Pages - Menu

Tuesday 5 April 2016

ஆசிரியர் பேனா, மகிழ்ச்சியும், எழுச்சியும்

ஆசிரியர் பேனா

மகிழ்ச்சியும், எழுச்சியும்
ஏப்ரல், மே மாதங்களில் நம் கிராமங்கள், விழா தோரணையில் ஊஞ்சலாடும். தேர் ஊர்வலங்கள், வண்ண, வண்ண  வான வேடிக்கைகள், உறவினரின் ஒன்றுகூடல் ஆகியவைகளுடன் கலகங்களும், கைகலப்புக்களும், பிளவுகளும் மக்களை சந்திக்கும்.
தி.பா 37 : 4 அருமையானதொரு வாக்கியத்தைத் தருகிறது.
“ஆண்டவரிலேயே மகிழ்ச்சிக் கொள்.
  உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார்”.
இறைவனிடமிருந்து  உதவிகளை பெறுவதற்கு திருப்பாடல் ஆசிரியர் முன்வைக்கும் நிபந்தனை, ஆண்டவரிலேயே 
மகிழ்ச்சிக் கொள் என்பதாகும்.
“மகிழ்ச்சி என்பது ஒரு வழி, அது ஒரு இடமில்லை” என்கிறார் சிட்னி ஹேரிஸ் என்பவர்.
“வழிபாடுகள் ஆன்மாக்களின் மகிழ்வு கொண்டாட்டங்களாக அமைய வேண்டும்” என்கிறார் கோர்டன் ஹிங்லி என்பவர்.
பாஸ்கா மகிழ்ச்சியின் தொடர்ச்சியாக நமது பங்குகளில் விழா கொண்டாடப்படுகிறது. விழாக்கள் மக்களை ஒற்றுமைப்படுத்துகின்றன. உறவுகளை வளர்க்கின்றன. எனவே விழாக்கள் தங்களின் பெருமைக்குரிய பண்புகளிலிருந்து விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். “மற்றவர்களை மகிழ்ச்சிபடுத்துவதே நமக்கு உண்மையான மகிழ்வைத் தரும்” என்ற செய்தியை இம்மாத இதழின் ஒரு கட்டுரையில் காணலாம்.

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. பணம் பட்டுவாடா மிக திறமையான முறையில் திரைமறைவில் செய்யப்பட்டு வருகிறது. ஓர் அம்மையாரிடம், ஏன் 500 ரூபாய்க்கு ஆசைப்பட்டு உங்கள் உரிமையை கொச்சைப்படுத்திக் கொள்கிறீர்கள்? என்றேன். “ஐநூறு ரூபாய் யார் தருவார்? கிடைப்பது லாபம் தானே?” என்றார் அவர். பணம் கொடுத்து சாமி படங்களில் கைவைக்கச் சொல்லி, சத்தியம் வாங்குகிறார்கள். பாமர மக்கள் இந்த தந்திர வழிகளுக்கு பலியாகி விடுகிறார்கள்.
திரு.சகாயம் ஐ.ஏ.எஸ் தன் அனுபவத்தை ஒரு கூட்டத்தில் பகிர்ந்துக் கொண்டார். மதுரையில் ஒரு தொகுதியில் தேர்தலுக்கு பொறுப்பாளராக இவரை நியமித்து, ஊழலில்லாமல் நடத்துங்கள் என்ற உத்தரவு அவருக்கு கொடுக்கப்பட்டது. ஊர் தலைவர்கள், பெரிய வியாபாரிகள் ஆகியவர்களை சந்தித்து தேர்தலுக்கு ஒத்துழைக்கும்படி கேட்டாராம். இதற்கெல்லாம் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று வெளிப்படையாகவே அவர்கள் சொல்லிவிட்டார்களாம். பிறகு கல்லூரிகளுக்குச் சென்று, கல்லூரி மாணவர்களை சந்தித்து நேர்மையான தேர்தலை நடத்த உங்களால் முடியும் என்று வலியுறுத்தினார். மாணவர்கள் எழுச்சிக் கொண்டனர். தங்கள் பெற்றோர்களை, நண்பர்களை, உறவினர்களை ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என்ற கட்டுப்பாடுபோட்டனர். மற்ற இடங்களிலும் சென்று அறிவுறுத்தினர். சிறப்பாக தேர்தல் நடந்ததாக திரு.சகாயம் அவர்கள் பகிர்ந்துக் கொண்டார்.
தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் வேண்டும் என்ற வேட்கை வெடித்திருக்கிறது. ஊழலற்ற அரசு, மக்களின் நலனை முன்னெடுக்கும் அரசு என்று மக்கள் காத்து நிற்கிறார்கள். திரு.சகாயம் அவர்கள் மீண்டும் கூறினார், மக்கள் நேர்மையாக மாறினால்தான் நேர்மையான தலைவர்கள் அரசு உண்டாக முடியும் என்று.
கவிக்கோ அப்துல்ரகுமான், முன்னோட்ட சமுதாயத்தில் வாக்கெடுப்பு எப்படி நடக்கும் என்று கனவு காண்கிறார். 

வாக்குப் பெட்டிகளை 
செயற்கை முறையால் 
சினையாக்க முடியாது. 
கருச்சிதைவு செய்யும் 
காரியமும் நடக்காது.

முன்னோட்ட சமுதாயத்தின் பண்பு என்ன என்பதையும் குறிப்பிடுகிறார்.

கடமை அங்கே கவுரவம்
உரிமை அங்கே ஊதியம்
சத்தியம் அங்கே சமயம்
இதயம் அங்கே முகவரி
புன்னகை அங்கே பொதுமொழி
ஆன்மீக மகிழ்ச்சி சமுதாய எழுச்சியைத் தரட்டும்.

No comments:

Post a Comment

Ads Inside Post