ளது.

தவக்காலம், கடவுளின் அன்பில் உயர்கிற, உறுதி பெறுகின்ற காலம். வழிபாடுகள், ஆலயங்கள் இறை அன்பில் வளர்க்கின்ற கருவிகளாக விளங்க வேண்டும். புனிதத்தை வளர்க்கும் வழிகள் திரிந்து போக விடக் கூடாது. இரண்டாம் வாசகத்தில் பவுல் அடிகளார், ‘சிலுவை கடவுளின் ஞானமும் வல்லமையுமாயுள்ளது’ என்கிறார். வழிபாடுகளை முறையாகப் பயன்படுத்தினால், விண்ணக வழி நமக்குத்  திறக்கும்

No comments:

Post a Comment

Ads Inside Post