Pages - Menu

Sunday 30 October 2016

நிலைத்திருக்கும் நிலையாமைதான் வாழ்க்கை

நிலைத்திருக்கும் நிலையாமைதான் வாழ்க்கை

 அருள்சகோ. விமலி 
இதயா மகளிர் கல்லூரி, கும்பகோணம்


“மாற்றம் என்ற ஒன்றுதான் எப்பொழுதும் மாறாத ஒன்று” கிரேக்க தத்துவஞானி (ஹர்கூலிசியுஸ்)

ஆற்றில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. வெள்ளத்து நீரைப் பார்க்க முடிகிறது. ஆனால் அப்படிப் பார்த்தத் தண்ணீர் அங்கே நிலைத்திருப்பதில்லை. வானத்தில் மேகங்களைப் பார்க்கலாம். குவிக்கப்பட்ட வெண்பஞ்சு போல அவை காட்சி அளிக்கின்றன. கொஞ்ச நேரம் கழித்துப் பார்த்தால், அங்கே மேகங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றின் வடிவம் மாறியுள்ளது. மரத்தில் கனிகள் இருக்கின்றன. அவை அழகாக விளங்குகின்றன. சில நாட்கள் சென்றதும் கிளையிலிருந்து அந்தப் பழங்கள் தரையில் விழுந்துகிடக்கின்றன. இப்படி இயற்கை பல விதங்களிலும் வாழ்வின் நிலையாமையை உணர்த்திக் கொண்டே இருக்கிறது.

இந்த நிலையாமை ஆறு வித முக்கியமான உண்மைகளை உணர்த்துகின்றன. 

1. தோற்றம், வளர்ச்சி, மறைவு என்ற இந்த மூன்று நிலைகளும் இயற்கையில் உண்டு என்ற இயக்க முறையை அது அறிவிக்கின்றது. 
2. இயற்கை எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கும் என்ற செயல் முறையை அது தெரிவிக்கின்றது. 
3. எதன் மீதும் பெரும் பற்று வைக்காதே, பற்றுக்குரிய பொருளை இழக்கும்போது, பெருந்துன்பம் நேரும் என்ற உணர்வை உணர்த்துகின்றது. இது மறைமுக அறிவிப்பு. 
4. கையிலுள்ள பொருள் ஒரு நாள் நீங்கி விடலாம். ஆகவே, கையில் பொருள் இருக்கும்போதே அறச்செயல் புரிக என்ற அறச்சிந்தனையை அது எழுப்புகிறது. 
5. நிலையாமை கொண்டது இவ்வுலக வாழ்க்கை. இருப்பினும், என்றும் மாறாத உயர்வு நிலை பெறுவதற்குத் துறவு மேற்கொள்க என்ற எதிர்மறைக் கொள்கையை அது ஏற்படுத்தும். 
6. எல்லாப் பொருட்களும், ஆட்களும் நிலையற்றவை. நிலையாக இருப்பவர் இறைவன் ஒருவரே, என்ற உண்மையை உணர்த்துகின்றது.

இவ்வாறு நிலையாமை, மற்றொரு நடைமுறையையும் குறிப்பாகத் தெரிவிக்கிறது. பழைமைப் பொருள் மறைந்து விடும். அந்த இடத்தில் புதுமைப்பொருள் ஒன்று தோன்றும் என்பதே அந்த நடைமுறை, இதைத்தான்
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினான
என்ற பவணந்தி முனிவர் சொன்னார். இத்தகைய கருத்தை ஆங்கிலப் பாவலர் டென்னிசனும் உரைக்கின்றார். ‘புதுமைக்கு இடம் தந்து பழைமைமுறை மாறுகிறது’ என்றார். நிலையாமைக்கு உரியவற்றை நாலடியார் எடுத்துரைக்கின்றது. வீடு, இளமை, உடல், அழகு, செல்வம், உடல்வலிமை முதலியன நிலைத்திருக்காது என்று அந்த  நூல் சொல்கிறது. (நாலடி 53). அது நிலையாமையை, நோய், மூப்பு, சாக்காடு (மரணம்) ஆகியவற்றுடன் சேர்த்துச் சொல்கிறது. நிலையாமைக்கு அது ஒரு சான்று காட்டுகிறது. ஆகவேதான் பொருளுடைமை நில்லாது நீங்கி விடும் என்றார் நின்ற நெடும்புகழின் திருவள்ளுவர் (குறள் 592). செல்வம் எல்லோருக்கும் பொதுவானது. அது பகிரப்பட வேண்டியதேயன்றி பதுக்கப்பட வேண்டியது அன்று. இதனால்தான், அன்று தமிழறிஞர். மு. வரதராசனார் சொன்னார், “எத்தனை வள்ளல்கள் வாழ்ந்தும் வறுமையை ஒழிக்க முடியவில்லை. ஒரு நல்ல அரசாங்கம் ஏற்பட்டால் வள்ளல்கள் தேவை இல்லை” என்றார்.

வெற்றி வேற்கையும், செல்வம் நிலையாமைக்கு வேறு ஒரு காட்சியைக் காட்டுகின்றது. செல்வ வளம் உடைய ஒருவன், யானை மீது அமர்ந்து பெருமிதத்துடன் வருகிறான். அவனுடைய இருக்கையின் பின்னால், வேலையாள் ஒருவன் நின்று கொண்டு பெரிய குடையைத் தலைக்கு மேல் பிடித்துக் கொண்டிருக்கிறான். யானையும், குடையும், செல்வச் செழிப்பின் சிறு சின்னங்கள். அப்படிப்பட்ட அந்தப் பெரும் பணக்காரன் திடீரென்று ஏழையாகி விடுகிறான். அவனுடைய யானையும் வெண்குடையும் எங்கோ போய்விட்டன. அவன் நடக்கிறான், அவனால் நடக்க முடியவில்லை. தளர்ந்த நடை உடைய அவன், வாழ்வைத் தேடித் தன் ஊரைவிட்டு வேறோர் ஊருக்குச் செல்கிறான் என்று நல்வழி சொல்கிறது (நல்வழி.12).

