Pages - Menu

Saturday 3 March 2018

கல்வியால் வளரும் மனிதம்

கல்வியால் வளரும் மனிதம்

அருட்பணி. ச.இ. அருள்சாமி

மனிதர் வளர்கிறவர், உடல்அளவில் நலமுடன் வளர்வது ஒருபக்கம், மனிதரின் அறிவை வளர்ப்பது, வளர்ச்சியின் முதிர்ச்சியாகும். மனித வளர்ச்சிக்கு உரமூட்டுவதுதான் கல்வி.

உலகம் எவ்வளவோ வளர்ந்திருக்கிறது. இதற்கெல்லாம் கல்வியே காரணம் என்று சொல்லலாம். மக்கள் மத்தியில் கல்வியின் மேல் அதிக கவனம் விழுந்திருக்கிறது எனலாம். பிள்ளைகளின் கல்விக்கு அதிக விலைக் கொடுத்தாலும் பரவாயில்லை. பிள்ளைகளுக்கு தரமான கல்வியைத் தருவது தங்களது வாழ்வின் முக்கிய கடமையாக பெற்றோர்கள் கருதுகிறார்கள். பலவித வசதிகள் கொண்ட தனியார் பள்ளிகள் கொடி கட்டி பறக்கின்றன. பிள்ளைகளை நிறைய மதிப்பெண்கள் பெற செய்வதே இப்பள்ளிகளின் குறிக்கோளாக அமைந்துள்ளது.

வாழ்க்கைக் கல்வியாகவோ, தரமிக்க கல்வியாகவோ  அக்கல்வி அமையவில்லை. மனனம் செய்து, கேள்விகளுக்கு தகுந்த பதில் எழுதி, மதிப்பெண்கள் பெறுவதுதான் நம் நாட்டின் கல்வி முறையாக அமைந்திருக்கின்றது. தேர்வில் துண்டுத் தாள்களை மடித்து வைத்துக் கொண்டு காப்பி அடித்து எழுதும் வழக்கம் தொடக்க வகுப்புகளிலிருந்தே ஆரம்பமாகிறது. காப்பியடிக்கும் கலையில் வளர்வதை திறமையாக பிள்ளைகள் கருதுகிறார்கள்.
நமது அரசும் கல்வியில் ஆர்வம் காட்டாத நிலையினைப் பார்க்கிறோம். இந்திய அரசு, தனது மொத்த வருமானத்தில் சென்ற  2013-2014 இல் 4.57 சதவிகிதம் செலவிட்ட நிலையில் 2017-2018 ஆம் ஆண்டு 3.71 சதவிகிதம் செலவிட திட்டமிட்டிருக்கிறது.

அரசுப் பள்ளிகளில் பிள்ளைகள் சேருவதில்லை. அங்கு பிள்ளைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. பொறியியல் கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு வேலை கிடைக்காத காரணத்தால் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கைக் குறைந்து விட்டது.

அபிகைல் ஆதாம் கூறுகிறார். ‘கற்றல் இயல்பாக நம்மிடம் வந்து சேர்வதில்லை. மாறாக ஆர்வத்துடன் தேடுதலால் வருவது’ என்கிறார். 
கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்ற யவை                                 (குறள் 400) என்கிறார் வள்ளுவர். கல்வி அழியாச் செல்வம் என்று விளக்குகிறார். மார்ச் மாதம் கல்வியின் மாதம் எனக் கருதுகிறோம். பிள்ளைகளின் தேர்வுகள் இக்காலத்தில் வருகின்றன. புனித சூசையப்பர் கல்வியின் பாதுகாவலர், என்று தனி பக்தி முயற்சிகள் செய்யப்படுவதுண்டு. பிள்ளைகளின் கல்வியில் பெற்றோர்களின் பங்கு பெரிது. பிள்ளைகளின் தனித்திறமை அவர்களின் தனி ஈர்ப்பு ஆகியவைகளைக் கண்டு, அவர்களை வழிநடத்த வேண்டும். கல்வி பள்ளிகளோடு முடிந்து விடுவதில்லை. கற்றல் தொடர் நிகழ்வாகும். வாசிப்பிலும் செய்திகளைத் தெரிந்து கொள்வதிலும் பெற்றோர்கள் முன்னோடிகளாகத் திகழ வேண்டும். நாடு வளர, மனிதர் வளர வேண்டும். மனிதர் வளர, கல்வி அவசிய வழியாகும். அப்போது நம் நாட்டிலிருந்து அறிஞர்களும், விஞ்ஞானிகளும் நிறைய தோன்றுவார்கள்.

தமிழ்நாட்டில் அரசியல் குழப்பமும், நிரந்தரமற்ற நிலையும் நிலவுகிறது. நடிகர் கமலஹாசன், ‘மக்கள் நீதி மய்யம்’  என்ற புதிய அரசியல் கட்சியினை ஆரம்பித்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்தும் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்க தயாரித்து வருகிறார். காவிரிநீர் பங்கீட்டில், உச்சநீதிமன்றம் கிடைக்க வேண்டிய நீரை 1924 எம்சியிருந்து 177.25 ஆக குறைந்திருக்கிறது. உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்புகளை நடைமுறைப்படுத்தாமல் அடாவடி செய்திருக்கிறது கர்நாடகா அரசு.

  அனைத்துக் கட்சி கூட்டம் 22.2.2018இல் சென்னையில் நடந்திருக்கிறது. நதிநீர் பங்கீட்டில் நமது உரிமைகளை எல்லோரும் இணைந்து போராடி பெற வேண்டும் என்ற உணர்வு எழுந்துள்ளது.
  தமிழக மக்கள் தற்போது, அனைத்தையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பது போல் தெரிகிறது. விழிப்புணர்விலும், ஒற்றுமையிலும் தமிழகம் வளர வேண்டும்.

No comments:

Post a Comment

Ads Inside Post