Pages - Menu

Thursday 6 October 2016

இரட்சணிய யாத்திரிகம்

இரட்சணிய யாத்திரிகம்

- எம்.சி.குமார், எம்.ஏ., எம்.பில்., பி.எட்.,
விரகாலூர்
குரு தரிசனப்படலம் தொடர்ச்சி :
விண்ணகத்தின் சிறப்பு

விண்ணகத்தில் எல்லாம் வல்ல இறைவனே ஆட்சி செய்கின்றார். அங்கு தூய்மை, அறம், அருள் முதலியவை சிறந்து விளங்குகின்றன. இறைவனுடைய மாட்சியால் அந்நாடு செழித்து விளங்குகின்றது. அந்நாட்டிலிருந்து அருளாகிய மேகம் கிளம்பி அன்பாகிய கடலில், அமுதமாகிய நீரை எடுத்துக் கொள்ளும். அது தெய்வத்தன்மை பொருந்திய  ஒப்பற்ற அருள் மழை பொழியும். நன்மை தரும் வெள்ளம் பெருகி வாழ்வளிக்கும் கங்கையாறாய் அந்நாட்டில் ஓடும். அந்த நதி மிக உயர்ந்த இமயமலையிலிருந்து இறங்கி தூய கற்பக மலரை ஏந்தி இரு கரைகளில் சிறந்த மேலான ஞானமணிகளை ஒதுக்கி, உலகம் செழிக்குமாறு பெருக்கெடுத்து ஓடியது. தந்தை, மகன், தூயாவி என்னும் மூன்று சிகரங்களிலிருந்து தோன்றி குற்றமில்லாத அறிவாகிய உணவுப்பொருள்களை விளையச் செய்து, அதை  உண்ணுமாறு உணவைத் தந்து கறைபடிந்த பித்தளை உலகை, தூய்மை விளங்கும் பொன்னுலகமாக்கி, மேன்மை பொருந்திய ஒழுக்கத்தை எக்காலமும் உடையதாக இருக்கும்.

“அருண்முகில் கிளம்பி யன்பி னார்கலி யமுதமொண்டு
திரமலி தருர ட்சண்ய திவ்விய சிகரி போர்த்துப்
பொருவருங் கருணை மாரி பொழிந்த புண்ணியமா நீத்தம்
ஒருமக மாகி ஜீவ கங்கையா யுலாய தன்றே”

இந்த ஆறு, திருமறைக்கு ஒப்பானாதாய் உள்ளும் வெளியும் தெளிவுடையதாய் குற்றங்களாகிய மரங்களை முறித்துத்தள்ளி நன்மைதரும் சிறந்த நெற்பயிர் வளரச் செய்து செழுமையை உண்டாக்கி பேரின்பக் கடலுள் சென்றுசேரும் தன்மையை உடையதாகும்.

இந்த ஆறு, இயேசுபெருமானின் அருளைப் போல விளங்குகின்றது. குளிர்ந்த அருளையுடையதாய், உயிருக்கு ஆதரவான வடிவம் பெற்றதாய், விண்ணிலிருந்து இறங்கிவரும் புதுமை அடைந்து, கட்டளைபடி நல்லொழுக்கம் கொண்டு உலகமக்கள் வாழ அன்பு பூண்டு உயிரைக் கொடுத்துக் காப்பாற்றுகின்றது.

இந்த ஆறு இம்மானுலேரின் இரத்தத்தைப் போன்றது. மனிதருடைய வாழ்வின் குற்றங்களின் அழுக்கைக் கழுவி, தூய்மையான உணவாகி, தாகம் தணிக்கும் தண்ணீருமாகி எப்பொழுதும் அறிவு வாழ்வை வளர்த்து, நற்பேறு அடைதலாகிய வாழ்வைத் தந்து பயன்படுகின்றது. மேலும் ஐந்து வகையான நிலங்களின் வேறுபாடுகளை நீக்கி, மருத நிலமாக வளப்படுத்தி அறத்தைப் பாதுகாத்து உயர்வு தாழ்வு இல்லாமல், மண்ணுலகில் எங்கும் சமமாய் நடத்தும் ஆற்றல் மிகுந்த இறைவனின் ஆணையைப் போன்றது. விரிந்த விண்ணில் தோன்றி, பல யுகங்களாக அசைந்து, நின்று அழிந்து, புறவுலகில் தோன்றும் பற்பல கோடிக்கணக்கான வியர்க்கத்தக்க வேறுபாடுகளின் வாழ்வு, கங்கையாற்றின் நீர்க்குமிழ்களைப் போன்று அழகாய் மிகுந்து காணப்படும்.

