Pages - Menu

Friday 3 November 2017

சைக்கிள் சென்ற பாதை (2)

சைக்கிள் சென்ற பாதை  (2)
ச.இ.அ. 

டோல்கேட்டிலிருந்து புள்ளம்பாடிக்கு மாலை 5 மணியைப் போல் சென்று சேர்ந்தேன். இரவு  அங்குத் தங்கிவிட்டு காலையில் சைக்கிள் பயணத்தைத் தொடர்ந்தேன். கீழப்பழூர், பொய்யூர், கைக்காட்டி வழியாக கீழமிக்கேல்பட்டி செல்வதாகத் திட்டம். கீழமிக்கேல்பட்டியில் தந்தை  P. ஜோசப் பங்குத்தந்தையாக இருந்தார். கீழமிக்கேல்பட்டிக்கு செல்லும் வழியில் சுத்தமல்லி என்ற ஊர் உள்ளது. அங்கு சில கிறிஸ்தவக் குடும்பங்கள் உள்ளன. அந்த ஊருக்கும் முன்னாளில் நான் பங்கு தந்தையாயிருந்த கூவத்தூருக்கும் கொள்வன கொடுப்பன உண்டு. நான் கூவத்தூரில் இருந்தபோது, எனக்கு எதிரியைப் போல செயல்பட்ட ஒருவரின் மனைவி சுத்தமல்லியை சேர்ந்தவர்.

அன்று அவர் சுத்தமல்லிக்கு வந்திருக்கிறார். நான் சைக்கிளில் மாலை 3 மணியைப் போல அவ்வூர் வழியே சென்றேன்.  அந்த நேரத்தில் அவர் என் எதிரில் தென்பட்டார்.  என்னைப் பார்த்ததும் பழைய பகைமையையயல்லாம் மறந்து, என்னை வரவேற்று, தன் மாமனார் வீட்டிற்கு அழைத்துச் சென்று, காப்பியயல்லாம் கொடுத்து கை நிறைய கடலைக் கொடுத்தார்.

நான்  கூவத்தூரில் இருந்த போது, அவரு க்கும் எனக்கும் இருந்த மோதல் இதுதான். அவர் குடிகாரர். சுமார் 50 ஆடுகள் வைத்திருந்தார். கோவில் வயலில் ஆடுகளை கொண்டு வந்து விட்டு மேய விடுவார். யார் சொன்னாலும் கேட்கமாட்டார். குடித்து விட்டு வந்து தூரத்தில் நின்று ஏதாவது உளறி விட்டுப் போவார். ஆனால் புதுமையயன்று சொல்வதா, அல்லது எப்படி என்று சொல்வது என்று தெரியவில்லை. 50 ஆடுகளும் ஒன்றன்பின் ஒன்றாக இறந்து விட்டன. இப்போது அவர் இல்லை. பிள்ளைகள் வெளிநாடுகள் சென்று ஒன்றாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன்.

சுத்தமல்லியிலிருந்து விடைபெற்றுக்கொண்டு கீழமிக்கேல்பட்டி வந்தேன். தந்தை  P. ஜோசப் விருந்தோம்பலில் பெயர் போனவர். அதே நேரத்தில் பங்குப் பணிகளைத் தீரமுடன் செய்பவர். நான் கூவத்தூரில் பங்குத்தந்தையாக இருந்த போதும், கீழமிக்கேல்பட்டியில்தான் இருந்தார். எனக்கு மிகவும் உதவியாயிருந்தவர். அவர் கீழமிக்கேல்பட்டி கிளைகிராமங்கள், பட்டடி என்று அழைக்கப்படும் மேலமிக்கேல்பட்டி, இடங்கண்ணி, குறிச்சி ஆகிய இடங்களுக்கு பணிக்காக அழைத்துச் சென்றார். மூன்று நாள்கள் அங்கு தங்கிவிட்டு சைக்கிளிலேயே குடந்தை வந்தேன். அப்போது மதனத்தூர் கொள்ளிடப் பாலம் இல்லை. எனவே ஆற்றில் சைக்கிளைத் தள்ளி கொண்டு குடந்தை வந்து சேர்ந்தேன்.
குடந்தையிலிருந்து என் தம்பி சவரியார் சைக்கிளை குலமாணிக்கம் எடுத்து வந்தார். பிறகு திருச்சிக்கும் சைக்கிளை ஓட்டி வந்தார். திருச்சியிலிருந்து கோவைக்கு சைக்கிளை  திருவள்ளுவர் பேருந்தில் எடுத்துச் செல்ல நின்று கொண்டிருந்தேன். கூலியாள்கள் அகோரமாக கூலி  கேட்டார்கள். பஸ்ஸிற்கு கட்டணம் அப்போது 35 ரூபாய்தான். சைக்கிளை பேருந்தின்மேல் ஏற்ற ரூ100/‡ கேட்டார்கள். எனவே அவர்களுடன் பேரம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் போலீசை போல் வந்தார். அவர் எங்களை விசாரித்தார். நான் விபரத்தை கூறினேன். சைக்கிளைப் பேருந்தில்  ஏற்ற 100 ரூபாய் கேட்கிறார் என்றேன். அப்போது, அந்த கூலியாட்களைப் பார்த்து, ‘நான் யார் என்று தெரிகிறதா?’ என்றார். ‘தெரியலை சார்’ என்றார்கள். ‘தெரியலையா? நான்தான் கோட்டை ஸ்டே­ன் சப்இன்ஸ்பெக்டர்.  பாதரிடம் ஏன் வீணாக ஏமாற்றப் பார்க்கிறீர்கள். பத்து ரூபாய் கொடுங்கள் பாதர்.  ஏற்றுங்கள் ஐயா’ என்றார். அவர்களும் சைக்கிளை பேருந்தில் தூக்கிப்போட்டார்கள். கூலியாளர்கள் சென்றதும். ‘பாதர், நான் கோட்டை ஸ்டே­ன் சப்இன்ஸ்பெக்டர் அல்ல. ஒரு கடையில் வாட்ச்மேன். என் உடல் கட்டைப் பார்த்து ஏமாந்து போய் விட்டார்கள். ஏமாற்றுபவர்களை  இப்படித்தான் ஏமாற்ற வேண்டும். பத்திரமாக போய் வாருங்கள்’ என வழி அனுப்பி வைத்தார்.

கோவை வந்த பிறகு சைக்கிளை பேருந்திலிருந்து இறக்கி, மைலேறி பாளையத்திற்கு ஓட்டிச் சென்றேன். இதுதான் எனது நீண்ட சைக்கிள் பயணம். சாதனை செய்யும் உளப்பாங்கை இது போன்ற கடினமுயற்சிகள் உருவாக்கும். எனவேதான் பள்ளிகளில் மலையேற்றம்,  போன்ற கடினபோட்டிகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவார்கள். (தொடரும்

No comments:

Post a Comment

Ads Inside Post