Pages - Menu

Thursday 1 March 2018

வெற்றி உங்கள் கையில்

வெற்றி உங்கள் கையில்
வெற்றியைக் கொண்டாடுவோம்.

 அருட்திரு. எஸ்.  ஜான் கென்னடி,
பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி, சமயபுரம்

திரைப்படத்தில் வடிவேலுவின் நகைச்சுவையை ரசிக்காதோர் யாரும் இல்லை. அப்படி அனைவரும் ரசித்த ஒரு நகைச்சுவையை சொல்கிறேன். வடிவேலு போய்க்கொண்டிருப்பார். சிங்கமுத்துவும், மற்றொரு நடிகரும், வடிவேலைப் பார்த்து பேசிக்கொள்வார்கள். ‘அண்ணே! இவன் சரியா வருவானாண்ணே’ என்று ஒரு நடிகர் சொல்ல அதற்கு சிங்கமுத்து ‘யாரு? இவன் சரியா வரமாட்டான்டா’ என்று சொல்லுவார். வடிவேலு ‘யோவ் எதுக்குயா நான் சரியா வரமாட்டேன்’, சொல்லுயா என்பார். சிங்கமுத்து, ‘நான் நினைக்கிற மேட்டருக்கு நீ சரியா வரமாட்டடா போடா’ என்று சொல்லுவார். காலையில் வடிவேலு சிங்கமுத்து வீட்டின் முன் நின்று, ‘மெட்ராசுக்கு போறேன். அதுக்கு முன்னாடி ஒரு டவுட்ட கிளியர் பண்ணிட்டு போலாம்ன்னு வந்தேன். அன்னைக்கு நீ அதுக்கு சரிபட்டு வரமாட்டேன்னு சொன்னீங்க, நான் எதுக்கு சரிபட்டு வரமாட்டேன்னு சொல்லுங்க’ என்பார். சிங்கமுத்து ‘நீ அதுக்கு சரிபட்டு வரமாட்டடா என்று கோபத்தோடு சொல்லுவார்’. மனைவியும் ‘நீ அதுக்கு சரிபட்டு வரமாட்ட’ என்பார். கடைசியில் வடிவேலுவின் அப்பாவும் இணைந்து நீ அதுக்கு சரிபட்டு வரமாட்ட என்பார். வடிவேலு ‘கடைசி வரைக்கும் சொல்லவே மாட்டேன்கிறாங்களே, எப்ப அடிச்சாலும் அதுக்கு ஒரு காரணத்த சொல்லி அடிப்பாங்க. அது மனசுக்கு ஒரு ஆறுதலா இருந்துச்சு. இப்ப அடிச்சதுக்கு காரணமே சொல்லாம அனுப்புறாங்களே. நான் எப்படிடா ஊருல போய் பொழப்ப நடத்துறது. எந்நேரமும் மனசு உருத்துமே, எதுக்குடா நான் சரிபட்டு வரமாட்டேன் சொல்லுங்கடா,’ என்று கூறுவார். இந்த ஜோக்கை பல முறை பார்த்து பார்த்து சிரிச்சிருப்பீங்களே. 