“புண்ணிய நதிதீ ரத்துப் பொருவரு மருத வைப்பில்
நண்ணிய பயிர்வ ருக்கந் தருக்குலம் பிறவு நல்கும்
எண்ணரும் பயனையீட்டி யிறைவனைப் பரவித் துய்த்துக்
கண்ணகன் றிருநா டெங்குங் கடிவிழாக் கொள்ளுமன்றே”

மிகுந்த வனத்தையுண்டாக்கி, நிலையான வாழ்வுதரும் கங்கையாறு எல்லா இடங்களுக்கும் பிரிந்து சென்று குளம், மடு, தடாகம் முதலியவற்றைக் குறைவில்லாமல் நிரப்பி உண்மை பொருந்திய மருத நிலத்தின் களங்கத்தை நீக்கி, இதயமென்னும் வயல்களில் சென்று சேர்ந்தது. இறைவனுடைய நிலத்தை வளப்படுத்தும் உழவர்கள், ஏரினால் நிலத்தை உழுது, இறைவனை வணங்கி, விதைகளை விதைத்து, நீரைப் பாய்ச்சி எப்போதும் பயிர் வளத்தை உண்டாக்குவர். பிறவிப் பாவமும், நாம் அன்றாடம் செய்யும் பாவங்களாகிய புதிர்களை திருமறையாகிய வாளைக் கொண்டு வேரோடு வெட்டிச் சாய்ப்பர். நன்மை தரும் தூய நீர்க்கால்வாய்களைக் கொண்டு காட்டு நிலங்களை மருத நிலங்களாக மாற்றிப் பயன்படுத்துவர்.

“ஜீவநீர்த் தடங்க டோறுஞ் செழும்புணல் குடைவோ ரீட்டம்
தாவருங் கழனி தோறுந் தருமச்செஞ் சாலி யீட்டம்
பூமலர் பொய்கை தோறும் புதுமதுத் திவலையீட்டம்
மீவரு மெழிலி தோறும் வேந்தனோர் கருணையீட்டம்”

நம்பிக்கை ஏராகவும், ஆர்வம், ஊக்கம் ஆகிய இரண்டையும் எருதுகளாகவும், கடமையே எருதுகளை இணைக்கும் நுகத்தடியாகவும், ஒரே சிந்தையே அவற்றைக் கட்டும் கயிராகவும், இறைவனுடைய திருவார்த்தையை நன்றாக உழுது மனமாகிய வயலை வளமாக்கி திருப்பணி செய்வர். களைப் பரித்து பயிரைப் பாதுகாப்பர். மேன்மை பொருந்திய திருநாடெங்கும் உழவரின் உழைப்பினால் நெற்பயிரில் கருத்தோன்றி கதிர் முற்றி விளைந்து மிகுந்த இன்பத்தை உண்டாக்கும்.

வீரர்கள் தேனை உண்டு மகிழ்வர். மக்கள் மகிழ்ந்து நிழலில் அமர்ந்து இறைவனின் பண்புகளையும், பெயர்களையும் நெஞ்சம் நெகிழ்ந்து உள்ளம் உருகிப்புகழ்ந்து இசைப்பாடுவர். கரும்பு கணுக்களை விட்டு வளர்ந்து இனிய சுவை மிகுந்த பாகினைத் தரும். இறைமக்கள் இன்புற்று அனுபவிப்பர்.

விண்ணுலகில் உள்ள விண்நகரைச் சுற்றிலும் மலையரண், மதிலரண், நீரரண் உண்டு. இந்நகரின் கோபுர வாயிலில் செந்நிறக்  சிலுவைக்கொடி, தேடி வரும் வாடிய மக்களை வருக வருகவென வரவேற்கும். இறைவனைப் போற்றும் வாழ்த்தொலி இந்நகரெங்கும் கேட்கும். பல வண்ணங்களுடைய மாளிகைகளும், வாழ்வு தரும் நீர் நிலைகளும் அங்கு உண்டு. இறைவனுடைய மாட்சியே அங்கு ஒளியாய் விளங்கும். அங்கு இன்பத்தைத் தவிர துன்பம் என்பதே இல்லை. இறைவனுடைய அருள் செல்வம் திருக்கூட்டத்தினரின் நட்புறவு, இறைவனைப் போற்றும் இசையயாலி, இத்தகைய பேரின்பச் செல்வங்கள் அங்கு உண்டு.

அந்நகரத்தில் இறை தூதர்களும், தூய ஆவியின் கூட்டமும் இறைவனின் ஆணையின்படி ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடன் பணி செய்யும் கூட்டமும் இயங்கும். இறைவனை தூயவர், தூயவர், தூயவர் என்னும் மும்முரசு ஒலியும் இறைவனை வானவர் வாழ்த்தும் ஒலியும், பாடல் ஒலியும், யாழின் ஒலியும் அந்நகரில் எங்கும் கேட்கும். இங்குள்ள ஆற்றில் குளிப்பவர் மரணமில்லா வாழ்வைப் பெறுவர். இறைவனுடைய அருள் செல்வம், இறைமைந்தனின் திருக்காட்சி, அறிவுத் தெளிவினைத் தரும் தூய ஆவியின் தொடர்பு, இறைவனைப் புகழ்ந்துபாடும் பாடகர்களும், பாடல்களும் அந்நகரில் உண்டு. (தொடரும்)

No comments:

Post a Comment

Ads Inside Post