Pages - Menu

Friday 2 December 2016

நவம்பர் புரட்சி

நவம்பர் புரட்சி


- கேத்தரீன் ஆரோக்கியசாமி, திருச்சி

கடந்த 2016 நவம்பர் 8ஆம் தேதி இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு  உரையாற்றப் போகிறார் என்ற தலைப்புச் செய்தி நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய உண்மை. தீவிரவாதத்தை அடியோடு ஒழித்து விட்டாரா? என்ன காரணம் என்று தவித்துக் கொண்டிருக்கும் போது, பிரதமர் மோடி அருமையான ஒரு உரையாற்றினார். இன்று 08‡11‡2016 இரவு 12 மணி முதல் நாட்டில் புழக்கத்தில் உள்ள அனைத்து 500 ரூபாய் மற்றம் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது. கறுப்பு பணத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டு புழக்கத்தை முடிவுக்கு கொண்டு வரவே இந்த முடிவு. நாட்டு மக்கள் என்னோடு ஒத்துழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

கள்ளப்பணத்தை ஒழிக்கவும் கறுப்பு பணத்தை மீட்கவுமே இந்த கசப்பு நடவடிக்கை என்று சொல்கிறார் மோடி. ஆனால், இப்போதைய நடவடிக்கையால் இரண்டுமே ஒழியாது. இது மோடியின் திட்டமிட்ட நாடகமாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.

2014இல் மோடி பிரதமரான போது 100 நாட்களில் கறுப்பு பணத்தை ஒழிப்பேன் என்றார். அவரது சபதம் நிறைவேறவில்லை. பிறகு செப்டம்பர் 30க்குள் ஒட்டு மொத்த கறுப்புப் பணத்தையும் மீட்பேன் என்று அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். பதுக்கப்பட்டிருந்த பல லட்சம் கோடிக்கும் அதிகமான கறுப்பு பணத்திலிருந்து வெறும் 50 ஆயிரம் கோடி மட்டுமே மீட்கப்பட்டது. இந்த இரண்டு தோல்வியை மறைக்கவே இப்போது நவம்பர் அதிரடி புரட்சியை ஆரம்பித்திருக்கிறார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு 2017 பிப்ரவரியில் 2000 ரூபாய் நோட்டு வெளியிடப்படும் என்று அறிவிப்பை செய்தது ரிசர்வ் வங்கி. இது சாமானியனுக்கு விளங்காத  பொருளாதார சூட்சுமம். ஆனால் பண முதலைகளுக்கும், பதுக்கல்காரர்களுக்கும் புரிந்த  சூட்சுமம். அவர்கள் ரூ.500யையும், ரூ.1000த்தையும் வெளிநாடுகளுக்கு கடத்திவிட்டனர். பல்வேறு வழிகளில் அதனை முதலீடும் செய்து விட்டனர்.

கறுப்பு பணம் முழுவதும் வெளியே போனப்பிறகு வந்த இந்த அறிவிப்பு நடுத்தர மக்களையும் ஏழைகளையும் தான் அதிகம் பாதித்துள்ளது. இன்றைக்கு 1000 ரூபாய் புழக்கத்தில் இருப்பது  வெறும் 10 சதவீதம்தான். 500 ரூபாய் நோட்டுக்கள்தான் 90 சதவீதம் புழங்குகின்றன. அதுவும் நடுத்தர வர்க்கத்தினரிடம்தான் இது அதிகம். ஏழைகளை பழிவாங்கியுள்ளார் பிரதமர்.  ரூ.4000 வாங்க நடுத்தெருவில் நாள் முழுவதும் தெருவோரத்தில் வரிசை கட்டி நிற்கிறது  நடுத்தர வர்க்கம்.  ஏ.டி.எம்‡இல் கியூவில் கால்கடுக்க நாள் முழுவதும் நின்று 2000 ரூபாயை எடுத்து அன்றைய செலவுக்கு உபயோகித்துக் கொண்டிருக்கிறது. தெருவில் நிற்க்க வைத்த பெருமை திரு.மோடிக்கு உண்டு.

மோடி குடும்ப செலவுக்கு ஏ.டி.எம் கியூவிலும், பாங்க் வாசலிலும் எப்படி சமாளித்தார் என்று நாட்டு மக்களுக்கு தெளிவுபட சொல்லியிருந்தால் மக்களும் அவரை பின் தொடர்ந்திருப்பார்களே.

தினமும் வங்கி வாசலிலும் ஏ.டி.எம் கியூவிலும் பழைய நோட்டுக்களை மாற்ற நிற்கும் கோடிக்கணக்கான நடுத்தர வர்க்கத்தினர்தான் கறுப்பு பண முதலைகளா? இவர்களை பிடிக்கத்தான் மோடி புரட்சிகரமான அறிவிப்பை வெளியிட்டாரா?
வங்கிகளைவிட அதிகமான பணம் பொது மக்களிடம்தான் இருக்கிறது என்றால் யார் பதுக்கல்காரர்கள்?

வெறும் 4000 ரூபாயை மாற்ற இந்நாட்டு மக்களுக்கு ஐடி கார்டு அவசியம் என்று மக்களை உயர்த்திய பிரதமருக்கு ஒரு சலாம். ஏடிஎம் மையத்தில் ரூ.2000 எடுப்பவர்களுக்கு சேவைக்கட்டணம் டிசம்பர் 30 வரை ரத்து செய்த அரசுக்கு ஒரு சலாம். சமானியருக்காக பாடுபடும் இந்த  அரசுக்கு மக்கள் என்றும் தலை வணங்குவார்கள்.

இவ்வளவு  இக்கட்டான நிலையிலும் ஒருசில இடங்களில் தலை தூக்கிய மனிதநேயம் மனதில் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. சில்லரைப் பணம் இல்லாவிட்டாலும் இலவசமாக சாப்பிட அனுமதித்த திருநெல்வேலி, ஸ்ரீபாலாஜி ஹோட்டல் உண்மையில் மனித நேயத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு.

ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை வாபஸ் பெற்று பொருளாதாரத் துறையில் அதிரடி நடவடிக்கையை மோடி அரசு எடுத்துள்ளது. கறுப்பு பணத்தை ஒழிக்க எடுத்த அதிரடி வெல்லுமா? ஊழல் என்பது மனநிலை. இது மாறாத வரை கறுப்புப்பணம் என்ற வைரஸ்ஸை ஒழிக்க முடியாது.

காந்தி நோட்டை வாங்க கால்கடுக்க வரிசை கட்டிய “காந்தி”தேசம் மோடிக்கு பதில் சொல்லும்...

No comments:

Post a Comment

Ads Inside Post