Pages - Menu

Tuesday 29 November 2016

திருப்பலி விளக்கம் 11. வார்த்தை வழிபாடு (3)

திருப்பலி விளக்கம்

11. வார்த்தை வழிபாடு (3)

அருள்பணி. எஸ். அருள்சாமி, 
பெத்தானி இல்லம், கும்பகோணம்

இதுவரை ஞாயிற்றுகிழமை வாசகங்கள் அமைப்புப் பற்றி விளக்கினோம். இப்பொழுது வார நாள் வாசகங்கள் பற்றியும், பெருவிழாக்கள், விழா நாள் வாசகங்கள் பற்றியும் மற்றும் புனிதர்களுடைய நினைவு நாள் வாசகங்கள் பற்றியும் விளக்குவோம்.

வார நாள் வாசகங்கள் :

வார நாள் வாசகங்கள் இரண்டு ஆண்டு கால வட்டத்தில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. ஒற்றைபடை ஆண்டை முதல் ஆண்டு என்றும், இரட்டைப்படை ஆண்டை இரண்டாவது ஆண்டு என்றும் கணித்து அதற்கு ஏற்றார் போல் முதலாவது அல்லது இரண்டாவது ஆண்டு வாசகங்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

ஏன் வார நாள் வாசகங்கள் இரண்டு ஆண்டு கால வட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மூன்று ஆண்டு கால வட்டத்தில் அமைக்கப்படவில்லை என்ற கேள்வி எழுவது இயல்பானதுதான். காரணம், வார நாள்கள் ஞாயிற்றுக்கிழமைகளை விட எண்ணிக்கையில் அதிகமுள்ளன. அவை 7:1 என்ற விகிதத்தில் இருக்கின்றன. எனவே இரண்டு ஆண்டு கால வட்டத்திலேயே எண்ணிக்கையில் அதிகமான வாசகங்கள் பெற வாய்ப்பு உள்ளது. வார நாள்களில் இரு வாசகங்கள் மட்டுமே (முதல் வாசகம் + நற்செய்தி வாசகம்) இடம் பெறுவது கவனிக்க வேண்டியது. தவறாமல் தினமும் திருப்பலியில் பங்கு பெற்றால் ஒருமுறை விவிலியம் முழுவதையும் கேட்க முடியும் என்பது திருஅவையின் கருத்து.

வாரநாள் வாசகங்களும் திருவழிபாட்டு ஆண்டின் கணிப்பையே பின்பற்றும். உதாரணமாக 2016ஆம் ஆண்டின் வாரநாள் வாசகம் இரட்டைப்படை ஆண்டுக்குரியவையாகும். இது 2015 நவம்பர் இறுதியில் திருவருகை காலத்தின் முதல் வாரம்  திங்கள் கிழமையே தொடங்கிவிட்டது. இவ்வாண்டு கிறிஸ்து அரசர் பெருவிழாவுக்கு பின்வரும் சனிக்கிழமை வரை இது நீடித்தது.

பெருவிழாவுக்கான வாசகங்கள் :

ஞாயிற்றுக்கிழமையைத் தவிர்த்து மற்ற வாரநாள்களில் பெருவிழாக்கள் வர நேரிட்டால் அன்று ஞாயிற்றுக்கிழமை போல் மூன்று வாசகங்கள் இடம்பெறும். ஞாயிற்றுக்கிழமைக்குரிய வாசகங்களின் விதிமுறையே இந்நாளில் பின்பற்றப்படும். அதாவது முதல் வாசகம் பழைய ஏற்Vட்டிலிருந்தும், இரண்டாவது வாசகம் புதிய ஏற்பாட்டு மடல்களில் இருந்தும், மூன்றாவது வாசகம் தகுதியான நற்செய்திகளிலிருந்தும் தேர்வு செய்யப்படும். புனித வாரம் தவிர்த்து மற்ற தவக்கால வார நாள்களில் இப்பெருவிழா வர நேரிட்டாலும் அன்று இரண்டாவது வாசகத்திற்குப் பின் அல்லேலூயாவும், அதனுடைய வசனமும் ஆர்ப்பரிக்கப்படும். எடுத்துக்காட்டாக மார்ச் 19 புனித யோசேப்பு, கன்னி மரியாவின் கணவர் அல்லது மார்ச் 25 ஆண்டவர் பிறப்பின் அறிவிப்பு.

