Pages - Menu

Thursday 22 June 2017

திருப்பலி விளக்கம் நற்கருணை மன்றாட்டு

திருப்பலி விளக்கம்
நற்கருணை மன்றாட்டு
- அருள்பணி. எஸ். அருள்சாமி, 
பெத்தானியா இல்லம், கும்பகோணம்

இதுவரை நற்கருணை மன்றாட்டுகளுக்கு பின்புலமாக இருப்பவைப் பற்றியும், அவற்றின் தோற்றம், வளர்ச்சியைப் பற்றி விளக்கினோம். இங்கு நற்கருணை மன்றாட்டுகளின் அமைப்பு, அவற்றின் பொருள் போன்றவைப் பற்றிய விளக்கம் கொடுக்க முயற்சிப்போம்.
        நற்கருணை மன்றாட்டு “ஆண்டவர் உங்களோடு இருப்பாராக” என்ற தொடக்க உரையாடலில் ஆரம்பித்து இறுதி புகழுரைக்குப் (Doxology) பின் நம்பிக்கையாளர்களால் சொல்லப்படும் “ஆமென்”  என்ற பதிலோடு நிறைவடைகிறது.

3.  நற்கருணை மன்றாட்டின் அமைப்பும் பொருளும்

3.1  தொடக்க உரையாடல்

தொடக்கவுரை (Preface) திருப்பலி நிகழ்த்தும் அருள்பணியாளர், திருப்பலிக்குக்  குழுமி வந்திருக்கும் நம்பிக்கையாளர்களிடையே இடம் பெறும் உரையாடலோடு தொடங்குகிறது. “நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்” என்று அருள்பணியாளர்  விடும் அழைப்பு அவர் தொடங்கியிருக்கும் இறைவனுக்குப் புகழுரைத்து நன்றி கூறும் தொடர் செயலில் திருக்குழுமத்தையும் இணைத்துக் கொள்ள விரும்புகிறார் என்பதைக் காட்டுகிறது. இந்த அழைப்பு அருள்பணியாளரும் நம்பிக்கையாளரும் சேர்ந்துதான் இறைவனுக்கு நன்றி கூறுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

3.2  தொடக்கவுரை ( Preface)

  “ பிரிப்பேஸ் ” என்பது “ப்ரேபாசியும் ”
(Prefatium) என்ற இலத்தீன் சொல்லில் இருந்து வருகிறது. இது ஒரு நூலுக்கு முன்னுரை போல் நற்கருணை மன்றாட்டின் தொடக்கத்தில் இருக்கிறது என்று பொருளல்ல. மாறாக இந்த இலத்தீன் சொல்லுக்கு “முன்மொழிதல், பறைசாற்றுதல், எடுத்துரைத்தல்” போன்ற பொருள் உண்டு.

இத்தொடக்கவுரை கடவுளை போற்றுவது ஏன் “தகுதியும் நீதியும் ஆகும்”  என விளக்குகிறது. இது யூதர்களின் பெராக்கா (இறை புகழ்ச்சிப்) பாணியில் தொடங்குகிறது. இறைவனின் திருப்பெயரைக் கூவியழைத்து, மீட்பின் வரலாற்றில் படைப்பு, மனுவுருவாதல், மீட்பு ஆகிய மாபெறும் செயல்களுக்காக வாழ்த்தும், நன்றியும் கூறப்படுகிறது. இறைவன் புரிந்த அருஞ்செயலுக்காக இறைபுகழ் கூறுவதே  யூதர்களின் இறைபுகழ்ச்சியிலும், கிறிஸ்தவர்களின்  இறைபுகழ்ச்சியிலும் காணப்படும் சிறப்புமிக்க ஓர் அம்சமாகும். விண்ணக தந்தை தம் மக்கள் மீது பொழிந்திருக்கும் அன்பிற்கு, அவர்களின் பதில் அன்பும், நன்றியுணர்வும் நிறைந்த ‘பதிலாகவும்’ இது அமைகிறது. இறைபுகழும், நன்றியும் நிறைந்த இவ்வழிபாடு இறைவனுக்கும், மனிதனுக்குமிடையே ஒன்றிப்பை ஏற்படுத்துகிறது. எனவேதான் எல்லா கிறிஸ்தவர்களும் இடைவிடாது செபிக்க வேண்டுமென புனித பவுல் அழைக்கின்றார்.

