Pages - Menu

Thursday 2 November 2017

அழிவினின்று அழியாமை நோக்கி...

அழிவினின்று அழியாமை நோக்கி...
.
- அருள்பணி. அ. பிரான்சிஸ், பாபநாசம்
என் ஆன்மாவும் சரீரமும்
என் ஆண்டவர்க்கே சொந்தம்
இனி வாழ்வது நானல்ல
என்னில் இயேசு வாழ்கின்றார்.
இயேசு தேவா அர்ப்பணித்தேன்
என்னையே நான் அர்ப்பணித்தேன்
ஏற்றுக் கொள்ளும்; ஏந்திக் கொள்ளும்
என் இதயம் வாசம் செய்யும்.

இறை அனுபவ உணர்வைத் தூண்டும் பல பாடல்களைக் கொண்டது ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள். இந்தப் பாடல் தொகுப்பில் உள்ள மேற்காணும் பாடல் புற்றுநோயினால் அவதியுற்று மரணப் படுக்கையில் கிடத்தப்பட்டு வாழ்வின் இறுதி நிமிடங்களைக் கழித்துக் கொண்டிருந்த ஒருவருக்காக பாடப்பட்டது. அவரின் ஆன்மா இவரின் உடலை விட்டகன்று இறைவனோடு சங்கமமானதை அங்கிருந் தோர்அனைவரும் உணர்ந்தனர்.

 இயற்கையின் அதிசயம்:

மண்ணுக்குள் புதைக்கப்படுபவை அனைத்தும் அழிந்து மக்கிப்போகின்றன. ஆனால் மண்ணில் விதைக்கப்படும் விதை மட்டும் உயிர் பெற்று முளை விட்டு எழும்புகின்றது. அனைத்தையும் மக்கச் செய்யும் மண் விதையை மட்டும் முளைப்பிக்கச் செய்வது உயிர்ப்பின் அதிசயம் தானே! இயேசுவும் மரித்து மண்ணில் விதைக்கப்பட்டார். ஆனால் மண்ணைப் பிளந்துக் கொண்டு மேல் எழும்பி வந்தார். இதுவும் இயற்கையின் அதிசயம் தானே!

 பிறப்பு, இறப்பு:

மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு மனிதரும் ஒருநாள் இறப்பினைச் சந்தித்தே ஆக வேண்டும்.  உலகில் வாழ ஆரம்பிக்கின்ற ஒரு மனிதர் வளரும் ஒவ்வொரு நாளும்  மரணத்தை நோக்கிய பயணம் தானே! ஆக நலம் பிறக்கின்ற போதே நாம் மரணிக்கத் தயாராக இருக்க வேண்டும். வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒரு மாபெரும் தொடர் நிகழ்வின் குறிப்பிட்ட புள்ளிகள் தான் பிறப்பும் மரணமும்.
கடலில் கலக்கின்ற நதி அத்தோடு தனது  வாழ்வை இழந்து விட்டது எனச் சொல்ல முடியுமா? இல்லையே. அது தனது வடிவத்தை மாற்றிக்கொண்டு  இன்னொரு வடிவமாகக் காட்சியளிக்கிறது. கடலில் கலந்த  நதி கண்ணுக்குத் தெரியாமல்  கடலில் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறது. அதுபோலவே தொடக்கமும் முடிவும் இல்லா இந்த அண்டப்பெருவெளியில் மரணத்தின் மூலம் ஒரு பிண்டம் தன்னை இணைத்துக் கொள்கிறது.

 உடல், உள்ளம், ஆன்மா:

மனிதனுக்கு வடிவம் தருவது உடல். இந்த உடலை இயக்குவது உயிர். உள்ளம் அல்லது மனம்  இயங்கிடக் காரணமாயிருப்பது மூளை. மனித உடலையும், உள்ளத்தையும் இயக்குவது ஆன்மா. உடல், உள்ளம், ஆன்மா ஆகிய மூன்றும்  இணைந்து முழு மனிதனை உருவாக்குகின்றன. இது இறைவனின் மாபெரும் கொடை. ஆன்மா அழிவில்லாதது இதுவே இறைவனையும், மனிதனையும் இணைப்பது. இறைசெயலாய் திகழ்வது ஆன்மாவே. இதுவே இறைசாயலாய் மனிதனை மாற்றுகிறது.

