Pages - Menu

Sunday 3 April 2016

பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு 24 - 04 - 2016

பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு             24 - 04 - 2016
தி.ப. 14 : 21ஆ - 27,
திரு. வெ 21 : 1 - 5
யோவா 13 : 31 - 33அ, 34 - 35

அன்பு என்ற சொல்தான் உலகில் அதிகமாகப் பேசப்படுகிறது. நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் அன்பு என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது. வள்ளுவர் அன்பை, உயிருக்கு இணையாக அன்பின் வழியது உயிர்நிலை என்றும், அன்பு உடலின் உள்ளுறுப்பு என்றும் எழுதினார். ஆண்டவர் இயேசு அன்பை வானுயர எடுத்துச் சென்று அதை இறை மயமாக்கினார். நான் உங்களை அன்பு செய்ததுபோல (யோவா 13 : 34) என்று சொல்லி அன்பை தன் மயமாக்கினார் - கிறிஸ்து மயமாக்கினார். அன்பே கிறிஸ்து. அன்பே கிறிஸ்தவம் என்று அன்பை விண்ணுக்கு விண்வழிதடத்தை உண்டாக்கினார்.
அவர் எவ்வாறு நம்மை அன்பு செய்தார்? தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்கு கீழ்ப்படிந்து, தன்னைத் தாழ்த்தி (பிலி 2 : 6 ‡ 8) நம்மை எல்லாம் அன்பு செய்தார். நாம் பிறரை எவ்வாறு அன்பு செய்ய முடியும் என்பதை நல்ல சமாரியன் உவமை (லூக் 10 : 29 - 30) வழியாக நமக்கு கற்றுக் கொடுத்தார். பிறருக்கு சிறு உதவிகூட செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள் (மத் 25 : 40) என அன்பை ஊக்கப்படுத்தினார்.

இயேசு ஆண்டவர் பிறரை மன்னித்தார். மதித்தார். நட்பு பாராட்டினார். நல்லதை செய்யச் சொன்னார். சுகப்படுத்தினார். சுமைகளை இறக்கி வைத்தார். உறவை வளர்த்தார். உயிர்ப்பித்தார். எதையும் எதிர்பார்க்காமல் கடவுளின் மகிமைக்காகவேச் செய்தார். இவைகள்தான் கிறிஸ்துவின் அன்பின் வழித்தடங்கள். வாழ்வின் பாடங்கள். நாமும் அவ்வாறே செய்கிற போது கிறிஸ்துவின் வழித்தடங்களில் நாமும் பயணிக்கிறோம்.

ஒருமுறை அன்னைத் தெரசா அவர்கள் கல்கத்தாவில் தன் பணிக்கு ஒரு இல்லம் ஏற்படுத்த விழைந்தார்கள். பூசாரி ஒருவர் அன்னையின் முயற்சிகளுக்கு பெரும் தடைக்கல்லாய் அமைந்தார். அன்னையைப் பற்றி அவதூறாகப் பேசினார். அன்னை அவர்கள் கல்கத்தாவில் கால் ஊன்றாமல் இருக்க இந்த பூசாரி அவரால் முடிந்த எல்லா தவறான வேலைகளையும் செய்துகொண்டுதான் இருந்தார்.

அன்னைத் தெரசாள் அவர்கள் கடவுளை நம்பி செபத்தில் ஈடுபட்டார். இறை விருப்பத்தை நாடி செபித்தார். சிறிது நாட்களுக்குப் பிறகு அந்தப் பூசாரி தொழுநோயால் பாதிக்கப்பட்டார். அவரைத் தொட, அவரிடம் மகிழ்ந்து பேச. அவருடைய மனைவிகூட அஞ்சினார். மக்கள் அஞ்சினர். உறவினர்கள் அஞ்சினர். நண்பர்கள் அஞ்சினர். அவரைத் தெருவில் தூக்கிப் போட்டு விட்டனர்.  இந்த நிலையில்தான் அன்னைத் தெரசாள் அவரைச் சந்தித்தார். வழக்கம் போல அவர்மீது தன் அன்பைப் பொழிந்து அவரைத் தன் இல்லத்துக்குத் தூக்கிச் சென்று அவரை நன்குப் பராமரித்து குணப்படுத்தினார். பிறகு இந்த பூசாரி அன்னைத் தெரசாவுக்கு பெரிய உதவியாக இருந்தார்.
இந்த அன்பைத்தான், ஆண்டவர் இயேசு தன் மக்களிடமிருந்து எதிர்பார்க்கிறார். இத்தகைய அன்புதான் இரண்டாம் வாசகத்தில் நாம் கேட்டது போல அனைத்தையும் புதியதாய் ஆக்குகிறது. இத்தகைய அன்பினால் தூண்டப்பட்டு பவுலடியாரும் பர்னபாவும் பல நாடுகளுக்குச் சென்று நற்செய்தியை அறிவித்து திருச்சபைகளை ஏற்படுத்தினர். முதல் வாசகத்தில் குறிப்பிட்டுள்ளது போல கடவுளின் பணிக்கென தங்களையே அர்ப்பணித்துக் கொண்டனர்.

நம்முடைய அன்பு எவ்விதம் உள்ளது? எதையும் எதிர்பார்த்து நாம் பிறரை அன்பு செய்கிறோமா? அல்லது நம்முடைய அன்பில் ஏதாவது நிபந்தனைகள் படிந்துள்ளனவா? இயேசுவைப் போல அன்பு செய்வோம். உயிர்ப்பின் மக்களாக வாழ்வோம்.

No comments:

Post a Comment

Ads Inside Post