Pages - Menu

Friday 26 February 2016

திருப்பலியும், அருள்பணியாளர்களும் - அருள்பணி. எஸ். அருள்சாமி, பெத்தானி இல்லம், கும்பகோணம்.

திருப்பலியும், அருள்பணியாளர்களும்
- அருள்பணி. எஸ். அருள்சாமி, 
பெத்தானி இல்லம், கும்பகோணம்.


கிறிஸ்து திருப்பலியில் தம்மைப் பலியாக ஒப்புக் கொடுத்து கடவுளை வழிபடுகிறார் என்று முந்திய சிந்தனையில் குறிப்பிட்டோம். அப்படியானால் திருப்பலியைக் கட்புலனாக பீடத்தில் ஒப்புக்கொடுக்கும் அருள்பணியாளர் என்ன செய்கிறார்? அவர் பலி ஒப்புக்கொடுக்கிறாரா? யாரை, யாருக்கு, பலியாக ஒப்புக்கொடுக்கிறார்? யாரை வழிபடுகிறார்? இது போன்ற கேள்விகள் எழுவது இயல்பானதாகும்.

திருப்பலி மூன்று அடிப்படை அம்சங்களைக் கொண்டுள்ளது. ஒன்று, அது கிறிஸ்துவின் பலி, மற்றொன்று அது கிறிஸ்துவின் ஒரே குருத்துவத்தின் செயலாக்கம், இறுதியாக அது திருப்பலியைக் கொண்டாடும் திருக்குழுமத்தின் செயல். இத்திருக்குழுமத்தில் அருள்பணியாளர் முக்கிய இடம் வகிக்கிறார்.

அருள்பணியாளர் பணி :

கிறிஸ்து சிலுவையில் தம்மைப் பலியாக ஒப்புக் கொடுத்தார். இது மட்டுமே இறைவனுக்கு ஏற்புடையதாகும். “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” (மத் 3 : 17). சிலுவையில் கிறிஸ்து நேரிடையாக தம்மை தந்தைக்குப் பலியாக ஒப்புக்கொடுத்தார். அதே பலியை அருள் அடையாளங்கள் வழியாக அருள்பணியாளர் கிறிஸ்துவின் பெயரால் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கிறார். இவருடைய செயல் துணையாமையான செயல் (Ministerial function) இதன் வழியாக கிறிஸ்துவின் சிலுவைப்பலி புதிய ஏற்பாட்டின் ஒரே பலியாகச் செயலாக்கம் பெறுகிறது.

மேலும் அருள்பணியாளருடைய பணி, மக்கள் கொண்டுவரும் காணிக்கைகளை ஏற்று கடவுளுக்கு ஒப்புக் கொடுப்பதாகும். இவர் “நற்கருணை வழிபாட்டில், அதாவது திருப்பந்தியில் மிகச் சிறந்த முறையில் தமது திருப்பணியை ஆற்றுகின்றார். இவ்வழிபாட்டில் கிறிஸ்துவுக்குப் பதிலாகச் செயலாற்றி, அவரது மறை பொருளைப் பறைசாற்றி, நம்பிக்கை கொண்டோர் ஒப்புக் கொடுப்பவற்றை அவர்களின் தலைவரது பலியோடு இணைக்கின்றார். மாசற்ற பலி பொருளாக ஒரே முறை தம்மைத்தாமே தந்தைக்கு ஒப்புக் கொடுத்த (காண் எபி 9 : 11 ‡ 28) கிறிஸ்துவின் பலியாகிய புதிய ஏற்பாட்டின் ஒரே பலியை, ஆண்டவர் மீண்டும் வரும்வரை (காண் 1 கொரி 11 : 26) திருப்பலியில் புதுப்பித்துச் செயல்படுத்துகின்றார்”. (திருச்சபை 28).