இளமைப்பருவமும் நிலைத்திருப்பதில்லை. வில்லில் நாணேற்றி விடப்பட்ட அம்பு விரைந்து மறைந்து விடுவதுபோல், இளமையும் மறையும் என்று நற்றிணை சொல்கிறது (நற்றிணை 47). கழிந்த இளமையை - அழிந்த இளமையை மீண்டும் பெற முடியாது என்பதை, “அரிது அரோ சென்ற இளமை தரற்கு” என்று கலித்தொகையும் நவில்கிறது. இனமை, என்பது தண்ணீரில் தோன்றி மறையும் நீர்க்குமிழி போன்றது என்று கூறுகின்றார். குமரகுருபர அடிகள். “நீரில் குமிழி இளமை” என்று அவர் அறிவுறுத்துகிறார் (நீதி நெறி விளக்கம்).

உடம்பும், உயிரும் நிலையாமைக்கு உரியவை. இதை நூல்கள் எடுத்துரைக்கின்றன. “சாவாத இல்லை பிறந்த உயிர் எல்லாம்” என்று நான்மணிக்கடிகை கூறுகின்றது. ‘உடம்பொடு தோன்றும் உயிரும் இல்லை’ என்று புறநானூறு கூறுகின்றது (புறம் 363). “நீரில் உள்ள அலை போன்றது செல்வம். தண்ணீரில் எழுதப்படும் எழுத்து போன்றது உடம்பு” என்று மற்றொரு நீதிநூல் சொல்கின்றது. நேற்று இருந்தான், இன்று அவன் இல்லை. இப்படிப்பட்ட பெருமையை உடையது இந்த உலகம் என்று திருக்குறள் உரைக்கிறது. காலம் நிலையாக இருக்காது. “நாள் என்று சொல்லப்படும் காலப்பிரிவு, உயிரை அறுக்கும் வாள் போன்றது” என்று திருக்குறள் சொல்கிறது (குறள் 334). தோற்றம் உடையவனுக்கு மரணம் உறுதியாக உண்டு என்று கீதையும் கூறுகிறது.

“மரணம் என்பது இயற்கையின் விருப்பம்” என்று ரோம் நாட்டின் தத்துவஞானி மார்க்கஸ் அரேலியஸ் சொன்னார். “மலைமேல் உலவி நிலைத்திருக்காமல், விட்டு அகலும் மேகம் போன்றது இந்த உடம்பு” என்று நயம்பட நாலடியார் நினைவூட்டுகின்றது. இப்படி பொருள், உடல், உயிர் முதலியவை நிலையற்றவை என்பதால் இரண்டு வித அறிவுரைகள் கூறப்பட்டன. ஒன்று துறவு மேற்கொள்க என்ற அறிவுரை, சமூக நலன் எனும் அக்கினியில் சுயநல ஆசைகளைச் சுடடெரிப்பதுவே தூய துறவு. தன்னலம் மறுத்து பொதுநலத்துக்காகத் தொண்டாற்றும் மனிதர்கள்தான் உண்மையான துறவிகள் என்று விவேகானந்தர் கூறுகின்றார். மற்றொன்று அறம் செய்க என்ற அறிவுரை.

நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல்
தலையாகத் தான் இனிதே
என்று இனியவை நாற்பது அறிவுறுத்துகிறது (இனி 3).
நிலையாமை கண்டு நெடியார் மெல்ல துறப்ப
தலையாய தாம் உய்யக் கொண்டு
என்று நாலடியார் சொல்கிறது (நாலடி 53). நிலையாமையை உணர்ந்து அறம் செய்க என்று ஒளவையார் பாடினார். ஆற்றில் மணல்மேடு உள்ளது. வெள்ளம் வந்த பிறகு, அந்த மேடு மறைகிறது. அங்கே மடு (பள்ளம்) அமைகிறது. ஆகவே, “செல்வம் இருக்கும்போதே சோறும் நீரும் தந்து தருமம் செய்க” என்றார் ஒளவையார்.

நிலையாமை தீர்க்கும் வாய் நேர்ந்து பசி உண்டி நீக்குவான்
நோக்கும் வாய் விண்ணின் உயர்வு (ஏலாதி 40).
என்று ஏலாதி என்ற நூலும் “அறம் புரிக” என்றது. “வாழ்க்கை இன்பமயமானது எனக் கனவு கண்டேன், கண்விழித்த பிறகு சேவைதான் இன்பமயமானது எனப் புரிந்துகொண்டேன்” என்றார் புத்தர். “சமுதாயச் சேவையைச் சட்டையாக மாற்றாதீர்கள்,  உங்கள் உடம்பின் சதையாக மாற்றுங்கள். சமூக அறத்தை விளம்பரமாக்காதீர்கள், இச்சமுதாயத்தின் அணையா விளக்காகுங்கள்” என்றார் அன்னை தெரசா. எனவே உலகில் மாறாதது, மாற்றம் ஒன்றுதான் என்பதை, ஏற்றுக்கொண்டு வாழ்வோம்.

“இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு வாழ்வோம்” என்றார் (அன்னை தெரசா).

இவ்வுலக வாழ்வில் இல்லாமையில் இருப்பாரோடு, இருப்பதை பகிர்ந்துண்டு பசியாற்றிடுவோம். அப்பொழுது வாழ்வு வளமையோடு துளிர்க்கும்.

No comments:

Post a Comment

Ads Inside Post