Pages - Menu

Sunday 19 March 2017

தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

தவக்காலம் மூன்றாம் ஞாயிறு                   
     19 - 03 - 2017
விப 17 : 3 -7;   உரோ 5 : 1 - 2, 5 - 8;     யோவா 4 : 5 - 42

நீரைத் தருகிறார் இறைவன்,  உணவை பெறுகிறார் மனிதர்

“நீரின்றி அமையாது  உலகம்” என்றார் வள்ளுவர். மழை பொய்த்தது  என்றால்  உலகில் மாண்புறு பண்புகளும் மறைந்துவிடும் என்றும் விளக்குகிறார் வள்ளுவர்.

“நீரின்றி அமையாது  உலகெனின் யார்யார்க்கும் 
வானின்று அமையாது  ஒழுக்கு” (குறள் 20) 

தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு இன்று, சமாரிய பெண்ணுடன் இயேசு நடத்திய உரையாடலில், இறைவன் நீரான நம்பிக்கையை அவரே நமக்குத் தருகிறார் என்ற கருத்தினை எடுத்துக் கூறுகிறார். நீர் வாழ்வின் ஆதாரம். நம் உடலின் பெரும்பகுதி நீரால் ஆனது என்கிறது அறிவியல். பழைய ஏற்பாட்டு பின்னனியில், நீர் பெரிய அடையாள பொருளாக விளங்கியது. கும்ரான் முனிவர்கள், தூய்மைப்படுத்தும் கடவுளின் ஆவியானவருக்கும், இறைவனுக்கும் நீரினை அடையாளமாகக் கருதினர். எனவேதான் யோவா 3 : 5இல் ‘ஒருவர் தண்ணீராலும், தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட முடியாது’ என்று, நீர் தூய ஆவியாரோடு இணைத்துக் கூறப்படுகிறது. எரே 2 : 13இல், ‘பொங்கி வழிந்தோடும் நீருற்றாகிய என்னை புறக்கணித்தார்கள்’ என்று இறைவன் நீருற்றுடன் ஒப்பிடப்படுகிறார். திப 36 : 8ம் இறைவனை போற்றி  ‘உமது  பேரின்ப நீரோடையில் அவர்கள் தாகத்தை தணிக்கிறீர்’ என்று புகழ்கிறது.

இயேசு சமாரிய பெண்ணிடம் தானே முன்வந்து, குடிக்க தண்ணீர் கேட்டு, ‘நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது. நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்’ (யோவா 4 : 14) என்று வாழ்வு தரும் தண்ணீரை தருபவர் இயேசு என்று விளக்குகிறார். தண்ணீர் என்பது  இறைவனை குறிக்கும் அடையாளப் பொருள் என்ற பழைய ஏற்பாட்டு பின்னனியில், இயேசு இறைவனை தருபவர், வாழ்வின் சோகங்களை போக்கி நிறைவை தருபவர் என்று இங்கு விளக்கப்படுகிறது. இயேசு, ஒதுக்கப்பட்ட பிரிவை சேர்ந்தவராக கருதப்பட்ட சமாரிய பெண்ணுடன் நண்பகல் வேளையில்  உரையாடுகிறார். உணவு வாங்க சென்ற சீடர்கள் அங்கு திரும்புகிறார்கள். அவர்களுடன் உரையாடகின்றபோது, மனிதரின் உண்மையான உணவு எது? என்பதை விளக்குகின்றார் இயேசு. ‘என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும், அவர் கொடுத்த வேலையை செய்து முடிப்பதுமே என் உணவு’ என்கிறார் இயேசு (யோவா 4 : 35).

ஆக இன்றைய நற்செய்தி பகுதியில் நிர், உணவு என்ற மனிதரின் அடிப்படை தேவைகளை வைத்து இறை உறவு  என்ற, இறை அனுபவத்தை விளக்குகிறார் இயேசு. இறைவன் தானே முன்வந்து மனிதருடன் உறவு கொள்கிறார் (சமாரிய பெண் ‡ இயேசு உரையாடல்). அதே நேரத்தில் மனிதரும் இறைவனுடன் உறவு கொள்ள, அவர்களும் மன்வர வேண்டும். இறைவனின் திருவுளத்தை அறிந்து அதனை நிறைவேற்றுதல், தனக்குக் கொடுக்கப்பட்ட பணிகளை நிறைவாக செய்தல் ஆகியவை வழியாக மனிதர் இறைவனை உணவாக பெறுவர்.

முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்களுக்கு பாலைவனத்தில், பாறையிலிருந்து தண்ணீர் வழியச் செய்து அவர்களின் தாகம் போக்கம் நிகழ்ச்சியை வாசிக்கக் கேட்டோம். இரண்டாம் வாசகத்தில், பவுல் அடிகளார், ‘குறித்தக் காலம் வந்ததும் கிறிஸ்து நமக்காக தம் உயிரைக் கொடுத்தார்’ என்ற இறை அன்பை குறிப்பிடுகிறார் (உரோ 5 : 6).
‘தியாகமுள்ள செயல்களுடன் இணைந்து செய்யப்படும் செபங்கள்தான், இறைவன்முன் விரைவாக சென்றடையும்’ (தூய சிப்ரியன்).

‘மக்களோடு, இணைந்து வாழும்போது அவர்களின் பிரச்சனைகளைத் தெரிந்துக் கொள்ளலாம். இறைவனடன் இணைந்து வாழும்போதுதான் அப்பிரச்சனைகளைத் தீர்க்கும் வழிகள் தெரியும்’ (பீட்டர் போர்சித்).

ஒரு முனிவரிடம், வாடகை கார் ஓட்டுபவர் சென்று பகிர்ந்துக் கொண்டார். ‘என் பணியினால், பொது வழிபாட்டு நேரங்களில் ஆலயத்திற்கு சென்று  இறைவனை வழிபட முடியவில்லை’ என்றார். முனிவர், ‘ஏழைகளை ஏற்றி செல்ல ஏதாவது சலுகை தருவீர்களா?’ என்றார். வண்டி ஓட்டுனர், ‘ஏழைகள் என்றால் கட்டணம் வாங்குவதில்லை’ என்றார். முனிவர், ‘அப்படியயன்றால் உன் பணியை, வழிபாட்டில் பக்தியுடன் பங்குபெறுவது போல. ஆர்வமுடன்  தொடர்ந்து செய்’ என்றார். 

‘தேடி வருகிறார் இறைவன், நாடி செய்க 


உம் பணிகளை’.

No comments:

Post a Comment

Ads Inside Post