ஞாயிற்றுக் கிழமையில்லாமல் மற்ற நாள்களில் நேரிடக்கூடிய பெருவிழாக்கள் : ஜுன் 24 - புனித திருமுழுக்கு யோவானின் பிறப்பு, இயேசுவின் திருவுடல், திருஇரத்தம் பெருவிழா இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமையில் கொண்டாடப்படுவதால் அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் திரு இருதய ஆண்டவரின் பெருவிழா, புனிதர்கள் பேதுரு, பவுல் - திருத்தூதர்கள் பெருவிழா, ஜுலை 3 புனித தோமா - திருத்தூதர் (இந்தியா) பெருவிழா, ஆகஸ்ட் 15 புனித கன்னி மரியாவின் விண்ணேற்பு பெருவிழா, நவம்பர் 1 புனிதர் அனைவர் பெருவிழா, டிசம்பர் 3 புனித ஃப்ரான்சிஸ் சவேரியார் (இந்தியா) பெருவிழா டிசம்பர் 8 புனித கன்னி மரியாவின் அமல உற்பவம் பெருவிழா ஆகியவை.

விழாக்களுக்கான வாசகங்கள் :

இயேசு ஆண்டவர், கன்னி மரியா, புனித திருத்தூதர்கள் மற்றும் சில புனிதர்கள் இவர்களுடைய திருநாள் விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன. இவற்றிக்கெல்லாம் முதல் வாசகம், நற்செய்தி வாசகம் என இரண்டு வாசகங்கள் மட்டும் உள்ளன. இதற்கு விதிவிலக்காக பின்வரும் நான்கு விழாக்களுக்கு மூன்று வாசகங்கள் வாசிக்கப்படும். அவை: ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா (பெப்ருவரி 2), ஆண்டவரின் தோற்ற மாற்றம் விழா (ஆகஸ்ட் 6), திருச்சிலுவை மகிமை விழா (செப்டம்பர் 14), இலாத்தரைன் பேராலய நேர்ந்தளிப்பு (நவம்பர் 9).

மற்ற புனிதர்களின் நினைவு நாள் வாசகங்கள் :

பொதுவாக புனிதர்களின் நினைவு திருப்பலியில் கொண்டாடப்படும்போது ஆண்டின் வார நாள்களின் வாசகமே வாசிக்கப்பட வேண்டும். அவற்றை மாற்றக்கூடாது. இந்த ஒழுங்குமுறைக்கு விதிவிலக்குகள் உண்டு. ஒன்று ஒரு சிலர் முக்கிய நினைவு நாள்களில், எடுத்துக்காட்டாக புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு (ஆகஸ்ட் 29), தொழிலாளர் புனித யோசேப்பு நினைவு (மே 1), கன்னிமரியின் துயரங்கள் (செப்டம்பர் 25), மற்றொன்று ஒரு புனிதருடைய விழா நினைவு நாளாக இருந்தாலும், அவர் ஒரு பங்கின் அல்லது நிறுவனத்தின் பாதுகாவலராக இருந்தாலும் அல்லது ஒரு துறவற சபையை நிறுவியவராக இருந்தாலும் அன்று அவருக்கான சிறப்பு வாசகத்தை வாசிக்கலாம். இந்த நினைவு நாள்களை விழாவாகக் கூட கொண்டாடலாம்.

வாசகங்களை எதிலிருந்து வாசிப்பது?

நாம் மேலே குறிப்பிட்ட மூன்றாண்டு கால வட்டம் இரண்டு ஆண்டு கால வட்டங்களுக்கான வாசகங்கள் பலவிதங்களில் மக்கள் கைவசம் வந்து சேர்கின்றன. ஞாயிறு வழிபாடு கையேடு  என்று சுமார் நான்கு பக்கங்களில் வெளியிடப்படும் துண்டு பிரசுரங்கள் (Leaflets) ஒருபக்கம்; விவிலிய நாள்குறிப்பேடு (Bible Diary) என்று பல பதிப்பகங்களில் (வைகறை, கிளாரட், நல்லாயன்) ஆகியவற்றிலிருந்து வரும் நாள்குறிப்பேடுகள் மற்றொரு பக்கம். இவற்றையன்றி விவிலிய நூலை கையிலேந்தி வரும் நம்பிக்கையாளர், அருள்பணியாளர் மற்றும் பங்கு ஆலயங்களில் கிடைக்ககூடிய வாசகநூல்.

