Pages - Menu

Sunday 3 April 2016

திருப்பலியும், இறைமக்களும், - எஸ். அருள்சாமி, பெத்தானி இல்லம், கும்பகோணம்

திருப்பலியும், இறைமக்களும்

- எஸ். அருள்சாமி, பெத்தானி இல்லம், கும்பகோணம்

இயேசு கிறிஸ்து சிலுவையில் ஒப்புக் கொடுத்த அதே பலிதான் இன்று பீடங்களில் அடையாளங்கள் வழியாக ஒப்புக் கொடுக்கப்படுகிறது என்றும், இது இன்று நடைபெறுவதற்கு திருஅவையின் செயல் அவசியமாக உள்ளது என்றும் கூறினோம். அதாவது திருப்பலி கிறிஸ்துவின் பலியாக இருந்தாலும், அதே சமயத்தில் அது திருஅவையின் பலியுமாகும். திருஅவை என்பது இங்கு பலியை ஒப்புக் கொடுக்க அருள்பணியாளர்களையும், அதில் பங்கு பெறும் நம்பிக்கையாளர்களையும் குறிக்கும்.
திருப்பலியில் அருள்பணியாளரின் செயல்பாடுகளைப் பற்றி முந்தின சிந்தனையில் விளக்கினோம். இப்பொழுது திருப்பலியில் பங்கு பெறும் நம்பிக்கையாளர்களின் (இறைமக்களின்) செயல்பாடுகள் பற்றி விளக்க முற்படுவோம்.

நம்பிக்கையாளர்களும் குருக்களே :

திருப்பலியில் அருள்பணியாளருடன் சேர்ந்து பலியை ஒப்புக் கொடுக்கும் இறைமக்களும் கிறிஸ்துவின் ஒரே குருத்துவத்தில் பங்கு பெற்றவர்களே. கிறிஸ்து “கடவுளின் புது மக்களாக இருக்கவும், ஊனியல்புக்கு ஏற்ப அல்லாமல், ஆவியிலே ஒற்றுமை பெறவும், யூதர்களிடமிருந்தும், பிற இனத்தவரிடமிருந்தும் ஒரு குலத்தை அழைத்தார்” (திருச்சபை எண் 9). தலைமை குருவாகிய கிறிஸ்து இப்புதுமக்களை “ஆட்சி உரிமை பெற்றவர்களாக, தம் கடவுளும் தந்தையுமானவருக்கு ஊழியம் புரியும் குருக்களாக ஏற்படுத்தினார்” (தி. வெ. 1 : 6; காண் 5 : 9 ‡ 10). “ஏனெனில், தம் மறுபிறப்பாலும், தூய ஆவியின் பொழிதலாலும் திரு முழுக்குப் பெற்றவர்கள் அருள் இல்லமாகவும், தூய திருப்பணி நிலையினராகவும் திருநிலைப்படுத்தப் பெற்றுள்ளனர்” (திருச்சபை . 10)

இவர்களுடைய குருத்துவம் பொது குருத்துவம் (Common Priesthood) எனப்படுகிறது. இது தரத்திலும் இயல்பிலும், பணிக்குருத்துவத்திலிருந்து (Ministerial Priesthood) வேறுபட்டாலும் அதோடு நெருங்கியத் தொடர்புடையது. ஏனென்றால், அவை ஒவ்வொன்றும் தத்தமக்குரிய முறையில் கிறிஸ்துவின் ஒரே திருப்பணி நிலையில் பங்கு கொள்கின்றன (காண் திருச்சபை 10&2).

நம்பிக்கையாளரின் குருத்துவப் பணிகள் :

“திருப்பணிநிலை குழுவின் தூயப் பண்பும் உயிர் அமைப்பும் அருளடையாளங்கள் மூலமும், நற்பண்புகள் மூலமும் செயல்படுகின்றன” (திருச்சபை 11). இதிலிருந்து இவர்களது குருத்துவப் பணிகள் இருவகைப்படுமெனத் தெரிகிறது. ஒன்று உள்ளரங்க, அதாவது ஞானக் குருத்துவப் பணிகள் Spiritual Priestly Functions; மற்றொன்று வெளிப்படையான அருள் அடையாளங்களுக்கடுத்தக் குருத்துவப் பணிகள் Sacramental Priestly Functions.

திருப்பலியில் செயல்படுவது இறைமக்களின் அருள் அடையாள குருத்துவப் பணியாகையால், இதுப்பற்றி மட்டும் இங்கு விளக்குவோம். “ அருட்பணியாளர்கள் கிறிஸ்தவ வாழ்வனைத்தின் ஊற்றும் உச்சியுமான நற்கருணைப் பலியில் பங்கு கொண்டு தெய்வீகப் பலிப்பொருளையும், அஃதோடு தம்மையும் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கிறார்கள். இவ்வாறு ஒப்புக்கொடுப்பதாலும், நற்கருணை உட்கொள்வதாலும் அனைவரும் ஒரே வகையில், ஒவ்வொருவரும் தத்தமக்குரிய முறையில் , திருவழிபாட்டுச் செயலில் தம் பங்கை நிறைவேற்றுகின்றனர்” (திருச்சபை 11&1) என்று இவர்களுடைய பொது குருத்துவம் திருப்பலியில் செயல்படும் விதம் விளக்கப்பட்டுள்ளது.