 ஒளி தேடும் வாழ்வு:

இறைவா! இருளினின்று ஒளியினுக்கும், சாவினின்று வாழ்வினுக்கும், அழிவினின்று அழியாமைக்கும் என்னை அழைத்துச் செல்லும் என்று  உபநிடதங்கள் இறைவனை நோக்கிச் செபிக்க அழைக்கின்றது. தீபாவளி விழாவின் நோக்கமே இருளகன்று ஒளி நிரம்பிட வேண்டும் என்பதுவே. இருளில் ஒளிரும் தீபமாக இயேசு திகழ்கின்றார். உலகின் ஒளியாம் இயேசுவில் ஒன்றித்திருப்பதே ஒளி தேடுவோரின் இயல்பு. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள்  ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் (யோவா 3:21).

பெருக்க  நுகர்வினை பேரொளியாய் ஏங்கும்
அருக்கன் என நிற்கும் அருள். - பன்னிரு திருமுறை.

 நவம்பர் 1, 2 விழாக்கள்:

நவம்பர் 1  அனைத்துப் புனிதர்களின் விழா. அடுத்த நாள் உத்தரிப்பு தலத்தில்  உள்ளோரின் நினைவு நாள். மனிதர்களாய் பிறந்து  இம்மண்ணகத்தில் வாழும் நாட்களில் புனித வாழ்வு வாழ முயற்சிகளை  மேற்கொண்டு அதில் வெற்றி பெற்றவர்களையே புனிதர்கள், மனிதகுல மாணிக்கங்கள் என்கிறோம். இவர்கள் தங்களின் புனித வாழ்வினால் இறை பேரொளியில் நித்தியத்திற்கும் வாழும் பேறுபெற்றவர்கள்.
நவம்பர் 2 நீத்தார் நினைவு நாள் அல்லது உத்தரிப்புத் தலத்தில் உள்ளோரின் நிலை மாறிட செபங்கள், தான தர்மங்கள் புரிந்திடத் தூண்டும் நாள். புனித வாழ்வு வாழ முயற்சித்தும்  முழுமையாக வெற்றியடையாது மாசடைந்த  ஆன்மாக்களோடு மரித்தவர்கள் இவர்கள் தங்களின் பாவங்களுக்குரிய பரிகாரத்தினை மேற்கொண்டு வருகின்றனர். தங்கத்தை உலையிலிட்டு புடமிடுவது போல இறைவன் இவர்களைப் புடமிடுகின்றார். இவர்கள் நமது செப உதவியினை எதிர்பார்க்கின்றார்கள்.

 சாகா வாழ்வு:

அருட்பிரகாச  வள்ளலாரின் கூற்றுப்படி ஞானசரியை, ஞானகிரியை, ஞானயோகம், ஞானத்தில் ஞானம் போன்றவையே சாகாக் கல்வி எனப்படுகின்றது. எந்த வகையிலும் பொருள் சேர்ப்பது சாகும் கல்வி. அறிவுக் கல்வியைக் கொண்டு இறைவன் அருளும் அருளைப் பெறுவது  சாகாக் கல்வி. இந்தக் கல்வியைக் கற்று வாழ்வதே மனித வாழ்வின் இலட்சியம். ஆணவம், மாயை, பெருமாயை, கன்மம் போன்ற நான்கு மலங்களையும் நீக்கி என்றும் அழியாத அருளைப் பெற்று ஆன்ம தேகத்துடன்  (ஒளி தேகம்) வாழ்வதே சாகா வாழ்வு.

