Pages - Menu

Friday 2 March 2018

இலக்கியமும் அரசியலும்

இலக்கியமும் அரசியலும்

 பேராசிரியர், முனைவர் எஸ்.பி. பெஞ்சமின் இளங்கோ

இலக்கியம் என்ற சொல்லைப் பிரித்தால் இலக்கு + இயம் என்று பிரிந்து, ஒரு இலக்கு நோக்கி, ஒரு குறிகோளை நோக்கி இயற்றப்படுவது என்று பொருள் தரும். அரசியல் என்ற சொல் அரசு+ இயல் என்று பிரிந்து அரசை வழிநடத்தக்கூடிய கொள்கைகளும், கோட்பாடுகளும் அடங்கிய அறிவுப்புலம் எனப் பொருள் தருகின்றது. உலகில் அரசியலுக்கு ஆட்படாமல் மனித சமுதாயம் இயங்கமுடியாது என்பதே இன்றைய நடைமுறை உண்மை. பட்டி, தொட்டி மூலம் கண்டங்கள் வரை அரசியலமைப்பு என்ற கட்டமைப்புக்குள்தான் அன்றாட நிர்வாகத்தைப் பேணி வருகின்றன. ஆக இப்படிப்பட்ட விலக்கப்பட முடியாத இன்றியமையாத அரசு நிர்வாகத்தை உள்ளடக்கிய அரசியல் இன்று எவ்வாறு நடைமுறையில் இயங்குகின்றது எனப் பார்த்தால், நாம் எண்ணுவதுபோல அரசியல் மோசமல்ல, மாறாக பெரும்பாலான அரசியல்வாதிகளே மோசம் என்பது தெளிவாகின்றது.

முடியாட்சி காலம் போய் மக்களாட்சி நடைபெறும் இக்காலத்தில் மக்களின் அடிமைத்தனம் ஒழிந்துவிட்டதா? மக்களால், மக்களுக்காக, மக்களே நடத்தும் மக்களாட்சி நிலவுகிறதா? மாறாக அதிகார போதையில், கவர்ச்சி சலுகைகளால் பெருவாரியான பொதுமக்கள் ஈர்க்கப்பட்டு ஓட்டு அடிமைகளாக மாற்றப்படும் அவலநிலை மேலோங்கியுள்ளதா என்ற கேள்விகளுக்கு ஒரே பதில் ‡ இன்றைய அரசியல் களம், லஞ்சம், ஊழல், மது, மாது, சொத்து, வன்முறை,கட்சித்தாவல் என்ற சமூக சீர்கேடுகளை வளர்த்துவிடும் தளமாகவே விளங்குகின்றது.

“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் அரசியல்வாதிகளுக்கு அறமே நீதியை நிலைநாட்டு பவராக இருந்து தலைவிதியை நிர்ணயித்து தண்டனையைத் தரும் என்று கடும் எச்சரிக்கையை விடுத்திருப்பது கண்கூடாக நம்முன் நடைபெற்று வருவதைக் காண்கிறோம். இப்படிச் சீர்கெட்ட அரசியலை அதனால் புரையோடிய இச்சமுதாயத்தைப் புறந்தள்ளிவிடாமல் இலக்கியமும், இலக்கியவாதிகளும் சமுதாயத்தின் மனச்சாட்சியின் அபாய சங்கை ஒலிக்கும் குரல்களாக, மனித சமுதாயத்தை எப்படியாவது அழிவுப்பாதையிலிருந்து மீட்டெடுத்து, அறப்பாதையில் செலுத்த வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு பெரும்பாலான இலக்கியவாதிகள் தங்கள் படைப்புகளை தொன்றுதொட்டு இயற்றிவருவது இலக்கியத்துக்கும், அரசியலுக்கும் இடையே உள்ள பிரிக்கமுடியாத பிணைப்பை வெளிக்காட்டுகின்றன.

“இந்தியா அழிந்தால், உலகில் ஆன்மீகம் அழியும், ஒழுக்கம் அழியும், அனைத்து உயர்ந்த இலட்சியங்களும் பூண்டோடு அழிந்துவிடும். காம வேட்கையோடு சுகபோகமே அரசாளும். பணம் மையமாகும். பலாத்காரம் வழிபாடாகும் மனிதம் பலியாகும்”  என்று வீரத்துறவி விவேகானந்தர் தமது இலக்கிய உரைநடையில் விளம்பியிருப்பது. இன்றைய இந்தியாவின் நிலையை அப்பட்டமாக  வெளிகாட்டுவதாக உள்ளது. வட்டச்செயலாளாராக வட்டம் போட்டவன், மாவட்டத்தை என்ன, மாநிலத்தையே தன் சுய விருப்புவெறுப்புகளுக்குப் பலிகடா ஆக்குவதைக் கண்டு, அறம் சார்ந்த சமுதாயம் துணிவுள்ள இலக்கியவாதிகள் மூலம் தன்னுடைய அறச்சினத்தை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றது. நாலடி நிலமற்றவன் அரசியல்வாதியாக உருவெடுத்து பதவியிலமர்ந்த ஓரிரு ஆண்டுகளில், நான்காயிரம் ஏக்கர்களுக்குச் சொந்தகாரனாகி விடுகிறான். சைக்கிள் கூட இல்லாத அவரது உற்றார், உறவினர், ஆடிக்காற்றையே அமுக்கிச் செல்லும் பல கோடி மதிப்புள்ள ஆடிக்கார்களில் பவனி வருகின்றனர். மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடித்து, அதிலிருந்து, அவ்வப்போது ஏழைகளுக்கு தானதர்மம் செய்து, அதை விளம்பரப்படுத்த, அதே வரிப்பணத்திலிருந்து இலட்சக்கணக்கில் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தி, தாங்கள்தான் ஏழைகளின் ஏகபோகக் காவலர்கள் என்று சிறிதும் வெட்கமில்லாமல் மார்தட்டி நிற்பதையும், அதை அறியாத எளிய, படிப்பறிவற்ற மக்கள் கைகொட்டி ஆரவாரிப்பதையும் முன்னரே கண்டுதான் அன்றே இவ்வாறு அறிவித்தார் மகாகவி பாரதியார்.

“நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால், அஞ்சி அஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே”. ஆள்பவரும் நம்போன்ற மனிதர்களே! ஆள்பவர்கள் ஆண்டவனல்ல! மக்களாட்சியில் மக்கள் பிரதிநிதிகளாகச் சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்து க்கும் செல்பவர்கள் வானிலிருந்து குதித்தவர்கள் அல்ல! மாறாக நாம் உருவாக்கியவர்கள்தான். அப்படியயன்றால் அரசியல் சீர்கேடுகளுக்கு பொதுமக்களும் காரணமா? அரசு எவ்வழி, அவ்வழி மக்கள் என்பது போய், மக்கள் எவ்வழி, அரசு அவ்வழி அல்லது மக்களுக்கேற்ற அரசுதான் மக்களாட்சி அரசியல் களத்தில் அமைகின்றது என்பதுவும் இன்று உண்மை நிலவரமாகின்றது. ஆக சீர்கெட்ட அரசியல்வாதிகளையும் நெறிபிறழ்ந்த பொதுமக்களையும் தட்டிக்கேட்பது யார்? அவர்களை நெறிப்படுத்துவது யார்? என்று பார்க்கும்போது சமூக ஊடகப்பொறுப்பாளர்களில் பெரிதும் கோலோச்சும் இலக்கியவாதிகளே என்பது தெளிவாகின்றது.
                                                                                                                                            

No comments:

Post a Comment

Ads Inside Post