Pages - Menu

Friday 3 November 2017

அரசியல் அரங்கில் நம் தலைமை?

அரசியல் அரங்கில் நம் தலைமை?

 பேராசிரியர், முனைவர் எஸ்.பி. பெஞ்சமின் இளங்கோ M.A.; B.L.; M.Phil.; Ph. D
அறியாமை இருளில் அகப்பட்டு, ஆதிக்க சக்திகளால் சூறையாடப்பட்டு, உண்மை எதுவென்று தெரியாமல் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று ஆமையாய் - ஊமைகளாய், அடிமைகளாய்ப் பெரும்பாலான சாமானிய மக்கள்  இன்று பொது வாழ்வில் படும் இன்னல்கள் ஏராளம் ஏராளம்.

சுறாக்களும், திமிங்கிலங்களும் சதிராடும் ஆழ்கடலில், சுற்றியடிக்கும் சூறாவளியில் சிக்குண்டு, கரை சேரமாட்டோமா என்று ஏக்கப் பார்வையுடன் தவிக்கும் கப்பல் மாலுமிகள் போல் மக்கள் வறுமைக் கடலிலிருந்து மீண்டு, வளமை என்ற கரையைச் சேரத் துடிக்கின்றனர். அக்கரையை அனைவரும் அடைய இன்று நமக்குத் தேவை. ஒரு தன்னலமற்ற மனிதநேயத் தலைமை!

எத்தகைய இருள் சூழ்ந்தாலும், ஒரு மெழுகுவர்த்தியின் ஒளியை எவ்வாறு  அந்தக் காரிருள் மறைக்க முடியாதோ அதுபோலத்தான் சுயநலமற்ற, ஆற்றல்மிகு, அறிவுசார்ந்த மனிதநேயத் தலைமையை அரசியல் கபடமோ, கயமையோ, வீழ்த்த முடியாது. அண்ணல் மகாத்மா காந்தி, கர்மவீரர் காமராசர், மூதறிஞர் ராஜாஜி, பேரறிஞர் அண்ணா, பகுத்தறிவு பகலவன், தந்தை பெரியார், எளிமையின் ஏந்தல் கக்கன், கண்ணியமிக்க காயிதே மில்லத், ஆசிய ஜோதி ஜவஹர்லால் நேரு, ஆசிரியர் உலகத்தின் ஆதவன், டாக்டர்.ராதாகிருஷ்ணன், வீரத்தின் விளைநிலம் சர்தார் வல்லபாய் படேல், இறையன்பின் ‡ பிறரன்பின் கதிரொளியயன ஆன்மீகப் பட்டொளி வீசிய அன்னை தெரசா, ஆன்மீகத்தின் அளப்பரும் ஆற்றலை இளைஞர்களுக்கு உணர்த்திய வீரத்துறவி விவேகானந்தர், எத்தனை முறை தோற்றாலும் இறுதி வெற்றி எனதே என்று வென்று அமெரிக்கா ஜனாதிபதி இருக்கையில் அமர்ந்த ஆபிரகாம் லிங்கன், தென்ஆப்பிரிக்க காந்தி நெல்சன் மற்றும் தன் இன்னுயிர் ஈந்து மண்ணுயிர் வாழ சுதந்திரப் போராட்ட வேள்வியில் தேக்குமரத் தேகங்களைத் தீக்கிரையாக்கிக் கொண்ட இலட்சக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களைப்போல, இன்று நாம் 21- ஆம் நூற்றாண்டில் உள்ளனரா அத்தகைய ஆளுமை? ஏனிந்த தலைமைப் பஞ்சம்? விடை தெரியாமல் விழிக்கின்றோம்!
இன்று வாய்ச்சொல் வீரர்களாக வெற்றுப்பேச்சில் காலத்தை வீணடிக்கும் மக்கள் ஏராளம். நியாயவிலைக் கடை அரிசி வாங்க மட்டுமே என்னிடம் பணம் உள்ளது, என்று சொல்லிய தமிழக முதல் பெருந்தலைவர் காமராசரிடம் சமையல்காரர் வைரவன், ‘ஐயா! அரிசி வாடை அடிக்கிறது’, அதனால் சொன்னேன் என்று மறுமொழி கூற, கர்மவீரர் காமராசர் இரண்டு சொட்டு நெய் விடு, அந்த வாசனையில் நான் சாப்பிட்டுக் கொள்கிறேன், என்று பொதுப்பணத்தைத் தீயாகக் கருதித் தொட மறுத்த காமராசர் எங்கே? தன் சொந்த அன்னை தண்ணீர்  எடுக்கத் துன்பப்படும்போது, முதல்வர் காமராசருக்குத் தெரியாமல் அருகிலேயே குடிநீர் குழாய் அமைக்கப்பட்டபோது, 