இவை அனைத்தும் இறைவார்த்தைப் பகுதிகளை முழுமையாகவும், பகுதியாகவும் கொண்டுள்ளன. இவற்றில் வழிபாட்டு கையேடு எனும் துண்டு பிரசுரமும், விவிலிய நாள் குறிப்பேடும் குறிப்பிட்ட நோக்கத்திற்காக வெளியிடப்படுவன. அதாவது வழிபாட்டை வாழ்வாக்கிட இவற்றை வாசித்து தியானித்தல், வழிபாட்டிற்கு தயாரித்தல் போன்ற நோக்கங்களுக்கு பயனுள்ளவையாக இருக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இவை வழிபாட்டு நூல்வகையைச் (யிஷ்மிற்rஆஷ்உழியி ணுலிலிவவி) சாராதவை. எனவே வார்த்தை வழிபாட்டில் இறை வார்த்தையைப் பறைசாற்ற உகந்தனவல்ல. ஆதலால் இவற்றிலிருந்து இறைவார்த்தையைப் பறைசாற்றுவது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். வழிபாட்டில் இவற்றிலிருந்து நற்செய்தியைப் பறைசாற்றும் போது தூபம் காட்டப்படுகிறது. இவை வழிபாடு சாராத காரியங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு இறைவார்த்தைக்கு பங்கம் ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக ஞாயிறு வழிபாட்டு கையேடு துண்டு பிரசுரத்தில், அடுத்து வரும் ஞாயிறு வழிபாட்டின் போது அதில்  உப்பு  வைக்கப்படுகிறது. மற்றும் கசக்கி குப்பைத் தொட்டியில் போடப்பட்டதையும் பார்க்க நேரிடுகிறது. அதேபோல் விவிலிய நாள் குறிப்பேடு மக்களை சந்திக்க நிர்ணயிக்கப்படும் நேரத்தைக் குறிக்கவும் (Appointments) மற்றும் சில தகவல்களைக் குறித்து வைக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இவை யாவும் இறைவார்த்தையின் மாண்புக்கு உகந்தவை அல்ல என்பதை யாரும் மறுக்க முடியாது.

அருள்பணிக்கு உதவும் சிற்றேடுகளை  எ.கா ., இறைமக்கள் வாசகத்தைத்  தயார் செய்யவோ, தனியாகத் தியானிக்கவோ வெளியிடப்படும் கையேடுகளை வாசகப்புத்தகத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தக் கூடாது. இது இறைவாக்கின் மாண்புக்குப் பொருந்துவதாக இல்லை - வாசக நூல் முன்னுரை எண் 37இல் குறிப்பிட்டிருப்பது கவனிக்கப்பட வேண்டும்.

அடுத்து விவிலியத்தை வார்த்தை வழிபாட்டில் வரும் வாசகங்களைப் பறைசாற்றப் பயன்படுத்தலாமா? என்ற ஒரு கேள்வியும் வைக்கப்படுகிறது. இதற்குப் பதிலாக நான் சொல்ல விரும்புவது பின்வருபவை: விவிலியத்தை வழிபாட்டு வாசகங்களைப் பறைசாற்றக் கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. அது தவறு என்றும் சொல்லக்கூடாது. தவிர்க்க முடியாத இடத்திலும், நேரத்திலும் பயன்படுத்தலாம். ஆனால் விவிலியம் வழிபாட்டு நூல் அன்று. வழிபாட்டிற்கெனத் தயார் செய்யப்பட்டுள்ள வாசக நூலே வழிபாட்டு நூல் ஆகும். எனவே வார்த்தை வழிபாட்டில் வாசகங்களைப் பறைசாற்ற வாசக நூலைப்  பயன்படுத்துவதே சாலச் சிறந்தது.

விவிலியத்தின் பகுதிகள் வாசக நூலில் இருந்தாலும், அவை வழிபாட்டிற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்படுகின்றன. உதாரணமாக பவுலின் மடல்களில் இருந்து வாசகம் இருக்கும்போது தொடக்கத்தில் சகோதர, சகோதரிகளே என்று கூடி வந்திருக்கும் மக்களை விளித்து வாசிக்கப்படுகிறது. விவிலிய நூலைப் பயன்படுத்தும்போது எல்லாராலும் இது சரியாக செய்யப்பட வாய்ப்பு மிகக் குறையும்.

இதே போன்று நற்செய்தி வாசகத்தின்போது ‘அக்காலத்தில்’ என்ற வார்த்தை சேர்க்கப்பட்டு அதற்கேற்றவாறு நற்செய்தி வாசகத்தின் தொடக்கச் சொற்கள் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. விவிலியத்தில் இருந்து நேராக நற்செய்திப்  பகுதி வாசிக்கப்படும் போது முன் தயாரிப்பில்லாமல் எல்லா அருள்பணியாளர்களாலும் இதை சரியாகச் செய்யமுடியாது.