வசீகரத்துக்குப் பின் பீடத்தில் அப்ப ‡ இரச அடையாளங்கள் கிறிஸ்துவின் உடலாகவும், இரத்தமாகவும் மாறி இருப்பதால் அருள்பணியாளர் கிறிஸ்துவையே கடவுளுக்கு ஒப்புக் கொடுக்கலாம். இதன் காரணமாக, அருள்பணியாளர் தொடக்கம் முதல் இறுதி வரை பிரசன்னமாக இருந்து செயல்பட வேண்டும் என்பது தெளிவு. அவருடைய பங்கு ஆக்கப் பூர்வமானதாகவும், ஈடுபாடுடையதாகவும் இருக்க வேண்டும். எனவே திருப்பலியை நிறைவேற்றும் அருள்பணியாளர் அதை நிறுத்திவிட்டு போட்டோ எடுப்பதும், அல்லது ஒலிபெருக்கியைச் சரிசெய்ய செல்வதும் தவிர்க்கப்பட வேண்டும். அவருடைய கவனமெல்லாம் தாம் ஆற்றும் திருச்செயலின் மேல் இருக்க வேண்டும்.

கூட்டுத்திருப்பலியும், அருள்பணியாளர்களும் :

குருத்துவம், திருப்பலி, இறைமக்கள் அனைவரின் ஒருமைப்பாட்டைக் கூட்டுத் திருப்பலிச் சடங்குமுறை வெளிப்படுத்துகின்றது. பல அருள்பணியாளர்கள் ஒருங்கிணைந்து ஒரே திருப்பலியை, அடையாளங்கள் வழியாக ஒரே நேரத்தில் கொண்டாடுவது கூட்டுத் திருப்பலி எனப்படுகிறது. இது, பல அருள்பணியாளர்கள் ஒன்று கூடி ஒரே சமயத்தில் தனித்தனியாகத் திருப்பலியை ஒப்புக் கொடுப்பதிலிருந்து  (Co - Celebration) வேறுபட்டது. கூட்டுத் திருப்பலியில் ஓர் அருள்பணியாளர் தலைமை ஏற்றுத் திருப்பலியை ஒப்புக் கொடுத்தாலும், எல்லா அருள்பணியாளர்களும் அப்பலியை ஒப்புக் கொடுப்பவர்கள்தான். அதனால்தான் கூட்டுத் திருப்பலியில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு அருள்பணியாளரும் திருப்பலிக்காகத் தனித்தனியாக நன்கொடை (திருப்பலி கருத்து) பெற திருஅவை அனுமதிக்கிறது. ஆகவே திருப்பலியின் தொடக்கம் முதல் இறுதி வரை கூட்டுத் திருப்பலியில் பங்குபெறும் அருள்பணியாளர்களின் பிரசன்னம் அவசியமாகிறது. தியானக் காலங்களில் கூட்டுத் திருப்பலியில் பங்குபெறும் ஒரு சிலர் நற்கருணையை உட்கொண்டபின் திருவுடையை எடுத்து வைத்துவிட்டு வேறு வேலையைக் கவனிக்க வெளியேறுகிறார்கள். இது தவிர்க்கப்படவேண்டும்.

அடுத்து காலதாமதமாக வரும் அருள்பணியாளர் சிலர், திருவுடையை அணிந்துக்கொண்டு மற்ற அருள்பணியாளர்களுடன் கலந்துக் கொள்கிறார்கள். இது கட்டாயமாக தவிர்க்கப்பட வேண்டும். அப்படி கலந்து கொள்பவர் முழு திருப்பலியை ஒப்புக் கொடுக்கிறார் என்று சொல்லமுடியாது. அவர்கள் திருப்பலிக்காக நன்கொடையை ஏற்க முடியாது. இது பற்றி உரோமைத் திருப்பலி நூலின் பொது படிப்பினை கூறுவது கவனிக்கத்தக்கது: “திருப்பலி தொடங்கிய பின் வருகின்ற அருள்பணியாளர்கள் ஒருபோதும் கூட்டுத் திருப்பலியாளர்களாகச் செயல்படக் கூடாது; அத்தகையோரை அனுமதிக்கவும் கூடாது (எண் 206)”.