தத்தம் முறையில் இறைமக்கள் அனைவரும் திருப்பலியை ஒப்புக்கொடுக்கிறார்கள். அதாவது, தங்கள் உழைப்பின் பயனும், நிலத்தின் விளைவுமாகிய அப்பத்தையும், இரசத்தையும் இறைமக்கள் காணிக்கையாகக் கொண்டு வருகிறார்கள். அப்பமும், இரசமும் இல்லாமல் பீடத்தில் பலி ஒப்புக்கொடுக்க முடியாதாகையால் இவர்களுடைய செயல் முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த அப்பம், இரசத்தின் வழியாக இவர்கள் தங்களையே, அதாவது தங்களுடைய உழைப்பு, அதனால் வரும் களைப்பு, தங்கள் அருள் வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்கள் அனைத்தையும் இவற்றின் வழியாகக் காணிக்கையாக்குகிறார்கள். திருப்பலி ஒப்புக்கொடுக்கும் அருள்பணியாளர் இவர்களது காணிக்கைகளை ஏற்று மக்கள் பெயரால் இறைவனுக்கு ஒப்புரவாக்கப்படுகிறார். “பணியாற்றும் திருப்பணியாளர் தாம் பெற்ற தூய அதிகாரத்தால் .... எல்லா மக்கள் பெயராலும் கடவுளுக்கு அதை ஒப்புக்கொடுக்கிறார். நம்பிக்கை கொண்டோரோ தம் அரசத் திருப்பணி நிலையால் நற்கருணைப் பலியை ஒன்றித்து ஒப்புக்கொடுக்கின்றனர்” (திருச்சபை 10). திருத்தந்தை இன்னசென்ட் குறிப்பிடுவது இங்கு கவனிக்கத்தக்கது : “குருக்கள் மட்டுமல்ல, விசுவாசிகளும் பலி ஒப்புக்கொடுக்கிறார்கள். குருக்கள் சிறப்பு முறையில் செய்வதை விசுவாசிகள் உள்ளத்தளவில் அவரோடு ஒன்றித்து ஒப்புக்கொடுக்கிறார்கள்”. அதாவது அருள்பணியாளர் அப்பத்தையும், இரசத்தையும் இறைமக்கள் பெயரால் ஒப்புக்கொடுக்கும்போது, ஒவ்வொரு நம்பிக்கையாளரும் அருள்பணியாளரோடு மனதில் ஒன்றித்து ஒப்புக்கொடுக்க வேண்டும்.

ஒரே சமயத்தில் இறைமக்கள் அப்பத்தையும், இரசத்தையும் படைப்பு பொருள்களின் முதற்கனிகளாகவும், தங்களது ஞானப் பலியின் அடையாளமாகவும் அதே பொருள்களை கிறிஸ்துவின் பலிப்பொருள்களின் அடையாளமாகவும் ஒப்புக்கொடுக்கிறார்கள்.
திருப்பலியில் அருள்பணியாளர் மூன்று விதங்களில் செயல்படுகிறார். மக்கள் பெயரிலும், கிறிஸ்து பெயரிலும், தம் பெயரிலும் பலி பொருள்களை அதற்குரிய நேரங்களில் ஒப்புக்கொடுக்கிறார். “சகோதர சகோதரிகளே என்னுடையதும், உங்களுடையதுமான இப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி செபியுங்கள்” என்று அழைப்பது திருப்பலி மக்களுடைய பலியும் என்பதை உணர்த்துகிறது. மேலும் திருப்பலியில் சொல்லப்படும் காணிக்கைமீது மன்றாட்டுகளும், மற்ற செபங்களும் இதைச் சுட்டிக் காட்டுகின்றன. “நாங்கள் ஒப்புக்கொடுக்கும்” என்ற சொற்றொடரும், “இறைவா, உம் ஊழியர்களாகிய நாங்களும், உமது குடும்பம் முழுவதும் உமக்கு ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கையை மனமுவந்து ஏற்றருளும்” என்று குரு செபிப்பதில் வரும் “குடும்பம் முழுவதும்” என்பதும் இறைமக்களைக் குறிக்கின்றன. எனவே இறைமக்கள் உள்ளத்தளவில் இச்செபங்களோடு இணைந்து செபிக்கும் போது தங்கள் குருத்துவப் பணியைச் செய்கிறார்கள்.