        இரண்டாவது நான்காவது நற்கருணை மன்றாட்டுகளுக்குச் சிறப்பான தொடக்கவுரைகள் உள்ளன. இரண்டாவதுக்கான தொடக்கவுரையில் முக்கிய நிகழ்ச்சிகளான படைப்பு, மனிதராதல், மீட்பு ஆகியவற்றின் வழியாக மீட்பின் வரலாறு  சுருக்கமாக நினைவு கூறப்படுகிறது. நான்காவது நற்கருணை மன்றாட்டு  தொடக்கவுரையிலிருந்து தூய ஆவியாருக்குரிய முதல் மன்றாட்டு   (First Epiclesis) வரையில் நீண்டதொரு வாழ்த்துரையைக் கொண்டுள்ளது. பிரெஞ்சு வழிபாட்டு வல்லுநர் ஜேலினோ கருத்துப்படி இதன் முதல் பகுதி விண்ணகத் தந்தைக்குரிய  நன்றி மன்றாட்டாகும். இது அவருடைய உள்ளியல்புகளை நினைத்து வாழ்த்துவதாகவும் அவருடைய படைப்புக்காக குறிப்பாக, மனிதரின் படைப்புக்காகவும் வீழ்ச்சிக்காகவும் அவர் தொடங்கிய மீட்புசெயலுக்காகவும், மெசியாவாகிய இறைமகன் மனிதராகி, பாடுபட்டு, இறந்து உயிர்த்து ஆற்றிய மீட்பு  பணிகளுக்காகவும், திருஅவையின் அருள்அடையாள வாழ்விலே  தூய ஆவியார் புரியும் திருப்பணிக்காகவும் நன்றியறிதலாக அமைந்துள்ளது.

முதலாவது நற்கருணை மன்றாட்டுக்கும் மூன்றாவது நற்கருணை மன்றாட்டுக்கும் தொடக்கவுரை கொண்டாடப்படுகிற ஒவ்வொரு மறைபொருளுக்கும், விழாவிற்கும் ஏற்றாற்போல் மாறுபடலாம். இன்று திருப்பலி நூலில் திருவழிபாட்டுக் காலங்களுக்கும், பெருவிழாக்கள், விழாக்களுக்கும், புனிதர் விழாக்களுக்கும், பல்வேறு தேவைகளுக்கும் ஏற்ப நூற்றுக்கு மேற்பட்ட  தொடக்கவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

 3.3  புகழ்பாடல் ( Sanctus)     
         
        இது வானதூதர் எழுப்பிய வாழ்த்தொலி  ( எசா 6:3) நமதாண்டவர் எருசலேமுக்கு நுழைந்த போது மக்கள் கூட்டம் அவரை வரவேற்று எழுப்பிய ஆர்ப்பரிப்பு ( மத் 23: 1 ;  21:9) ஆகியவற்றால் உருவாக்கப்பட்டுள்ளது.  சேராபீன்கள்  என எபிரேயத்தில் அழைக்கப்படும் பக்தி சுவாலகர் என்னும்  வானதூதர்கள் விண்ணகக் கோயிலைத் தம் பிரசன்னத்தால் நிறைத்தெழுந்து இறைவனுக்கு இப்பாடலைப் பாடியதாக வாசிக்கிறோம். அவர் அனைத்து உலகிற்கும் ‘ஆண்டவர்’ ஆவார். அவர் வானகச் சேனைகளுக்கும் வானின் வல்லமைகளுக்கும், அதாவது தேவதூதர் அணிகளுக்கும், விண்மீன்களின் கூட்டங்களுக்கும் ஆண்டவராகப் புகழ்ந்தேத்தினர் இஸ்ரேயல் மக்கள் ( திப 103; 148:1‡4; 1 அரச 22:19 காண்க.) திருவெளிப்பாட்டிலும் புனித யோவான் கண்ட காட்சியில் “தூயவர், தூயவர், தூயவர், எல்லாம் வல்ல ஆண்டவராகிய கடவுள்” என்று  இரவும் பகலும் ஓய்வின்றிப் பாடுகிறதைக் குறிப்பிடுகிறார்.  மூன்று முறை ‘தூயவர்’  என்பது மூவொரு கடவுளைக் குறிக்கிறது என்கின்றனர் விவிலிய அறிஞர்.