கூட்டுத் திருப்பலியில் ஒவ்வொரு அருள்பணியாளரும் “முழுமையாகவும் (Full) உணர்ந்தும்  (Conscious) செயல்முறையிலும்”  (Active) ஈடுபடவேண்டும். எனவே கூட்டுத்திருப்பலியில் பங்குபெறும் அருள்பணியாளர்கள் தங்களுக்குள் வேறு காரியங்கள் பற்றி பேசிக் கொண்டிருப்பது திருப்பலியை உணர்ந்து ஒப்புக்கொடுப்பதற்கு இடையூறாக இருக்கும். கூட்டுத் திருப்பலிக்குத் தலைமை ஏற்று நடத்தும் அருள்பணியாளரோடு உள்ளத்திலும், உடலளவிலும் இணைந்து அவர் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஆக்கப்பூர்வமாகப் பங்கு பெற்று, அவர் செபிக்கும் செபங்களோடு உள்ளத்தளவில் இணைந்து பலியை ஒப்புக்கொடுக்க வேண்டும்.
தலைமை ஏற்போர்க்கான சிறப்புப் பணிகள் :

கூட்டுத் திருப்பலிக்குத் தலைமை ஏற்று பலியை ஒப்புக் கொடுக்கும் அருள்பணியாளரின் சிறப்புப் பணிகளாக பின்வருபவற்றைக் குறிப்பிடலாம்.

- திருப்பலிக்கு வந்திருக்கும் திருக்குழுமத்தை வரவேற்று வாழ்த்துகிறார்;

- பாவத்துயர் சடங்கின் இறுதியில் அவர் மன்னிப்பு வேண்டலைச் சொல்லுகிறார்;

- திருப்பலியில் வரும் திருகுழும மன்றாட்டு, காணிக்கை மீது மன்றாட்டு, திருவிருந்துக்குப் பின் மன்றாட்டு ஆகிய மூன்றையும் அவர் மட்டுமே சொல்லுகிறார்;

- தாம் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தப் பலிபொருள்கள் இறைவனுக்கு ஏற்றதாகும்படி செபிக்க மக்களை அழைக்கிறார்;

- தொடக்கவுரைக்குமுன் (Preface) மக்களோடு உரையாடல் செய்கிறார்.

- தொடக்கவுரையை அவர் மட்டுமே பாடுகிறார், அல்லது சொல்லுகிறார். “கூட்டுத் திருப்பலிக்குத் தலைமை ஏற்கும் அருள்பணியாளர் மட்டுமே தொடக்கவுரையைப் பாடுவார் அல்லது சொல்வார்” (பொது படிப்பினை எண் 216).


- நற்கருணை மன்றாட்டில் மற்ற அருண்பணியாளர்களுக்கென குறிப்பிடப்பட்ட செபங்களைத் தவிர, மற்றனைத்தையும் அவரே சொல்லிச் செபிப்பார்;

- ஆண்டவர் கற்றுத் தந்த செபத்தின் முன்னுரையைச் சொல்லி மக்களைச் செபிக்க அழைப்பார்;

- இறுதி ஆசீரை அவர் மட்டுமே வழங்குவார்.

- கூட்டுத் திருப்பலியில் பங்குபெறும் நற்கருணை மன்றாட்டின் இறுதி புகழுரையை ஆர்ப்பரிப்பார்; மற்ற அருட்பணியாளர்களும் அவரோடு சேர்ந்து ஆர்ப்பரிக்கலாம். ஆனால் மக்கள் அவரோடு (அவர்களோடு) சேர்ந்து ஆர்ப்பரிக்கக்கூடாது. இவையனைத்தும் தலைமை ஏற்கும் அருள்பணியாளரின் சிறப்பு செயல்கள் (Presidential Function). இவற்றை மற்ற அருள்பணியாளர்களுடன் பகிர்ந்துக் கொள்ளக் கூடாது.

முடிவுரை :

மேல் விளக்கப்பட்டவற்றைச் சரியாகப் புரிந்துக் கொண்டு அருள்பணியாளர்கள் திருப்பலியைத் தனியாகவோ, கூட்டுத் திருப்பலியிலோ ஒப்புக்கொடுத்தால் திருப்பலி கொண்டாட்டம் பொருள் உள்ளதாகவும், பயன் உள்ளதாகவும், அழகானதொரு கொண்டாட்டமாகவும் அமையும்.
ccccதிருப்பலியும், அருள்பணியாளர்களும்

No comments:

Post a Comment

Ads Inside Post