மற்றும் எழுந்தேற்றத்துக்குப்பின் அப்பம், இரசத்தில் தம் உடலோடும், இரத்தத்தோடும் பிரசன்னமாகி இருக்கும் கிறிஸ்துவையே இறைமக்கள் தந்தையாகிய கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கலாம். அப்போது கிறிஸ்துவின் பலி இவர்களுடைய பலியாகிறது. எனவேதான் முதல் நற்கருணை மன்றாட்டில் எழுந்தேற்றத்துக்குப்பின் “ஆகவே ஆண்டவரே, உம் ஊழியர்களும் உம் புனித மக்களுமாகிய நாங்கள் நீர் எங்களுக்கு வழங்கியுள்ள கொடைகளிலிருந்து நிலைவாழ்வு தரும் புனித அப்பத்தையும், நிலையான மீட்பளிக்கும் திருக்கிண்ணத்தையும் தூய, புனித, மாசற்ற பலிபொருளாக மாட்சிமைமிகு உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம்” என்று அருள்பணியாளர் செபிக்கிறார். இதில் வரும் “புனித மக்கள்” திருப்பலியில் பங்கேற்கும் நம்பிக்கையாளர்களைக் குறிக்கின்றது. அவர்கள் இயேசுகிறிஸ்துவின் உடலையும், இரத்தத்தையும் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கிறார்கள். எனவே அருள்பணியாளரோடு ஒன்றித்து இச்செபத்தை மனத்தளவில் சொல்லும்போது தங்கள் குருத்துவப் பணியை நிறைவேற்றுகிறார்கள்.

சுருங்கச் சொல்லின், நம்பிக்கையாளர் திருப்பலியில் “மு (Active) ழுமையாகவும் (Full), உணர்ந்தும் (Conscious), ஆக்கப்பூர்வமாகவும்செயல்படும்போது” தங்கள் குருத்துவப் பணியை நிறைவேற்றுகிறார்கள்.

நம்பிக்கையாளர்களே பலிபொருளாக வேண்டும் :

“அருள்பணியாளரோடு தங்கள் மனதையும் ஒன்றித்து பலியில் பங்குபெறும் போது, தங்களையும் சேர்த்துப் பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும். திருப்பலியில் நம்பிக்கையாளர் தெய்வப் பலிப்பொருளை ஒப்புக்கொடுப்பது பயனுள்ளதாக மாற வேண்டுமானால் தங்களையும் பலிப்பொருள்களாக ஒப்புக்கொடுக்க வேண்டும்“ என ‘இறைநடுவர்’ (Mediator Dei) என்ற சுற்றுமடலில் திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ் கூறுகிறார் (எண் 103).
இரசத்தோடு கலக்கப்படும் துளிநீர் தன் இயல்பை இழந்து இரசமாக மாறுவது போல், கிறிஸ்துவாகிய பலிப்பொருளோடு தங்களையும் சேர்த்து ஒப்புக்கொடுக்கும்போது அது தெய்வீகப் பலிப்பொருளின் மதிப்பை இறைவன் முன் பெறுகிறது. இதற்குச் சிறந்த நேரம் எழுந்தேற்றத்துக்குப் பின்வரும் நேரமாகும். கிறிஸ்து பலியான விதத்தில் பீடத்தில் இருக்கிறார். அவரோடு ஒன்றித்து அனைவரையும், தங்களையும் சேர்த்து தந்தையாகிய கடவுளுக்கு இவர்கள் ஒப்புக்கொடுக்க வேண்டும்.

முடிவுரை :

கிறிஸ்து என்னும் அஸ்திவாரக் கல்லின்மேல் எழுப்பப்படும் கட்டிடத்தின் உயிருள்ள கற்கள் இறைமக்கள். எனவே அவரில், அவர் வழியாக இறைவனுக்கு ஏற்ற ஞானப்பலிகளை தங்கள் அன்றாட வாழ்வில் ஒப்புக்கொடுக்க வேண்டும் (காண் 1 இரா 2 : 5). “கடவுளுக்குகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு” (உரோ 12 : 1) என்று புனித பவுல் குறிப்பிடுவது இவர்களின் வாழ்க்கைப்பலியைக் குறிக்கிறது. இது எப்பொழுதும், எங்கும் தங்களைப் பலியாக்கி கிறிஸ்துவின் பலியோடு ஒன்றிக்க முடியும் என்று காட்டுகிறது (காண் இ.ந.104, 85).

திருப்பலிக்கும் இவர்களுடைய அனுதின வாழ்வுக்கும் நெருங்கியத் தொடர்பு இருக்க வேண்டும். “சென்று வாழுங்கள்; திருப்பலி நிறைவேறிற்று” என்று சொல்லப்பட்டு உலகிற்கு அனுப்பப்படுகிறார்கள். எனவே தங்கள் அந்தஸ்தின் அலுவல்கள் மத்தியில் நேரிடும் இன்ப, துன்பங்களையும், புரிகின்ற தியாகங்களையும் திருப்பலியோடு தொடர்புபடுத்தி ஏற்றுக்கொண்டு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
“முடிந்தது அந்த பீடப்பலி - இனி
தொடங்குவது நம் வாழ்க்கைப்பலி”.
தொடரும்...

No comments:

Post a Comment

Ads Inside Post