இவ்வார்ப்பரிப்பின் இறுதிபகுதி நம் ஆண்டவர் மகிமையோடு எருசலேம் நுழைந்த குருத்தோலை விழாவை நினைவு கூறுகிறது. இச்சொற்களை திருப்பாடல்கள் 118:26 இல் காண்கிறோம்.          இவ்வார்ப்பரிப்பு இரண்டும் தொடக்கவுரையில் கூறப்பட்ட அனைத்திற்கும் இறைமக்கள் இயல்பாகவே கொடுக்கின்ற ஒரு பதிலாகவும் அமைந்துள்ளன.

3.4   ‘நீர் மெய்யாகவே  தூயவர்’  ( Vere Sanctus) 

இது புகழ்பாடலின் விரிவாகவும், அதனை பின் பகுதியோடு இணைப்பதாகவும் அமைந்துள்ளது. இது புகழ்பாடலோடு இணைந்து நன்றி மன்றாட்டின் ஒரு பகுதியாக உள்ளது. இதை  ‘நிலைமாற்றச் செபம்’  
(Transition Prayer) என்று கூட சொல்லலாம். இந்த மன்றாட்டு வேறு முறையில் விரிவாகலாம் என்பதற்கு முதல் நற்கருணை மன்றாட்டும், நான்காவது நற்கருணை மன்றாட்டும் தெளிவான எடுத்துக்காட்டுகளாக உள்ளன. ஒன்றில் பரிந்துரை மன்றாட்டுகளும், புனிதர்களை நினைவு கூறும் செபமும், மன்றொன்றில் மீட்பு வரலாற்றின்  விரிவுரையும் இருக்கின்றன.

3.5  காணிக்கைகளை புனிதபடுத்த மன்றாட்டு

மக்களால் ஒப்புக்கொடுக்கப்பட்ட காணிக்கைகள் அர்ச்சிக்கப்படவும், அவை கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறவும் தூய ஆவியாரை அனுப்பும்படி இங்கு  மன்றாடப்படுகிறது. இம்மன்றாட்டு (Epiclesis) தொன்றுத்தொட்டு நற்கருணை மன்றாட்டின் வழக்கில் உள்ளது.  முதல் நற்கருணை மன்றாட்டில் இது நீண்ட காலமாக இல்லாமல் இருந்தது. “இரக்கம் மிகுந்த தந்தையே இக்கொடைகளையும், காணிக்கைகளையும்” ( ஞற்ழிது நுணுயிழிமிஷ்லிஐeது) என்று தொடங்கும் மன்றாட்டு பின்பு சேர்க்கப்பட்டது. ஆனால் தூய ஆவியாரைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. இப்போது இருக்கும் எல்லா புதிய  நற்கருணை மன்றாட்டுகளில் தூய ஆவியாருக்குரிய மன்றாட்டைத் தெளிவாகக் காணலாம். நற்கருணை ஏற்படுத்தியதை விவரிக்கும் பகுதிக்குமுன் இம்மன்றாட்டை அமைத்திருப்பதால், மேற்கு திருஅவை மரபின் நற்கருணை வழிபாட்டு இயலுக்கு மதிப்புக் கொடுக்கிறது.

3.6  நற்கருணை ஏற்படுத்தியதை விவரிக்கும் பகுதி

          நற்கருணையை ஏற்படுத்துதலை விவரிக்கும் இப்பகுதியில் விசுவாசமும் பக்தியும் நிறைந்த சூழ்நிலையில் அருள்பணியாளர் அப்பத்தையும் இரசத்தையும் கைகளிலேந்தி அர்ச்சிக்கும் வார்த்தைகளை, அதாவது கிறிஸ்து சொன்ன அதே வார்த்தைகளை மீண்டும் கூறி இயேசுகிறிஸ்துவின் திருவுடலாகவும், திரு இரத்தமாகவும் மாற்றுகின்றார். படைப்பிலும், மீட்பின் வரலாற்றிலும் மனிதரின் நலன்கருதி இறைவன் செய்த அனைத்தும் இதில் மீண்டும் நினைவுகூறப்படுகின்றன, உடனிருக்கச் செய்யப்படுகின்றன; செயல்படுத்தப்படுகின்றன.