நண்பர்களே! வடிவேலு  அவர் எதற்கு சரிபட்டு வரமாட்டார் என்பதை அறிய என்ன பாடுபடுகிறார் பாருங்கள். ஆனால்,‘உனக்கு கணக்கு வராது, ஆங்கிலம் வராது, அறிவியல் வராது, பெயிலாத்தான் போவ, மாடு மேய்க்கத்தான் லாயக்கு, பேசத்  தெரியாது, பாடத்  தெரியாது, எழுதத் தெரியாது, உனக்கு எதுவும் வராது. நீ எதுக்கும் சரிப்பட்டு வரமாட்ட’ என்று மற்றவர்கள் நம்மைப் பார்த்து சொல்லும்போது நம்மில் பலர் ஏற்றுக்கொள்கிறோம். வடிவேலைப் போல் நான் ஏன் சரிப்பட்டு வரமாட்டேன்னு கேட்க, சிந்திக்கத் துணிவதில்லை. அதற்கும் மேலாக நமது தோல்விகளைக் கொண்டாடியும் வருகிறோம். ஆம் சில இளைஞர்கள், ‘மாப்ள எனக்கு 4 அரியர்ஸ் இருக்கு, ஆங்கிலம் வராது, எங்களுக்கு எதுவுமே வராதுப்பா’ என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள். சிலர், ‘எனக்கு படிப்பு வராது, படிச்சாலும் மனசுல ஏறாது, அப்படியே படிச்சாலும் பரீச்சை அன்னைக்கு மறந்திடும். எல்லாமே கஷ்டமான கேள்வியா வரும்’ என்று சொல்வார்கள். ஒரு சிலர், ‘எனக்கு எந்த நல்லதும் நடக்காது. எப்பவும் என் வாழ்க்கை கஷ்டம்தான். எனக்குன்னு யாருமில்லை. எதுவுமில்லை. எது செஞ்சாலும் தோல்வியில்தான் முடியும்’ என்று சொல்வார்கள். இவ்வாறு பேசி பலர் தங்களது தோல்விகளைக் கொண்டாடி வருகிறார்கள். அவர்கள் தங்களின் இயலாமையை ஏற்றுக்கொண்டு அந்தத் தடைகளை உடைத்து வெளியே வருவதற்கு பயந்து, தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி தோல்விகளை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளாத காரணத்தினால் தான் தோல்விகளைக் கொண்டாடப் பார்க்கிறார்கள். தோல்விகளைப் பற்றி ஒரு சமூகம் கைத்தட்டினால் அந்தச் சமூகம் தோற்றுவிடும். ‘தோல்விகளைக் கொண்டாடுதல்’ என்ற மனநிலையிலிருந்து வெளியே வர வேண்டும். நமது வெற்றியை நாம் எப்பொழுதும் கொண்டாட வேண்டும். எனக்கு ஆங்கிலம், பேசத்தெரியாதுன்னு சொன்னா, எனக்கு படிப்பு வராதுன்னு சொன்னா, உடனே கைத்தட்டுகிற பழக்கம் சமூகத்தில் புரையோடிக்கிடக்கிறது. இந்த மனப்பாங்கு மிக மிக தவறானது. எனக்கு வராது, வராது என்று சொல்லி தோல்விகளை ஏற்றுக்கொண்டு தப்பிக்கும் மனப்பாங்கை உடைக்க வேண்டும். அதிலிருந்து மீண்டு வரவேண்டும். ‘ஏன் எனக்கு வராது, ஏன் நான் அதற்கு சரிப்பட்டு வரமாட்டேன், ஏன் நான் அதுக்கு செட்டாகமாட்டேன் ’ என்று கேள்விகளை எழுப்புகிறவர்களால் மட்டுமே வெற்றி பெற முடியும்.  வரலாற்றில் இடம் பிடித்த வெற்றியாளர்களைப் பாருங்கள். அவர்கள் எல்லோருமே தங்கள் தோல்விகளைக் கொண்டாடவில்லை. அவர்கள் அவைகளை எதிர்த்துப் போராடியவர்கள். அந்தத் தடைக்கற்களை உடைத்தெறிந்தவர்கள்.  மற்றும் தோல்விகளை படி கற்களாக மாற்றியவர்கள். ஆகவேதான் அவர்களின் வெற்றியை அவர்களால் கொண்டாட முடிந்தது. அன்பு வாசகர்களே! இனி யார் உங்களைப் பார்த்து ‘இது வராது, அது வராது, இதுக்கு சரிப்பட்டு வரமாட்ட, அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட’ என்று சொல்லும்போது ‘நான் ஏன் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்’. நான் ஏன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன் என்று கேள்விகளை எழுப்பி ‘எனக்கு எல்லாம் வரும், எல்லாவற்றிற்கும் சரிப்பட்டு வருவேன்’ என்ற மனப்பாங்கை வளர்த்து, தோல்விகளைக் கொண்டாடாமல் வெற்றிகளைக் கொண்டாட வாழ்த்துகிறேன். 

Don't Celebrate failures, Celebrate success

ஒருவர்  உன்னை தாழ்த்தி  பேசும்போது ஊமையாயிரு.  புகழ்ந்து  பேசும்போது செவிடனாய் இரு, எளிதில் வெற்றி பெறலாம்.     

No comments:

Post a Comment

Ads Inside Post