மூன்றாவதாக வார்த்தை வழிபாட்டின் மையக் கருப்பொருளுக்கேற்றவாறு இறை வசனங்கள் தொடர்ச்சியாக இல்லாமல், இடை இடையே சொற்றொடர்களும், வாக்கியங்களும் விடுபட்டு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. விவிலியத்திலிருந்து வாசிக்கும் போது எல்லாராலும் தடுமாற்றமும் தாமதமும் இன்றி செய்ய இயலாது.

வாசக நூலின் முன்னுரைப் பகுதியின் பின்வரும் குறிப்புகளைக் காண முடிகிறது :

வாசகத்தின் தொடக்கமாக வழக்கமான முன்மொழிச் சொற்கள் இருக்கும்; இவையாவன : அக்காலத்தில், அந்நாள்களில், சகோதர சகோதரிகளே, அன்பிற்குரியவர்களே, ஆண்டவர் கூறுவது. இந்த முன்மொழிச் சொல்லுக்குப் பின் வாசகம் தொடர்கிறது. பாடம் தனது பின்னணிச் சூழலிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டிருப்பதால், அதை புரிந்துக் கொள்ளத் தேவையான சில சொற்களைச் சேர்க்கலாம் அல்லது விட்டு விடலாம். பாடம் தொடர்ச்சியான வசனங்களைக் கொண்டிருக்கவில்லை என்றால் அதில் மாற்றங்கள் செய்யத் தேவைப்படலாம் (எண் 124, காண் எண் 77). இந்த காரணங்களுக்காக வார்த்தை வழிபாட்டில் வரும் விவிலியப் பகுதிகளை வாசக நூலில் இருந்தே வாசிப்பது சிறந்தது. 

இறுதியாக மற்றும் ஒரு கேள்வி எழுகிறது. வார்த்தை வழிபாட்டில் இறைவார்த்தை வாசகம் பறைசாற்றப்படும் போது, நம்பிக்கையாளர்களும், அருள்பணியாளரும் விவிலியத்தை கையில் வைத்துக் கொண்டு வாசிக்கலாமா? என்பது.  இத்தகைய பழக்கம் அருங்கொடை இயக்கத்திலிருந்து வந்ததொன்று. இதற்கு ஆதரவு ஒருசில விவிலிய வல்லுநர்களிடமிருந்து வந்துள்ளது. அருளாளர் ஆறாம் சின்னப்பர் ‘நற்செய்தியறிவிப்பு’ (Evangelium Nuntiandi) என்ற ஆவணத்தில் சான்று பகர்தலை வலியுறுத்தும்போது இன்றைய உலகம் கேட்கும் நாகரீகத்தில் இருந்து (Civilization of Hearing) பார்க்கும் நாகரீகத்திற்கு (Civilization of Seeing) கடந்து வந்துள்ளது என்பதைக் காரணம் காட்டுகிறார்கள். மேலும் கத்தோலிக்க மக்களிடையே விவிலிய அறிவு மிக சொற்பமாக இருப்பதால் வார்த்தை வழிபாட்டின் நேரத்திலும் அன்றைய வாசகங்களை விவிலியத்தை வைத்துக் கொண்டு பறைசாற்றப்படும்போது பின்பற்றுவது பயனளிக்கும் எனக் கருதுகிறார்கள்.

