Pages - Menu

Saturday 3 March 2018

மன்னிப்பின் மாண்பாளரே உயிர்ப்பின் பங்காளிகள்

மன்னிப்பின் மாண்பாளரே உயிர்ப்பின் பங்காளிகள்
அருள்பணி. அ. பிரான்சிஸ், பாபநாசம்

சாக்ரடீஸ் - இவரே  உலகின் முதல் மெய்யியல் ஞானி. புதிய சிந்தனையினால் மக்களைக் குழப்பி வருகிறார் எனக் குற்றம் சாட்டப்பட்டு கொலைக்களத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். யஹம்லாக் என்ற உயிர்க் கொல்லி இவருக்குத் தரப்படுகிறது. இந்த வி­க் குப்பியை தந்தவரிடம் ‘நலமோடு வாழ்வாயாக’ என்று வாழ்த்தி அதனை அருந்தி உயிர் துறக்கின்றார்.

 இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்...

இந்திய புராணங்கள் தீயோராகிய அரக்கர்களை அழிப்பதற்காக உலகில் கடவுள் பல அவதாரங்கள் எடுத்ததாகக் கூறுகின்றன. ஆனால் தீயவர்களை அல்ல தீமைகளை மட்டுமே அழிக்க, உலகில் நம்முள் ஒருவராக நம்மை போல் பிறந்து, பாடுகள் அனுபவித்து, சிலுவையில் உயிர் விட்டவரே நம் தலைவர் இயேசு. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற பழைய சட்டத்தை மாற்றி பகைவரிடம் அன்பு. துன்புறுத்துவோருக்காகச் செபம் என்ற புதிய அறநெறியை வாழ்க்கையில் செயல்படுத்த அழைக்கின்றார் நம் இயேசு.

அனைவரையும் அன்பு செய்யக் கற்றுக் கொண்டால், எதிரி பகைவரே இல்லா தொழிவர். மற்றவர்கள் போதுமென்று  சொல்லுமளவுக்கு அன்பு செய்ய வேண்டுமாம். மனமுதிர்ச்சி பெற்ற மனிதரை உருவாக்குவதே அனைவரையும் அன்பு செய்யும் வாழ்க்கை முறை. அன்பு வாழ்வே பிறரைத் திக்குமுக்காட வைக்கும். இதனையே 
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் 
என்ன பயத்ததோ சால்பு.  - திருக்குறள் 987

தமக்குத் துன்பம் செய்தவர்க்கும், அவர் அக்குற்றத்தை உணர்ந்து திருந்துமாறு நன்மைகளைச் செய்வதுவே சான்றோரின் பண்பு. அதாவது திகட்டும் அளவுக்கு அன்பு செய்தல் வேண்டும்.

 கடவுளின் வல்லமை:

சிலுவையே கிறிஸ்தவம். கிறிஸ்தவமே சிலுவை. இவையிரண்டுமே நாணயத்தின் இரு பக்கங்கள். தியாகம், வெற்றி, வீரம், நம்பிக்கை, விடுதலை, மீட்பு போன்ற அறநெறிச் சிந்தனையினை வழங்குவதே சிலுவை. சிலுவை பற்றிய செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால் மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை  (1 கொரி 1:18).  தவக்காலம். இது நோன்புக் காலம். இறைவனின் கனிவையும், இரக்கத்தையும் உணரும் அருளின் காலம். சிலுவையைப் பற்றி அதிகமாகச் சிந்திக்கும் காலம். ‘தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதனை இழந்து விடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரே அதைக் காத்துக் கொள்வர்’ (மத் 10:38-39). விண்ணகப் பேரின்ப வீட்டிற்கு இட்டுச் செல்லும் ஏணியாகத் திகழ்வதே திருச்சிலுவை.

 கட்டவிழ்த்துப் போக விடுங்கள்:

“ மரியாவோ நல்லப் பங்கைத் தேர்ந்து கொண்டாள்”(லூக் 10:39). இச்செயல் இத்தவக் காலத்தில் நாம் ஆண்டவரோடு செபத்தில் ஈடுபட வேண்டும் என்பதனைக் குறிக்கின்றது. இறைவனும் மனிதனும் சங்கமம் ஆகும் மையமே செபம். ஆழ்ந்த செபமே ஒரு மனிதன் தன் நிலையுணர்ந்து தீமைகளகற்றி அனைவரோடும் அன்புறவு கொண்டு வாழச் செய்யும். தன்னருகே அமர்ந்து தன்னோடு ஒன்றிருந்ததன்  காரணமாகவே ஆண்டவர் இயேசு மரியாவின் சகோதரர் இலாசர் மரித்து நான்கு நாளாகியும் அவரது சகோதர் இலாசர் மரித்து நான்கு நாளாகியும் அவரைக் கல்லறையினின்று உயிரோடு எழுப்புகின்றார்.

