Pages - Menu

Saturday 20 February 2016

தவக்காலம் மூன்றாம் ஞாயிறு 28-02-2016

28-02-2016
தவக்காலம் மூன்றாம் ஞாயிறு
வி.ப. 3:1-8,13-15; 1 கொரி 10:1-6,10,12;
 நற்செய்தி :லூக் 13 : 1 - 9
கனிகொடுக்கும் மரங்களா நாம்?
அது ஒரு பெரிய ஆலமரம். அந்த மரத்தில் பல இனப்பறவைகள் வந்து தங்கி பழம் தின்னும். கூடு கட்டும். குஞ்சு பொரிக்கும். அது ஒரு பறவைகளின் சரணாலயமாகக் கருதப்பட்டது. மேலும் அந்த மரத்தின் கீழ் சாமி சிலை ஒன்று இருந்தது. சிலை அருகே ஒரு உண்டியலும் இருந்தது. அந்தச் சிலையை மக்கள் வணங்கினர். உண்டியலும் அவ்வப்போது நிரம்பி வழிந்தது. இப்போது அந்த மரமே ஒரு கோவிலாகக் கருதப்பட்டது. எனவே அம்மரத்தின் கிளையைக் கூட எவரும் வெட்டவில்லை. ஆனால் மரங்கொத்தி குருவிகள் மட்டும் அம்மரத்தை கொத்துவதுண்டு.
ஒருவருடம் மழை பொய்த்துவிட்டது. வெயில் எரிமலையாக வெப்பத்தைக் கக்கியது. வெயிலின் வெப்பத்தினால் பாவம் அந்த மரம் பட்டுவிட்டது. பாவம் பறவைகள். பட்டுபோனதின் காரணத்தைத் தேடி அலைந்தன ; பறவைகளின் கண்களுக்குப் பட்டதெல்லாம் மரங்கொத்தி குருவிகள்தான். இவைகள்தான் மரம் பட்டுப்போகக் காரணம் என முடிவெடுத்தன. மற்ற பறவைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து மரங்கொத்திக் குருவிகளை கொத்தி கூண்டோடு கொன்று போட்டன. பாவம் ஒருபக்கம். பழி ஒருபக்கம். பாவம் என்பது அழிவைத் தரவல்லதுதான். ஆனாலும், ஒரு சிலர் ஊனமாகப் பிறக்கின்றனர். ஒரு சிலர் விபத்துக்குட்பட்டு இறக்கின்றனர். ஒரு சிலர் பொறாமையாலோ, பகைமையாலோ கொல்லப்படுகின்றனர். இவர்களுடைய இறப்புக்கெல்லாம் காரணம் பாவம்தான் என்றால் அது மூடத்தனம். ஏனெனில் நல்லவர்களும், புனிதர்களும் இத்தகைய இறப்புக்கு விதிவிலக்கு அல்ல.
அன்று பிலாத்துக்கு எதிராக பலர் புரட்சி செய்தனர். அவர்களை பிலாத்து கொன்றான். அவர்களில் கலிலேயரும் அடங்குவர். இக்கலிலேயர்கள் பலி செலுத்துபவர்கள். இவர்களின் இறப்புக்கு அவர்களின் பாவம் காரணமா? நமக்குத் தெரியாது.
சீலோவாமிலே கோபுரம் விழுந்தது. பதினெட்டுப் பேரை பலி வாங்கியது. இதற்கும் காரணம் நமக்குத் தெரியாது. ஆனால் சிலர் தங்களின் குறைகளை மறந்து மற்றவர்களின் குறைகளை முன்வைப்பர்.
இன்றைய நற்செய்தியில் திராட்சைத் தோட்டத்தில் அத்திமர உவமையை இயேசு சொன்னார். திராட்சைத் தோட்ட உரிமையாளர் தன் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை வளர்த்து வந்தார். மூன்று ஆண்டுகளாக அந்த மரம் கனி தரவில்லை. எனவே அதை வெட்டி விடலாம் என்றபோது தோட்டத் தொழிலாளர் அந்த மரத்துக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் அவகாசம் கேட்டான் (மாற்கு 11 : 12 ‡ 14). ஒருபடி மேலே சென்று, அத்திப்பழக்காலம் இல்லாத நாளில் இயேசு அதில் கனியைத் தேடினார். அம்மரத்தில் கனி இல்லாததைக் கண்டு அதைச் சபித்தார்.
பசிக்கு மரத்தை முட்டிக்கொள்வதா? கனியில்லாத மரத்தை வெட்டி வீழ்த்துவது முறையாகுமா? இயேசு சொன்ன மரம் சாதாரண அத்திமரம் அல்ல; அவர் குறித்த மரம் தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்ராயேல் மக்கள்; இயேசு பிறந்த இனத்தின் யூத மக்கள்; அவர்கள் எப்போதும் கனி தரவேண்டியவர்கள். அவர்கள் தம் கடமையில் தவறினபோது சாபத்துக்குள்ளானார்கள் என்ற செய்தியைத்தான் இந்த அத்திமர உவமை முரசறைகிறது.
முதல் பெற்றோர்கள் எப்போதும் கடவுளுக்கு கீழ்ப்பணிந்து வாழ வேண்டியவர்கள். ஆனால் அவர்கள் கடவுளின் கட்டளையை மீறி விலக்கப்பட்ட கனியைத் தின்றனர். எனவே சாபத்துக்குள்ளாயினர். எனினும், கடவுளின் இரக்கம் அவர்களைக் கைவிடவில்லை. நற்செய்தியில் அந்த மரத்திற்கு கனி தர மேலும் இரண்டு ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டது. இயேசு மூன்று ஆண்டுகள் போதித்தும், அவரின் போதனையைக் கேட்காதவர்கள் தண்டனைக்கு உரியவராயினும், இறைவனின் இரக்கம் அவர்களுக்கு மனம்மாற கால அவகாசம் அளித்தது. முதல் பெற்றோர்கள் தண்டனைக்கு உரியவராயினும் இறைவனின் பேரிரக்கம் அவர்களுக்கு மீட்பரை வாக்களித்தது. முதல் வாசகத்தில் இஸ்ராயேல் மக்களின் அழுகுரலையும், துயரங்களையும் கண்ட கடவுளின் இரக்கம் மோசே வழியாக அவர்களுக்கு விடுதலையை வழங்கியது.
இந்த ஆண்டு டிசம்பர் 2015 முதல் நவம்பர் 2016 வரை இறை இரக்கத்தின் ஆண்டாக திருத்தந்தை முதலாம் பிரான்சிஸ் அவர்கள் அறிவித்து இருக்கிறார்கள். இறை இரக்கம் நமக்கு பாவ மன்னிப்பையும், புது வாழ்வையும் வழங்கும். இந்த நம்பிக்கையோடு எப்போதும் கனி கொடுக்கும் மரங்களாக வாழ்வோம் - உயர்வோம்.

No comments:

Post a Comment

Ads Inside Post