Pages - Menu

Tuesday 5 April 2016

பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு             17 - 04 -2016

தி.ப 13 : 14, 43 - 52,
திவெ 7 : 9 : 14 - 17


யோவா 10 : 27 - 30


இயேசு ஆண்டவர் சொன்னார், நானே நல்ல ஆயன் (யோவா 10 : 14). என் ஆடுகள் எனது குரலுக்குச் செவி சாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும், அவையும் என்னைப் பின் தொடர்கின்றன (யோவா 10 : 27).
ஆடுகள் என்ற சொல்லைக் கேட்கிற போதோ அல்லது படிக்கிற போதோ அருட்பணியாளர் சேவியர் அந்தோணி சே. ச, அவர்கள் எழுதின கோவில் ஆட்டுக்குட்டிக் கதை என் நினைவைத் தட்டுகிறது. நல்லவைகள் மீண்டும், மீண்டும் கேட்கப்படவோ, பேசப்படவோ, எழுதப்படவோ வேண்டும்.
இந்தக் கோயில் ஆடும், ஒரு பன்றியும் நண்பர்கள். இந்த ஆட்டுக்கு அந்த ஊரில் நல்ல சுதந்திரம். பலரின் விளைச்சலில் மேய்ந்தது. பல வீடுகளில் நுழைந்தது. எங்கும் சுற்றித் திரிந்தது. பன்றி அதைப் பார்த்துச் சொன்னது, நீ கொடுத்து வச்சவன். அட உனக்கு என்ன கவலை. உனக்கு வந்த வாழ்வைப் பாரு என்று பொறுமியது. என்னைப் பார்த்தியா? நான் எங்குப் போனாலும், பன்னி, பன்னின்னு திட்றாங்க. கல்லெடுத்து அடிச்சு விரட்டுறாங்க என்று தன்னையே நொந்துக் கொண்டது.

கோவில் திருநாள் வந்தது. அந்த ஆட்டைப் பிடித்து, குளிப்பாட்டி, நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்து, மாலையிட்டு மரியாதை செலுத்தினர். தாரை, தம்பட்டம், ஆட்டம் பாட்டம், கொண்டாட்டமாக ஊரைச் சுற்றி வந்தனர். கோவிலை நெருங்கியதும் அனைவரும் அதைக் கும்பிட்டனர். இதையயல்லாம் பார்த்த பன்றிக்குச் சொல்லவா வேண்டும், உனக்கு என்ன கவலை. நீ கொடுத்து வச்சவன். மக்கள் கும்பிடப் பிறந்தவன் என்று இச்சு கொட்டியது.  சற்று நேரத்தில் பூசாரி ஆட்டின் கழுத்தின் மீது அரிவாளால் ஒரு வெட்டுப்போட, ஆடு இரண்டு துண்டானது. பன்றி இதைப் பார்த்து, கொடுத்து வச்சது இதற்குத்தானா என்று பதறி ஓடி மறைந்தது. 

இயேசு ஆண்டவர் நானே நல்ல ஆயன் என்று சொன்ன போது எவ்வளவு உண்மை வெளிப்படுகிறது. பார்த்தீர்களா? இயேசு ஆண்டவர் பலியிடுபவரும், பலிப்பொருளுமாக இருக்கிறார். இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி (யோவா 1 : 36) என்று திருமுழுக்கு யோவான் இயேசுவை ஆட்டுக்குட்டியாக தன் சீடர்களுக்கு முதன் முறையாக அறிமுகப்படுத்தினார். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இதே விதமாக எசாயா இறைவாக்கினர் இயேசுவைப் பற்றி முன்னுரைத்திருந்தார், அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டி போலும் அவர்தம் வாயைத் திறவாதிருந்தார் (எசாயா 53 : 7). முதல் வாசகம் அரியணை நடுவில் இருக்கும் ஆட்டுக்குட்டி அவர்களை மேய்க்கும் (திரு. வெ 7 : 17)
இஸ்ராயேல் குலத்திலே ஒவ்வொரு குடும்பத் தலைவரும் ஆயராக கருதப்பட்டனர். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மோசே போன்றவர்கள் எல்லாம் மேய்ப்பர்கள்தான். ஏன் தாவீது போன்ற அரசர்களும் ஆயனாவும், மேய்ப்பராகவும் அழைக்கப் பெற்றனர். இவர்களின் கடமை, ஆடுகள் என உவமிக்கப்பட்ட மக்களுக்கு, நல் வழியையும், பாதுகாப்பையும், பராமரிப்பையும் தருவது. ஆட்டைப் போல இயேசுவும் தன்னையே மக்கள் தின்பதற்கு கொடுத்தார். என்னை தின்பவன் நிலைவாழ்வைப் பெறுவான் (யோவா 6 : 54). இயேசுவும் நம்மை நல்வழிப்படுத்துகிறார். தன் சதையால் நம்மை உண்பிக்கிறார், பாவங்களிலிருந்து நம்மை மீட்கிறார்.
இந்த மனித சமூகத்தில் வாழ அழைக்கப்பெற்ற ஒவ்வொருவரும் இயேசுவைப் போன்று ஒரு ஆயராக ‡ மேய்ப்பராக ‡ ஆட்டுக்குட்டியாக ‡ சமூகத்திற்கு நம்மையே மாய்த்துக் கொள்ளும் தியாகிகளாக வாழ அழைக்கப் பெற்றுள்ளோம். நம்மைச் சார்ந்திருப்பவர்களுக்கும், நம்முடன் தோழமை கொண்டுள்ளோருக்கும், நல்ல வழியைக் காட்ட, அற நெறிகள் புகட்ட, பாதுகாப்பு அளிக்க, தேவைப்பட்டால் பராமரிக்க நமக்கு பொறுப்பும், கடமையும் உண்டு. முதல் வாசகத்தில் பவுலும், பர்னபாவும் நல்ல மேய்ப்பர்களாக இருந்து மக்களுக்கு நற்செய்தியை அறிவித்து நல்வழிப்படுத்தினர்.

இயேசுவைச் சார்ந்து இருப்பவர்களுக்கு என்றுமே நல்வாழ்வு, நிலைவாழ்வு உண்டு. அவரின் குரலைக் கேட்பவர்கள் குணம்பெறுவர். அவரைப் பின்பற்றுபவர்கள் பெருவாழ்வைப் பெறுவார்கள்.

No comments:

Post a Comment

Ads Inside Post