Pages - Menu

Friday 18 August 2017

திருப்பலி விளக்கம்

திருப்பலி விளக்கம்
- அருள்பணி. எஸ். அருள்சாமி,
பெத்தானியா இல்லம், கும்பகோணம்

18. நற்கருணை விளக்கம் (VI)

நற்கருணை வழிபாட்டின் முக்கியமான பகுதியாகிய நற்கருணை மன்றாட்டு பற்றிய விளக்கத்தை இதுவரைப் பார்த்தோம். இப்பொழுது  மூன்றாவதும் இறுதிபகுதியுமாகிய நற்கருணை பிடுதல், அதை உட்கொள்ளுதலுக்கு விளக்கம் காண்போம். 

 இ.திருவிருந்து சடங்கு

நற்கருணைக் கொண்டாட்டம் ஒருபலி மட்டுமல்ல; பாஸ்கா விருந்துமாகும். ஆண்டவரின் கட்டளைப்படி தக்கமுறையில் தங்களைத் தயாரித்த நம்பிக்கையாளர் அவருடைய உடலையும் இரத்ததையும் ஆன்ம உணவாகப் பெற்றுக் கொள்ளவது அவசியம் (GIRM 80).   இத்திருவிருந்து சடங்கில் மூன்று பகுதிகளைக் காணலாம்.  1. தயாரிப்பு     2. பகிர்தல்       3. இறுதி நன்றி கூறுதல்.

 1. திருவிருந்துக்குத் தயாரிப்பு

இங்கு ஒன்றிப்பு, அமைதி அன்பு போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நற்கருணை உட்கொள்பவர்களிடம் இப்புண்ணியங்கள்  சிறப்பிடம் பெற்றிருக்க வேண்டும். எனவே இத்தயாரிப்பு பகுதியில் ஆண்டவர் கற்றுத்தந்த செபம், சமாதான பரிமாற்றம், அப்பத்தைப்பிடுதல் ஆகியவை இடம் பெறுகின்றன.

 1.1. ஆண்டவர் கற்றுத்தந்த செபம்

“ஆண்டவர் கற்றுதந்த இறைவேண்டலில் அன்றாட உணவுக்காக மன்றாடுகின்றோம். அது கிறிஸ்தவர்களுக்கு முக்கியமாக நற்கருணைவுணவைக் குறிக்கும். மேலும் இவ்வேண்டலில் பாவத்திலிருந்து தூய்மை பெறவும் மன்றாடுகிறோம்” (GIRM 81).
‘அன்றாட உணவு’ என்ற சொற்கள் இந்த இறைவேண்டலில் வருவதால்தான் இது நற்கருணையை உட்கொள்ளும் முன் தயாரிப்பு பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. நான்காம் நூற்றாண்டிலிருந்து இந்த இறை வேண்டல் எல்லா வழிபாடுகளிலும் காணப்படுகிறது. இங்கு ‘உணவு’ என்ற சொல் நற்கருணையைக் குறிக்கிறது என்று பல திருஅவையின் தந்தையர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

திருப்பலியில் நற்கருணை வசீகரத்துக்குப் பிறகு இந்த இறைவேண்டலை சொல்லும் பழக்கம் திருத்தூதர் காலத்தில் இருந்தே நடைமுறையில் இருந்துள்ளது.  இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கு முன் இந்த இறைவேண்டலை அருள்பணியாளர் மட்டுமே சொல்லி வந்தார். அதன் கடைசியில் வந்த  “தீமையிலிருந்து எங்களை மீட்டருளும்”  என்ற பகுதியை மட்டும் மக்கள் சொல்ல அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் இப்பொழுது திருப்பலியில்அருள்பணியாளரும் நம்பிக்கையாளர்களும் சேர்ந்து செபிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. திருப்பலியில் பொதுவாக மற்ற செபங்களின் முடிவில் ‘ஆமென்’ என்று மக்கள் சொல்லுகின்றனர். ஆனால் “ஆண்டவர் கற்றுத்தந்த இறைவேண்டலில்” ‘ஆமென்’ சொல்வதில்லை. இதற்கு என்ன காரணம்? மற்ற செபங்களில்,  எடுத்துக்காட்டாக  ‘திருக்குழும  மன்றாட்டு’, ‘காணிக்கை மீது மன்றாட்டு’, ‘திருவிருந்துக்குப் பின் மன்றாட்டு’, இறுதிபுகழுரை போன்றவைகளில், அருள்பணியாளர் வழிபாட்டுத் தலைவர் என்ற முறையில் மக்களின் பெயரால் அவற்றைச் செபிக்கிறார். இறைமக்கள் எல்லாரும் சேர்ந்து  ‘ஆமென்’ (அப்படியே ஆகட்டும்) என்று சொல்லி அவற்றைத் தங்கள் செபமாக மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால் இங்கு எல்லாரும் சேர்ந்து சொல்வதால் ‘ஆமென்’ சொல்ல தேவையில்லை.