மரித்த இலாசர் உயிர் பெற்று விட்டார். ஆனால் அவரின் கால்களும், கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. முகத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது. “கட்டுகளை அவிழ்த்து அவனைப் போக விடுங்கள்”  என்று இயேசு அவர்களிடம் கூறுகின்றார் (யோவா 11:1-44). உயிர் பெற்றெழுந்தாலும் இலாசரைச் சுற்றியிருந்த கட்டுகள் சுதந்திரமாக நடமாட தடையாக இருந்தன.

இதே போன்றுதான் இயேசு தமது இரத்தம் சிந்தி நமக்கு மீட்பினை வழங்கி விட்டார். ஆம் அனைவரும் இயேசுவின் இரத்தத்தால் விலை கொடுத்து மீட்கப்பட்டுள்ளோம். எனவே நமது உடலால் கடவுளுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் (1 கொரி 6:20). நமது உடலின் இச்சைகள் நம்மைத் தனக்கு அடிமையாக்கி வைத்துள்ளன. தீமையின் கவர்ச்சி நன்மையானவற்றை மறைத்து விடுகிறது. அலைக் கழிக்கும் இச்சை மாசற்ற மனத்தைக் கெடுத்து விடுகிறது (சாஞா 4:12). நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? ‘நீ நல்லது செய்யாவிட்டால் பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடக்கி ஆள வேண்டும்’ ( தொநூ 4:7).

பாவக்கட்டுகள் ஒரு மனிதனைச் சுயமாகச் செயல் படுவதிலிருந்து தடுத்து விடுகிறது. பாவத்திற்கு அடிமையாயிருப்பவன் பாவக்கட்டுக்களினால் கட்டுண்டு தனது சுயத்தன்மையினை இழந்து நிற்கின்றான். இப்படிப்பட்ட நிலையில் இருப்போரைப் பார்த்து பாவக் கட்டுகளை அவிழ்த்து விடுங்கள் என்று ஆண்டவர் கூறுகிறார். நமது பாவக் கட்டுகளிலிருந்து விடுதலை பெற்று சுதந்தரமாக வாழ்வதுவே உயிர்ப்பு வாழ்வு.

உயிர்ப்பு வாழ்வின் முன்சுவை

விண்ணுயர்ந்த கல்வாரி மலை. கள்வர் இருவர் நடுவிலே கர்த்தர். ‘என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?’ (மாற் 15:34). இந்த வார்த்தைகள் வேதனையின் உச்சக்கட்டத்தில் இருந்த இயேசுவின் வேண்டுதல். இந்த வேதனை வேளையிலும் ‘தந்தையே! இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை’ (லூக் 23:34). “ஏழுமுறை மட்டுமல்ல, எழுபது முறை  ஏழு முறை மன்னியுங்கள்”  (மத் 18:22) என்று சொல்லிக் கொடுத்ததை தாமே தமது வாழ்வில் செயல்படுத்திக் காட்டுகின்றார். சாதாரணமாக இயேசு மரித்த மூன்றாம் நாள்தான் உயிர்த்தார் என நாம் சொல்வோம். ஆனால் எந்த நொடியில் தம்மைச் சிதைத்துக் கொலை செய்தவர்களை இயேசு மன்னித்தாரோ அந்த வேளையிலேயே உயிர்ப்பின் மகத்துவத்தினை அவர் சுவைத்து விட்டார்.

 நம்முள் நடக்கும் மனப்போராட்டம்:

பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்.
தீராத கோபம் யாருக்கு லாபம்?

 எத்துணை அர்த்தம் பொதிந்த சினிமாப் பாடல்.
குற்றமே செய்யாமல் நல்லதே செய்யும் நேர்மையாளர் எவரும் உலகில் இல்லை (சஉ 7:20).  ஒவ்வொரு வருக்குள்ளும் இருபெரும் முரண்பாடுகள் மிகுந்த போராட்டம். கடவுளின் சட்டம், ஊனியல்பின் சட்டம்.

புறவினத்தாரின் திருத்தூதர் எனப்படும் புனித பவுல் தன்னுள் நடக்கும் நன்மைக்கும், தீமைக்கும் இடையிலான போராட்டத்தினைக் கண்டு கட்டுப்படுத்த முடியாது தவிக்கின்றார். தன் இயலாமையைக் கண்டு மனம் வெதும்பி அந்தோ! இரங்கத்தக்க மனிதன் நான்! சாவுக்குள்ளாகும் இந்த உடலினின்று என்னை விடுவிப்பவர் யார்? (உரோ 7:21-24)  என்று வினா எழுப்புகின்றார். எல்லாரும் நன்மை செய்யத்தான் எண்ணுகின்றோம். ஆனால் பிறரின் தீங்கினுக்கு உள்ளாக்கப்பட்டு பழிக்குப் பழி என்ற உணர்வு தழைத் தோங்குகிறது. நமக்கு எதிராகத் தீங்கு செய்பவருக்காகச் செபிக்க ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. வாழ்வின் சவால்கள் நம்மை மகிழ்ச்சியடையச் செய்கின்றன. தீயவர் என்பதே உலகில் இல்லை. ஏதோ சந்தர்ப்பச் சூழல் ஒருவரைத் தீயவராக்குகிறது, அவ்வளவுதான். எனவே பகை கொள்ளாதிருத்தல். மாபெரும் புண்ணியம். ‘பழிவாங் குதல் ஆரம்பத்தில் இனிக்கும். பின் கசக்கும். எய்தவனைத் திரும்ப வந்து கொல்லும்’ என்கிறார் ஜான் மில்டன்.  