இது முற்றிலும் சரியல்ல. இறைவார்த்தை வழிபாட்டில் விவிலியப் பகுதிகள் வாசிக்கப்படுகின்றன என்று சொல்வதை விட பறைசாற்றப்படுகின்றன (Proclaimed) என்று சொல்வதே சரியானது. பறைசாற்றப்படுவதை கேட்க வேண்டும் என்பதுதான் சரி. வாசக நூலின் பொது முன்னுரை விளக்கங்களை துருவி ஆராய்வோமானால், அங்கு பறைசாற்றப்படுவது கேட்கப்பட வேண்டும் என்றுதான் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது (எண்கள் 6, 8, 45, 47, 48, 55, 62 மற்றும் காண்க). “அறிவிப்பதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும்” (உரோ 10 : 17). என்று புனித பவுல் கூறுவது கவனிக்கத்தக்கது. இறைவார்த்தை பறைசாற்றப்படும்போது இறைவன் (இயேசு) பேசுகிறார். இறைவெளிப்பாடு இங்கு, இப்பொழுது இடம் பெறுகிறது. அதைக் கேட்கத்தான் வேண்டும். வழிபாட்டு வல்லுநர்களும், பல புகழ்பெற்ற விவிலிய வல்லுநர்களும், மக்களோ, அருள்பணியாளர்களோ பறைசாற்றும் வார்த்தையைக் கேட்க வேண்டுமேயயாழிய வாசிக்கக்கூடாது என்றுதான் சொல்லுகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
இதைத் தடை செய்ய ஆயருக்குரிய அதிகாரம் (Episcopal Authority) என்னிடமில்லை; ஆனால் இது சரியல்ல என்று சொல்ல வழிபாட்டியியலில் நம்பக நிலை (Liturgical Authority) என்னிடம் இருக்கிறது என்று சொல்ல முடியும்.
வார்த்தை வழிபாட்டில் மற்றுமொரு பழக்கம் நுழைந்துள்ளது. இது மேலே நாம் குறிப்பிட்ட பழக்கத்தோடு நெருங்கியத் தொடர்புடையது. அதாவது இறைவார்த்தையை வாசிக்கும் போது அது எந்த அத்தியாயத்தில் இருக்கிறது. எத்தனை வாக்கியங்களைக் கொண்டது போன்ற தகவல்களைக் கொடுக்கின்ற பழக்கம். திருப்பலிக்கு வரும் மக்கள் விவிலியத்தைக் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தியதால் இறைவார்த்தையைப் பறைசாற்றுபவர், கையில் விவிலியத்தை வைத்திருப்பவர்கள் திறந்து பின்பற்றுவதற்கு உதவியாக இருக்கும் விதத்தில் பறைசாற்றப்படும் பகுதியின் அத்தியாயம், வாக்கியங்கள் எல்லாம் பற்றி சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது தேவையற்றது. வழிபாட்டு மரபில் இத்தகைய பழக்கம் என்றுமே இருந்ததில்லை.

அப்படி சொன்னாலும் அது பாதகமில்லை என்பது எமது தனிக்கருத்து. ஆனால் அக்குறிப்பு சரியான முறையில் இருக்க வேண்டும். ‘பிரிவு’, ‘சொற்றொடர்கள்’ என்ற சொற்கள் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கிறோம். இச்சொற்களின் உண்மைப் பொருளை அறியாமையால் வந்த பழக்கம். ‘பிரிவு’ என்றால் ‘செக்­ன்’ (Section) என்றும், ‘சொற்றொடர்கள்’ என்றால் ‘ப்ரேஸ்’ (sentences) என்றும் பொருள். ஆங்கில-தமிழ் அகராதியை எடுத்து செக்­ன், ப்ரேஸ் என்பவற்றின் பொருள் காணவும். இயல் அல்லது அத்தியாயம் என்று சேப்டருக்கும் (உஜுழிஸ்ரீமிer) இறை வசனங்கள் அல்லது வாக்கியங்கள் (விeஐமிeஐஉeவி) என்று சொல்வதே சரியானது.

வாசக நூலில் ஒவ்வொரு வாசகப் பகுதிக்கும் மேல் ஒரு தலைப்பு மிக கவனமாகத் தேர்வு செய்யப்பட்டு கொடுக்கப்பட்டிருக்கும். இது அந்த வாசகத்தின் முக்கியமானக் கருத்தை சுட்டிகாட்டுவதாக அமைந்திருக்கும். வாசகங்களைப் பறைசாற்றுபவர் இந்த தலைப்பையும் வாசிக்கக் கூடாது. இது விளக்கவுரையாளருக்கும், மறையுரைக்கும் பயன்படுவதாக கொடுக்கப்பட்டுள்ளது.

முடிவுரை :

இதுவரை மூன்று நிலைகளில் இறைவார்த்தை வழிபாடு பற்றி நாம் விளக்கியவற்றை சரியாக பொருள் உணர்ந்து செய்வதாலும், மேலே நாம் சுட்டிக்காட்டிய சில குறைகளையும் தேவையற்ற பழக்கங்களையும் சரிசெய்வதினாலும் வார்த்தை வழிபாடு அழகுள்ளதாக அமையும். அனைவரும் இறைவார்த்தை விருந்தில் நல்லமுறையில் பங்கு பெற்று, தங்கள் நம்பிக்கையைப் புதுப்பித்துக் கொண்டு நற்கருணை விருந்திலும் பங்கு பெற தங்களைத் தகுதியாக்கிக் கொள்ள முடியும். 

No comments:

Post a Comment

Ads Inside Post