முன்னுரைகளும் பின்னுரைகளும்
ஆண்டவர் கற்றுத் தந்த இறைவேண்டலை சொல்ல அல்லது பாட அருள்பணியாளர் மக்களை அழைக்கிறார். பொதுவாக நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்ட அழைப்பு “ மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறைபடிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்”  என்பது. இதற்கொத்த முன்னுரையை பிசாந்தின் (Byzantine) திருஅவையில் காணலாம். “ஆண்டவரே, நாங்கள் முழுமனவுறுதியோடு, எவ்வகைத் தண்டணைத் தீர்ப்புக்கும் உள்ளாகாமல், விண்ணின் இறைவனாம் உம்மைத் தந்தாய் என்று அழைத்துச் சொல்லத் துணிகிறோம்”. இதிலிருந்து நமது பாடம் விளக்கம் பெறுகிறது. இரண்டாம் வத்திகான் சங்கத்திற்குப் பின் ஆயர்களின் இசைவு பெற்ற வேறுமுன்னுரை பாடங்களும் திருப்பலி நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆண்டவர் கற்றுத்தந்த இறை வேண்டலுக்குப் பின்னுரையாக “ஆண்டவரே தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து.....” என்று தொடங்கும் செபத்தை அருள்பணியாளர் சொல்லுகிறார். இதன் முடிவில் நம்பிக்கையாளர்கள்  “ஏனெனில் ஆட்சியும் ஆற்றலும் மாட்சியும் என்றென்றும் உமதே”  என்று பதில் சொல்லுகிறார்கள். இது ஒரு வாழ்த்தொலியாக அமைகிறது.
இந்த செபம் ஆண்டவர் கற்றுத்தந்த இறைவேண்டலின் பிற்பகுதியை விரிவுப்படுத்துகிறது. இத்தகைய பழக்கம் தொடக்கத்திலிருந்து வருகிறது. இந்த செபம் ‘எம்போலிஸம்’(Embolism) என்று அழைக்கப்படுகிறது. ‘திருத்தூதர்களின் போதனை’(Didache) என்ற முதல் நூற்றாண்டு நூலில் ஆண்டவர் கற்றுத்தந்த இறைவேண்டலை இதே இறை புகழ்ச்சியோடு முடித்திருப்பது, இன்று இது திருப்பலியில் இடம் பெற்றிருப்பதற்கு ஒரு காரணமாகக் கொள்ளப்படலாம்.

 1.2. சமாதானம் பரிமாற்றம்

  இதன்பின் அருபணியாளர் சமாதனத்திற்காக செபிக்கிறார். அதாவது, திருஅவைக்கு அமைதியையும் ஒற்றுமையையும் தரவேண்டுமென்று மன்றாடுகிறார். இதன் பின்னணி யோவா 14:27; லூக் 24:36; யோவா 20:19; 21:26 ஆகிய பகுதிகள் ஆகும்.

  இதன்பின் உறவின் வாழ்த்தை அறிவித்து, சமாதனத்தைப் பகிர்ந்துக் கொள்ள இறைமக்களை அருள்பணியாளர் அழைக்கிறார். ஏனெனில் தம் சகோதர சகோதரிகளோடு சமாதானம் செய்துக்கொள்ளாமல் ஒருவர் நற்கருணை விருந்தில் பங்கேற்பது தவறானது மட்டுமல்ல, பொருளற்றதும் ஆகும் (காண். மத் 5:24).
சமாதானத்தைப் பகிர்ந்து கொள்ளும் இச்சடங்கு மிகப் பழமையானது. கி.பி.4ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “திருத்தூது அமைப்பு விதித்தொகுப்பு”  (Apostolic Constitution) என்ற நூலில் இச்சடங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஆயர் சமாதானம் வாழ்த்துக் கூற, ஒருவருக்கொருவர் சமாதான அடையாளத்தை அளித்துக்கொள்ள திருத்தொண்டர் அழைப்பு விடுத்தார். அதைத்தொடர்ந்து, ஆயரும் அருள்பணியாளர்களும், திருத்தொண்டர்களும் மக்களும் ஒருவருக்கொருவர் சமாதானத்தை பகிர்ந்துக் கொண்டனர்.

