Pages - Menu

Sunday 30 October 2016

பணிவு என்னும் இனிய பாதை 8. திறந்த வாழ்வு வேண்டும்

பணிவு என்னும் இனிய பாதை

8. திறந்த வாழ்வு வேண்டும்

 அருள்பணி. மகுழன், 
பூண்டி மாதா தியாள மையம்


வாழ்வில் வெற்றியின் இரகசியங்கள் பல உள்ளன. அதில் ஒரு முக்கியமான இரகசியம்: நீங்கள் உங்கள்மீது கொண்டுள்ள அபிப்பிராயத்திற்கும். மற்றவர்கள் உங்கள்மீது கொண்டிருக்கும் அபிப்பிராயத்திற்கும் வித்தியாசம் அதிகம் இருக்கக்கூடாது. அப்படியயன்றால் உங்களை நீங்கள் நன்கு அறிந்து வைத்துள்ளீர்கள். உங்களை நீங்கள் நன்கு வெளிப்படுத்தியுள்ளீர்கள். மற்றவர்கள் உங்களை விமர்சிக்கும்போது அதில் உள்ள உண்மையை கண்டறிந்து உங்களை மாற்றிக்கொள்ள முன்வந்துள்ளீர்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் உங்கள் வாழ்வு ஒரு திறந்த புத்தகமாக உள்ளது. அதற்குத் தேவையான பணிவு உங்களிடம் உள்ளது. உளவியலில் ஜோஹேரி வடிவம் மிகவும் பிரபலம். ஜோ மற்றும் ஹேரி என்னும் இரண்டு உளவியல் நிபுணர்கள் இதனை கண்டுப்பிடித்ததால் இதற்கு இந்தப் பெயர். இந்த வடிவத்தின்படி நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் நான்கு பகுதிகள் உள்ளன.

1. திறந்தப் பகுதி : எனக்குத் தெரிந்தவை மற்றவர்களுக்கும் தெரிந்தவை.
2. குருட்டுப் பகுதி : எனக்கும் தெரியாதவை, மற்றவர்களுக்கும் தெரியாதவை.
3. மறைத்தப் பகுதி : எனக்குத் தெரிந்தவை, மற்றவர்களுக்குத் தெரியாதவை.
4. மறைந்த பகுதி : எனக்குத் தெரியாதவை, ஆனால் மற்றவர்களுக்குத் தெரிந்தவை.

உதாரணமாக மறைந்த பகுதியை எடுத்துக் கொள்வோம். நீங்கள் உங்கள் நண்பரோடு ஒரு ஹோட்டலுக்கு உணவருந்த செல்கிறீர்கள். உங்கள் முகத்தில் உணவின் சிறுபகுதி ஒட்டிக்கொண்டு இருக்கிறது. உங்களுக்கு அதனைப்பற்றி தெரியவில்லை. ஆனால் உங்கள் நண்பர் அதனை கவனிக்கிறார். அதனை உங்களிடத்தில் சொல்கிறார். நீங்களும் முகத்தைத் துடைத்துக் கொள்கிறீர்கள். அதாவது உங்கள் குறை உங்களுக்குத் தெரியவில்லை. உங்கள் நண்பருக்குத் தெரிகிறது. அதனை அவர் சுட்டிக்காட்டுகிறார். நீங்களும் திறந்த மனதோடு அதை சரிசெய்கிறீர்கள். நம் கோபம், நம் விவேகமின்மை, நம் வைராக்கியம், நம் நடுநிலையின்மை பல நேரங்களில் நமக்குத் தெரிவதில்லை. திறந்த மனதோடு இருந்தால் மற்றவர்கள் சுட்டிக்காட்டும்போது நாம் மாற்றிக் கொள்வோம்.

திறந்தப் பகுதி குறைவாக இருக்கும்போது மற்றவர்களின் மதிப்பைப் பெறுவது மிகவும் கடினம். நாம் சொல்வதை பிறர் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால் முதலில் அவர்கள் நம்மை ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் நல்லவர்கள், நாம் சொல்வதில் உண்மை இருக்கும் என்ற நம்பிக்கையை நாம் ஏற்படுத்தி இருக்க வேண்டும். அதனால்தான் ஒரே வி­யத்தை சொல்லும்போது மறுப்பு சொல்லுகின்ற நாம், அதே வி­யத்தை நமக்குப் பிடித்தவர் சொல்லும்போது ஏற்றுக்கொள்கிறோம்.

நம் சொற்களில், நம் செயல்களில், நம் மதிப்பீடுகளில், நம் அணுகுமுறையில் நாம் எப்படிப்பட்ட மனிதர் என்பதை வெளிப்படுத்த வேண்டும். ஒரு சிலர் மர்ம மனிதர்களாக இருப்பார்கள். மர்ம மனிதர்களாக இருப்பது வாழ்வின் ஒரு சாதூர்யம் என்றுகூட நினைத்துக் கொள்வார்கள். அது தவறான அணுகுமுறை. உண்மையான சாதூர்யம் மிக்கவர்கள். தங்களை வெளிப்படுத்த அஞ்சமாட்டார்கள், தயங்க மாட்டார்கள். பிறரின் நம்பிக்கையையும், நன்மதிப்பையும் பெறுவதற்கு சிறந்த வழி நாம் நல்லவர்களாக வாழ்வது மட்டுமல்ல, நாம் நல்லவர்கள் என்பதை பிறருக்கு தெரிவிப்பதும்கூட. உங்களைப் பற்றி பிறர் என்ன நினைக்கிறார்கள் என்ற ஒரு கருத்துக்கணிப்பு வைத்தால் ஒரே விதமான கருத்துக்கள் வருமா? அல்லது மாறுபட்ட கருத்துக்கள் வருமா? என்பதை பொறுத்து நாம் எவ்வளவு திறந்த வாழ்வு வாழ்கிறோம் என்பதை கண்டுபிடிக்க முடியும். உதாரணமாக நல்ல குணங்களைப் பற்றி மற்றவர்களிடத்தில் கேட்டால், முதலில் அவர்கள் சொல்வது, யார் மனதையும் புண்படுத்தாதவர் (எனக்குப் பணிவு கொஞ்சம் வேண்டுமென்று நினைக்கிறேன் என்பது).

திறந்த வாழ்வின் இன்னொரு முக்கியமான அம்சம் நம் பொறுப்பில் உள்ள நிறுவனத்தின், பங்கின், குடும்பத்தின் வரவு செலவுகளை வெளிப்படையாக தெரிவிப்பது. நீங்கள் உண்மை உள்ளவர்களாக இருந்தால் மட்டும் போதாது, நீங்கள் உண்மை உள்ளவர்கள் என்பதை நிரூபிக்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும். உங்களுக்கு கீழே இருப்பவர்களிடத்திலும் நீங்கள் கணக்குக்காட்டத் தொடங்கிவிட்டீர்கள் என்றால் பணிவு என்னும் இனியப் பாதையில் சிறப்பாக பயணம் செய்கிறீர்கள் என்று அர்த்தம். (தொடரும்)

No comments:

Post a Comment

Ads Inside Post