Pages - Menu

Thursday 2 November 2017

நம்பிக்கை இழந்தால் தோல்விதான்

நம்பிக்கை இழந்தால் தோல்விதான்

குத்துச்சண்டை வீரர் ஒருவர் இருந்தார். அந்த பகுதியில் அவரை வெல்ல யாருமே இல்லை. சில குத்துகளிலேயே எதிரியை வீழ்த்திவிடும் வலிமை அவருக்கு இருந்தது. தோல்வி என்பதையே அறியாமல் வாழ்ந்து வந்தார். இப்போதெல்லாம் அவருடன் போட்டியிட யாருமே முன்வருவதில்லை. அவரின் எதிரிகள் எவ்வளவோ விதங்களில் முயற்சி செய்தும்கூட அவரை வீழ்த்த முடியவில்லை. நல்ல உடற்பயிற்சி, சத்தான உணவு, தேவையான அளவு உறக்கம் என்று தன்னுடைய உடலை நன்றாக பேணி வந்ததால், எதிரிகள் அவரை  வீழ்த்த வேறு ஏதாவது வகையில் திட்டம் வகுக்க ஒன்று கூடினார்கள். பலவிதமான ஆலோசனைகளை அவர்கள் கூடிப் பேசினார்கள்.

ஏதாவது செய்து அவரைக் கொன்று விட்டாலும், அவர் வீரர்களுக்கெல்லாம் முன்மாதிரி என்று பேசப்பட்டு அழியாத புகழை பெற்று விடுவார். எனவே அந்த யோசனை கைவிடப்பட்டது. குடிப்பழக்கம் போன்ற கெட்டப் பழக்கங்களை அவருக்கு அறிமுகப்படுத்தலாம் என்று முயற்சி செய்து அயல்நாட்டு போதைப் பொருள்களை அவருக்கு பரிசளிக்க முயன்றபோது, அவர்களுக்கு முன்பாகவே அவர் அதை உடைத்து நொறுக்கி அவர்களை அவமானப்படுத்தி அனுப்பினார்.

உருப்படியாக எந்த யோசனையும் கிடைக்காத நிலையில் அவர்களுக்குள் ஒரு முடிவெடுத்தார்கள். எதையாவது செய்து அவரை போட்டியில் வீழ்த்த வேண்டும். எனவே அவரை வீழ்த்துபவருக்கு 10 லட்சம் பரிசு கொடுப்பதாக வாக்களித்தார்கள். பெரிய தொகைதான், இருந்தாலும் அவரை வீழ்த்த இதை விட அதிகமாக செலவு செய்யவும் தயாராயிருந்தார்கள். இந்த செய்தி காட்டு தீப்போல் பரவியது. இது புதிதாய் சண்டைப் பயிற்சி செய்து வரும் ஒரு இளைஞனின்  காதிலும் விழுந்தது. 10 லட்சம் பரிசுத்  தொகையாக அறிவிக்கப்பட்டாலும் அந்த வீரரின் வலிமை தெரிந்திருந்ததால் போட்டிக்கு வர யாருமே முன்வரவில்லை. இந்த நிலையில் அந்த புதிய இளைஞன்  தான் போட்டிக்கு வருவதாக முன்வந்தான். பலரும் அவனை பயமுறுத்தி அவரிடம் போக வேண்டாம் என்று அறிவுரை கூறினார்கள். அவனோ தன் முடிவில் உறுதியாக இருந்தான். வீரரும் அவனுடன் சண்டையிட சம்மதித்து விட்டார்.

போட்டியின் நாள் அறிவிக்கப்பட்டது. புதிய இளைஞன் தன் நெருக்கமான நண்பர்களை வரவழைத்தான். அவர்களிடம் தனக்காக உதவி செய்யும்படி சில வி­யங்களைக் கூறினான். அவன் எதற்காக அப்படி சொன்னான் என்று அவர்களுக்குப் புரியவில்லை என்றாலும் நண்பனின் வெற்றிக்காக எதையும் செய்யத் தயாராயிருந்தார்கள். அதனால் நண்பன் சொன்ன படியே செய்தார்கள்.

அதில் ஒருவன் வீரரின் வீட்டுக்குப் பழங்களுடன் போய் அவர் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சொன்னான். அவரும்  சந்தோ­மாக அவற்றை பெற்றுக்கொண்டு நன்றி சொன்னார். வந்தவன் திடீரென்று ‘என்னய்யா ஆச்சு உங்களுக்கு பேசும்போதே இப்படி மூச்சுவாங்குதே. கல்லுமாதிரி இருந்தீங்களே, உடம்பை பார்த்துக்குங்க’ என்று சொல்லிக் கிளம்பினான். ‘எனக்கு மூச்சு வாங்குதா? நான் நல்லதானே பேசுறேன்’. அவருக்கு குழப்பம் வந்துவிட்டது. மறுநாள் அதிகாலையில் அவர் வீதியிலே ஓட்டப் பயிற்சியில்  ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திட்டமிட்டபடி இன்னொரு இளைஞன் அவருக்கு எதிர்பட்டு வணங்கினான். ‘ஐயா போட்டியில் கலந்துக்கப் போறதா கேள்விப்பட்டேன். நான் உங்க தீவிர இரசிகன். இப்பவும் நீங்க தான் ஜெயிக்க போறீங்க அதுல சந்தேகமே இல்ல. ஆனாலும் முன்னால உங்க ஓட்டத்துல இருந்த வேகமும் வலிமையும் இப்ப இல்லையே?’ என்று கேட்டுவிட்டு நகர்ந்தான்.

என்ன எல்லோரும் இப்படி கேக்குறாங்க. இப்போது சிறிதாய் பயம் துளிர்விட்டது. போட்டி துவங்கியது. அவர் வேகமாய் தாக்குதலை ஆரம்பித்தாலும் இனம் புரியாத சோர்வு அவரை மேற்கொண்டது. இளைஞனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பலவீனமாய் சரிந்தார்.  எல்லோரும் ஓடி வந்து இளைஞனின் சாதனையையும் வீரத்தையும் பாராட்டினார்கள். அவனோ நன்றி புன்னகையோடு தன் நண்பர்களின் முகத்தை ஏறிட்டான். பலருடைய வாழ்விலே வந்துவிட்ட வியாதியை விட, வந்துவிடுமோ என்று பயப்படுகிற வியாதியே பலரை விழத் தாட்டி விடுகிறது. பலப்படுவோம் எண்ணங்களால். (வலையில் பிடித்தது)

No comments:

Post a Comment

Ads Inside Post