மன்னிக்கும் கலை:

இனிமையாக வாழ்தல் ஒரு கலை. அதில் மன்னித்து வாழ்தல் பேரின்பம் அருளும் வாழ்க்கைக் கலை.  Dr.Wayne W. Dyer  என்னும் அறிஞர் How to forgive someone who has hurt you என்னும் தனது நூலில் கீழ்க்காணும்  

15 பண்புகளை நாம் கடைபிடித்து வாழ அழைக்கின்றார்.

1. கடந்ததைப் புறந்தள்ளி கடமையில் முழுமையாக ஈடுபடுதல்.
2. அமைதியின்க ருவியாய் வாழ்வேன் என்று தன்மானத்தோடு உடன்படிக்கை செய்து கொள்ளல்
3. கோபத்தோடு உறங்கச் செல்லாதிருத்தல்.
4. பிறர்மீது குறை சொல்வதைத் தவிர்த்தல்
5. தீங்கிழைத்தோர் பற்றி தவறாகப் பேசாதிருத்தல்.
6. ஓடுகின்ற நீரைப்போல் வாழக் கற்றுக் கொள்ளல்.
7. எனது செயல்பாட்டுக்கு நானே முழுபொறுப்பு.
8. கோபப்படுதல், எரிச்சல் போன்றவற்றை தவிர்த்தல்.
9. அன்போடு சரியானவற்றை எடுத்துரைத்தல்.
10. விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை.
11.   தன் நிலையுணர்ந்து பிறரின் நற்பண்புகளைப் பாராட்டுதல்.
12. கடந்த காலத்தில் அல்லது நிகழ்காலத்தில் வாழ்தல்.
13. வாழ்வின்க சப்பான அனுபவங்களையும் அரவணைத்துக்         கொள்ளுதல்.
14. தீர்ப்பிடாதிருத்தல்.
15. அன்பைச் செலுத்தி, அன்பைக் கொண்டாடுதல்.

மன்னிப்பின் பின் விளைவுகள்:

‘Campaign for Forgiveness’  ‘மன்னிக்கும் பண்பினைப் பரப்புதல்’ என்னும் இயக்கத்தின் அமைப்பாளர்களின் ஆய்வு வெளிப்படுத் துவது என்ன தெரியுமா? மன்னிப்பதால் தீராத நோயினால் வாடியோர் பலர் நோய் நீங்கி நலம் பெற்றுள்ளனர். மன்னிக்கும் பண்பு கொண்டோரில் 48 விழுக்காடு உடல், உள்ள ஆரோக்கியத்தோடு ஆனந்தமாக வாழ்கின்றனர்.

மன்னிக்கும் மாண்பே உயிர்ப்பு வாழ்வு:

‘நம் பகைவர்களே நமது மிகச் சிறந்த ஆன்மீக நண்பர்கள்’ என்று புத்தர் கூறுகின்றார். ‘மன்னிக்க முடியாத தவறு என்று உலகில் எந்தத் தவறும் இல்லை என்பது அன்னை தெரசாவின் ஆன்மீக முதிர்ச்சி. உங்களுள் எவரும் கடவுளின் அருளை இழந்து விடாமலிருக்கப் பார்த்துக் கொள்ளுங்கள். கசப்பான நச்சுவேர் எதுவும் உங்களுக்குள் முளைத்து, தொல்லை கொடுக்காதப்படியும் பார்த்துக் கொள்ளுங் கள்’ என்கிறார் பவுல் அடிகளார் (எபி 12:15)

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே:

நேற்றைய நாள்களின் உயிர்ப்பு விழா போலல்லாமல் இன்றைய நாள்களின் உயிர்ப்பு விழா மன்னிக்கும் மாண்பினைச் சுவைக்கும் விழாவாக அமையட்டும். ‘ரெளத்திரம் பழகு’ என்று சமூகத் தீமைகள் மீது கோபம் கொண்டு வீறுபெற்றெழுந்து நில் என்று பாடிய பாரதி கீழ்க்கண்டவாறும் பாடியுள்ளார்.

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே
பகைவனுக்கருள்வாய்
புகை நடுவினில் தீயிருப்பதைப் 
பூமியின் கண்டோமே
பகை நடுவினில் அன்புருவான நம் 
பரமன் வாழ்கின்றான் - நன்னெஞ்சே
பரமன் வாழ்கின்றான்.

மன்னிப்பின் மாண்பாளர்களாகி உயிர்ப்பின் பங்காளி களாவோம்.

No comments:

Post a Comment

Ads Inside Post