3.7  எழுந்தேற்றம்

     வசீகரம் செய்யப்பட்ட அப்பத்தையும், இரசக் கிண்ணத்தையும் தூக்கி மக்களுக்குக் காட்டுதல் தொடக்கத்திலிருந்து வந்த ஒரு மரபு அன்று. திருப்பலியில் இது முக்கியமானதோ, உச்சக்கட்டமான செயலோ அன்று . இரண்டாம் வத்திக்காம் சங்கம் வரை பலிபீடம் திருப்பலி பீட முற்றத்தில் பின்புறம் சுவரோடு ஒட்டியதாக இருந்தது. சுவற்றின் மேல் பகுதியில் பாடுபட்ட சுருபமுடைய சிலுவைத் தொங்கியது. அருள் பணியாளர் தமது முதுகை மக்கள் பக்கம் காட்டிச் சுவரை நோக்கிய வண்ணமாக பலியை ஒப்புக் கொடுத்தார். வழிபாடும் இலத்தீன் மொழியில் இருந்தது.

மக்களுக்கு வழிபாட்டு மொழி புரியாததாலும், எப்பொழுது இயேசுகிறிஸ்து அப்பத்தையும் இரசத்தையும் தம் உடலாகவும், இரத்தமாகவும் மாற்றி பலிபீடத்தில் பிரசன்னமாகிறார் என்று தெரியாததாலும் அப்பமும் இரசமும் கிறிஸ்துவின் உடலாகவும், இரத்தமாகவும் ஆனதும் தங்களுக்குத் தூக்கி காட்ட வருந்திக் கேட்டதால் உண்டான பழக்கம் எழுந்தேற்றம். இது 9‡ஆம் நூற்றாண்டில்  உண்டான ஒரு பழக்கம். அருள்பணியாளர் தொடர்ந்து சுவரைப் பார்த்து நின்றதால், தமது தலைக்குமேல் வசீகரம் செய்யப்பட்ட அப்பத்தையும், இரசக் கிண்ணத்தையும் தூக்கிப் பிடிக்க வேண்டியிருந்தது. இயல்பாக மக்கள் தலைவணங்கி ஆராதிக்கத் தொடங்கினார்கள். இது திருப்பலியில் இயேசு கிறிஸ்துவை ஆராதிப்பது விதிவிலக்காக வந்த ஒரு தவிர்க்க முடியாத வழக்கம் என்று சொல்ல வேண்டும்.

         இப்பொழுது மக்களைப் பார்த்து திருப்பலி நிகழ்த்தும் முறை கையாளப்பட்டாலும், வழிபாடு  அவரவர் தாய் மொழியில் நிகழ்ந்த போதிலும் வசீகரம் செய்யப்பட்ட அப்பத்தையும் இரசக்கிண்ணத்தையும் மக்களுக்கு தூக்கிக் காட்டும் நீண்டநாள் மரபு நிறுத்தப்படவில்லை.

         அருள்பணியாளர்கள் இப்பொழுது தலைக்கும் மேல் தூக்கிக் காட்ட வேண்டியதில்லை. தங்கள் முகத்துக்கு முன்வரை தூக்கி காட்டினால் போதும். மேலும் மிகைப்படுத்தப்பட்ட கால அளவுக்குத் தூக்கிபிடிப்பது சரியல்ல. மேலும் மிகைப்படுத்தப்பட்ட கால அளவுக்குத் தலை வணங்குவது தவிர்க்கப்பட வேண்டும். இவை மக்களுடைய பக்திக்கும், கவனத்திற்கும் ஊறு விளைவிக்கும். மற்றும் புதியதோர் தவறுதலான கேட்பாட்டுக்கு இட்டுச் செல்லும்.
                - தொடரும்... 

No comments:

Post a Comment

Ads Inside Post