  இன்று இந்த சமாதானம் பகிர்ந்தலின் பொருளை மக்கள் சரியாக புரிந்துக் கொள்ளாததால் இதுவெறும் சடங்கு ஆசாரமாக மாறிவிட்டது. அதனால் தங்கள் அருகில் ஆள் இருக்கிறார்களா என்று கூட அறியாமல், மக்கள் வலது புறமும் இடது புறமும் தலை வணங்குவதைப் பார்க்கிறோம். இது பொருளற்ற ஒரு செயல். இக்குறைபாடு பற்றி மக்களுக்கு அருள்பணியாளர் அடிக்கடி எடுத்துரைக்க வேண்டும்

 1.3. அப்பம் பிடுதலும், உலகின் பாவம் என்ற மன்றாட்டும்

  முற்காலத்தில் மக்கள் திருப்பலிக்குப் பெரிய அப்பங்களைக் கொண்டு வந்தனர். எனவே அந்த அப்பங்களை உனடக்க வேண்டியிருந்தது. இதற்கு அதிக நேரமும் தேவைப்பட்டது அப்பங்களை உடைத்து முடிக்கும்வரை ‘உலகின் பாவம் போக்கும்’  என்ற செபம் தொடர்ந்து சொல்லப்பட்டது. ஆனால் இப்பொழுது அப்பங்கள் சிறிய அளவில் தயார் செய்யப்படுவதால் அவற்றை உடைக்கும் தேவையில்லை. அருள்பணியாளர் தனக்கு பயன்படுத்தும் பெரிய அப்பத்தை மட்டும் பிடுகிறார். எனவே “உலகின் பாவம் போக்கும் ”  என்ற செபம் மும்முறை மட்டும் சொல்லப்படுகிறது.   “உலகின் பாவங்களைப் போக்கும் ” என்ற செபம் கி.பி.7ஆம் நூற்றாண்டில் திருத்தந்தை செர்ஜ் (Sergius)அவரால் திருப்பலியில் அறிமுகப் படுத்தப்பட்டது. இச்செபத்தின் இறுதியில் வரும் வரும் “எங்கள் மேல் இரக்கமாயிரும்”  என்பது கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரை மும்முறை சொல்லப்பட்டது. கி.பி.11ஆம் நூற்றாண்டு முதல் இச்செபம் மூன்றாவது முறை சொல்லப்பட்டபோது “எங்களுக்குச் சமாதானத்தை அருளும்”  என்று மாற்றிச் சொல்லும் பழக்கம் நடைமுறைக்கு வந்தது. எனவே இந்த செபம்  சொல்லப்படும்போதுதான் அருள்பணியாளர் பெரிய அப்பத்தை பிட்க வேண்டும். வசீகர சமயம் “அப்பத்தை எடுத்து, ஆசிவழங்கி பிட்டு” என்று சொல்லப்படும் போது அப்பத்தைப் பிடக் கூடாது. இது தவறு.
அப்பத்தைப் பிட்ட பிறகு ஒரு சிறு துண்டு இரசக்கிண்ணத்தில் போடப்படுகிறது.  இது “கொம்மிக்ஸியோ”  (Commixo Commingling)  என அழைக்கப்படுகிறது. இது மிகப் பழமையான ஒரு பழக்கமாகும். இது உரோமை ஆயராம் திருத்தந்தைக்கும் மற்ற தல திருஅவைகளுக்கும் இடையேயுள்ள “ஒன்றிப்பின் அடையாளம்” . இருப்பினும் இச்சடங்கின் உட்பொருள் யாருக்கும் புரியாத புதிராகவே உள்ளது.                      
இங்கு ஒரு கேள்வியை எழுப்ப வேண்டும். உலகின் பாவமா, பாவங்களா? என்பதுதான் அது.
நற்செய்தியின் மூலமொழியாகிய கிரேக்கத்திலும், இலத்தீன் மற்ற மொழி பெயர்ப்புகளிலும் தமிழிலும் (யோவா 1:29)  ‘பாவம்’ என்று ஒருமையில் உள்ளது. ஆனால் திருப்பலி நூலில் இலத்தீனில் ‘பெக்காத்தா முந்தி’ (Peccata Mundi) என்று உள்ளது. இருமுறை ‘எம்மேல்’,‘எமக்கு’ என்று இருப்பது ஒருமையைக் குறிக்கிறது. பாடுவதற்கு ‘பெக்காத்தும் முந்தி’ (Peccatum Mundi) என்பது எளிதல்ல என்பதால் “பாவங்கள்” என்று பன்மைக்கு மாற்றப்பட்டது என சில அறிஞர் கூறுவர். ஆனால் பொருளைக் கருதினோமாயின் ஒருமையே மிகச் சிறந்தது என்று தோன்றுகிறது. ‘பாவங்கள்’ என்பது எண்ணப்பட்ட ஒரு தொகுப்பைச் சுட்டுகிறது. மாறாக ஒருமையில் ‘பாவம்’ என்பது உலகின் பாவநிலையைக் குறிப்பதாகும். நமது ஆண்டவர் உலகைப் பாவத்தின் பிடியிலிருந்து விடுவித்தார். 
-தொடரும்...

No comments:

Post a Comment

Ads Inside Post