Pages - Menu

Friday 2 March 2018

இலக்கை விளக்கும் இலக்கியம்

இலக்கை விளக்கும் இலக்கியம்

அருட்பணி. ச.இ. அருள்சாமி

வாழ்வு ஒரு கலை. பிள்ளைகள் ஒரு நடனத்தை அரங்கேற்றும் முன் சுமார் ஐம்பது முறையாவது பயிற்சி செய்வதைப் பார்த்திருக்கிறேன். பயிற்சிகள் நடனத்தின் கவர்ச்சியை மேலும் மேலும் மெருகூட்டுகின்றன. வாழ்வின் நுணுக்கங்களை நாம் சிறிதளவே புரிந்துக் கொள்கிறோம். ஆனால் அறிஞர்கள், வாழ்வை ஆழமாக புரிந்து கொண்டு,  மற்றவரோடு பகிர்ந்து கொள்கிறார்கள். வாழ்வின் இலக்கினை குறித்துக்காட்டுவதுதான் இலக்கியம். இயல், இசை, நாடகம் என்பவை இலக்கியத்தின் மூன்று முகங்களாகும்.

வாழ்வின் நிறைவு வழிகளை மற்றவர்களின் ஞானத்திலிருந்தும் பெற்றுக் கொள்கிறோம். பள்ளிகளில், உலகில் வளர்ந்த ஞானத்தை படிப்படியாக பெற்றுக் கொள்கிறோம். அதற்கு மேலாக அறிஞர்களின்  நூல்களை படிப்பதன் வாயிலாகவும், அறிவில் உயர்கிறோம், ‘உலகை உதிர்த்து பார்க்கவும், அதன் நண்பராக விளங்கவும் உதவுவது இலக்கியம்’ என்கிறார் நிகோலாஸ் கிறிஸ்டோப் . தமிழ் நாட்டின் முன்னால் முதலமைச்சர் உயர்திரு அண்ணாதுரை அவர்களுக்கு அறுவை சிகிச்சை நடக்க இருந்தது. அறுவை சிகிச்சைக்காக செவிலியர் அழைத்து செல்ல வந்தனர். அண்ணாதுரை அவர்கள், ‘ஒரு புத்தகத்தைப் படித்தேன். சில பக்கங்கள்தான் இன்னும் படிக்காமல் உள்ளன. எனவே அதனைப் படித்து முடித்ததும் அழைத்து செல்லுங்கள்’  என்றாராம். மறைந்த முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களும் நூல்களை வாசிப்பதில் அதிக ஆர்வம் உள்ளவர் என்றும், மற்றவர்கள் நல்ல புத்தகங்களை பரிசளித்தால் மிக்க மகிழ்ச்சியடைவார் என்றும் குறிப்பிடுகிறார்கள். 

தற்போது புத்தகங்களை வாசிக்கும் வழக்கம் குறைந்து வருகிறது என்கிறார்கள். பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர் என்று இணையதள பதிப்புகளால் புத்தகங்களுக்கு மதிப்பு குறைந்து விட்டது என்பார்கள். ஆனால் ஆங்காங்கு நடக்கும் புத்தக கண்காட்சிகளில் ஏராளமான மக்கள் புத்தகம் வாங்கி செல்வதைப் பார்க்கிறோம். 

‘வாசிப்பது, நாம் வாழ்வதற்கு காற்றை சுவாசிப்பதை போல்’ என்கிறார் அன்னி திலார் என்பவர். வாசிப்பதற்கு ஆவல் கொள்வோம். வாசிப்பதால் அறிவு வளரும், அறியாமை இருள் விளங்கும். 

அண்மையில் கலீல் ஜிப்ரான் அவர்களின், ‘ஞான களஞ்சியம்’ என்ற புத்தகத்தை வாங்கினேன்.  அதில் முழுமை என்ற கவிதையின் வரிகள் என் மனதைத் தொட்டன.
‘என்றும் எரிந்துக் கொண்டிருக்கும் தீயாகவும்
என்றும் அணையாத விளக்காகவும் 
உலவும் இளந்தென்றலாகவும், 
சீறியடிக்கும் சூறாவளியாகவும், 
இடிகள் முழங்கும் வானமாகவும், 
மழைபொழியும் விண்ணாகவும்,
எப்போது ஒருவர் உணர்கின்றாறோ...

அப்பொழுது அவர் பூரணத்தின் பாதிவழியைக் கடந்தவராகிறார்.’ என்று நமது விழிப்புணர்வே வாழ்வின் நிறைவு என்று அழகாக வடித்துக் காண்பித்திருக்கிறார் கலீல் ஜிப்ரான்.

பிப்ரவரி மாதம் இலக்கிய மாதம் என்று அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. இலக்கியத்தைப் பற்றி சகோ.விமலி அவர்களும் திரு. பெஞ்சமின் இளங்கோ அவரகளும் எழுதியுள்ள கட்டுரைகள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. பலர், துணுக்குகள் சுருக்கமாக படிக்க நன்றாக உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர். அன்னையின் அருட்சுடரில் தேர்ந்தெடுத்த கட்டுரைகளை வெளியிட முயற்சிக்கிறோம். உங்களின் கருத்துகளை எழுதியனுப்புங்கள். 

தமிழ்நாட்டில் நடந்த  R.K. நகர் இடைத்தேர்தல், நம் மக்கள் இன்னும் நிறைய விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதையே நிரூபித்திருக்கிறது. ‘கொடுப்பதை வாங்கிக் கொண்டால் என்ன தவறு? நம்மிடம் பெற்றதை தானே தருகிறார்கள்’ என்ற தவறான கருத்திற்கு நம் மக்கள் அடிமையாயிருக்கிறார்கள். 6000 ரூபாய், பெற்றுக் கொண்டதால் வாழ்வின் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து விட்டதா? ஆனால் ஒப்புயவர்வற்ற நமது ஓட்டு உரிமையை விற்றிருக்கிறோம் என்பதை நினைத்து நாம் தலை குனிய வேண்டும். பணத்தை பெற்றுக் கொண்டு ஓட்டுப் போட்ட நம் மக்களைப் பார்த்து மற்ற மாநிலத்தார் சிரிக்கிறார்கள் என்று சில குறிப்பிட்டுள்ளார்கள். 

தவக்காலம் துவங்கியிருக்கிறது.  நம்மில் மாற்றங்களும் திருத்தங்களும் இந்நாள்களில் ஏற்பட முயற்சிப்போம். விவிலியம் இலக்கியங்களிலெல்லாம் பெரிய இலக்கியம். வாழ்க்கையைத் தொடுகின்ற இலக்கியம்  அது. இறைவார்த்தைத் துணைகொண்டு தவக்காலத்தில் மேன்மைப் பெறுவோம்.

No comments:

Post a Comment

Ads Inside Post