Pages - Menu

Friday 18 August 2017

பொதுக்காலம் இருபதாம் ஞாயிறு

பொதுக்காலம் இருபதாம் ஞாயிறு
20 - 08 - 2017
 எசா 56:1.6-7;  உரோ 11:13-15.29‡32; மத் 15:21-28

அன்புக்கு  எல்லையில்லை

  மனிதர் ஒவ்வொருவர் உள்ளத்திலும், இறைவனைத் தேடும்  ஓர் ஒளி மினுக் மினுக்கென்று ஒளிர்ந்துக் கொண்டிருக்கிறது. மனிதர் அனைவரும் இறைவனின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்டவர்கள். எனவேதான் எளிய, இயலாத மனிதரைப் பார்த்து நமக்கு இரக்கம் உண்டாகிறது. அவர்களின் போராட்டத்தில் மற்றவர்களின் இதயங்களும் இணைகின்றன.

ஆனால் சில தீவிரவாத இயக்கங்கள் மனிதரை ஜாதி, மத அடிப்படையில் பிரித்துப்பார்த்து, ஒரு சிலரை வெறுக்கவும் அழிக்கவும் முற்படுகின்றன. இது இறைவனின் வழிகளுக்கு எதிரானவை. மாட்டு இறைச்சியை உண்டார்கள் என்ற சந்தேகத்தில், இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆந்திராவில் கிறிஸ்துவ ஆலயங்கள் அப்பட்டமாக அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

இன்றைய நற்செய்தி பகுதியில் இயேசு, கனானிய பெண்ணின் மன்றாட்டிற்கு இணங்கி அவளின் மகளை பேயின் பிடியிலிருந்து குணமாக்குகிறார். வேற்றினத்தார் பகுதிக்கு (தீர், சீதோன், பாலஸ்தீனத்தின் வடக்குப் பகுதி) இயேசு செல்கிறார். அங்கு, கனானிய பெண் ஒருவர் தன் மகள், பேயின் பிடியிலிருந்து விடுபட ‘ஐயா, தாவீதின் மகனே எனக்கு இரங்கும்’ என்று கத்துகிறார். இயேசு அவளைக் கவனிக்காது நடக்கிறார். அவள் கத்திக் கொண்டு வருவதால் சீடர்கள், அவளுக்கு உதவி செய்யும் (அனுப்பிவிடும்) என்கிறார்கள். இயேசு, காணமற் போன ஆடுகளாய் உள்ள இஸ்ரயேல் மக்களுக்காகவே அனுப்பப்பட்டேன் என்றும் பிள்ளைகளுக்குரிய உணவை நாய் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல என்றும் கூறுகிறார். அந்தபெண், இயேசு கூறிய உவமையையே திருப்பி அடிக்கிறார். உரிமையாளர் மேஜையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்குட்டிகள் தின்னுமே என்று இயேசு பதில் கூற முடியாமல் சொல்கிறார். இயேசு வியந்துபோய், ‘அம்மா உன் நம்பிக்கை பெரிது. நீ விரும்பியவாறே நிகழட்டும்’ என்கிறார். அந்நேரமே அவளின் மகளின் பிணி நீங்கியது என்று சொல்லப்பட்டுள்ளது.

முதல்வாசகத்தில் பிறஇனத்தவரும் ஆண்டவருக்குத் திருப்பணி செய்யவும், அவரது ஊழியராய் இருக்கவும், ஓய்வுநாளைக் கடைபிடித்து, உடன்படிக்கையைப் பற்றிக் கொள்ளவும் இறைவன் அவர்களை ஏற்றுக் கொள்வதாக எசாயா தெரிவிக்கிறார்.
இரண்டாம் வாசகத்தில், பவுல் அடிகளார், பிற இனத்தார் கடவுளின் இரக்கத்தைப் பெற்றுள்ளார்கள் என்றும், யூதர்கள் கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள் என்றும், அவர்களும் விரைவில் இரக்கம் பெற்றுக்கொள்வார்கள் என்றும் விளக்குகிறார். ‘கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள் கொடைகளையும் திரும்ப பெற்றுக் கொள்வதில்லை’ என்று இறைவனின் பரந்த மனநிலையை விளக்குகிறார்.

இரண்டாம் வத்திகான் சங்கம், கிறிஸ்தவமல்லாச் சமயங்களோடு திருச்சபைக்குள்ள உறவு என்ற ஆவணத்தில் (எண் ‡2) ‘கிறிஸ்தவமல்லாச் சமயங்களை பின்பற்றுபவர்களிடத்தில் காணப்படுகின்ற, அருள்நெறி சார்ந்த நலன்களையும் சமூக ‡ பண்பாட்டு விழுமியங்களையும் ஏற்றுக்கொண்டு அவற்றைப் பேணி வளர்ச்சியுறச் செய்ய வேண்டும்’ என்று விளங்குகிறது. பொங்கல், தீபாவளி போன்ற பொதுவான விழாக்களை இப்போது கிறிஸ்தவர்களும்  மற்ற சமயத்தினருடன் இணைந்து கொண்டாடி வருகிறார்கள். கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் இந்தியர்கள் அல்ல என்று தற்போதைய ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் வி­மத்தை உமிழ்ந்து வருகிறார்கள். ஆனால் நாம், மக்கள் அனைவரும் ஒரே சமூகத்தை சார்ந்தவர்களே என்ற கோட்பாட்டை நிலைநிறுத்த வேண்டும். 1980 இல் ஒரு கிராமத்தில், ஓர் ஏரி வெட்டும் திட்டம், வேலைக்கு உணவு என்ற திட்டத்தில் ஒரு குருவானவர் தலைமையில் நடைபெற்றது. அப்போது அரசாங்கம், இத்திட்டம் சரியாக உத்தரவு வாங்கப்படாத திட்டம் என்று நிறுத்த கூறினார்கள். ஓர்  இந்து சகோதரர் தான் குருவானவரோடு இணைத்து நின்று, நீங்கள் செய்யுங்கள், நாங்கள் உங்களோடிருக்கிறோம் என்று ஆதரவு தந்தார். 

எல்லாரும்இன்புற்றிருக்க நினைப்பதுவேஅல்லாமல் 
வேறொன்றும் அறியேன் பராபரமே  - தாயுமானவர். 

No comments:

Post a Comment

Ads Inside Post