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப்படும்.    - குறள் 349.

நான் என்றும் தான் என்றும் நாடாத நிலையில் ஞான வடிவாய் விளங்கும் வான  நடுநிலையே, ஊன் என்றும் உயிர்  என்றும் குறியாமே முழுவதும் ஒரு வடிவாம் திருவடிவம் உவந்தளித்த பதியே. 
- வள்ளலார்.

சாகா சக்தி:

உயிர்ச் சக்தியினை உடல் இழந்தாலும் ஆன்மா அழிவில்லாதது. நிலையாய் வாழ்வது. இதனுக்கு அழிவென்பதே இல்லை. இறைக் குரலாக ஒலிப்பதுவே ஆன்மாவின் ஆற்றல். ஆன்மா சொல்வதைக் கேட்காது மனம் தன்னிச்சையாகச் செயல்படுவதால் ஏற்படும் பாவங்கள் மற்றும் தீவினைகள் ஆன்மாவில் அழுக்காகப் படிந்து வருகின்றன. இந்த அழுக்கினை நீக்கி இம்மண்ணக வாழ்வில் தூய வாழ்வு வாழ்ந்து  சாகும் போது ஆன்மா சாகா சக்தி பெற்று நித்தியத்திற்கும் வாழ்கிறது.

மரணம் மறுவாழ்வுக்கான நுழைவாயில்:

செயல்படா நிலையினை உடல் அடையும்போது அது மரணிக்கின்றது. மரணத்தின் மூலமே நாம் மறுவாழ்வினுள் நுழைய முடியும். தூக்கத்தின் தொடர்ச்சியே மரணம். மரணத்தின் ருசி அறியாதவர்களுக்கு உறக்கத்தைப் பற்றித் தெரியாது. துயில்வது விடுதலைக்கான பயணம். மரணம் என்பது நீளா துயில் சாவின் உறக்கம் (திபா13:4).
இறப்பு நேரினும் சரித்திர விதைகளாய் புதைக்கப்படுவோம்.
‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்’ என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். மரணம் இவ்வுலக வாழ்வுக்கான முடிவாயினும் மறுவுலக வாழ்வுக்கான நுழைவாயிலாகும்.

அழிவுக்குரியது அழியாததாய்..

அத்தமும்  வாழ்வும் அகத்து மட்டே
விழி அம்பொழுக மெத்திய மாதரும் வீதிமட்டே
விம்மி விம்மியழும் கைத்தலைமேல் வைத்தழும் மைந்தரும் சுடுகாடு மட்டே
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமே.                                             -பட்டினத்தார்.

சாவு முற்றிலும் ஒழிந்தது! வெற்றி கிடைத்தது.
சாவே உன் வெற்றி எங்கே?
சாவே உன் கொடுக்கு எங்கே? (1 கொரி 15:55)
இறந்தோர் உயிர்தெழும்போது அழிவுக் குரியதாய் விதைக்கப்படுவது அழியாததாய் உயிர்பெற்று எழுகிறது. மதிப்பற்றத்தாய் விதைக்கப்படுவது மாண்புக்குரியதாய் உயிர் பெற்று எழுகிறது. வலுவற்றதாய் விதைக்கப்படுவது வல்லமையுள்ளதாய் உயிர் பெற்று எழுகிறது.   மனித இயல்பு கொண்ட உடலாய் விதைக்கப்படுவது ஆவிக்குரிய உடலாய் உயிர் பெற்று எழுகிறது.  1 கொரி 15: 40-43). ஆகவே நாம் நமது மரணத்தின் மூலம் அழியா வாழ்வில் அடியயடுத்து வைக்கின்றோம்.

இறுதியாக.....

இவ்வுலகம் இனியது. மனிதர் மிகவும் இனியர். 
ஆண் நன்று. பெண் இனிது. முதுமை நன்று. உயிர் நன்று.
சாதல் இனிது.   -பாரதியார்.


No comments:

Post a Comment

Ads Inside Post