Pages - Menu

Thursday 1 December 2016

திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு 11 - 12 - 2016

திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு        11 - 12 - 2016

எசா 35 : 1 - 6, 10;  யாக் 5 : 7 - 10;  மத் 11 : 2 - 11

திருத்தந்தை பெனடிக்ட், உரோமை ஆலயத்தில் சில விவிலிய காட்சிகளை சிறந்த கலைஞர்களைக் கொண்டு வரைய விரும்பினார். எனவே தனது பணியாளர்களை அனுப்பி, பல கலைஞர்களிடமிருந்து அவர்கள் தயாரித்த படங்களை சான்றாக வாங்கிவர பணித்தார். பணியாளர்கள் பல கலைஞர்களிடம் சென்றனர். அவர்களும் அவர்கள் வரைந்த சிறந்த படங்கள் சிலவற்றை சான்றாக கொடுத்தனுப்பினர். ஜியோட்டா என்ற கலைஞரிடம் சென்றனர். அவரிடமும் அவரின் படைப்புகளை சான்றாக கேட்டனர். அவர் ஒரு வெள்ளைத் தாளை எடுத்து எவ்வித கருவிகளுமின்றி ஒரு அருமையான வட்டத்தை வரைந்து, இதனை என் திறமையின் அடையாளமாக போய் கொடுங்கள் என்றார். திருத்தந்தை அனுப்பிய பணியாளர்களுக்குப் பெரிய ஏமாற்றம். தனது சிறந்த படைப்பைக் கொடுக்காமல், இந்த வட்டத்தை கொடுத்திருக்கிறாரே என்று வருத்தப்பட்டு, திருத்தந்தையிடம் அவர் அளித்ததைக் கொடுத்தனர். திருத்தந்தையும் மற்ற பெரியவர்களும் கொடுக்கப்பட்ட படங்களையயல்லாம் பார்வையிட்டு விட்டு, சாதாரண வட்டத்தை வரைந்து கொடுத்தனப்பிய ஜியோட்டாவின் திறமையை புரிந்துக் கொண்டு அவரையே கட்டிட ஓவியராக நியமித்தனர்.

திருமுழுக்கு யோவான் தன் சீடர்களை இயேசுவிடம் அனுப்புகிறார். இயேசு யார்? என்பதை தெளிவாக தெரிந்துக் கொள்ள, இயேசுவிடமே தெளிவு பெற அவர்களை அனுப்புகிறார். இயேசு, தன்னை மனிதரை தீர்ப்பிடும், கண்டிப்பவராக விவரிக்கவில்லை. மாறாக மக்களுக்கு நலன்களை நல்குபவராக தன் பணிகளை முன் வைக்கிறார். குறை உள்ளவர்கள் நிறைவைக் காண்கிறார்கள். பார்வையற்றவர், கால் ஊனமுற்றவர், தொழுநோயாளர், காது கேளாதவர், இறந்தவர் அனைவரும் இயேசுவிடமிருந்து நலம்பெறுகின்றனர்.

பிறகு இயேசு, திருமுழுக்கு யோவானைப் பற்றி சாட்சியம் தருகிறார். ஆறு கேள்விகளைக் கேட்கிறார். இறுதியாக, அவர், கடவுளின் தூதர் என்பதற்கு மேலாக இறைவாக்கினர் என்று உறுதியளித்துக் கூறுகிறார். திருமுழுக்கு யோவான் சிறையில் இருந்த சூழலில்தான் தன் சீடர்களை இயேசுவிடம் அனுப்பி வைக்கிறார். அவர் இறைவாக்கினர் என்ற முறையில்தான் துன்பங்களை ஏற்கிறார். இவ்வாறு இயேசு, திருமுழுக்கு யோவானின் பெருமைகளை பணிவுடன் முன் வைக்கிறார்.
முதல் வாசகத்தில் மகிழ்ச்சி என்பது மையப்படுத்தி பேசப்படுகிறது. ஏழுமுறை மகிழ்ச்சி என்ற வார்த்தை இச்சிறு பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் வாசகத்தில் யாக்கோபு பொறுமையை கடைபிடியுங்கள் என்று அறிவுரை கூறுகிறார். ஆண்டவரின் இரண்டாம் வருகைக்காகவும் துன்பங்களை தாங்குவதிலும் பொறுமையை கடைபிடியுங்கள் என்கிறார்.
இத்திருவருகைக் காலத்தில் இயேசுவைப் போல, மற்றவர்களின் நல்ல பண்புகளை பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டு வெளியிடுவதிலும் தன் நிலையை நன்கு உணர்ந்திருப்பதிலும் செயலாக்கம் செய்யலாம்.  மற்றவர்களின் நல்ல பண்புகளை நாம் கண்டுகொள்வதில்லை, பாராட்டுவதில்லை.  இதனால்  உறவுகள் வளர்வதில்லை. மற்றொரு பக்கத்தில் நாம் பெற்றிருக்கும் நலன்களையும், திறமைகளையும் உணர்வதில்லை. இதனால் மனதில் உறுதியும் ஊக்கமும் இல்லாதவர்களாக விளங்குகிறோம்.

‘நன்மைகளின் அடிவேர் மற்றவர்களை 
பாராட்டும் செயலில் ஆரம்பமாகிறது’ - தலைலாமா

‘மற்றவர்களின் நன்மைகளைப் பாராட்டுவதால்,  
மற்றவர்களிடம் விளங்கும் புதுமையான பண்புகள் நம்மிடமும் ஒட்டிக்கொள்ளும் ’- வால்டேர்


No comments:

Post a Comment

Ads Inside Post