Pages - Menu

Sunday 19 March 2017

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு           
    12 - 03 - 2017

தொ நூ 12 : 1 - 4, 2 திமொ 1 : 8 - 10, மத் 17 : 1 - 9

ஒளிமயமான இறைபிரசன்னம்

“ஒளி படைத்த கண்ணினாய்” என்றார் பாரதி. “ஒளி மயமான எதிர்காலம்” என்றார் கண்ணதாசன். இயேசு ஒளி வடிவமாக, தான் தேர்ந்தெடுத்த மூன்று சீடர்கள் முன் தோன்றுகிறார். இயேசு தனக்கு வரப்போகிற பாடுகளை அறிவிக்கிறார். பேதுரு, “ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி  உமக்கு நடக்கவே கூடாது” என்றார் (மத் 16 : 21 ‡ 22). இச்சூழலில்தான், இயேசு ஒளிமயமான தோற்ற மாறுதலை மூன்று சீடர்கள்முன் காண்பிக்கிறார்.

“ஆறு நாள்களுக்குப் பின்” என்று இந்நிகழ்வு விளக்கப்படுகிறது. விப 24 : 13 - 16இல் ஆறு நாட்களுக்குப் பின், சீனாய் மலையில் மோசேவுக்கு இறைவன் காட்சி தருவதைப் பார்க்கிறோம். மோசே சீனாய் மலையிலிருந்து உடன்படிக்கை பலகைகளை தாங்கிக் கொண்டு வரும்போது, மோசேயின் முகத்தோற்றம் ஒளிமயமாய் இருந்தது என்ற குறிப்பையும் விப 34 : 30இல் பார்க்கிறோம். இயேசுவின் தோற்ற மாற்றத்திலும், இயேசுவின் முகம் ‘கதிரவனைப் போல் ஒளிர்ந்தது’ என்று விளக்கப்பட்டுள்ளது. மேலும் ‘ஒளிமயமான மேகம்’ ஒன்று அவர்கள் மேல் நிழலிட்டது என்றும் இயேசுவின் தோற்ற மாற்றத்தில் குறிப்பிடப்படுகிறது.
ஆக, சீனாய் மலையில் நடந்தது போல, இறை பிரசன்னத்தை சீடர்கள் உணர்ந்த ஒரு நிகழ்ச்சியாக இது விளங்குகிறது. முதல் வாசகத்தில், ஆபிரகாம், இறைவனின் வார்த்தைகளுக்குப் பணிந்து, கடவுள் காண்பிக்கும் நாட்டிற்கு செல்லும்போது, இறைவனின் ஆசீரின் திருத்தலமாக ஆபிரகாம் மாற்றப்படுவார் என்ற வாக்குறுதி கொடுக்கப்படுகிறது.

இரண்டாம் வாசகத்தில் பவுல் அடிகளார், ‘கிறிஸ்து இயேசு வழியாக நமக்கு அளிக்கப்பட்ட அருளின்படி நம்மை மீட்டுள்ளார். நம் செயல்களை முன்னிட்டு அல்ல’ என்று விளக்குகிறார். அதாவது இறைவனே முன்னின்று நம்முடன் உறவு கொள்கிறார் என்று விளக்குகிறார்.  எனவே இறை பிரசன்னத்தை உணர்கின்ற அனுபவநிலையை இன்றைய வாசகங்கள் நம் கண்முன் வைக்கின்றன. இறைவன் கட்டளைகளை வாழ்வதன் வழியாக இறைவனும் முன்வந்து நம்முடன் உறவு கொள்கிறார். இது ஒளிமயமான அனுபவமாகிறது.

அண்மையில் இரயிலில் பயணம் செய்தேன். சரியான கூட்டம். எனவே நின்று கொண்டு பயணம் செய்தேன். ஒருவர் அமரும் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர், என்னைஅழைத்து அவருடன் அமர்ந்து கொள்ள அழைத்தார்.  மற்ற இருக்கைகளில் இடம் இருந்தும் மற்றவர்கள் இடம் தரவில்லை. இவர் இப்படி அழைத்து அமர வைத்தது ஓர் இறை அனுபவமாகவே கருதினேன். அவரை போன்று நாமும் மற்றவர்களுக்கு முன்வந்து  உதவவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது.
இத்தவக்காலத்தில், இறைவன் நமக்குக் கொடுத்திருக்கும் கடமைகள் என்ன? என்று கண் விரித்துப் பார்ப்போம். கடமைகளை செய்யும்போது  நிச்சயம் ஒளிமயமான இறைவனின் பிரசன்னத்தை அனுபவமாக பெறுவோம்.



No comments:

Post a Comment

Ads Inside Post