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க  
சான்றோர் பழிக்கும் வினை

 என்ற வள்ளுவர் வழிநின்று, அந்தக் குடிநீர்க் குழாயை உடனடியாக அப்புறப்படுத்த சொன்ன, உண்மைக்கும், நேர்மைக்கும், உழைப்புக்கும் இலக்கணமான காலா காந்தி ( கறுப்பு காந்தி ) என்று வடநாட்டு மக்களால் அன்பாக அழைக்கப்பட்ட காமராசர் போன்ற ஆளுமை எங்கே? 21 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளை நிறுவி, இலவச மதிய உணவு திட்டத்தை  அமல்படுத்தி, இலவசக் கல்வியை 11‡ஆம் வகுப்புவரை விரிவுப்படுத்தி, அணைகள் பல கட்டி, விவசாயப் புரட்சியை ஏற்படுத்தி  BHEL, NLC என்று தமிழ் நாடெங்கும் தொழிற் பேட்டைகளை ஏற்படுத்தி, அதன் மூலம் தொழிற்புரட்சியை ஏற்படுத்திய, பச்சைத் தமிழர் என்று தந்தை பெரியாரால் பாசத்தோடு அழைக்கப்பட்ட பெருந்தலைவர் காமராசரின்  ஆளுமை இன்று வெறும் கனவா? இந்திய அரசியலில் ஒரு அபாரப் புனிதனாக வாழ்ந்து காட்டிய  காமராசர் கிறிஸ்தவப் பெருமக்களாகிய நமக்கு அரசியல் அரங்கில் ஒரு மாபெரும் எடுத்துக்காட்டு!

இன்றைய அரசியல் அவலங்களைக் கண்டு சமுதாயத்தில் இன்று அரசியல் என்றாலே அருவருப்பான ஒன்று என்று அனைத்துத் தரப்பினரும் வெறுத்து ஒதுக்ககூடிய சூழ்நிலையில், கிறிஸ்தவர்களின் அரசியல் தலைமை என்பது பேச்சளவில், ஏட்டளவில் மட்டுமே உள்ளது. இன்று விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில், அரசியல் களத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அத்திபூத்தாற் போல கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் ஓரிருவர் இருப்பது மிகவும் வியப்பளிப்பதாக உள்ளது. கத்தோலிக்கத் திருச்சபைக் கட்டமைப்பில் AICUF  கத்தோலிக்க சங்கம், வாழ்வுரிமை இயக்கம் போன்று அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இயக்கங்கள் நம் மறைமாவட்டந்தோறும் இயங்கினாலும், கத்தோலிக்கச் சமுதாயத்தில், இன்றும் அரசியல் அரங்கில் குறிப்பிடத்தக்க கத்தோலிக்க  ஆளுமைகள் இல்லாமல் இருப்பது வேதனைக்குரியது. உண்மையிலேயே இறை ஆட்சி மலர, எல்லாரும் எல்லாமும் பெற, மதநல்லிணக்கத்தோடு, சமதர்ம சமுதாயம் சமைக்கப்பெற, கிறிஸ்துவின் மதிப்பீடுகள் இறையன்போடும், பிறரன்போடும் பின்னிப்பிணைந்து மற்ற சமுதாயத்தினருக்கும், மதத்தினருக்கும் வாழ்வியல் நெறிகளாக எடுத்துக்காட்டப்பட, கத்தோலிக்க உலகிலிருந்து தலைவர்கள் இன்றைய அரசியல் அரங்கில் இல்லாதது, பெரும் குறையே. ஏன் இக்குறை? அரசியல் அரங்கிலும் உலகில் உப்பாக, புளிக்காரமாகச் செயல்பட வேண்டியது நமது அடிப்படைக் கடமையல்லவா?

சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை வென்றெடுக்கவும், தக்கவைத்துக்கொள்ளவும், தலித் கிறிஸ்தவர்கள் SC/ST உரிமைகளைப் பெறவேண்டுமெனவும், திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி  முன்னாள் தமிழ்த்துறைத் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமாகிய முனைவர் ச.சாமிமுத்து அவர்களின் சீரிய ஒத்துழைப்பின் பேரில், சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் வழக்கறிஞர் திரு. பிரான்சிஸ், பி. இராயன், மதுரை பேராசிரியர் கிளமெண்ட், பேராசிரியர் இறையரசன்  போன்ற ஆன்றோர்களால்,கிறிஸ்தவ ஜனநாயக முன்னனி 1973 இல் தொடங்கப்பட்டு தி.மு.க., அ.தி.மு.க கட்சிகளால் ஆதரவு நல்கப்பட்டு, வேகமாக வளர்ந்த சூழ்நிலையில், முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் ஆசியோடு கன்னியாகுமரி விளவங்கோடு தொகுதியில் கி.ஜ.மு. சார்பில் ஒரு கத்தோலிக்க வேட்பாளரை, கிறிஸ்தவ ஜனநாயக முன்னனி நிறுத்தியது ஒரு வரலாற்றுச் சாதனை. அதன் தொடர் முயற்சியாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முயற்சியால் M.G.R. அவர்களால் அனைத்துக் கிறிஸ்தவர்களும் B.C.. உரிமை பெற்றது நம் அரசியல் வரலாற்றில் மற்றொரு மைல்கல்லாகும்.

ஆனால், இன்று கி.ஜ.மு. என்ற அக்கட்சி திரு. பிரான்சிஸ், பி. இராயன் மறைவுக்குப் பிறகு பல்வேறு காரணங்களால், சாதியப் பாகுபட்டால் திருச்சபையின் ஆதரவற்ற சூழ்நிலையில் சிதறுண்டு போனதும், நேரடி அரசியல் நம் தலைமை எங்கே என்னும் கேள்வியை மீண்டும் மீண்டும் எழுப்புகிறது!

ஆனால், மறுக்கமுடியாத உண்மை என்னவென்றால், இன்றைய இந்திய அரசியல் அரங்கில் பல குறிப்பிடத்தக்க அரசியல் ஆளுமைகளை உருவாக்கியவை நம் கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்களே! எடுத்துக்காட்டாக கல்கத்தா புனித சவேரியார் கல்லூரியில் பயின்றவர்கள் மேற்கு வங்கத்தின் புகழ்மிக்க நீண்டகால முதலமைச்சர் ஜோதிபாசு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யயச்சுரி, பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் கல்லூரியில் பயின்ற தமிழக முன்னாள் அமைச்சர் நாஞ்சில் மனோகரன், திரு வை.கோ, செயினட் ஜோசப் கல்லுரி மாணவர் தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. பொய்யாமொழி, சட்டமன்றப் பேரவைத் தலைவர் திரு.தமிழ்க்குடிமகன், இலெயோலா, கல்லூரியில் பயின்ற ப. சிதம்பரம், சர்ச் பார்க் கான்வென்டில் படித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஏற்காடு மான்போர்டில் படித்த மத்திய அமைச்சர் இரா.அன்புமணி, தூய வளனார் கல்லூரி உருவாக்கிய முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகிய அனைவரையும் உருவாக்கியது கத்தோலிக்க கல்வி நிறுவனங்களே.

கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்களில் பயின்ற பல்லாயிரக்கணக்கான IAS, IPS அதிகாரிகளும், தலைசிறந்த மருத்துவர்களும், பொறியியல் வல்லுநர்களும், தொழிற்துறை நண்பர்களும், பிரபல திரைப்படக் கலைஞர்களும், அறிவியல் துறை நிபுணர்களும், இன்று உலகமெங்கும் அரும்பணி செய்துகொண்டு உள்ளார்கள் என்பது மறுக்கப்பட முடியாத உண்மைகளாகும்.(தொடரும்...)

No comments:

Post a Comment

Ads Inside Post